21/12/10

வணங்குகிறேன்- நாஞ்சில் நாதனுக்கு சாஹித்ய அகாடமி விருது

இவ்வாண்டு சாஹித்ய அகாதமி நாஞ்சில் நாடன் அவர்களை விருதளித்து கௌரவித்திருக்கிறது. அகாதமி தன்னைத் தானே கௌரவித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்வதெல்லாம் மிகைப்படுத்தல். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்புகள் என்ற வரிசையில் ஒரு எழுத்தாளரின் படைப்பும் அங்கீகரிக்கப்படுவது மிகப் பெரிய சாதனை என்பதில் சந்தேகமே இல்லை. இதில் அரசியல் செய்து அங்கீகாரம் பெறுபவர்கள் தங்கள் சிறுமையை வரலாற்றில் பதிவு செய்கிறார்கள், அவ்வளவுதான். அவர்களுக்குதான் அவமானம்.

ஜெயமோகன் சென்ற ஆண்டு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டபோது வேதனையோடு சில விஷயங்களை எழுதியிருந்தார். இப்போது அத்தகைய வேதனைகளுக்கு ஓரளவுக்கு ஆறுதல் கிடைக்கும் சூழல் உருவாகி வருவது போல் தெரிகிறது.

நாஞ்சில் நாடன் அவர்கள் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் என்பதையும், விற்பனைத் துறையில் பணியாற்றினார் என்பதையும் அவரது எழுத்துகளின் வாயிலாக அறிந்திருந்தேன். ஆனால் இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அவர் கணித பாடத்தில் முதுகலைப் பட்டதாரி என்றறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது தவிர தன் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது கிளை மேலாளராக இருந்திருக்கிறார்.

முதுகலைப் பட்டம் பெற்ற ஒருவர், உள்ளூரில் வேலை கிடைக்காமல் மும்பை சென்று அங்கு கலெக்டர் அலுவலகத்தில் பியூனாகவும், தனியார் நிறுவனங்களில் தினக்கூலியாகவும் வேலை செய்து இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார். தன் உழைப்பு மற்றும் உயர்வு குறித்து கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாமல் இருக்கிறார்- இவரது எழுத்தில், தன் எழுத்து குறித்த நியாயமான பெருமிதம் இருந்தாலும் இருக்குமே தவிர, தனி மனிதனாக பெர்சனல் வாழ்வில், "நான் அதை சாதித்தேன், இதை சாதித்தேன்," என்ற பெருமையை எங்கேயும் நானறிந்தவரை பார்த்ததில்லை. அவரது கசப்புக்கும் கோபத்துக்கும் எந்த அளவுக்கு தார்மீக நியாயங்கள் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அவர் பெருமைப்படுவதற்கும் தன்னைத் தானே மெச்சிக் கொள்வதற்கும் நியாயங்கள் இருக்கின்றன. ஆனால் அவர் அதில் ஈடுபட்டுக் களிப்படையவில்லை.

தகுதியுள்ள எழுத்தாளர் என்ற வகையில் மட்டுமல்ல, தகுதியுள்ள மனிதருக்குதான் இந்த ஆண்டு விருது கிடைத்திருக்கிறது. அவருக்கு எனது தாழ்மையான வணக்கங்கள்.

19/12/10

ரஷ்யன் ஜோக்

ஒரு ஜோக்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் ஒருவர் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் திடீரென்று வருகிறவர் போகிறவர்களுக்கெல்லாம் பிரச்சார நோட்டீஸ்கள் விநியோகிக்க ஆரம்பித்துவிட்டார்.

உடனே கேஜிபி போலீஸ் அவனை கும்மி அமுக்கி விட்டது.

அவனிடமிருந்த நோட்டீஸ்களை பிடுங்கிப் பார்த்தால், எல்லாம் வெற்றுக் காகிதங்கள். எதுவும் எழுதப்படாத வெள்ளைத் தாள்கள்.

ஒன்றும் புரியவில்லை, "என்ன இதெல்லாம்?," என்று அவனிடம் கண்ணை உருட்டிக் கேட்டார்கள்.

"நான் என்ன எழுத முடியும்? பார்த்தாலே தெரியவில்லை?," என்று பதில் கேள்வி கேட்டான் அவன், "நான் என்னதான் எழுதியிருக்க முடியும்?"

இங்கிருந்து- Shtetl-Optimized

துவக்கமே எழுத்தின் தோற்றுவாய்

செய்வதை சொல்வோம், சொன்னதை செய்வோம். இது அரசியலில் வெற்றி பெற்ற கோஷம், இல்லையா? இதைப் பயன்படுத்திய கட்சியின் தலைவர் ஒரு எழுத்தாளராக இருந்ததில் ஆச்சரியமில்லை. நல்ல எழுத்தின் தாரக மந்திரமும் இதுதான்- உங்கள் துவக்கத்தில் இருக்கிறது எழுத்தின் சாரம் என்கிறார் ஜான் மக்ஃபீ.

காரணம், துவக்கம் என்பது கட்டுரையின் நுழைவாயில் மட்டுமல்ல, அதன் வெளிச்சமும்கூட. முன்னே சொன்னப்பட்டதன் வெளிச்சத்தில்தான் பின்வருவனவற்றை அறிகிறோம், எனவே துவக்கம் சரியானதாக இருந்து விட்டால் பாதி கிணறு தாண்டியது போல. அதனால்தான் அது எழுத்தின் கடினமான பகுதியாகவும் இருக்கிறது, இல்லையா? ஒரு கட்டுரையின் துவக்கத்தை அதன் தோற்றுவாய் என்று சொல்வது சரியாக இருக்கும்.

ஒரு போதும் துவக்கங்கள் முட்டுச் சந்துக்கு கொண்டு போய் வாசகனை நிறுத்திவிடக் கூடாது. என்ன சொல்கிறோமோ, அதையே செய்ய வேண்டும். விளையாட்டு போல. "மாப்பி, நான் இன்னிக்கு காலைல ஒரு கவிதை எழுதினேன் பாரு, என்னை அழ வெச்சிடுச்சி. படிக்காம எஸ்ஸாயிடாதீங்க மக்கா..." என்று எதையாவது சொல்லிவிட்டு, அடுத்த பத்தியில் "அர்த்த யாமத்தின் இருண்மையில் பகற்பொழுதின் நினைவுகள் திரண்டு, குவியாடியின் வழி விழும் ஒற்றைக் கதிர் போல் நினைவு கூடிய வலியின் உக்கிர நிகழ்வு இந்தக் கவிதை" என்ற அவதானிப்பைத் தொடராதீர்கள். இப்படி எழுதுவதானால் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும், எஸ்ஸாகும் பெருமக்கள் திட்டாமல் போயிருப்பார்கள், இப்போது திரும்பிப் பார்ப்பார்கள் என்கிறீர்கள்?

துவக்கம் என்பது வாக்குறுதி மாதிரி. அதை நிறைவேற்றியே ஆக வேண்டும். அரசியல்வாதிகள் வேண்டுமானால் புதுப் புது வாக்குறுதிகள் தருவதை பிழைப்பாக வைத்துக் கொண்டு தினம் ஒரு துவக்கம் நிகழ்த்தலாம். ஆனால் எழுத்தாளனுக்கு அந்த சௌகரியம் கிடையாது.

மரத்தின் விதை போல், கட்டுரையின் ஜீவன் அதன் துவக்கத்தில் இருக்கிறது. அது சரியானதாக அமைந்துவிட்டால், அதை நூல் பிடித்துக் கொண்டு போனாலே போதும், சிறப்பாக எழுதி முடித்து விடலாம் என்கிறார் ஜான் மக்ஃபீ,

ஆங்கில கட்டுரை இங்கே இருக்கிறது- The Wall Street Journal

17/12/10

எழுத்துக் கலை என்பது எதிர்பாரா கூட்டணி



இந்த ஆண்டின் சிறந்த புத்தகங்களில் ஒன்றை எழுதியிருப்பதாக பாராட்டப்படும் ஸ்டீவன் ஜான்சன் எழுத்துக் கலை குறித்து சொன்னதாக ஆலிவர் பர்க்மேன் தந்திருக்கும் குறிப்புகள் இவை-

உங்களுக்கு முக்கியமானதாகத் தோன்றும் கருத்துகளை எல்லாம் ஒரு நோட்டுப் புத்தகத்திலோ வர்ட் டாக்குமெண்ட்டிலோ டெக்ஸ்ட் கோப்பிலோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த கருத்துகள் எதுவாகவும் இருக்கட்டும். இந்த குறிப்புகளை அடிக்கடி படித்துப் பார்ப்பது என்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். ஐடியாக்கள் தனித்தனியாக வருவதில்லை, கூட்டம் கூட்டமாக வருகின்றன. நீங்கள் தொடர்பே இல்லை என்று நினைத்து கொண்டிருக்கிற இரு விஷயங்கள் திடீரென்று ஒன்றாகக் கூடி ஒரு புதிய கருத்தை உருவாக்கக் கூடும். சொல்லப்போனால் ஐடியாக்கள் தோன்றுவது இது போன்ற நினைக்காத கூட்டணி அமைந்த தருணங்களில்தான்.

தகவல்களைத் திரட்டுவது, அதற்கப்புறம் அது பற்றி எழுதுவது என்று வைத்துக் கொள்ளாதீர்கள். எழுத ஆரம்பித்து அதன் கூடவே தகவல்களைத் திரட்டும் வேலையையும் வைத்துக் கொள்ளுங்கள். எழுத ஆரம்பித்தால்தான் புதுப் புது தகவல்களின் முக்கியத்துவம், அவற்றின் இடம் தெரிய வரும். வெறுமே தகவல்களைத் திரட்டிக் கொண்டிருந்தால் அதுவே ஒரு மேனியா மாதிரி ஆகி எழுத்து வேலையைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கும். ஒரு புத்தகத்தின் முதல் வரைவை எழுதும்போது அதன் இருநூற்றாம் பக்கத்தை எழுதி முடித்தபின்னும் கூட இந்தப் புத்தகம் இதைப் பற்றிதான் இருக்க வேண்டும் என்ற உணர்வு புதிய ஒரு தகவல் அல்லது தெரிந்த தகவல்களின் புதிய கூட்டணியால் ஏற்படலாம் என்கிறார் இவர்.

தினமும் குறைந்த பட்சம் ஐநூறு சொற்களாவது எழுதுங்கள். ஐநூறு சொற்கள் என்பது ஒன்றுமேயில்லை. ஆனால் இப்படி எழுதினாலே ஆறு மாதங்களில் ஒரு புத்தகத்தை எழுதி முடித்துவிடலாம்.

நிறைய நேரம் எழுதுவதற்கு ஒரு பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்- ஒரு குறிப்பிட்ட நேரம் போன பின் மூட் மாற்றிக் கொண்டு எழுத ஏதாவது சம்பிரதாயம் வைத்துக் கொள்ளுங்கள். பீர் குடிப்பது, சினிமா பாட்டு கேட்பது என்று மனநிலையைத் தளர்த்திக் கொண்டு எழுத்து வேலையைத் தொடர்ந்தால் புதிதாக எழுத இப்போதுதான் உட்கார்ந்த மாதிரி உற்சாகம் பெருகக் கூடும்.

வாழ்த்துகள்.



via Kottke.org

16/12/10

டி ஹெச் லாரென்ஸ் எவ்வளவு முக்கியமானவர்?

இப்போது மார்டின் ஏமிஸ் எழுதிய ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு இடத்தில் அவர், சமயத்துக்கு மாற்றாக இலக்கியத்தை Arnold முன்வைத்தார், F R Leavis இலக்கியப் படைப்புகள் வாழ்வை ஒட்டி விமரிசிக்கப்பட வேண்டும் என்று சொன்னார், அதாவது விமரிசகனுக்கும் ஒரு moral responsibility இருக்கிறது என்பது அவருடைய அவதானிப்பு. ஆனால் என்ன ஆச்சுன்னா இதுதான் இலக்கியம் என்று leavisiteகள் கறாராக வரையறுத்த பட்டியல் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிக் கொண்டே வந்தது. அதை அப்படியே விட்டிருந்தால் அது D H Lawrenceன் collected works என்ற ஒற்றைப் புத்தகத்தில் வந்து நின்றிருக்கும், அதற்குள் நல்ல வேளை, Leavis போயிட்டார் என்று எழுதுகிறார்.

D H Lawrenceன் படைப்புகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருந்திருக்கிறது என்பது செய்தியாக இருக்கிறது. இதை இங்கிருப்பவர்கள் யாரும் இதுவரை சொல்லவேயில்லையே! கோட்பாடு சார்ந்து விமரிசனம் செய்பவர்கள் ஒரு கோட்பாட்டை ஒற்றை ஆளாக represent செய்திருக்கக்கூடிய எழுத்தாளரை எப்படி கொஞ்சம் கூட மதிக்காமல் ஓரங்கட்டப் போச்சு?

இந்த மாதிரி இற்றுப் போன விவாதங்கள் நமக்குத் தேவைதானா என்பது ஒரு முக்கியமான கேள்வி. ஏதோ மனதில் தோன்றியதால் பதிவு செய்து வைக்கிறேன்- பிற்காலத்தில் ஒரு பத்து இருபது வருஷம் கழித்து லாரன்ஸ் ரசிகர் யாராவது கூகுள் செய்தால், "நம்மாளைப் பத்தி இவரு ஒருத்தராவது எழுதியிருக்காரப்பா!" என்று ஆறுதல் அடையக் கூடுமில்லையா?

15/12/10

கோழி சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை!

தலைப்புக்கும் பதிவுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. சும்மா ஜில்லுன்னு இருக்கட்டுமேன்னுதான் இப்படி வைத்தேன்.

விஷயத்துக்கு வருவோம்.

நான் ஆறாவதோ ஏழாவதோ படித்துக் கொண்டிருக்கும்போது பள்ளி ஆண்டுமலருக்கு மாணவர்களிடம் படைப்புகளைக் கேட்டார்கள். நான் என் அப்பாவின் நண்பர் ஒருவர் எழுதிய கதையை பிரதி எடுத்து கொடுத்தேன் (ஆமாம், அப்போதே இந்த பழக்கம் ஆரம்பித்து விட்டது). கதையில் லாரியின் டயர்கள் பேசிக் கொள்ளும் என்று நினைவு.

கதையைப் படித்ததும் என் ஆசிரியர், ஒரு கேள்விதான் கேட்டார்- "இதை நீதான் எழுதினாயா?"

"ஆமாம்" என்று சொன்னேன்- உண்மைதானே?

"சரி, இங்கு ஆள் அரவம் இல்லாத ரோடு என்று எழுதியிருக்கிறாயே, அரவம் என்பதற்கு என்ன அர்த்தம்?"

"பாம்பு"

அவர் எதுவும் பேசவில்லை. ஆனால் எனக்கு ஏதோ தப்பு செய்து விட்டோம் என்று தெரிந்து விட்டது. அந்தக் கதையை என் பெயரில் போட்டுக் கொள்வது ஒரு திருட்டு என்பது அப்போதுதான் உரைத்தது. சத்தியமாக சொல்கிறேன், நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

யோசித்துப் பார்க்கும்போது, ஆள் அரவம் இல்லாத ரோடு என்பது மனிதர்களோ பாம்புகளோ இல்லாத ரோடு என்று பொருளல்ல (அடிக்குறிப்பைக் காண்க)- ஒரு சிறு சலசலப்பும் இல்லாத நிசப்தமான சாலை. இங்கு அரவம் என்பது பாம்பைக் குறிக்கவில்லை, அரவம் ஏற்படுத்தக்கூடிய சிறு சரசரப்பைக் குறிக்கிறது (சாலையில் அதுகூட கேட்குமா என்ன?).

கதையை/ கவிதையை கதை/ கவிதையாகப் படித்தால் அரவம் என்பதை பாம்பு என்றுதான் படிக்க வேண்டும். அப்படி படிக்கும்போது, நாம் படிக்கிற நுட்பமான விஷயங்கள் உள்ளீடற்ற வார்த்தைகளாகத்தான் பெரும்பாலான சமயம் இருக்கும்- "அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா!" என்பன போன்ற கவிதைகளை வேண்டுமானால் அலசாமல் ரசிக்கலாம்.

ஆனால் அதுவேகூட, துக்ளக் அல்லது இட்லி வடையில் XXX (இவர் பெயரைக் குறிப்பிட்டு எதிரிகளை சம்பாதித்துக் கொள்ளும் ஆசை எனக்கில்லை. ஆனால், உங்களுக்கு இவரைத் தெரிந்திருக்குமோ தெரியாதோ- இவர் ஒரு மாஸ் ஹீரோ. அரசியலில் கால் வைக்கப் போகிறார், ஆனால் அந்தக் கால் யார் தோளில் நிற்கப் போகிறது என்பன போன்ற ஹேஷ்யங்கள் இப்போது பரபரப்பான டாபிக்), எங்கு விட்டேன், இட்லி வடையில் XXX "அம்மா இங்கே வா வா! ஆசை முத்தம் தா தா!" என்று பாட்டுப் பாடுகிற மாதிரி யாராவது வரைந்தால் அவர் தன் தாயிடம் முத்தம் கேட்கிறார் என்று யாரும் புரிந்து கொள்ள முடியாது- ஆட்டோ வீட்டு வாசலுக்கு வந்து நிற்கும்போது கார்ட்டூன் வரைந்தவர் அப்படியெல்லாம் கோட்பாடு பேசினால் வந்தவர்கள் அதை ரசிக்க மாட்டார்கள்.

உட்பொருள் குறித்து அலசிப் படிக்காவிட்டால் வாசிப்பு என்பது இந்த கணினியிலிருந்து ஒலிக்கக்கூடிய computer generated reading of a text என்ற அளவில்தான் இருக்கும்: உள்ளீடற்ற வார்த்தைகள் என்று அதை சுருங்க சொல்லுவார்கள்.

சரி, வேறு வழியில்லை, நீ உன் வசதிக்கு வாசித்துவிட்டுப் போ. ஆனால் அப்படி நீ படித்ததை போது இடத்தில் எழுதி ஏன் எழுத்தாளனை வதைக்கிறாய்? என்று கேட்பார்கள். இது எழுதப்படுவது சக வாசகனுக்காக, படைப்பாளிக்காக அல்ல.

ஒரு படைப்பை அலசுதல் என்பது குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்ற தோற்றம் வரும். அது அப்படியல்ல. பூக்கூடையில் இருக்கிற உதிரிகளை வீசி எறிந்த பின் மிஞ்சி இருக்கிற கோர்வைதான் பூமாலை. வெறும்பேச்சாக இருப்பதை இத்தகைய அலசலுக்கு உட்படுத்தி சிதைத்து விடக் கூடும். ஆனால் உன்னதமான படைப்புகளை அலசும்போது, அதில் மாலை போல் உள்ள கோர்வையை கண்டு பிடிக்க முடியும், அவ்வளவு ஏன், அதை மறைக்கவே முடியாது.

என்ன செய்தாலும் சில பூ மாலைகளை பிய்த்துப் போட முடியாது என்பதுதான் உண்மை- அது அந்தக் குரங்குக்குத் தெரியாவிட்டாலும்கூட.


அடிக்குறிப்பு:
நான் கோணங்கியின் கதையைத் திருடியிருந்தால் வேண்டுமானால் அந்த அர்த்தம் தந்திருக்கலாம், ஆனால் நான் பிரதி எடுத்திருந்தது ஒரு சாமானியர் எழுதிய கதையை-: "கோணங்கி சிரித்தார் ”பாம்பு வந்துட்டே இருக்கணும்டா… அதுதான் நமக்கெல்லாம் வழிகாட்டணும்…இந்த நகரத்திலே பாம்போட நெழல் கூட வர்ரதில்லை…” நான் சிரித்துக்கொண்டு ”வேற ஒரு காலத்திலே அது படுத்திருக்கு…அங்க எல்லாமே ரொம்ப மெதுவா நடந்திட்டிருக்கு… நகந்து போனதுகூட மெதுவா தண்ணி ஓடுறமாதிரித்தான்” ”பாம்புகள் வரணும்…நம்மள அப்பப்ப வழிமறிக்கனும்” என்றார் (http://www.jeyamohan.in/?p=7670).

விவாதமும் வசையும்

தமிழில் அழியாச் சுடர்கள் என்ற தளத்தில் அருமையான தமிழ் கதைகளை தினமும் பதிவிடுகிறார்கள் அல்லவா, அந்த மாதிரி அமெரிக்காவின் சிறந்த ஆங்கில சிறுகதைகளை ஒரு தளத்தில் பதிவிடுகிறார்கள், புக்மார்க் செய்து வைத்துக் கொள்ளலாம். அங்கு ஷிர்லி ஜாக்சன் (Shirley Jackson) எழுதிய "லாட்டரி" (The Lottery) என்ற அருமையான கதையை முதலில் படித்து விட்டு பின் வருவனவற்றைப் படியுங்கள். நெஞ்சை உலுக்கும் கதை. இந்த ஒரு கதைக்காகவே ஷிர்லி ஜாக்சனின் பெயர் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்று விட்டது என்று சொல்கிறார்கள், அது உண்மைதான், சந்தேகமேயில்லை.

ஷிர்லி ஜாக்சன் அடித்தல் திருத்தல் இல்லாமல் ஒரே மூச்சில் இந்தக் கதையை எழுதினாராம். ந்யூ யார்க்கர் இதழின் ஹரால்ட் ராஸ் (Harold Ross), "இந்தக் கதைக்கு என்ன அர்த்தம்?" என்று கேட்டாராம். ஷிர்லி ஜாக்சன் சொல்ல மறுத்துவிட்டார். ந்யூ யார்க்கரில் அடுத்த வாரமே வெளிவந்தது. அந்தக் கதைக்குக் கிடைத்த கவனமும் அது எழுப்பிய சச்சரவும் ந்யூ யார்க்கரின் வரலாற்றில் முன்னும் பின்னும் காணாத ஒன்றாம்.

ஷிர்லி ஜாக்சன் இந்தக் கதையை எழுதியது 1948ஆம் ஆண்டில். கதை எப்படிப்பட்ட வரவேற்பைப் பெற்றது என்று சொல்கிறார் பாருங்கள், காலம் மாறினாலும், ஊடகம் மாறினாலும் மக்கள் மாறவில்லை என்பது தெரிகிறது.

ஜாக்சனின் முகவரிக்கு முன்னூறு கடிதங்கள் வந்தனவாம், அதில் பதின்மூன்று மட்டும்தான் அவருக்கு இணக்கமாக இருந்தன, அவற்றில் பெரும்பாலானவை நண்பர்களிடமிருந்து வந்தவை. ஷிர்லி ஜாக்சன் இது பற்றி இப்படி சொல்கிறார்-

அத்தனை கடிதங்களும் இன்னமும் என்னிடம் இருக்கின்றன, பொது வாசகர்களில் அனைத்து தரப்பினரின் இயல்பு குறித்தும் இதைக் கொண்டு துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியும்... இப்போதானால் எழுதுவதை நிறுத்தி இருப்பேன்.... இந்தக் கடிதங்களைப் படித்தால் கதை படிக்கிறவர்கள் ஏமாளிகளாக இருக்கிறார்கள், மரியாதை தெரியாதவர்களாக, எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக, தங்களைப் பார்த்து யாராவது சிரித்து விடுவார்களோ என்று பயங்கரமாக அச்ச்சப்படுபவர்களாக இருக்கிறார்கள்....

கதை வெளியான காலத்தில் எனக்கு வந்த கடிதங்களில் மூன்று மைய விஷயங்கள் பெரிதளவில் காணப்பட்டன- குழப்பம், மிகை கற்பனை, பச்சை வசவு என்று அவற்றை வகை பிரிக்கலாம். முதலில் வந்த கடிதங்கள் கதையின் பொருள் குறித்தல்ல- அவர்கள் இந்த லாட்டரிகள் எங்கு நடத்தப்படுகின்றன, மற்றவர்கள் வந்து பார்க்க அனுமதிக்கப்படுவார்களா என்று கேட்டிருந்தார்கள்.

(இது எல்லாம் இங்கிருந்து எடுத்தது.)

அன்று முதல் இன்று வரை மாற்று கருத்து, மாற்று பார்வை உடையவர்களை, அவர்கள் தன்னம்பிக்கையோடு அதை முன்னெடுத்து வைத்தால் வசைமாரி பொழிவதுதான் வழக்கமாக இருக்கிறது போல. தன்னால் புரிந்து கொள்ள முடியாததைத் தாண்டிச் செல்ல முயல்வதுதான் நம் இயல்பு. தப்பில்லை. ஆனால் சில புரியாத விஷயங்கள் புரியாமலே இருந்த போதும் அதில் இருக்கிற உயிர்ப்பு அதை நாம் எத்தனை வைதாலும் வலுக்குறையாமல் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு விடும். நாம் மனம் மாறி ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தாலும், நம் பிள்ளைகள் ஏற்றுக் கொண்டு விடுவார்கள், தடுக்க முடியாது. அதற்கு ஷிர்லி ஜாக்சனின் லாட்டரி ஒரு நல்ல உதாரணம்.

இதனால் அறியப்படுவது யாதெனில், வைவது மனிதனின் பலவீனம். சரக்கு இருக்கிற விஷயம் மலை மாதிரி, அதை வசவுகள் ஒன்றும் பண்ண முடியாது. சுயமாய் யோசித்து எழுதுபவன், தன் எழுத்து நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கை இருப்பவன், வசைகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை, காலப்போக்கில் படைப்பின் உன்னதத்தின் முன் அவை நீர்த்துப் போய் விடும். எதுவும் எழுதத் தோன்றாமல், கற்பனை வரண்ட வெட்டிப் பொழுதில் வேண்டுமானால வசவுகளைப் படித்து பதில் வசை பாடலாம். ஆனால் அதுவும் ஒன்றும் கட்டாயமல்ல. ஒரு டைம் பாசாக வேண்டுமானால் அதை வைத்துக் கொள்ளலாம். அதை செய்வதாலோ செய்யாததாலோ பெரிதாக ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. அதுதானே உண்மை?

14/12/10

இரு உன்னத கவிதைகள்

ஆங்கில இலக்கியத்தின் இரு உன்னத கவிதைகள் இங்கே-

Poets who get friendly with the gods. - By Robert Pinsky - Slate Magazine

கவிதை கிவிதையின் ரகசியம்

இதைப் பதிவு செய்து வைக்காவிட்டால் அது ஒரு பெரிய அநீதியாகி விடும்- தமிழ் பேப்பரில் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பெயரில் கவிதை கிவிதை எழுதுபவர் தப்பாட்டம் ஆடுகிறாரோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

முதலில் அவர், சாதாரணமான கருத்துகளை புரிந்து கொள்ள முடியாத வகையில் கடினமான சொற்கோவையாக மாற்றி சிலம்பாட்டம் ஆடுகிறவர்கள் எழுதுகிற நவீன கவிதைகளின் அங்கதமாக தன் கிவிதைகளை எழுதுகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்- ஒரு வகையில் கிவிதையைத் தோலுரித்து அதில் இருக்கிற 'கவிதை'யைக் காட்டுகிறார் என்று. மேதாவித்தனமாக அவரது ஒவ்வொரு கிவிதையையும் படித்து விட்டு திருப்தியாக சிரித்தேன் என்று வையுங்கள், இந்தக் கிவிதையைப் படிக்கும் வரை.

நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்கிற மாதிரி, இவர் சில சமயம் நல்ல கவிதையையும் கிவிதை என்ற தலைப்பில் போட்டு விட்டு மொக்கையான கவிதையாக அதை மொழிபெயர்த்து, யாராவது கவனிக்கிறார்களா என்று விளையாடிப் பார்க்கிறார் என்று சந்தேகிக்கிறேன்.

அவர் எழுதியுள்ள குழவி நினைவின் நீட்சி என்ற கவிதைகிவிதையைப் பாருங்கள், அதில் வருகிற -
தொலைந்த குழந்தையை
தேடுகிறது மனம்
என்ற நான்கு சொற்களின் சாத்தியக்கூறுகள் மிகக் குறைவாகவே இருப்பதாக நமக்குத்
தோன்றும். இதன் பொருளைத் தாண்டி என்ன சொல்லி விட முடியும்? ஆனால் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் என்ன எழுதி இருக்கிறார் பாருங்கள்-
குழவி துழாவும் பேரவல பெருங்குரல்.....
கசிந்துருகும் குழவி நினைவின் நீட்சியென
பூக்களைப் புறந்தள்ளுகிறது பெருஞ்சோக ஊற்றுக்கண்
குழவி துழாவும்பேரவலப் பெருங்குரல், பெருஞ்சோக ஊற்றுக்கண்: இங்கு நெடிலோசை இழப்பின் வலியை, இல்லாமையின் ஓலத்தை எவ்வளவு அழகாக சுட்டுகிறது பாருங்கள்-

அது தவிர மேற்கண்ட வரிகளில், "ஐயோ", "பாப்பா", "காணோம்",  "போச்சே", என்பன போன்ற ஈரசைச் சொற்களில் வரக்கூடிய நேர் நேர் தேமா என்று சொல்லப்படும், இரு நெடில்கள் ஒன்றை ஒன்று ஒட்டி வரும் பதங்களை கவனமாகத் தவிர்த்திருக்கிறார், தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனார்.

இதை அவர் திட்டமிட்டுத்தான் செய்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. அழகான கவிதையை மொக்கையான கிவிதையாக்கினால் அங்கதம் என்று எடுத்துக் கொள்ளலாம், ஆனால் அவ்வப்போது இப்படி அழகான கிவிதை எழுதிவிட்டு அதை மொக்கையான கவிதையாக்கினால், படித்துப் பார்த்து ஏமாற நாங்கள் எல்லாம் கேனையர்களா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இனிமேல் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் எழுதும் கிவிதைகளை கவனமாகப் படித்து, தலைப்பைப் பார்த்து ஏமாறாமல், எது கவிதை எது கிவிதை என்று சுயமாக முடிவு செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

ஆனால் எதற்காக இப்படி மெனக்கிட வைக்கிறார் இவர் என்று கிவிஞர் மேல் கோபம் வரத்தான் செய்கிறது.

(தமிழர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனோ, அல்லது பிற்காலத்தில் இந்த விபரம் தெரிந்தப்பின் நம்மைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரிக்கக்கூடிய நம் சந்ததியினரோ, யாரும் நினைத்துவிடக் கூடாதென்ற ஒரே உயரிய நோக்குடன் இதை இங்குப் பதிவு செய்கிறேன்)

13/12/10

டால்ஸ்டாயின் கொடை

முழுக்க முழுக்க சரி என்று சொல்ல மாட்டேன், ஆனால் நன்றாக எழுதி இருக்கிறார்.
டால்ஸ்டாய் குறித்து படித்தது- தமிழில் இப்போது எழுதிக் கொண்டிருப்பவர்களில் யாரைக் குறித்து அவர் காலமாகி நூறாண்டுகள் சென்ற பின் இப்படி சொல்ல முடியும் என்று யோசித்தேன். ஒருவருக்கு மட்டுமே இது சாத்தியம் என்று தோன்றுகிறது- அவர் தன் கலையே கண்ணாக இனியேனும் இருந்தாரெனில்.


***=> டால்ஸ்டாய் என்ன எப்படியென்று சொல்வது இயலாத காரியம். நம்மால் அதிகபட்சம் ஆகக் கூடியது அவரது படைப்புகளின் தொகுப்புகளும் அவரைக் குறித்த நினைவுகளாய் மற்றவர்கள் எழுதியதுமான நூற்றுக்கணக்கான நூல்களை சுட்டுவதுதான்- இவற்றைப் படிக்க சொல்லலாம், சிறிது தெளிவு கிடைக்கக் கூடும்.

ஆனால் ஒரு விஷயம் இப்போதே தெளிவாகத் தெரிகிறது- டால்ஸ்டாய் யார் என்பதற்கு பதில் கிடையாது, இருக்கவும் முடியாது. டால்ஸ்டாய் பற்றி மதிப்பிடுவதென்பது உயிர், புவி, மானுடம் போன்ற மாபெரும் கருதுகோள்களை மதிப்பிடுவது போன்றது: நீ எவ்வளவு நுட்பமாக இவற்றை ஆய்ந்தாலும், இவற்றை சுற்றி உன் கற்பனையை வளைக்க எவ்வளவு முயன்றாலும், இந்த ஒரு விஷயம் உனக்குத் தெளிவாகத் தெரிகிறது- எந்த ஒரு சட்டகத்திலும் அவரை அடக்க முடியாது என்பதே அது.

****=> டால்ஸ்டாய்க்கும் கடவுளுக்கும் இடையிலான உறவு "ஒரே குகையில் இருக்கும் இரு கரடிகளது போன்றது" என்று சொல்கிறார் கார்க்கி தன் சுயசரிதையில். இதற்கு நாம் பல்வேறு வகைகளில் அர்த்தம் செய்து கொள்ளலாம், ஆனால் மிகப் பொருத்தமானது இதுவாகவே இருக்கும்- கடவுள் எதைக் கொண்டு படைக்கிறானோ, அதே ஆட்களைக் கொண்டு தன்னாலும் படைக்க முடியும் என்ற உணர்வு டால்ஸ்டாய்க்கு முழுமையாக இருந்தது. மானுட இயல்பை தான் பரிபூரணமாக உணர்ந்த காரணத்தால், அதன் கொடூரம், முட்டாள்தனம், கீழ்மை, அகங்காரம், இவை அனைத்தையும் அறிந்திருந்தும் அவர் தனது நம்பிக்கையை மானுடத்தின் இன்னொரு முகத்தில் வைத்திருந்தார்- அதன் இரக்கம், கருணை, சுயநலமின்மை, மன்னிக்கும் குணம் என்பனவற்றில். தன் வாழ்நாளை அப்படியொரு சமுதாயத்தை மண்ணில் படைக்க முயற்சிப்பதற்கென அர்ப்பணித்தார் அவர்.

டால்ஸ்டாய் ரஷ்யாவுக்கும்- உலக முழுமைக்கும்- விட்டுச் சென்றது, நம்பிக்கையை. அவரால் மானுட இயல்பை மாற்ற முடியவில்லை என்றாலும், அதில் ஒரு நெகிழ்வை ஏற்படுத்தினார். அவர் இறந்து நூறாண்டுகள் கழிந்து விட்டன. அவர் தனது கோட்பாடுகள் மற்றும் உழைப்பைக் கொண்டு உருவாக்கியனவற்றை தன்னை நினைவுபடுத்தும் வகையில் ஒரு கல் கூட இன்று இல்லாமல் எல்லாம் அழிந்து போய் விட்டன. ஆனால் அவரது புத்தகங்கள் இருக்கின்றன: War and Peace, Anna Karenina, Hadji Murat, “The Death of Ivan Ilych”, மற்றும் பிற- அவர் விட்டுச் சென்றிருப்பது ஒரு மகோன்னதமான கொடை. ஆனால் அது கலையின் சாசனம் மட்டுமே.

அவரது ஆளுமையும் அழியாமல் உயிர்ப்புடன் இருக்கிறது. அதைக் கொண்டு மனிதன் எப்படி இருக்க முடியும் என்பதை நாம் அறிந்து கொள்ளும் வகையில்.

இதை சரியாகப் படிக்க- The Moscow News.

கலையின் சாத்தியங்கள் அவ்வளவு சாதாரணமானவையா என்ன!

12/12/10

இலக்கியமும் வணிக எழுத்தும்

வணிக எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு நமக்கு அவ்வளவு எளிதில் பிடிபடுவதில்லை. விறுவிறுப்பாகவும் சுவையாகவும் நேர்த்தியாகவும் எழுதப்பட்ட வணிக எழுத்து ஏன் இலக்கியமாக அங்கீகரிக்கப்படக்கூடாது என்ற கேள்வி திரும்பத் திரும்ப நம் மனதில் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கான விடை காண்பது எளிதல்ல. இருந்தாலும், ஒரு விடையை நோக்கி கார்டியன் இதழில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதை சுருக்கித் தருகிறேன்:
வணிக எழுத்து எவ்வளவு நன்றாக இருந்தாலும் அதன் சாத்தியங்கள் மிகக் குறைவானவையே. கதையில் என்ன சொல்லலாம், எப்படி சொல்லலாம் என்பதற்கான எல்லைகள் மதிக்கப்பட்டாக வேண்டும். ஒரு கொலையும், அந்தக் கொலையின் முடிச்சை அவிழ்க்கும் துப்பறிவாளனும் கதையில் அவசியம் இருந்தாக வேண்டுமென்றால், கதைக்களம் சில இழப்புகளை ஏற்றாக வேண்டும்- கதையின் சில தீர்மானங்கள் அது எழுதப்படுமுன்னரே ஏற்கப்பட்டு விடுகின்றன.
இதனால்தான் ஒரு மோசமான துப்பறியும் கதை நல்ல இலக்கியத்தைவிட சுவையாகவும் வாசகர்களால் போற்றப்படத் தக்கதாகவும் இருக்கிறது- ஒரு கொலை செய்யப்பட்டிருக்கிறதென்றால், கதை எவ்வளவு மட்டமாக எழுதப்பட்டிருந்தாலும் அது எந்த திசையில் செல்லும் என்பது வாசகனுக்குத் தெரியும்- இது போன்ற மற்ற கதைகளைப் படித்ததால் எழுப்பப்பட்டிருக்கிற ஆவல் நிறைவு காணும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது. ஆனால் இலக்கியப் படைப்புக்கு இந்த மாதிரியான உத்தரவாதங்கள் கிடையாது.
ஒரு போளி ஸ்டாலையும் உயர் ரக ஹோட்டலையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். போளி ஸ்டாலில் மசாலா போளி, தேங்காய் போளி, கார போளி, ஸ்வீட் போளி என்று வகை வகையான போளிகள் விற்றாலும் நமக்கு போளி ஸ்டால் சரக்குகளில் பெரிய அளவில் சுவையிலோ தரத்திலோ எதிர்பார்ப்புகள் கிடையாது. அதனால் நாம் போளி அப்படி இப்படி இருந்தாலும் சந்தோஷமாக அடுத்த நாள் அந்தக் கடைக்குப் போவோம். ஆனால் தரமான, சுவையான, சுகாதாரமான உணவை அழகாகப் பரிமாறுவதாய் சொல்லிக் கொள்கிற ஹோட்டலில் உப்பு குறைவாக இருந்தால்கூட நமக்கு எரிச்சல் வருகிறது, அங்கு வழக்கமாக தோசைக்குத் தருகிற நான்கு வகை சட்னிகளில் தேங்காய் சட்னி மட்டும் தீர்ந்து விட்டது என்று சொன்னால் கொதித்தெழ மாட்டோம்? போளி கடை சரக்கை விட இங்கு நாம் எதை சாப்பிடுகிறோம் என்பதைக் குறித்து ஆர்வமாக இருக்கிறோம்- மற்ற விஷயங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் ஒரு சிறு ஏமாற்றத்தையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இப்படிப்பட்ட ரிஸ்க் எடுத்துதான் இலக்கியம் படைக்கிறார்கள்.
வணிக எழுத்தாளர்கள் கூட்டம் சேர்க்கட்டும், காசை எடுத்துக் கொண்டு போகட்டும், தப்பில்லை. ஆனால் அதை ஒரு அளவுகோலாக வைத்துக் கொண்டு தங்கள் எழுத்தின் தகுதிக்கு மீறிய மரியாதையையோ களத்தையோ நம் மனதில் நிறுவ முயற்சி செய்யக் கூடாது.

இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நாம் இலக்கிய புத்தகம் என்று நினைத்து ஒன்றைப் படித்துப் பார்க்கிறோமா என்ன? ஆனால் நல்ல ஒரு இலக்கிய நூல் புதிய பாதையில் பயணிக்கிறது என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அதன் களமும் வணிக எழுத்தைவிட நோக்கத்திலும் வெளிப்பாட்டிலும் விரிந்த ஒன்றே.

கட்டுரை இங்கே இருக்கிறது- The Guardian.

எப்படி கதை எழுதுவது?- எல்மோர் லேனார்டின் பத்து கட்டளைகள்

Elmore Leonardஐ நாம் வணிக எழுத்தாளர் என்று உதாசீனப்படுத்துவோம் என்று நினைக்கிறேன். ஆனால் வணிக எழுத்தில் வெற்றி பெற வேண்டுமானால் வசீகரமாக எழுதும் கலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இல்லையா? அந்த வகையில் அவர்து எழுத்து குறித்த பத்து கட்டளைகள் கவனிக்கத்தக்கன.

ஒரு நிமிடம். இவர் யார் என்பதை விக்கிபீடியாவில் பாருங்கள்- 3:10 to Yuma என்ற புகழ் பெற்ற உலக சினிமா இவர் எழுதிய ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒன்று, பெரிய ஆள்தான், இல்லையா?



விஷயத்துக்கு வருவோம். லேனார்டின் பத்து கட்டளைகள்-

௧. வானிலை பற்றிய வர்ணனையோடு கதையை ஆரம்பிக்காதீர்கள். வாசகனுக்கு கதையில் வருகிற பாத்திரங்கள்தான் முக்கியம். அவன் வானிலை அறிக்கைகளைத் தாண்டிப் போகவே விரும்புவான்.

௨. கதையை பீடிகை போட்டு ஆரம்பிக்காதீர்கள். கதையின் களத்தை அறிமுகப்படுத்தும் இடம் துவக்கமல்ல- உங்கள் கதையின் பின்புலம் கதையின் போக்கோடு ஒட்டி விரியவேண்டும்.

௩. வசனங்களை, "சொன்னான்", "சொன்னாள்" என்று பூர்த்தி செய்யுங்கள்- புகன்றான், பகன்றான், கூறினான் போன்ற சொற்கள் புனைவுக்குரியவையல்ல.

௪. அதே போல் மிரட்டலாக சொன்னான், கேலியாக சொன்னாள் என்பன போன்ற பதப்பிரயோகங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. நீங்கள் கதையை ஒழுங்காக எழுதியிருந்தால் வசனம் மற்றும் கதையின் கட்டம் இவற்றைக் கொண்டே தொனி ஊகிக்கப்படக்கூடியதாக இருந்திருக்கும். இந்த மாதிரி போர்டு போடுவது கதையின் போக்கை பாதிக்கும்.

௫. ஆச்சரியக்குறிகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்- விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

௬. திடீரென்று, உடனே என்பன போன்ற சொற்களைத் தவிருங்கள். என்ன நடக்கிறது என்பது கதையின் வழியாகவே தெரிய வேண்டும். ஒருத்தன் திடீரென்று சிரித்தால், கதையைப் படிக்கிறவனுக்கு அது தெரியாதா என்ன!

௭. வட்டார வழக்குகளைத் தவிர்க்கவும். இதை சொன்னால் தமிழ் இலக்கியவாதிகள் அடிக்க வருவார்கள். லேனார்ட் வணிக எழுத்தாளர்களுக்கு சொன்ன அறிவுரை இது என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் இவர் சொல்வதில் உள்ள நியாயம் புரியும்.

௮. கதாபாத்திரங்களை உச்சி முதல் உள்ளங்கால் வரை வர்ணித்துக் கொண்டிருக்காதீர்கள். அது பழைய காலத்து வழக்கம். இப்போதெல்லாம் ஓரிரு வரிகளிலேயே தேவையான தகவல்களைத் தந்து விட்டுப் போய் விடுகிறார்கள். உங்கள் கதையை படிப்பவனுக்கு உங்கள் ஹீரோ பச்சை சட்டை போட்டுக் கொண்டிருந்தாலென்ன சிவப்பு சட்டை போட்டுக் கொண்டிருந்தால்தானென்ன? கதைக்குத் தேவையில்லாத தகவல்களை வாசகன் தாண்டிச் செல்லவே முனைவான்.

௯. அதே போல் இடம், பொருள் இதை எல்லாம் விவரித்து கதையை நிறுத்தி வைத்து விடாதீர்கள்- வாசகனின் கண்கள் சொற்குவிப்பாய் அமைந்த பத்திகளைத் தாண்டி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தேடிக் கொண்டிருக்கும்.

௰. வாசகனுக்கு எது தேவையில்லையோ அதைக் கதையிலிருந்து எடுத்து விடுங்கள்- தட்பவெப்பம், இடம் பொருள் குறித்த வர்ணனைகள், பாத்திரங்களின் மனவோட்டம் இதெல்லாம் தெரிந்து என்ன ஆகப் போகிறது? என்ன நடக்கிறது என்பதுதானே முக்கியம்- யாராவது உரையாடல்களைப் படிக்காமல் தாண்டிப் போகிறார்களா?

சுருக்கமாக சொன்னால் கதாசிரியன் கதைக்குள் நுழையக் கூடாது. அவனது குரல் அடங்கி, பாத்திரங்களின் பேச்சு வாயிலாகக் கதை கொண்டு செல்லப்பட வேண்டும். இதற்கு இடையூறாக என்னவெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் ஒழித்துக் கட்டுங்கள்.

- Elmore Leonard's Ten Rules of Writing, NYT via http://www.kabedford.com/archives/000013.html

11/12/10

எழுத்தின் மாயம்

நாம் ஏன் கதைகள் வாசிக்கிறோம்? மற்றவர்களைப் பற்றி கதை கேட்பதில் நமக்கு இருக்கிற ஆர்வம்தான்  புத்தகங்களில் கதைகளை வாசிப்பதற்கும் ஆதார காரணமாக இருக்கிறது என்று தோன்றுகிறது. அடுத்தவர்களைப் பற்றி நமக்குத் தெரியாதா என்ன? தெரியும்தான், ஆனால் நமக்குக் கிடைக்கிற தகவல்களுக்குக் கொஞ்சம் வெளியே, நம் நினைவு தொடும் ஆழத்தில் ஒரு அரை இன்ச் கீழே, சில விஷயங்கள் தெரிந்தும் தெரியாமலும் இருக்கின்றன. கதைகள் கேட்பதன் மூலம் நாம் இவ்விஷயங்களை நினைவின் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து உறுதி செய்து கொள்கிறோம்.

கதையாகட்டும் கட்டுரையாகட்டும், அது தான் சொல்ல வந்த விஷயத்தை அப்படியே போட்டு உடைத்து விட்டதென்றால் சுவாரசியம் போய் விடுகிறது- படித்து முடித்த பின்னும், விஷயங்கள் புரிந்தும் புரியாத மாதிரி தேட வைக்க வேண்டும். இதற்காக சிக்கலான புதிர்க் கதைகள், கவிதைகள் எழுத வேண்டுமென்பதில்லை. மிகத் தெளிவாகவே எழுதியும் இதை செய்யலாம், அ முத்துலிங்கம் செய்கிற மாதிரி. நாம் பத்தி பத்தியாக எழுதுவதை ஒரு வரியில், ஒரு பக்கவாட்டுப் பார்வையின் வீச்சில் தொட்டுச் சென்று விடுகிறார் அவர்.

பம்பரம் விட்டிருக்கிறோம் இல்லையா? நமக்கு சுவாரசியம் அந்த பம்பரம் சுற்றுவதைப் பார்ப்பதில் இல்லை. சாட்டையைக் கொண்டு அதை சுற்றி, சொடுக்குகிறோம் பாருங்கள், பம்பரம் கட்டவிழ்ந்து தரையில் விழுந்து ஒரு துள்ளு துள்ளி ஆடுகிறது, அந்த கட்டவிழ்தலில்தான் இருக்கிறது நமக்கு சந்தோஷம். ஒரு நல்ல எழுத்து ஏறத்தாழ அந்த மாதிரிதான். அதைப் படிக்கிற போதெல்லாம் கட்டவிழ்க்கிற சுகம் நமக்குக் கிடைக்கிறது. நம் கண் முன் கதை உருப்பெற்று அரங்கேறுகிறது- ஆனால் இவ்வளவுதான் இது என்று சொல்லி விட முடியாதபடி அது மீண்டும் தன் சாத்தியங்களைத் தனதாக்கிக் கொண்டு விடுகிறது. மறுபடியும் வாசிக்க வைக்கிறது.

இதன் ரகசியம் என்ன என்று யோசித்துப் பார்த்தேன். சொல்ல வந்ததை முழுதும் சொல்லாமல் விடுவது என்பது ஒன்று. இது மிக எளிமையான உபாயம். இதைவிட அழகான அனுபவம், நம் பிரக்ஞைனைக்குக் கீழே, நம் பேர் எங்கிருந்தோ நம் காதில் அரைகுறையாக விழுகிற மாதிரி, இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் நாமும் இந்த மாதிரி விஷயங்களைப் பிடித்து விட்டிருக்கலாம் என்று நினைக்க வைக்கிற எழுத்தைப் படிப்பது. ஒவ்வொரு தடவை படிக்கும்போதும் அது நமக்கு நம்மைப் பற்றி ஏதேனும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

அ முத்துலிங்கம் அவர்கள் டேவிட் செடாரிஸ் என்பவரை நல்ல எழுத்தாளர் என்று சொல்கிறார்- அவரது எழுத்தில் இதைப் பார்க்கலாம். செடாரிஸ் தனது புத்தகத்தை விற்பதற்கு வேண்டி அமெரிக்காவில் பயணித்த அனுபவத்தை சொல்கிறார்.

புத்தகக் கடைகளில் விற்பனையாகும் தன் புத்தகங்களில் கையெழுத்து போட்டுக் கொடுக்கும்போது ஒரு காரியம் செய்தாராம் செடாரிஸ். ஒரு உண்டியலை மேஜையில் வைத்தாராம். நான்காயிரம் டாலர்கள் இவ்வகையில் சம்பாதித்தேன் என்கிறார் அவர், எல்லாம் இலவசமாக யாரும் எதுவும் கேட்காமலேயே கொடுக்கப்பட்ட டிப்ஸ்.

நாமானால் இதை இத்தோடு விட்டு விடுவோம், ஆனால் செடாரிஸ், உண்டியலில் காசு போடாதவர்கள் குறித்து- ஏ தே பையா! உனக்காக நான் நாலு புத்தகங்களில் கையெழுத்து போட்டுத் தந்திருக்கிறேன், நீ எனக்காக ஒரு டாலர் கூட தர மாட்டாயா, என்ற அறச்சீற்றம் கொண்டதால் இந்தப் பழக்கத்தைக் கை விட்டாராம்.

இது சாதாரணமாக நடப்பதுதான், இதில் எந்த விசேஷமுமில்லை. ஆனால், அடுத்த பத்தியைப் பாருங்கள், அதில் எழுதுகிறார், மிட்டாய் வாங்குவதற்காகதான் இந்த பணத்தை சேர்க்கிறேன் என்று நான் சொல்லியிருந்தேன், தேவைப் படாதவர்களுக்கு மக்கள் தாராளமாகவே தானம் செய்வார்கள். டல்லாசில் எனக்கு ஒரு தடவை 535 டாலர்கள் டிப்சாகக் கிடைத்ததது, அதுவே புத்தகக் கடைக்கு வெளியே தட்டை நீட்டிக் கொண்டிருந்த பிச்சைக்காரனானால் அவனுக்கு ௭௫ சென்ட் கூட தந்திருக்க மாட்டார்கள் இவர்கள் என்று.

இந்த இரண்டு பத்திகளுக்கும் இடையில் இருக்கிற முரண்பாடு, காசு கொடுக்காதவனைக் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு, அதே மூச்சில் தனக்குக் கிடைக்கிற காசு குறித்து கேள்வியும் கேட்கிறார், அடுத்த பத்தியில். இந்த இரண்டு விஷயங்களையும் படிக்கிறபோது, இவை சொல்ல வருகிற மூன்றாவது விஷயமும் பாதி பிடிபடுகிறது. ஆனால் அதை உறுதி செய்ய வழியில்லை, இருந்தாலும் படிக்கும்போது ஒரு புன்சிரிப்பை வரவழைக்கிறது, நாம் பிரிந்து செல்லும்போதும், நம் நண்பர்கள் நம்மைப் பார்த்து சிரித்த சிரிப்பு புண் சிரிப்பாய் நம் முதுகைப் பார்த்து நகைத்துக் கொண்டிருக்கும் என்ற உணர்வு இருக்கிற மாதிரி.

David Sedaris எழுதியது இங்கே இருக்கிறது.






சொற்றொடர்கள் நடை போடும் ஓசை

இன்றைக்குப் படித்ததில் மனதில் நின்ற விஷயங்கள் இவை: நிறைய சலுகைகள் எடுத்துக் கொண்டு மொழிபெயர்க்கிறேன்-

1. Yvor Winters என்பவர் எழுத்து குறித்து சொன்னது-
ஒரு கவிஞனை, எழுத்தாளனை நாம் அடையாளம் காண உதவும் லட்சணங்கள் இரண்டு- எந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தையும் முழுமையாகப் புரிந்து கொண்டு அதைத் தனித்துவமிக்க பொருளாகவும் பொது அனுபவத்துக்குட்பட்ட குறியீடாகவும் உணரும் வகையில் படைக்கக்கூடிய திறன். இரண்டாவது, மொழியின் சாத்தியங்களின் மீதான ஆளுமை- அதன் ஓசை இசைவுக்கான சாத்தியங்கள் உட்பட சொற்றொடர் சொற்றொடராக மொழியைக் கையாள்வதில் அவனுக்குரிய மேதமை. இந்த இரு திறன்களுமே தாமாக வளரக் கூடியவையல்ல; பொதுமைப்படுத்தி திருப்திகரமான விளக்கம் அளிக்கப்படக்கூடிய விஷயமுமில்லை இவை; விவரமாக விளக்கம் தரப்பட்டாலன்றி, ஒரு மொழியைக் கொண்டு, சொற்றொடர் சொற்றொடராக பெரிதாக ஒன்றும் சொல்லி விட முடியாது, கவிஞனுக்குத் தான் என்ன சொல்ல முயற்சிக்கிறோம் என்பது குறித்த தெளிவு இருந்தாலொழிய.

இவர் இப்படி சொல்கிறாரா, இதுவும் சரியாகத்தான் தெரிகிறது.

இந்தத் தெளிவு ஒரு எழுத்தாளனின் பிரக்ஞையில் இருக்கக் கூடியதில்லை. எழுத்து தன்னை எழுதிக் கொள்கிறது என்று சொல்கிறோமில்லையா, அது போல் தன் படைப்பின் ஓட்டத்துக்கு எழுதுபவன் தன்னைத் தளர்த்திக் கொண்டானெனில் அடுத்து என்ன எழுதப்போகிறோம் என்பது குறித்த கருத்துகள் எதுவும் இல்லாதபோதும், அதன் லயம் பிடிபட்டிருக்கும். இது எழுத்தாளனின் திறன்கள் உச்சத்தில் இருக்கையில் நிகழ்வது என்று நினைக்கிறேன்.  Philip Henscher சொல்வது சரியா பாருங்கள் -

Flaubert எழுதிய Madame Bovary என்ற புகழ் பெற்ற நாவல் ஆங்கிலத்தில் இருபதாவது முறையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாம். பொதுவாக எந்த ஒரு மகோன்னதமான நாவலும் ஓரிரு தடவைகளுக்கு மேல் மொழிபெயர்க்கப்படுவதில்லை. இந்த நாவலில் மட்டும் ஏன் என்ன ஈர்ப்பு என்று கேட்டு விடை சொல்கிறார் Philip Henscher.
"இந்த நாவலுடன் எவ்வளவு காலம் கழித்தாலும் இது உறைபனிபோல் சில்லிட்டே கிடக்கிறது, மானுடம் உடைத்தெழும் கணங்கள் முக்கியமில்லாத விந்தை நிகழ்வுகளாக இருக்கின்றன. அந்த காலத்து விமரிசனப் பதத்தைப் பயன்படுத்துவதானால் Flaubert மானுட உணர்வுகளுக்குப் புலப்படும் வாழ்க்கையில் ஆர்வமற்றிருந்தார் என்று சொல்ல வேண்டும். அவருக்கு அதை விட வாக்கியங்களின் இசையில் அதிக கவனம் இருந்தது. இனி எழுதப்போகும் சொற்களை தான் அறியும் முன்னரே, பல பக்கங்கள் கடந்து வரப்போகும் வாக்கியங்களின் இசையை இந்த நாவலை எழுதிக்கொண்டிருக்கும்போது தன்னால் முன்கூட்டியே உணர முடிந்தது என்று அவர் சொல்லியிருக்கிறார்."
இதற்கு என்ன சொல்வீர்கள்?

10/12/10

கதைக்கும் சிறுகதைக்கும் உள்ள வேறுபாடு- கேள்விகள்.

அழியாச் சுடர்கள் என்ற தளத்தில் சுந்தர ராமசாமி சிறுகதை குறித்து சொன்ன ஒரு விஷயம் பதிவாகி இருக்கிறது. மிக நுட்பமான, அடிப்படையான ஒரு விஷயத்தை சொல்கிறார், அது கவனிக்கத்தக்கது- ஒரு கதைக்கும் சிறுகதைக்கும் என்ன வேறுபாடு?

நான் இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டதேயில்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன். அதே சமயம், அவர் இது குறித்து சொல்லும் விஷயங்கள் விவாதத்துக்குரியவை என்றும் நினைக்கிறேன்-
"சிறுகதை என்பது சமூக மதிப்பீடுகளை ஆதரிக்க மறுக்கிற ஒரு இலக்கிய உருவம். அது சமூக விமர்சனம் சார்ந்தது. அது அப்படித்தான் இருக்கும். உண்மை வெல்லும் என்பதை வலியுறுத்தும் என்பது ஒரு கதையாக இருக்கும்போதுகூட அது ஒரு சிறுகதையாக இருப்பதில்லை. இது அறவியல் சார்ந்த ஒரு கதை. ஆனால் சிறுகதை அறவியலை வற்புறுத்தாது. நேற்றைய நம்பிக்கைகளை அது வற்புறுத்தவில்லை. வாழ்க்கை சம்பந்தமான போதாமைகளைச் சொல்கிறது அது. நெருக்கடிகளைச் சொல்கிறது அது. உண்மையைச் சொல்லியும் தோற்றுப் போனேனே என்று முடிவடைவது ஒரு சிறுகதையாக இருக்க முடியும். ஆனால் உண்மை இறுதியில் வெல்லும் என்று முடிவடைவது பெரும்பாலும் சிறுகதையாக இராது. கதையின் முடிவாக அது இருக்கலாம். சிறுகதையினுடைய முடிவாக அது இருக்க முடியாது. பழைய சம்பிரதாயங்கள், பழைய மரபுகள் இவற்றை யார் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறாரோ, யார் எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துகிறார்களோ, இதுவரை நாம் சரி என்று நம்பிய ஒன்றை, இதுக்கு மேல் உண்மை கிடையாது என்று சொல்லப்பட்டு வந்த ஒன்றை, மேலானது என்று சொல்லபட்டு வந்ததை இன்றைய வாழ்க்கை ஏற்கவில்லை என்ற உண்மையை யார் வெளிப்படுத்துகிறார்களோ அவர்கள் சிறந்த சிறுகதை என்ற உருவத்தை அறிந்தவர்கள்."
யோசிக்க வேண்டிய விஷயம், இல்லையா? அவர் தான் படித்த சிறந்த சிறுகதைகளை நினைத்துப் பார்த்து அவை ஏன் சிறந்த சிறுகதைகளாக இருக்கின்றன என்று தீர்மானித்து இதை சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். சிறுகதை என்பதே புரட்சி வடிவமாக மாறுகிறது, அவரது பார்வையில்.

இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறார், அதிலும் முக்கியமாக சிறுகதை எழுதுபவன் தனக்கென்று ஒரு குரலை உருவாக்கிக் கொள்வது குறித்து அவர் தந்திருக்கும் குறிப்புகள் நமக்கு முக்கியமானவை.

மேலும் படிக்க- "சிறுகதை - அதன் அகமும் புறமும்" - சுந்தர ராமசாமி

9/12/10

டிமு டிபி- ஹாஷ்டாகின் கதை

காதலர்கள் தன் காதலியின் கண் காது மூக்கு, அவளது குரல், நடை, அவள் அணிகிற உடை, அலைபாயும் சடை, பேசும்போது தலையை ஒரு பக்கமாய் சாய்த்துப் பேசுகிற சேட்டை என்று சகல விஷயங்களையும் நினைவில் நிறுத்தி ரசிக்கிறார்கள். புத்தகங்களின் காதலர்களும் அப்படித்தான்.

புத்தகத்தின் மணம். அட்டை. காகிதம். அதில் உள்ள விஷயம். எழுத்தாளர்கள். எழுத்து- அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்?- அவ்வளவு ஏன், நாம் கண்டும் காணாது கடந்து செல்லும் நிறுத்தல் குறிகளின் பயன்பாட்டில்கூட ஏற்படுகிற தோய்வைக் கண்டு வருத்தமும் அவற்றின் உயிர்ப்பித்தல் கண்டு மகிழ்ச்சியும் அடைபவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் Punctuacon என்ற பெயரில் மாநாடுகூடப் போடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர் ஒருவர் எழுதிய சுவாரசியமான கட்டுரையைப் படித்தேன். அதைப் பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.

# ஹாஷ்டாக். இதன் சரித்திரத்தைப் பேசும்போது டிவிட்டருக்கு முன், டிவிட்டருக்குப் பின் என்று பேச வேண்டும். டிவிட்டருக்கு முன் இது இருந்தால் என்ன, போனால் என்ன என்று கேட்டிருப்போம்- மிஞ்சிப் போனால் நீங்கள் உங்கள் தொலைபேசியில் இந்தக் குறியைப் பார்த்திருப்பீர்கள். டிவிட்டருக்குப் பின் இது இன்றியமையாததாகப் போய் விட்டது- (ஹாஷ்டாக்'களுக்கு என்றே ஒரு அகராதியும் கூட இருக்கிறது- tagalus, உங்கள் குழப்பங்களைத் தீர்த்து வைப்பதற்காக. நுகநிபி, எகொஇச, ஏஇகொவெ போன்ற பிரயோகங்கள் இங்கு இன்னும் இடம் பெறவில்லை. நீங்கள் இதுவும் இது போன்ற இன்ன பிற தமிழ்க் குறுங்கீச்சொலிகளுக்கும் இந்தத் தளத்தில் விளக்கம் தந்தால் புண்ணியம் கிடைக்கும்.)

விஷயத்துக்கு வருகிறேன்- &, @, ©, ® போன்ற நிறுத்தற்குறிகள் தேய்மொழியாவது கண்டு இவர் எவ்வளவு வருத்தப் படுகிறார் என்பது வியப்பாக இருக்கிறது. ஆனால் இதில் @ மற்றும் # ஆகிய குறிகள் இணையத்தின் வளர்ச்சியில் மறுமலர்ச்சி கண்டிருப்பது குறித்து இவர் மகிழும் போது நமக்கும் இந்தக் குறிகளில் தனி கவனம் ஏற்படுகிறது.

ஹாஷ்டாக் என்ற பதம் எப்படி வந்தது? சரியான விடையில்லை. நான்கைந்து காரணிகளைக் கருதுகிறார் ராபர்ட் புல்போர்டு. எனக்கு இந்த விளக்கம் பிடித்திருக்கிறது-

பழைய காலத்து இங்கிலாந்தின் வரைபடங்களில் ஒரு கிராமத்தை # என்று குறித்தார்களாம்- ஒரு மையத்திலிருந்து எண்திசை நோக்கி விரிகிறது இந்த ஊர் என்பதற்கு அடையாளமாக #. வசீகரமான விளக்கம், இல்லையா? # என்ற குறியீடு டிவிட்டரில் ஒரே விஷயத்தைப் பேசும் பல்வேறு டிவிட்டுகளை ஒரு மையத்தில் குவிக்கிறது: இது பல்தரப்பினரும் உறவாடி வாழும் கிராமத்தை நினைவுருத்துகிறது எனக்கு.

இனியொரு நாள் டிவிட்டரில் ஹாஷ்டாக் என்ற பதத்தை நம் சகோதர  டிவிட்டரர்கள் வேட்டையாடி தமிழ் படுத்தும்போது உங்களுக்கு இந்த விளக்கம் உதவியாக இருந்தாலும் இருக்கும்.

ஏன், நானே கேட்கிறேன்- ஹாஷ்டாக் என்பதைத் தமிழில் எப்படி எழுதுவீர்கள்? # என்ற குறியே தமிழ் எழுத்தா இல்லையா என்ற கேள்வியை விட்டு விடுவோம்.

எண்பேட்டை? எண்குப்பம்? எண்வளவு?


8/12/10

எழுத்து முறை- பா ராகவன்

திரு பா ராகவன் அவர்கள் தன் எழுத்து முறை குறித்து ஒரு பதிவு செய்திருக்கிறார். மனம் போன போக்கில் எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்லதொரு உந்துதல் தருவதாகவும், அவர்களது எழுத்துப் பழக்கத்தை நெறிமுறைப்படுத்துவதாகவும் இருக்கிறது அவர் எழுதியிருக்கிற கட்டுரை.

அவர் தனக்கென்று வகுத்துக் கொண்டிருக்கிற நடைமுறையை சொல்லியிருக்கிறார். அதை அப்படியே நாமும் பின் பற்ற வேண்டுமென்பதில்லை- அவரது தேவைகள் வேறு நமது தேவைகள் வேறு: அவர் புத்தகம் எழுதினால், நாம் பதிவுகள் எழுதுகிறோம். மிஞ்சிப் போனால் நாளொன்றுக்கு நானூறு சொற்களுக்கு படித்தது பார்த்தது என்று ஏதாவது எழுதப் போகிறோம்.

இருந்தாலும் கூட, அவர் தனக்கென்று வகுத்துக் கொண்ட முறையில் பருவகாலத்துக்குரிய ஒரு ஒழுங்கு இருக்கிறது. முதலில் தேவையான தகவல்களைத் தேடிப் படித்து சேர்த்து வைத்துக் கொள்கிறார். அதன் பின், எந்த விதமான புறக்காரணிகளுக்கும் இடம் கொடுக்காமல் ஒருமுகப்பட்ட மனதுடன் எழுதுகிறார். எழுதத் துவங்குவதற்கு முன்னும், எழுதிக் கொண்டிருக்கும் காலகட்டத்திலும் தன் எண்ணங்கள் வளர்வதற்கு இசைவான gestation என்று சொல்லப்படுகிற சூல்வளர் சூழலைத் தக்க வைத்துக் கொள்கிறார்.

ஒரு மனிதன் தன் வரைகளைத் தெரிந்து, தன் எழுத்தின் வரைகளைத் தெரிந்து தனக்கு எழுதக்கிடைக்கிற காலத்தை சரியாகப் பயன்படுத்த உதவும் வகையில் அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார் பா ராகவன். மிகவும் கட்டுபடுத்தப்பட்டவராக இல்லாமலும் இஷ்டப்படி எழுதுபவராக இல்லாமலும் இரண்டுக்கும் நெகிழ்வு தந்து இரண்டையும் இணைத்தணைத்துச் செல்லக் கூடிய வழிமுறையைத் தனக்கென ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் இவர்.

இது தொடர்ந்த முயற்சியால் வருவது என்று நினைக்கிறேன். ஒரு துவக்கப் புள்ளியாக பா ராகவன் அவர்கள் எழுதியிருப்பதைப் படித்து, அங்கிருந்து நாம் புறப்படுவது நம் இலக்கை அடையத் துணை செய்யும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

அருமையாக கட்டுரை. புக்மார்க் செய்து வைத்து அடிக்கடி படித்து, யோசிக்க வேண்டிய ஒன்று.

"எனக்கென்ன தோன்றுகிறது என்றால், எழுதுவது என்பது ஒரு மனப்பயிற்சி. அதைச் செய்து பார்ப்பதைத் தள்ளிப்போடத்தான் நேரத்தைக் குறையாகச் சொல்லிவிடுகிறோம். அபாரமான எழுத்துத் திறமையும், அதைவிட அபாரமான சோம்பேறித்தனமும் படைத்த என் இனிய இணைய நண்பர்கள் சிலர் இதைப் படித்துவிட்டு, வருகிற வருடத்தில் இருந்தாவது இதை முயற்சி செய்து பார்க்கலாம். ஐந்நூறு கூட வேண்டாம். ஒரு நாளைக்கு முன்னூறு சொற்கள் என்ற இலக்கு வைத்து தினமும் தவறாமல் எழுத ஆரம்பித்தாலே போதும். ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கும்போது கிடைக்கும் பேரானந்தத்துக்கு நிகராக இன்னொன்று கிடையாது."