13/11/11

நல்ல உள்ளங்களுக்கு நன்றி...

திரு கோபி ராமமூர்த்தி அவர்கள் நம்மை வலைச்சரம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். அன்பருக்கு நன்றிகள்.

 திரு சசரிரி கிரி அவர்களின் தளம்தான் பதினொன்றாம் பரிமாணத்தை அவருக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் என்று ஊகிக்கிறேன். கிரி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

6/11/11

இலக்கிய கோட்பாடுகள் - ஒரு எளிய அறிமுகம்

இலக்கிய கோட்பாடு என்பது எதுவாக இருக்கிறது, அல்லது இருந்தது? ஏன் நமக்கு கோட்பாட்டைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது? நாம் எங்கே நிற்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் கோட்பாட்டை வெவ்வேறு சித்தாந்தங்களின் அருவ தொகுப்பாக நினைக்காமல், அதை உண்மையாகவே நிகழ்ந்த ஒன்றாக வாசிக்க வேண்டும்: அது தனக்கென்று ஒரு வரலாற்றுச் சித்திரத்தை விட்டுச் செல்லும் உயிர் சுழல். அதன் நினைவுகளும், அது தன்னைக் குறித்து பதிவு செய்துள்ள விவரணைகளும் அவ்வாறு வாசிக்கப்படலாம். அப்போது இலக்கியக் கோட்பாட்டின் வாழ்வும் மரணவாழ்வும் நிலையாய் நிற்கும் அடையாளக் குறிகளைக் கொண்டு புரிந்து கொள்ளப்பட முடியும்: முக்கியமான கலந்துரையாடல்களும் பிரசுரங்களும்; அவை தேசிய அளவில் பெற்ற வெவ்வேறு வகை வரவேற்பும்; தாக்கத்தை ஏற்படுத்திய அமைப்பு சார்ந்த வட்டங்களும். இப்படி செய்யும்போது, வடிவமின்றி மிதக்கும் சித்தாந்தங்களின் உலகம் நிஜ உலக மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகள் என்ற தொடர்பு எல்லைக்குள் சிக்கிக் கொள்கிறது. இப்படிப்பட்ட ஒரு விவரிப்பை முன்வைத்து இந்த பாடத் திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது.
என்று துவங்குகிறது இந்த சுவையான கட்டுரை. கதை கவிதைகள் இலக்கியவாதிகளால் பேசப்பட்டாலும் நம்மைப் போன்ற பாமரர்களின் கண்களில் பட்டு வாயில் விழுந்து எழுந்திருக்காமல் தப்புவதில்லை. கோட்பாடுகளை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும்? படித்துப் பாருங்கள்.

இரண்டு முக்கியமான விஷயங்கள்: கோட்பாட்டு விமரிசனத்தின் காலம் முடிவுக்கு வந்து விட்டது என்று நினைக்கிறேன்; இப்போது ஸ்பெகுலேடிவ் ரியலிசம் என்ற புதிய கோட்பாடு பரவலாக கவனிக்கப்பட்டு வருகிறது.

5/11/11

இரு கட்டுரைகளுக்கான சுட்டிகள்.

வேற்று மொழிப் பெயர்களை தமிழில் எழுதும்போது வேறு பெயர்களாக தொனிக்கின்றன- சாமுவேல் பெக்கட்டின் கடிதங்கள் இரண்டாம் தொகுப்பு குறித்த விமரிசனம் டிஎல்எஸ்ஸில்.
ஒரு மனிதனாகவும் எழுத்தாளனாகவும் என் வாழ்நாள் முழுதும் இது போன்ற எதுவும் எனக்கு நேர வாய்த்தத்தில்லை... நான் இனியும் முன் போலல்ல, இனி என்றும் முன் போல் இருக்கவும் இயலாது, நீ செய்தது, நீங்கள் அனைவரும் எனக்கு செய்த உதவிகள் என் வாழ்க்கையை மாற்றி விட்டன. நான் எப்போதும் என்னைக் கண்டிருந்த இடத்தில், இனியும் என்னைக் கண்ணுறப் போகிற இடத்தில், சுழன்று சுழன்று மீண்டும் விழுந்து எழும் என் வாழ்வில், இனியும் முழு இருளோ மௌனமோ இருக்காது


ஜான் கேஜின் சைலன்ஸ் என்ற தொகுப்பு பதிப்பிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆவதையொட்டி ஒரு கட்டுரை-
அன்றைக்கு புதன் கிழமை. நான் ஆறாவது கிரேட் படித்துக் கொண்டிருந்தேன். அப்பா அம்மாவிடம், "தயாராக இரு: நாம் சனிக்கிழமை ந்யூ ஜீலாண்ட் போகிறோம்," என்று சொல்வது என் காதில் விழுந்தது. நான் தயாரானேன். பள்ளி நூலகத்தில் ந்யூ ஜீலாண்ட் குறித்து இருப்பதையெல்லாம் படித்தேன். சனிக்கிழமை வந்தது. எதுவும் நடக்கவில்லை. அந்த திட்டம் பற்றி பேசப்படவேயில்லை, அன்றோ அதற்கடுத்த நாளோ


சிறுகதை எழுத்தாளர்களுக்கான எட்டு விதிகள்.

சிறுகதை எழுத்தாளர்களுக்கான எட்டு விதிகள்- குர்த் வோனகுத்.

  • உனக்கு முழுக்க முழுக்க அந்நியனாக இருப்பவன் தன் நேரம் வீணாகி விட்டது என்று நினைத்துவிடாதபடிக்கு அவனது நேரத்தைப் பயன்படுத்திக் கொள்.
  • இவன் வெற்றி பெற வேண்டும் என்று வாசகன் விரும்புகிற மாதிரியான ஒரு பாத்திரத்தையாவது அவனுக்கு கதையில் கொடு.
  • ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஏதாவது ஒரு வேட்கை இருக்க வேண்டும்- ஒரு டம்ளர் தண்ணீருக்காவது அவர்கள் ஆசைப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு வாக்கியமும் இந்த இரண்டில் ஒன்றைச் செய்ய வேண்டும்- பாத்திரத்தின் இயல்பை வெளிப்படுத்துவது, அல்லது கதையின் ஓட்டத்தை முன் நகர்த்துவது.
  • முடிவுக்கு வெகு அருகில் துவங்குங்கள்.
  • கொடூரனாக இருங்கள். உங்கள் கதையின் பிரதான பாத்திரங்கள் எவ்வளவு இனிமையானவர்களாகவும் அப்பாவிகளாகவும் இருந்தாலும், அவர்களுக்கு கொடுங்காரியங்கள் நிகழ்த்துங்கள்- வாசகன் அவர்களின் இயல்பை புரிந்து கொள்ள அது உதவும்.
  • ஒருவரை மட்டும் மகிழ்விக்க எழுதுங்கள். நீங்கள் உங்கள் சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு உலகறிய கில்மா செய்தால்- இப்படிச் சொல்லலாம் - உங்கள் கதைக்கு நிமோனியா வந்து விடும்.
  • உங்கள் வாசகர்களுக்குத் தேவையான தகவல்களை எவ்வளவு விரைவாகத் தர முடியுமோ அவ்வளவு விரைவாகவும் விரிவாகவும் கொடுத்து விடுங்கள். சஸ்பென்ஸ் நாசமாய் போகட்டும். வாசகர்களுக்கு எங்கே, ஏன், என்ன நடக்கிறது என்பன முழுமையாக புரிந்திருக்க வேண்டும்- கரப்பான்பூச்சிகள் கடைசி சில பக்கங்களைத் தின்றுவிட்டால் மிச்ச கதை அவர்களாகவே முடித்துக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.

4/11/11

தொடரும் துணுக்குகள்

டிவிட்டரிலிருந்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள்: Findings.. நல்ல எழுத்தை வாசிப்பவர்களுக்கான நட்பு வட்டம்- ஒரு புக்மார்க்லெட்டை உங்கள் உலவியில் பதித்துக் கொள்ள வேண்டும். அதை கிளிக் செய்து விட்டு நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் பக்கத்தில் நீங்கள் ரசித்த வாக்கியங்களை ஹைலைட் செய்தால் அவை பகிர்ந்து கொள்ளப்படும். நீங்கள் நினைக்கிற மாதிரி போரடிக்கும் சமாசாரமல்ல: முயற்சித்துப் பார்க்கலாம், ஆனால் அந்த புக்மார்க்லெட் வேலை செய்கிறதா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. பழகப் பழகத்தானே புரியும்? அங்கே அடியேன் சற்று காலம் இளைப்பாறக்கூடும்.

கூகுள் எர்த்தில் கதைகளும் கதை மாந்தர்களும். நல்ல முயற்சி, சுவையான வடிவமைப்பு. பொன்னியின் செல்வன் கூகுள் எர்த்தில் இடம் பெறுமா?

jஜெர்மானிய இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் தவறவிடக் கூடாது: ஜெர்மன் இலக்கிய மாதத்தை சில வலைப்பதிவர்கள் கொண்டாடுகிறார்கள்.






சீன இணைய இலக்கியச் சூழல்

சீன இலக்கியச் சூழலைப் பற்றி கேள்விப்படும் விஷயங்கள் பிரமிக்க வைப்பனவாக இருக்கின்றன. நாம் சீனா என்றால் இளப்பமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்- ஆனால் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கடும் அடக்குமுறையை எதிர்கொண்டு நம்மால் நினைத்தும் பார்க்க முடியாத பேரிழப்புகளையும் தியாகங்களையும் தாங்கி வாழும் பண்பாடு. படைப்பூக்கம் இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகள், தங்களுக்கு ஏற்ற தீர்வுகள் காண நிர்பந்திக்கப்பட்ட மக்கள். இன்று ஓரளவு சுதந்திரக் காற்று வீசத் துவங்கியிருக்கிறது: இதற்கே என்ன ஒரு மறுமலர்ச்சி என்று வியப்பாக இருக்கிறது.

3/11/11

தொடரும் துணுக்குகள்

மெடாஃபிட்லரில் அனைவரும் படித்தாக வேண்டிய புத்தகங்கள்: சுவையான பட்டியல்.

தொடரும் இணைய இதழ் அறிமுகத்தில் - கார்த்திகா ரிவ்யூ : தெற்காசிய எழுத்தாளர்களின் படைப்புகள். ஸ்ருதி சுவாமியின் கருப்பு நாய் என்ற சிறுகதை இங்கே.

கோடை.

உமியாய் புழுதி வாரியிரைக்கிறது காற்று.
அனைத்துக்கும் வரிசையில் நிற்கிறோம்.
வயதாகியிருந்தாலென்ன, அனாதையாயிருந்தாலென்ன. பலமற்றவர்கள்

கோழிகளைப் போல் வேலிக்குள்.
எதையாவது செய்து கொண்டேயிரு. மாற்ற முடியாததை யோசிக்காதே.

குளிர் காலம்.

தரையின் பிளவுகளை ரேஷன் டின் மூடிகளால் மறைக்கிறோம்
மலைகளின் உயர்ந்தெழும் வெண் சுவரன்றி வேறில்லை கிழக்கில்

முள் வேலி.

என்று துவங்குகிறது கத்லீன் ஹெல்லெனின் மன்ஜனார் என்ற கவிதை.