வாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24/3/12

ஒரு வரலாற்றுப் பதிவு

தமிழில் ஒரு கதையோ நாவலோ ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் அல்லது சமூகத்தில் வாழ்க்கை முறையைச் சித்தரித்தாலே போதுமானதாக இருக்கிறது - இது ஒரு ஆவணப் பதிவு என்று சொல்லி அதை இலக்கியமாக்கி விடுகிறார்கள், இது எந்த அளவுக்கு சரி? வரலாற்றைப் பேச வேண்டும், தத்துவத்தை விசாரிக்க வேண்டும் என்பது போன்ற தகுதிகள் எல்லாம் ஆவணப் பதிவாக இருக்கும் இலக்கியங்களுக்கு இல்லையா என்ற கேள்வி என்னை ரொம்ப நாட்களாகத் துளைத்துக் கொண்டே இருந்தது.

இந்தப் புத்தக விமரிசனத்தைப் படித்ததும் எனக்கு பதில் கிடைத்து விட்டது என்று சொல்ல முடியாது, ஆனால் ஆங்கிலத்திலும் அப்படிதான் என்று கண்டு தெளிந்தேன்.

"தெரசாவும் இசபெல்லாவும்" ஒரு சமூக ஆவணமாக எடுத்துக் கொள்ளப்படும்போது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது என்பதை நான் தெளிவுபடுத்திவிட்டேன் என்று நம்புகிறேன். அது ஒரு இலக்கியப் படைப்பாகவும் இருக்கிறது என்கிறபோதும் பூர்ஷ்வாக்களுக்குரிய பண்பாட்டு வெளிப்பாட்டு முறைமைகளிடமிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ளாத எழுத்தாளரிடம் நாம் எதிர்பார்க்கக்கூடிய குறைகள் இந்தப் படைப்பையும் பீடித்திருக்கின்றன. இலக்கியத்தை நேசிப்பவர்கள் லெட்லுக்கின் இந்தக் குறுநாவலைக் குற்றமற்றப் படைப்பாகப் பார்க்கக்கூடும்; ஆனால் அதைவிட முற்போக்கான பாட்டாளி வர்க்கப் பார்வையில் புத்தகங்களை அணுகும வாசகர்கள் இந்தப் புத்தகத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டாடுவார்கள் - என்றபோதும், அதே வேளையில் அவர்கள் இந்தப் பிரதியை நகைச்சுவையான ஒன்றாகவோ அலுப்பூட்டும் ஒன்றாகவோ அறியக்கூடும் (அது அவரவர் ரசனையையும் நகைச்சுவை உணர்வையும் சார்ந்த ஒன்று)

இப்படியெல்லாம் எழுதுவதைப் படிக்கும்பொது நம்மில் சில பேருக்கு சிரிப்பு வரும், சிலருக்கு கொட்டாவி வரும், இல்லையா, அந்த மாதிரி போல.

17/5/11

அர்த்தங்களே கலையின் இயல்பு...

எழுத்து குறித்த நல்ல கட்டுரை, ஒருவரை நோக்கி எழுதப்பட்டிருந்தாலும் இது அனைவருக்கும் பொருந்தக் கூடியது - ஓர் ஈழ எழுத்தாளருக்கு...
கலையின் பரப்பு எப்போதுமே கிரேஃபீல்ட் எனப்படும் பகுதிகளால் ஆனது. தெளிவு அல்ல தெளிவின்மையே கலையின் இயல்பு. அர்த்தம் அல்ல அர்த்தங்களே அதன் இயல்பு. அது சொல்வதில்லை உணர்த்துகிறது. அது சிந்தனையின் விளைவல்ல சிந்திக்கவைக்கும் ஒரு மொழிக்களம் மட்டுமே.

கருத்துக்கள், கொள்கைகள், நிலைபாடுகள் போன்ற பெருவெட்டான விஷயங்களால் ஆனதல்ல கலை. அது சிறிய விஷயங்களாலானது. நுண்மைகளால் மட்டுமே கட்டமைக்கப்படுவது. கலை ஒரு கலைஞனின் சிருஷ்டி அல்ல. அவன் தன்னை மீறிய விஷயங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுப்பதன் விளைவு.....
படித்துப் பாருங்கள், இந்த மாதிரி இன்னும் நிறைய இருக்கிறது-
இலக்கியம் மொழியாலானது. உணர்ச்சிகள் எண்ணங்கள் மட்டுமல்ல படிமங்களும்கூட இங்கே மொழிதான்.

மொழியின் ஒழுங்கே வேறு. ஒரு எண்ணத்தை அல்லது ஒரு நறுமணத்தை மொழிக்குள் கொண்டுவருவதற்கான சவாலென்பது இரவுபகலில்லாமல் மொழியை மட்டுமே அளாவிக்கொண்டிருப்பதனால்தான் கைகூடும். ஒரு சிந்தனை அல்லது உண்ர்வு எழுந்தாலே அது மொழிவடிவமாக மனதில் எழுவதற்குப்பெயர்தான் இலக்கியத்தேர்ச்சி.

11/5/11

நினைவுகளின் மீட்பன்

திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தாகூர் விருது பெறும்போது தான் ஆற்றிய உரையின் தமிழ் வடிவைத் தன் தளத்தில் பதிவு செய்திருக்கிறார்- அதில் அவர் எழுத்தையும் நினைவையும் குறித்துப் பேசிய இந்த விஷயங்கள் என்னைக் கவர்ந்தன-
எழுத்தாளன் என்பவன் நினைவுகளின் சேகரிப்பாளன், மறதிக்கு எதிராக நினைவு மேற்கொள்ளும் கலகத்தை அவன் முன்னெடுத்துப் போகிறான்,

மறக்கப்பட்ட. மறக்கடிக்கப்பட்ட. அதிகாரம் அரசியலால் விலக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட நினைவுகளை மீள்உருவாக்கம் செய்வதும். நினைவுகளின் வழியே மனிதர்களை காலம் தாண்டி நிலை பெறச் செய்வதுமே எழுத்தாளனின் வேலை

நினைவுகள் வீரியமிக்க விதைகளைப் போன்றவை, அவை உரிய இடத்தில் ஊன்றினால் முளைத்துக் கிளைத்து வளர்ந்துவிடும் என்பதை எழுத்தாளன் அறிந்திருக்கிறான், அந்த வகையில் அவனும் ஒரு விவசாயியே, இயற்கை ஒரு போதும் கடந்த காலத்தை நினைவில் வைத்துக் கொள்வதில்லை என்பதையே எழுத்தாளன் சுட்டிக் காட்டுகிறான்,

மலையின் நிழல் ஆற்று நீரில் படரும் போது மலையை தான் வீழ்த்திவிட்டதாக ஆறு ஒரு போதும் நினைப்பதில்லை,

மாறாக மலையை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்வதாகவே கருதுகிறது, அப்படிதான் வாழ்வை தன் எழுத்தில் பிரதிபலிப்பு செய்கிறான் எழுத்தாளன்.

தாகூர் விருது பெற்ற திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நம் உளமார்ந்த வாழ்த்துகள்.

o0o0o0o0

இந்தப் பதிவை என் பெருமதிப்புக்குரிய டிவிட்டர் நண்பர் திரு @rsgiri அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் கேட்ட ஒரு கேள்விக்கு விடையை எப்படி சொல்வது என்று தெரியாமல் ஏறக்குறைய ஒரு மாத காலமாக முழித்துக் கொண்டிருந்தேன்- திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் உரையை மேற்கோள் காட்டுவது சுலபமாக இருக்கிறது- அது நான் சொல்லக்கூடிய எதையும் காட்டிலும் தெளிவாகவும், ஆழமாகவும் இருக்கிறது.


புனைவின் வேர்கள் நினைவில் - ஒத்துக்கறேன். நினைவின் வேர்கள் புனைவில் - கொஞ்சம் விளக்கம் சொல்லுங்களேன் @nan_triFri Apr 15 02:12:48 via web


நன்றி கிரி. நல்ல கேள்வி :)

13/12/10

டால்ஸ்டாயின் கொடை

முழுக்க முழுக்க சரி என்று சொல்ல மாட்டேன், ஆனால் நன்றாக எழுதி இருக்கிறார்.
டால்ஸ்டாய் குறித்து படித்தது- தமிழில் இப்போது எழுதிக் கொண்டிருப்பவர்களில் யாரைக் குறித்து அவர் காலமாகி நூறாண்டுகள் சென்ற பின் இப்படி சொல்ல முடியும் என்று யோசித்தேன். ஒருவருக்கு மட்டுமே இது சாத்தியம் என்று தோன்றுகிறது- அவர் தன் கலையே கண்ணாக இனியேனும் இருந்தாரெனில்.


***=> டால்ஸ்டாய் என்ன எப்படியென்று சொல்வது இயலாத காரியம். நம்மால் அதிகபட்சம் ஆகக் கூடியது அவரது படைப்புகளின் தொகுப்புகளும் அவரைக் குறித்த நினைவுகளாய் மற்றவர்கள் எழுதியதுமான நூற்றுக்கணக்கான நூல்களை சுட்டுவதுதான்- இவற்றைப் படிக்க சொல்லலாம், சிறிது தெளிவு கிடைக்கக் கூடும்.

ஆனால் ஒரு விஷயம் இப்போதே தெளிவாகத் தெரிகிறது- டால்ஸ்டாய் யார் என்பதற்கு பதில் கிடையாது, இருக்கவும் முடியாது. டால்ஸ்டாய் பற்றி மதிப்பிடுவதென்பது உயிர், புவி, மானுடம் போன்ற மாபெரும் கருதுகோள்களை மதிப்பிடுவது போன்றது: நீ எவ்வளவு நுட்பமாக இவற்றை ஆய்ந்தாலும், இவற்றை சுற்றி உன் கற்பனையை வளைக்க எவ்வளவு முயன்றாலும், இந்த ஒரு விஷயம் உனக்குத் தெளிவாகத் தெரிகிறது- எந்த ஒரு சட்டகத்திலும் அவரை அடக்க முடியாது என்பதே அது.

****=> டால்ஸ்டாய்க்கும் கடவுளுக்கும் இடையிலான உறவு "ஒரே குகையில் இருக்கும் இரு கரடிகளது போன்றது" என்று சொல்கிறார் கார்க்கி தன் சுயசரிதையில். இதற்கு நாம் பல்வேறு வகைகளில் அர்த்தம் செய்து கொள்ளலாம், ஆனால் மிகப் பொருத்தமானது இதுவாகவே இருக்கும்- கடவுள் எதைக் கொண்டு படைக்கிறானோ, அதே ஆட்களைக் கொண்டு தன்னாலும் படைக்க முடியும் என்ற உணர்வு டால்ஸ்டாய்க்கு முழுமையாக இருந்தது. மானுட இயல்பை தான் பரிபூரணமாக உணர்ந்த காரணத்தால், அதன் கொடூரம், முட்டாள்தனம், கீழ்மை, அகங்காரம், இவை அனைத்தையும் அறிந்திருந்தும் அவர் தனது நம்பிக்கையை மானுடத்தின் இன்னொரு முகத்தில் வைத்திருந்தார்- அதன் இரக்கம், கருணை, சுயநலமின்மை, மன்னிக்கும் குணம் என்பனவற்றில். தன் வாழ்நாளை அப்படியொரு சமுதாயத்தை மண்ணில் படைக்க முயற்சிப்பதற்கென அர்ப்பணித்தார் அவர்.

டால்ஸ்டாய் ரஷ்யாவுக்கும்- உலக முழுமைக்கும்- விட்டுச் சென்றது, நம்பிக்கையை. அவரால் மானுட இயல்பை மாற்ற முடியவில்லை என்றாலும், அதில் ஒரு நெகிழ்வை ஏற்படுத்தினார். அவர் இறந்து நூறாண்டுகள் கழிந்து விட்டன. அவர் தனது கோட்பாடுகள் மற்றும் உழைப்பைக் கொண்டு உருவாக்கியனவற்றை தன்னை நினைவுபடுத்தும் வகையில் ஒரு கல் கூட இன்று இல்லாமல் எல்லாம் அழிந்து போய் விட்டன. ஆனால் அவரது புத்தகங்கள் இருக்கின்றன: War and Peace, Anna Karenina, Hadji Murat, “The Death of Ivan Ilych”, மற்றும் பிற- அவர் விட்டுச் சென்றிருப்பது ஒரு மகோன்னதமான கொடை. ஆனால் அது கலையின் சாசனம் மட்டுமே.

அவரது ஆளுமையும் அழியாமல் உயிர்ப்புடன் இருக்கிறது. அதைக் கொண்டு மனிதன் எப்படி இருக்க முடியும் என்பதை நாம் அறிந்து கொள்ளும் வகையில்.

இதை சரியாகப் படிக்க- The Moscow News.

கலையின் சாத்தியங்கள் அவ்வளவு சாதாரணமானவையா என்ன!