24/3/12

ஒரு வரலாற்றுப் பதிவு

தமிழில் ஒரு கதையோ நாவலோ ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் அல்லது சமூகத்தில் வாழ்க்கை முறையைச் சித்தரித்தாலே போதுமானதாக இருக்கிறது - இது ஒரு ஆவணப் பதிவு என்று சொல்லி அதை இலக்கியமாக்கி விடுகிறார்கள், இது எந்த அளவுக்கு சரி? வரலாற்றைப் பேச வேண்டும், தத்துவத்தை விசாரிக்க வேண்டும் என்பது போன்ற தகுதிகள் எல்லாம் ஆவணப் பதிவாக இருக்கும் இலக்கியங்களுக்கு இல்லையா என்ற கேள்வி என்னை ரொம்ப நாட்களாகத் துளைத்துக் கொண்டே இருந்தது.

இந்தப் புத்தக விமரிசனத்தைப் படித்ததும் எனக்கு பதில் கிடைத்து விட்டது என்று சொல்ல முடியாது, ஆனால் ஆங்கிலத்திலும் அப்படிதான் என்று கண்டு தெளிந்தேன்.

"தெரசாவும் இசபெல்லாவும்" ஒரு சமூக ஆவணமாக எடுத்துக் கொள்ளப்படும்போது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது என்பதை நான் தெளிவுபடுத்திவிட்டேன் என்று நம்புகிறேன். அது ஒரு இலக்கியப் படைப்பாகவும் இருக்கிறது என்கிறபோதும் பூர்ஷ்வாக்களுக்குரிய பண்பாட்டு வெளிப்பாட்டு முறைமைகளிடமிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ளாத எழுத்தாளரிடம் நாம் எதிர்பார்க்கக்கூடிய குறைகள் இந்தப் படைப்பையும் பீடித்திருக்கின்றன. இலக்கியத்தை நேசிப்பவர்கள் லெட்லுக்கின் இந்தக் குறுநாவலைக் குற்றமற்றப் படைப்பாகப் பார்க்கக்கூடும்; ஆனால் அதைவிட முற்போக்கான பாட்டாளி வர்க்கப் பார்வையில் புத்தகங்களை அணுகும வாசகர்கள் இந்தப் புத்தகத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டாடுவார்கள் - என்றபோதும், அதே வேளையில் அவர்கள் இந்தப் பிரதியை நகைச்சுவையான ஒன்றாகவோ அலுப்பூட்டும் ஒன்றாகவோ அறியக்கூடும் (அது அவரவர் ரசனையையும் நகைச்சுவை உணர்வையும் சார்ந்த ஒன்று)

இப்படியெல்லாம் எழுதுவதைப் படிக்கும்பொது நம்மில் சில பேருக்கு சிரிப்பு வரும், சிலருக்கு கொட்டாவி வரும், இல்லையா, அந்த மாதிரி போல.

19/12/11

பஜனை மடங்களைப் பற்றி சில குறிப்புகள்

நவீனத்துவத்தின் தாக்கங்களில் மிக முக்கியமான ஒன்று மனிதனின் தனித்துவத்தைப் பேசுதல்; நம் அனைவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு என்பதையும், அதன் சாத்தியங்களை அறிதலும் வெளிப்படுத்தலும் முக்கியம் என்பதையும் நாம் இயல்பான விஷயங்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். தனி மனித சுதந்திரம் என்று சொல்லும்போது, இந்த தனியன் வந்து விடுகிறான். பெரும்பாலும் சுதந்திரமாக அறியப்பட்டாலும், சில மேலை இலக்கிய மற்றும் தத்துவவாதிகளின் எழுத்தில் ஒரு பெரும்சுமையாக இதன் நீட்சியான தனிமை உணரப்படுகிறது.

இப்போது உருள் பெருந்தேர் சிறிதளவுக்கு மாற்று கோணத்தின் வெளிச்சம் பெறுவது போல் உள்ளது. மேற்கில் எழுதப்படும் புத்தகங்களில் சில, புனித உணர்வை மீளப் பெறுவது குறித்துப் பேசுகின்றன. அவற்றில் ஒன்று குறித்துப் படித்த மதிப்புரை இன்று குறிப்பிடத்தக்கதாகத் தோன்றுகிறது:

17/12/11

இரு கட்டுரைகள்

நல்ல நாளிலேயே மனிதன் நாலையும் யோசித்துக் கொண்டிருப்பான், உலகைக் குறித்து, மனிதர்களைக் குறித்து, உறவுகளைக் குறித்து என்று. அந்த எண்ணங்கள் அவனது வாழ்க்கையை பாதிப்பதாக இருக்கும் என்பதை சொல்லவே வேண்டும். எண்ணங்கள் செயல்களின் ஒத்திகை என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். ஆனால், சிந்திப்பதே, கற்பனையே ஒரு மனிதனின் தொழிலாகப் போய் விட்டால், அவன் மற்ற மனிதர்களைப் போல் இருப்பது கடினம். கற்பனையால் பாதிக்கப்பட்ட ஒருவர் பிலிப் கே டிக். பாதிக்கப்பட்ட என்று நாம் சொல்கிறோம், ஆனால் செறிவடைந்த ஒருவர் என்றும் சொல்லலாம்: அவரது எழுத்துகள் எவ்வளவு ஆற்றல் மிகுந்தவையாக இருக்கின்றன. அவர் தனது மனமயக்கங்களை லட்சக்கணக்கான சொற்களில் எழுதியுள்ளார். அவற்றுள் சில ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது.

பிலிப் கே டிக் பற்றிய அந்த மதிப்புரை இங்கே.


ஒரு வகை புத்தக விமரிசனம், அந்தப் புத்தகம் எதைச் சொல்கிறது, எப்படிச் சொல்கிறது, அவை குறித்த விமரிசகரின் கருத்துகள் என்ன என்பது. இன்னொரு வகை விமரிசனம் அதைவிட கொஞ்சம் புதியது, நுட்பமானது- ஜெப் டயரின் இந்த மதிப்புரையைப் பாருங்கள். தான் விமரிசிக்கும் நாவல் வாழ்க்கையை எப்படி பார்க்கிறதோ, எப்படி விவரிக்கிறதோ, அதே பார்வையில் அந்த நாவலையும் அணுகியிருக்கிறார் டயர். நாவல் எதைப் பேசுகிறதோ, அது இந்தக் கட்டுரை வழியாக நமக்குக் கிடைத்து விடுகிறது.

15/12/11

கதைக்கும் கட்டுரைகள்

அண்மைக்காலத்தில் படித்த கட்டுரைகளில் ஜேம்ஸ் வுட் எழுதிய இந்தக் கட்டுரை மனதைக் கவர்ந்த ஒன்று. அதன் சாரத்தைக் கொடுக்க முயற்சி செய்கிறேன். ஜான் ஜெரமையா சலிவன் என்பவர் எழுதிய புத்தகத்தின் மதிப்புரை, ஆனால் அதில் வுட் சில அருமையான விஷயங்களைத் தொட்டிருக்கிறார்.
நீண்ட முகப்புக் கட்டுரையாக இருந்தாலும் சரி, விமரிசனக் கட்டுரையாக இருந்தாலும் சரி, சமகால அமெரிக்க பத்திரிக்கைக் கட்டுரைகளின் நற்காலம் இது. இதை எதிர்பார்த்திருக்க முடியாத சூழலில் இது நிகழ்ந்திருக்கிறது. .... புதிய பத்திரிக்கைகள் வெற்றி பெரும் வழியைக் கண்டு விட்டன: ஏதோ ஒரு நம்பிக்கையில் பழைய பத்திரிக்கைகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன, ஏதோ ஒரு நம்பிக்கையில் தொடர்கின்றன.
தமிழிலும்கூட கதைகளைப் படிப்பவர்களைவிட கட்டுரைகளைப் படிப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

7/12/11

புறவழிச் சாலைகள்

மருத்துவர்கள் கவிஞர்களாக இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. வாழ்வின் கூர்முனையில் நிற்பவர்கள் அவர்கள். சாதாரணர்களுக்குக் காணக் கிடைக்காத உணர்வின் உச்ச கணங்கள் அவர்களுக்கு அன்றாட நிகழ்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் எல்லா மருத்துவர்களும் கவிதை எழுதுவதில்லை என்பதுதான் கேள்வியாக இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் ஒரு மருத்துவக் கல்லூரியில் கவிதைப் போட்டி வைத்தார்களாம். அதில் ஒரு கவிதை:

அபேசியா
-நோவா கபூனா

மூளையில் சில நெடுஞ்சாலை
அமைப்புகள் இருப்பதாய் கற்கிறோம்:
கார்பஸ் கல்லோசம்,
ஸ்பைனோதலமிக்,
ஆப்டிக் ரேடியஷன்.

ஆனால் அங்கு வேறு சாலைகளும் உண்டு.
பார்வைக்கு மறைந்திருக்கும்
அழகிய ந்யூரல் பின்புலங்கள்:
புழுதிச் சாலைகள், அதிகம் பயன்படுத்தப்படாதவை.

நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருக்கும்போது
சில சமயம் நாம் அவற்றைக் காணலாம்:
கான்சர்,
சர்ஜரி,
ஸ்ட்ரோக்.

எங்கள் துயரர் ஒருவருக்கு மூளையில் கட்டி.
நாங்கள் அவளது நெடுஞ்சாலைகளை
ஒரு இறகை வரைந்து சோதித்தோம்:
"இது என்ன?"

அவள் அளித்த பதில்
அழகிய புறவழிச் சாலையில் வந்தது:
"ஒரு பறவை
உதிர்த்த
இலை"

13/11/11

நல்ல உள்ளங்களுக்கு நன்றி...

திரு கோபி ராமமூர்த்தி அவர்கள் நம்மை வலைச்சரம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். அன்பருக்கு நன்றிகள்.

 திரு சசரிரி கிரி அவர்களின் தளம்தான் பதினொன்றாம் பரிமாணத்தை அவருக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் என்று ஊகிக்கிறேன். கிரி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

6/11/11

இலக்கிய கோட்பாடுகள் - ஒரு எளிய அறிமுகம்

இலக்கிய கோட்பாடு என்பது எதுவாக இருக்கிறது, அல்லது இருந்தது? ஏன் நமக்கு கோட்பாட்டைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது? நாம் எங்கே நிற்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் கோட்பாட்டை வெவ்வேறு சித்தாந்தங்களின் அருவ தொகுப்பாக நினைக்காமல், அதை உண்மையாகவே நிகழ்ந்த ஒன்றாக வாசிக்க வேண்டும்: அது தனக்கென்று ஒரு வரலாற்றுச் சித்திரத்தை விட்டுச் செல்லும் உயிர் சுழல். அதன் நினைவுகளும், அது தன்னைக் குறித்து பதிவு செய்துள்ள விவரணைகளும் அவ்வாறு வாசிக்கப்படலாம். அப்போது இலக்கியக் கோட்பாட்டின் வாழ்வும் மரணவாழ்வும் நிலையாய் நிற்கும் அடையாளக் குறிகளைக் கொண்டு புரிந்து கொள்ளப்பட முடியும்: முக்கியமான கலந்துரையாடல்களும் பிரசுரங்களும்; அவை தேசிய அளவில் பெற்ற வெவ்வேறு வகை வரவேற்பும்; தாக்கத்தை ஏற்படுத்திய அமைப்பு சார்ந்த வட்டங்களும். இப்படி செய்யும்போது, வடிவமின்றி மிதக்கும் சித்தாந்தங்களின் உலகம் நிஜ உலக மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகள் என்ற தொடர்பு எல்லைக்குள் சிக்கிக் கொள்கிறது. இப்படிப்பட்ட ஒரு விவரிப்பை முன்வைத்து இந்த பாடத் திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது.
என்று துவங்குகிறது இந்த சுவையான கட்டுரை. கதை கவிதைகள் இலக்கியவாதிகளால் பேசப்பட்டாலும் நம்மைப் போன்ற பாமரர்களின் கண்களில் பட்டு வாயில் விழுந்து எழுந்திருக்காமல் தப்புவதில்லை. கோட்பாடுகளை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும்? படித்துப் பாருங்கள்.

இரண்டு முக்கியமான விஷயங்கள்: கோட்பாட்டு விமரிசனத்தின் காலம் முடிவுக்கு வந்து விட்டது என்று நினைக்கிறேன்; இப்போது ஸ்பெகுலேடிவ் ரியலிசம் என்ற புதிய கோட்பாடு பரவலாக கவனிக்கப்பட்டு வருகிறது.