12/9/12

விமரிசன சுதந்திரம்

ஒரு விமரிசகனுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது என்பதை வெவ்வேறு கோணங்களில் பேசினாலும், இந்தக் கட்டுரையில் எனக்குப் பிடித்த பத்தி இது. யதார்த்த உண்மையைப் பேசுகிறது, நாம் இதை ஏறத்தாழ மறந்தே போய் விட்டோம்:
"விமரிசகனின் எழுத்தைப் பதிப்பிக்கும் இதழ், செய்தித்தாள் அல்லது இணையதளத்துக்கு என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அங்கு பதிப்பிக்கப்படும் விஷயங்களுக்கு ஒத்திசைந்தும் முரண்பட்டும் பல்வேறு தராதரங்களின் அடிப்படையில் அது தன் தீர்ப்புகளை மறுவினையாகத் தருகிறது. அங்கிருக்கும் தர அளவுகோல்களைக் கண்டுகொள்ள மாட்டேன் என்று விமரிசகன் சொல்லிவிட முடியாது. களையைக் களையல்ல என்று சொல்லும் சுதந்திரம் அவனுக்குக் கிடையாது. ஆனால், இந்தத் தர விழுமியங்களைக் கையாண்டு அவன் அவற்றைத் திருத்தி எழுத முடியும். அந்தப் பத்திரிகையில் எழுதும் ஏனைய விமரிசகர்களுடனான உரையாடலால் இது சாத்தியப்படுகிறது. ஒரு புத்தகம் ஏன் உருப்படியாக இருக்கிறது, அல்லது இல்லை என்று சொல்வதற்குத் தேவையான தர அளவீடுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை அவனுக்கு இருக்கிறது. இங்கு அவன் மதிப்பீட்டுக்கான விழுமியங்களைத் தரம்பிரித்துப் பார்க்கிறான் என்று சொல்லலாம். தேவைப்பட்டால் அவன் புதிய மதிப்பீடுகளைக்கூட தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவன் எதையெல்லாம் தரம் என்று தேர்ந்தேடுக்கிறானோ, அதுவெல்லாம் அவன் எழுதும் பத்திரிகையின் வாசகர் தரத்தை வரையறுக்க உதவுகின்றன - அவனது தர அளவீடுகள் சில வாசகர்களை ஈர்க்கின்றன, சிலருக்கு விலக்கம் தருகின்றன"
யாருக்குதான் தரம் குறித்த அக்கறை இல்லை? அதைத் தீர்மானிக்கும் அடிப்படை விழுமியங்கள் இல்லை? ஆனால் அவை வெளியே சொல்லப்படுவதில்லை, சொன்னால் அது ஒரு மனச்சாய்வு, கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நிலைப்பாடு என்றெல்லாம் திட்டுவார்கள் என்ற அச்சம் இருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை, யாரானாலும் ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு, அதை அறிந்துகொண்டேதான் அங்கு எழுதுபவர்கள் எழுதுகிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது மேற்கண்ட கட்டுரை.



10/9/12

ரசனைக் குறிப்புகள்

ஒரு புத்தக மதிப்புரை. இதில் நிக் ஹார்ன்பி பற்றி சில சுவையான குறிப்புகள். "நான் படிக்கும் சமாசாரங்கள்" என்ற தொடரின் துவக்க பத்தியில் அவர் எழுதினாராம், "எப்படி, எப்போது, ஏன், எதைப் படிக்கிறேன் என்பதை எழுதப் போகிறேன் - வாசிப்பு சுகமாகப் போகும்போது, ஒரு புத்தகம் மற்றொன்றுக்கும், அங்கிருந்து வேறொன்றுக்குமாக, கருப்பொருளிலும் உட்பொருளிலும் தொடர்புடைய காகிதத் தடமாய் என்னை அழைத்துச் செல்லும் பாதையை நான் தொடர்வதை எழுதப் போகிறேன்," என்று. இதையே ஆம்னிபஸ்ஸில் எழுதும் நண்பர் ஒருவரும் சொன்னார் என்று நினைவு. விமர்சகர் எவ்வளவு பெரிய ஆளாகவும் இருக்கலாம், ஆனால் வாசகர்கள் ஒரே பாதையில்தான் பயணத்தைத் தொடர்கிறார்கள்.

புத்தகங்களைக் கோட்பாடுகளைக் கொண்டும் அணுகலாம், வாழ்க்கையை விவரிக்கும் பதிவுகளாகவும் அணுகலாம், ரசனைக் குறிப்புகளாகவும் அணுகலாம் - அல்லது ஹிலாரி கெல்லி ஹார்ன்பியின் எழுத்தைக் குறித்து சொல்வதுபோல் இப்படியும் அணுகலாம்::
 "ஹாரன்பி தன் வாசிப்பின் இயல்பை விவரிக்கிறார், அவரது அன்றாட இருப்பைக் காண நமக்குச் சின்னச் சின்ன ஜன்னல்களைத் திறந்து வைக்கிறார்.  அதில் மிக முக்கியமாக, அவர் தன் உணர்வுகளை எழுதுகிறார் - தன் வாசிப்பில் அடையப்படும் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். அவரது பத்திகள் இயல்பாக இருக்கின்றன - அவர் கவனமாகக் குறிப்பெடுக்கவும் உருவ அமைப்புகளைக் கண்டுபிடித்துக் காட்டவும் உதவும் நிரலிகள் அமைக்கப்பட்ட, அறிவுள்ள வாசிப்பு இயந்திரம் அல்ல - எழுத்தை நேசிப்பவர், பழுது சொல்ல முடியாத ரசனை உள்ளவர், உற்சாகமான நடையில் எழுதும் துல்லியத்தைப் பழகித் தேர்ந்தவர்".
தரம் பிரித்தலையோ, ரசனை மேம்பாட்டையோ நாம் எல்லாரும் நோக்கமாகக் கொள்ள வேண்டியதில்லை - நம் சிந்தனையின் சரடுகளை நாம் வாசிக்கும் புத்தகங்களூடே பிரித்துப் பார்க்கலாம், அல்லது, நாம் வாசித்த புத்தகங்களில் நாம் ரசித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம், தவறில்லை, நம் விருப்பம். அப்படி நாம் எழுதுவதில் நம் வாசிப்பு அனுபவம் சொல்லிக் கொள்ளும்படி இருந்தது என்ற விஷயம் வெளிப்பட்டாலே வெற்றி பெற்ற மாதிரிதான். வாசிப்பு ஒரு அகவய அனுபவம் என்பதால் இத்தகைய புத்தக மதிப்பீடுகள் எவ்வளவுக்கு எவ்வளவு நம் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு வாசிக்க நன்றாக தருகின்றன.

"ஓய்வு கிடைக்கும்போது புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் பிழைத்திருக்க வேண்டுமானால், நாம் வாசிப்பின் சந்தோஷங்களை உயர்த்திப் பேச வேண்டும் - சந்தேகத்துக்கிடமான அதன் பயன்களை அல்ல" என்கிறார் ஹார்ன்பி.