20/6/11

களமில்லா கதைகள்

இந்தக் கட்டுரையை நீங்கள் ஆங்கிலத்தில்தான் படித்து மகிழ வேண்டும், மிக நன்றாக எழுதியிருக்கிறார்-

The Millions : On Not Going Out of the House: Thoughts About Plotlessness

கதை என்று சொன்னால் அதில் குறைந்தபட்சம் துவக்கம் என்று ஒன்றும் முடிவு என்று ஒன்றும் இருக்க வேண்டாமா? இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வெளியில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை என்று வைத்துக் கொள்ளலாம். களமில்லா கதைகள் என்று நாம் சொல்லும்போது இப்படி எதுவும் நடக்காத கதைகளைப் பற்றிப் பேசலாம். இதைத்தான் இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

1790ல் Xavier de Maistre என்பவர் எழுதிய Voyage Around My Room என்ற நாவல், வீட்டுக்காவலில் இருப்பவனின் மன ஓட்டத்தைத் தொடர்கிறது.
காதல் தோல்வியாலும் நண்பர்கள் கைவிட்டதாலும் தனி அறையில் அடைந்து கிடப்பவர்களே, என்னோடு வாருங்கள், சக மனிதனின் அற்பத்தனத்தையும் துரோகத்தையும் விட்டு தொலைதூரம் செல்வோம். துக்கப்படுவோரே, நலம் குன்றியோரே, அலுப்பில் இருப்போரே, என்னோடு வாருங்கள்- உலகின் சோம்பேறிகள் அனைவரும் ஒரு பெரிய கூட்டமாக எழுச்சி கொள்ளுங்கள்;- புரட்சி எண்ணங்களில் படுபயங்கர சதித் திட்டங்கள் தீட்டி மூளையை கசக்கிக் கொண்டிருப்பவனே, உலகைத் துறந்து நல்வாழ்வு வாழ உன் ஓய்வறையில் ஆலோசனை நடத்திக் கொண்டிருப்போனே, மாலைப் பொழுதின் துறவிகளே-............... என்னோடு பயணம் வாருங்கள், நாம் சின்னஞ்சிறு பயணங்கள் மேற்கொள்வோம், ரோமையும் பாரிஸையும் பார்த்த பயணிகளைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரித்தபடி நாம் பயணிப்போம்- நமக்குத் தடைகள் இல்லை; மனம்போன போக்கில் சந்தோஷமாக அது நம்மைக் கூட்டிச் செல்லும் இடமெங்கும் செல்வோம்...
ஆனால் இந்த மனம் போகிற போக்கு இருக்கிறதே, இதுதான் பிரச்சினை. மனம் ஓயறு இட்டுக் கட்டும் கருவி. அடுத்தடுத்து நான்கு ஓவியங்களை பக்கத்தில் பக்கத்தில் வைத்துப் பார்த்தால், அவற்றை ஒன்றாக இணைக்க ஒரு கதை செய்து விடுவதே மனதின் இயல்பு. களமில்லா கதை சொல்பவன் மனம் போகும் போக்கைத் தவிர்க்க வேண்டும், இல்லையா?

கட்டுரையில் கொஞ்சாரவ் என்பவர் எழுதிய ஒப்லமோவ் என்ற பாத்திரம்- இவனும் அறையில் அடைந்து கிடக்கிறான், இதில் இப்படி வருகிறதாம்-
வரலாற்றைப் படிப்பது மனிதனை துயரத்தில் ஆழ்த்துகிறது. இன்ன இன்ன ஆண்டில் இப்படிப்பட்ட துயரச் சம்பவங்கள் நிகழ்ந்தன, மனிதன் துன்பப்பட்டான் என்று நீ படிக்கிறாய். அவன் தன் ஆற்றல்கள் அனைத்தையும் திரட்டினான், வேலை செய்தான், இங்கு அங்கும் போனான், கஷ்டப்பட்டு உழைத்து, பிரகாசமான நாட்களை எப்போதும் எதிர்பார்த்திருந்தான். அந்த நாள்தான் வந்துவிட்டதே, வரலாறு ஓய்வெடுத்துக் கொள்ளும் என்று நீ நினைப்பாய். அதுதான் இல்லை, மேகங்கள் சூழ்கின்றன, கட்டிடம் இடிந்து விழுகிறது, மீண்டும் உழைப்பும் அலைச்சலும், பிரகாசமான நாட்கள் நீடிப்பதில்லை; அவை விரைந்து சென்று விடுகின்றன- வாழ்க்கை பெருக்கெடுத்து ஓடுகிறது, எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது, தன் பாதையில் உள்ள அனைத்தையும் உடைத்துத் தள்ளிக் கொண்டு"
இதை ஒரு காரணமாக சொல்லிக்கொண்டு இந்த நாவலின் நாயகன் தன் வீட்டில் அடைந்து கிடக்கிறான். நண்பர்கள் வருகிறார்கள் போகிறார்கள், காதல்கள் ஜெயிக்கின்றன தோற்கின்றன, புரட்சிகள் வெடித்து அடங்குகின்றன- இதெல்லாம் எதற்கு என்று தன் தனியறையில் இவற்றால் தொடப்படாமல் இருக்கிறான் ஒப்லமோவ். ஆனால் அப்படி இருக்க முடியுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. என்னதான் தனித்திருந்தாலும், ஒரு கோர்வையாய் காலத்தின் பாதையில் ஒரு கதையாடலைக் கட்டுவிப்பது வெகு தீவிரமான உந்துதல்.

பாருங்கள், நாம் கூட களமில்லா கதைகள் என்று சொன்னாலும், இந்தக் கதைகள் என்ன சொல்கின்றன என்பதைப் பேசுகிறோம்!

ஒரு சில நாவல்களை எடுத்து விவாதித்திருக்கிறார், கட்டுரையை எழுதியவர். களமில்லா கதைகள் என்று சொல்வது கொஞ்சம் மிகை, வீட்டுக்குள் கிடத்தல், வெளியே போகாதிருத்தல் என்ற வகைப்பாட்டில் வேண்டுமானால் இவர் குறிப்பிடும் கதைகள் வரலாம்.

களமில்லா கதைகளே வேறு.

9/6/11

தகவலுக்காக- டால்ஸ்டாய்

தகவலுக்காக-

மேலை நாட்டு விமரிசகர்களில் முதன்மையானவர்களின் ஒருவரான ஹரோல்ட் ப்ளூம், டால்ஸ்தாயின் "ஹாஜி மூரத்" என்ற புதினத்தை மிக உயர்ந்ததாகக் கருதியிருக்கிறார் என்பதைக் குறித்து வைத்துக் கொள்கிறேன்.

"உரைநடைப் புதின வடிவத்தின் நுட்பத்துக்கு என் தனிப்பட்ட உரைகல்லாக இருக்கிறது. எனக்கு இது உலகின் சிறந்த கதையாக உள்ளது- குறைந்தபட்சம், நான் படித்ததில் சிறந்தது என்றாவது சொல்லியாக வேண்டும்," என்று எழுதியிருக்கிறாராம் ப்ளூம்.

7/6/11

நாவல்கள்- காலப் பயணம்

வழக்கமாக இங்கே சிறுகதைகளைப் பற்றிதான் எழுதுவது- அவ்வப்போது கவிதை- எப்போதாவது நாவல் என்று இருக்கிறது. ஆனால் இன்று படித்த ஒரு விஷயம் மிகவும் சுவையாக இருக்கிறது. முடிந்தால் முழு கட்டுரையையும் இங்கே படித்துப் பாருங்கள். சமகால நாவல்களை எழுதுவது சாத்தியமா என்ற கேள்வியை விவாதிக்கிறார் க்ரஹாம் ஸ்விப்ட் (Graham swift).

"நாம் கடந்த காலத்தில் எழுதப்பட்ட நாவல்களைப் படிக்கும்போது அவை அவர்களுக்கு சமகாலத்தில் இருந்த உலகைக் குறித்து எழுதப்பட்டதாக நாம் நினைத்துக் கொள்ளக் கூடும்- டிக்கன்ஸின் டிக்கன்ஸியம் அவர் தன் சமகால நிகழ்வுகளோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பதில் சார்ந்திருக்கிறது என்று நினைக்கிறோம். உண்மையைச் சொல்வதானால், அவரது நாவல்கள் பெரும்பாலும் ஒரு பத்தாண்டு அல்லது அதைவிட அதிக காலம் பின்நோக்கிப் பார்க்கின்றன. டால்ஸ்தாயின் போரும் அமைதியும் ஆயிரத்து எண்ணூற்று அறுபதுகளில் எழுதப்பட்டது, ஆனால் கதைக்களம் நெப்போலிய யுத்தகாலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. போர் தனது கருக்களில் ஒன்றாக இருந்ததால், டால்ஸ்டாய் ஆயிரத்து எண்ணூற்று ஐம்பதுகளின் மத்தியில் நிகழ்ந்த க்ரிமிய போரைப் பற்றி எழுதியிருக்கலாம். அது அவரது நேரடி அனுபவமாகவுமிருந்தது. க்ரிமியா பற்றி அவரது செபஸ்டபோல் என்ற புத்தகத்தில் அவர் எழுதவும் செய்தார், ஆனால் அது ஒரு அற்புதமான செய்தித் தொகுப்பு. டால்ஸ்டாய் இறக்கும்போது ப்ரௌஸ்ட் ஒரு நாவல் தொடரைத் துவங்கிக் கொண்டிருந்தார்... அதை அவர் தன் வாழ்நாள் முழுதும் தொடர்ந்தார், எனவே அதில் நிகழ்காலம் என்பதே இருப்பதற்கில்லை. அந்த நாவிளின் பெயரே நாவல் ஒரு வடிவம் என்ற வகையில் எதைக் குறித்து தன்னியல்புகலில் ஒன்றாய் இருக்கக்கூடும் என்பதைச் சொல்கிறது- காலத்தின் ஓட்டம்...

நாவல்கள் காலம் செல்வதைப் பேசுகின்றன என்று சொல்கிறார் ஸ்விப்ட். யோசித்துப் பார்த்தால் அதுவும் சரியாகவே இருக்கிறது. அதன் வடிவம், காலத்தின் பரிமாணங்களைப் பேசத் தகுந்த ஒன்று, இல்லையா?

காலத்தின் நிலையாமையை விவரித்து ஆய்வு செய்வது நாவல்கள் செய்யக்கூடிய முதன்மையான பணிகளில் ஒன்றாக இருக்கலாம். அவை ஒரு நீண்ட பார்வையைக் கைகொள்ளத் தக்க சாதனமாக இருக்கின்றன, மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் காட்ட உகந்தவை, காலத்தால் இயக்கப்படும் மானுட நடவடிக்கைகள் அதற்கேற்ற களம். ஆனால் இதனாலெல்லாம், கறாராகப் பேசுவதானால் சமகாலம் குறித்து இருக்கவே முடியாது என்று சொன்னாலும் நாவல்கள் தமக்கென்று ஒரு சமகாலம் கொண்டவையாக இருக்க முடியாது என்று பொருள் கொள்ள முடியாது. வெறுமே சமகாலம் என்றிருப்பது தரக்கூடிய பரவசத்தைவிட உச்சமான பரவசம் ஒன்றை அவை தம்முள் கொண்டிருக்க முடியாது என்று சொல்வதற்கில்லை- அவற்றுக்கு உடனடித்தன்மை இருக்கிறது.

நூற்றைம்பது ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட ஒரு நாவலை, அதுவும் எழுதப்பட்ட ஆண்டைவிட ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட கதையை சொல்லும் நாவலை, நாம் ஏன் இரட்டை சரித்திரத் தாவலை சாதித்துப் படிக்க வேண்டும்? டால்ஸ்டாயின் எழுத்தில் இருக்கும் 'அப்போது' உயிருள்ள 'இப்போது' என்றாகிவிட்டதை நாம் வாழ்ந்துணரும் வகையில் விவரிக்கக்கூடிய ஆற்றல அவருக்கு இல்லாவிட்டால் இது எப்படி சாத்தியம்? நமக்கிருப்பது போலவே அவர்களுக்கும் இருந்திருக்கும் என்று நாம் நம்புகிறோம். பரிதாபத்துக்குரிய சமகால ஜீவிகளாக நாம் இருப்பதிலிருந்து நம்மை விடுவித்து அக்கணமே காலத்தைக் கடந்து நம்மை இணைக்காவிட்டால் இது எப்படி சாத்தியம்? "நானும் இங்கிருந்திருக்கிறேன்" என்ற விவரிக்க முடியாத, உறையவைக்கும் உணர்வை நம்மில் கிளர்த்தெழச் செய்யாவிட்டால் நாம் வேறு எதற்காக வேறொரு காலத்தைப் பேசும் எந்தவொரு நாவலை நோக்கியும் பயணிக்க வேண்டும்?

4/6/11

பெண்ணிய எழுத்து

மீண்டும் ஒரு இடைவெளி ஏற்பட்டு விட்டது, சரி செய்ய முயற்சி செய்கிறேன்.

-----------

வி எஸ் நைபால் தனக்கு சரிநிகராக எழுதக் கூடிய பெண் எழுத்தாளரே கிடையாது என்று சொல்லிவிட்டதாகப் படித்தபோது அவர் தன் சமகால எழுத்தாளர்களைதான் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படியல்ல- ஜேன் ஆஸ்டன் போன்ற ஆதர்சங்களை எல்லாம் தன் கணக்கில் சேர்த்துக் கொண்டு போட்டுத் தள்ளியிருக்கிறார்.

அவர் கூறியிருப்பதில் ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது, "தன் வீட்டிலேயே சர்வ அதிகாரமும் கொண்ட எஜமானியாக இல்லாத நிலை ஒரு பெண்ணின் எழுத்திலும் தவிர்க்கமுடியாத வகையில் வெளிப்படுகிறது," என்று சொல்லியிருக்கிறார் அவர்.

பெண்களின் எழுத்தில் அவருக்குத் தென்படுகிற மிகையுணர்ச்சி (செண்டிமெண்டாலிட்டி) மற்றும் உலகை நோக்கிய குறுகிய பார்வை ஆகியவையே பெரும்பாலானோரின் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது. அதற்குக் காரணமாக அவர் சுட்டுகிற சுதந்திரமின்மை பெண்ணியக் குரல்களுக்கு வலு சேர்ப்பதாகத்தானே இருக்க வேண்டும்?

ஒரு கேள்வி: தன் தனிப்பட்ட வாழ்வில் கையாலாகாதவனாக இருக்கிற ஒருவரது மனநிலை, ஆளுமை சார்ந்த உளவியல் பிரச்சினைகள், அவரது எழுத்தில் தவிர்க்க முடியாதபடி வெளிப்படுமா?

எழுத்து வாழ்வை பிரதிபலித்தால் போதுமானது என்று சொன்னால், அப்படியிருந்தாலும் தவறில்லை. ஆனால், எழுத்து வாழ்வின் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், இது சிக்கலான விவாதம்தான்.