31/3/11

புத்தகங்களின் ஆற்றல்

நிச்சயம் இதுவல்ல-

நன்றி- 9GAG

30/3/11

கவிதை கையேடாவது எப்போது...

“Once in a lifetime / The longed-for tidal wave / Of justice can rise up / And hope and history rhyme.”
- The Cure at Troy, Seamus Heaney 



இந்தக் கட்டுரை நேர்த்தியாக எழுதப்பட்ட ஒன்றல்ல- ஆனால் நேர்மையாக எழுதப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இதை எழுதியிருப்பவர் ஒரு பத்திரிக்கை நிருபர்- இவர் கேட்கும் கேள்வி காலமெல்லாம் நாம் கேட்டுக் கொண்டிருக்கிற ஒன்று- புனைவின் பயனென்ன?- எது மகத்தான உண்மையை சொல்லவல்லது- செய்திகளா, கவிதையா? இதற்கு பதில் தரும்போதே, செய்திகளின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடாமல் கவிதைக்கு உரிய உயர் இடத்தை இவர் தந்திருக்கிறார்.

Seamus Heaney (இனி ஹீனி), அயர்லேந்தில் உள்நாட்டு போர் (விடுதலைப் போர்- இதுதான் செய்திகளின் பிரச்சினை: ஒருசார்பற்றுப் பேச முடியாது, நீ விரும்பினாலும் மொழி உன் தரப்பைக் காட்டிக் கொடுத்துவிடும்) நடந்து கொண்டிருந்தபோது ஒரு கவிஞனாகவும் மனிதனாகவும் ஹீனி என்ன செய்தார், அவரது தாக்கம் எத்தகையதாக இருந்தது என்று கட்டுரையில் எழுதியிருக்கிறார்- படித்துப் பாருங்கள், நான் இலக்கியம் தொடர்பான பத்திகளை மட்டும் எடுத்திருக்கிறேன், இதில் அரசியல் இருக்கிறது, அறம் இருக்கிறது. அதை எல்லாம் பேசுவதானால் மிகப் பெரிய பதிவாகப் போய் விடும். நீங்கள் கட்டுரையைப் படிப்பதுதான் சரி.

ஒரு பத்திரிக்கையாளராய் தன்னால் இயலாத ஒன்றை ஒரு கவிஞரால் மட்டுமே செய்ய முடியும் என்று இவர் சொல்கிறார், அதை மட்டும் தற்போதைக்கு பார்க்கலாம்- இதுதான் செய்திகளுக்கு புனைகலையின் வழி பூரணத்துவம் தருகிறது என்று நினைக்கிறேன்:

"சிறப்பாக செயல்படுகையில் பத்திரிக்கைத்துறையும் கவிதையும் உண்மையை வெளிப்படுத்துவது குறித்தவை என்று நான் முதலில் சொல்லியிருந்தேன். ஹீனி செய்வது என்னவென்றால் கவிதை மட்டுமே வெளிப்படுத்தக் கூடிய உண்மையை அவர் தருகிறார் என்பதே. நமக்கு கைக்கெட்டும் தூரத்தில் உண்மையைத் தள்ளி வைத்து அதை அச்சமில்லாமல் நாம் பார்த்து புரிந்து கொள்ள வகை செய்து தருகிறார் என்பதை சொல்ல வேண்டும். வடக்கு நிகழ்வுகளை செய்திகளாகத் தருகையில் நான் அவ்வப்போது ஹீனியின் கவிதையைப் படிப்பது உண்டு, என் பிரச்சினை நான் அதை அமைதியாக அணுகும் வகையில் அவரது கவிதைகளில் சொல்லப்பட்டிருப்பதை அப்போது உணர்வதுண்டு.
கவிதையின் இயல்பில் இது சாத்தியப்படுவது குறித்து ஹீனி எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது- வாலஸ் ஸ்டீவன்ஸை மேற்கோள் காட்டுகிறார் அவர் தன் கவிதையின் நீதி என்ற புத்தகத்தில். கவிஞன் வல்லமை பொருந்திய ஒருவன்- அவன், "நாம் நம்மையும் அறியாமல் திரும்பத் திரும்பத் திரும்பி வருகிற  உலகத்தை அவன் ஆக்கம் செய்கிறான்... அந்த உலகை நாம் நினைத்தும்கூட பார்ப்பதற்கு இன்றியமையாதிருக்கிற மகோன்னதமான புனைவுகளுக்கு அவன் உயிர் தருகிறான்," என்பதே அதன் காரணமாகிறது.

நமது அனுபவம் ஒரு புதிர்ப் பாதையைப் போன்றதெனின் அதன் வழிகளின் பிடிபடாத்தன்மை கவிஞன் அதன் உண்மைத்தன்மைக்கு இணையான ஏதோ ஒன்றைக் கற்பனை செய்து தனக்கும் நமக்கும் அதன் தீவிரமான அனுபவத்தை முன் வைத்து எதிர்கொள்ள முடியும் என்று ஹீனியே சொல்கிறார். நம் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் கவிதை அத்தகைய பணியாற்றுகிறது.
இன்னும் நிறைய இருக்கிறது- அதிலும் முக்கியமாக, ஒரு கவிஞன் எப்படி ஒரு இடத்தையும் அது சார்ந்த பண்பாட்டையும் தன் வாசகரகளுக்குரியதாக உணர்த்துகிறான், என்பது கவனிக்கத்தக்கது. கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

28/3/11

எட்டில் ஒரு பங்கு!

எர்னெஸ்ட் ஹெமிங்வே எவ்வளவு பெரிய எழுத்தாளர்! இப்போது அவரைத் திட்டும் குரல்கள் கொஞ்சம் அதிகரிக்கத் துவங்கி விட்டாலும், சிக்கனமான எழுத்துக்கு ஹெமிங்வே ஒரு நல்ல முன்மாதிரி.

ஒரு இடத்தில் சிறுகதை குறித்து அதன் ஆசிரியர்கள் என்ற ஒரு பதிவைப் பார்த்தேன். மூன்று பாகங்கள்- பாகம் ஒன்று, பாகம் இரண்டு, பாகம் மூன்று. இவை பாரிஸ் ரிவ்யூ என்ற தளத்தில் உள்ள பேட்டிகளில் இருந்து பொறுக்கி எடுத்தவை.

படித்துப் பாருங்கள், சிறு சிறு மேற்கோள்களாக நிறைய விஷயம் இருக்கிறது.

தற்போதைக்கு ஹெமிங்வேயின் மேற்கோள் மட்டும்-
"ஒருத்தனுக்கு அவன் எதைப் பற்றி எழுதுகிறானோ அதில் ஓரளவுக்குப் போதுமான விஷய ஞானம் இருந்தால், தனக்கும் தன் வாசகனுக்கும் தெரிந்த விஷயங்களை அவன் சொல்லாமல் விட்டு விடலாம். எழுதுகிறவன் மட்டும் தேவைப்பட்ட அளவுக்கு உண்மையாக எழுதினால் அவன் சொல்லாமல் விட்டிருந்தாலும், சொல்லப்பட்டது போலவே அவற்றை வாசகன் வலுவாக உணர்வான். கடலின் மேலிருக்கும் பனிக்கட்டி கம்பீரமாக நகரக் காரணம் அதில் எட்டில் ஒரு பங்கு மட்டுமே தண்ணீருக்கு மேல் இருக்கிறது என்ற உண்மைதான்.
எட்டில் ஒரு பங்கு மட்டுமே வெளிப்பட வேண்டுமாம்- மற்றதெல்லாம் மறைந்திருந்து நம்மோடு பேச வேண்டும். ஹெமிங்வே சாமானிய எழுத்தாளர் இல்லை, சரியா? அவர் எழுத்துக் கலை பற்றி நிறைய பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது- ஒரு விஷயத்தை நேர்மையாகப் பேசுவதற்கு எவ்வளவு பழக்கம் வேண்டியிருக்கிறது! உள்ளத்தில் உண்மை இருந்தால் வாயைத் திறந்தால் அது வெளியே வந்து விழுந்து விடும் என்றெல்லாம் இல்லை, சரிதானே? நானே எத்தனையோ நிஜ அனுபவங்களைக் கதையாகப் படித்திருக்கிறேன், அவை அவ்வளவு எளிதாக நம்பும்படியாக இருப்பதில்லை.

புனைவு என்பது முதலிலும் முடிவிலும் ஒரு ஜோடனை, பாவனை. அதில் நேர்மை என்பது இன்னதென்று அடையாளம் கண்டு சொல்லி விட முடியாது. இந்த நேர்மை எழுத்தாளனின் நேர்மை இல்லை- எது நேர்மை என்று எழுத்தாளனும் வாசகனும் ஒப்புக்கொண்ட விதிகளை மீறாமல் கடைபிடிப்பது. அவ்வளவுதான் விஷயம்.

எழுதுபவனுக்கும் வாசகனுக்கும் தெரிந்த விஷயங்கள் என்று ஹெமிங்வே எழுதுகிறார் பாருங்கள், அங்கே இருக்கிறது புனைவின் மையப் புள்ளி. வாசகர்களுக்குத் தெரிந்த விஷயங்களை, தெரிந்த மொழியில் எழுதுவதில்தான் ஒரு புனைவின் நேர்மை இருக்கிறது.

நாலு பேர் ஒன்றாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எதைப் பற்றியெல்லாமோ அவர்கள் பேசுகிறார்கள்- அப்போது ஒருவன் எதையோ சொல்கிறான். அதைக் கேட்டதும் இன்னொருவன் அங்கிருக்கும் பெண் ஒருத்தியைப் பார்த்து கண்ணடிக்கிறான். அவள் அதைப் பார்த்து ஒரு குறுஞ்சிரிப்பு செய்கிறாள். இது காதலர்களின் பொதுமொழியில் பேசப்பட்டது, இல்லையா?

காதலின் உள்வட்டத்தில் இல்லாதவர்கள் இந்த கள்ளத்தனத்தை கபடம் என்று சொல்லலாம், ஆனால் காதலின் மொழியில் இது ஒரு நேர்மையான உரையாடல் என்பதில் சந்தேகம் இருக்கிறதா என்ன?

எழுத்தாளனும் வாசகனும் இப்படிப்பட்ட ஒரு நேய வட்டத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கிடையே பல விஷயங்கள் பொதுவில் இருக்கும்போது அவை சொல்லப்படாமலேயே தன் வாசகர்களுக்கு விளங்கும் என்ற நம்பிக்கையில் எழுத்தாளன் எழுதும்போதுதான் ஒரு புனைவு உயர் கலையாக உருவாகிறது.

அப்போது எட்டில் ஒரு பங்கை சொல்லும்போதே எல்லாம் புரிந்து விடுகிறது- சொல்லப்படாத விஷயங்கள் சொல்லப்படாமல் இருப்பதால் அவை இன்னும் தெளிவாகப் பேசுகின்றன, கூடுதல் மதிப்பு மிகுந்தனவாக இருக்கின்றன- கள்ளச் சிரிப்புக்கான காரணங்களைப் போல, எழுத்தாளனையும் வாசகனையும் இன்னமும் நெருங்கி வரச் செய்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு கதைதான் நான் அண்மையில் படித்த வெறுமை என்ற சிறுகதை. இரு வேறு காலகட்டங்களைப் பேசுகிறது, இந்தக் கதை. இதில் சொல்லப்படாத விஷயங்கள் எவ்வளவு தீவிரமான உணர்வுகளை நம் உள்ளத்தில் எழுப்புகிறது பாருங்கள்.

25/3/11

வைதலே வாழ்த்தாய்....

ரெபேக்கா வெஸ்ட் எழுதிய எந்தப் புத்தகத்தையும் நான் இதுவரை படித்ததில்லை என்று ஒப்புக் கொள்ள வெட்கப்படுகிறேன். அவர் ஒரு முக்கியமான சிந்தனையாளராம். "ரெபேக்கா வெஸ்ட் பேராளுமைகளில் ஒருவர், ஆங்கில இலக்கியத்தில் அவருக்கு நீங்கா இடம் உண்டு. அவரை விட அட்டகாசமான நடையில் யாரும் எழுதியதில்லை, அவரளவுக்கு புத்திசாலித்தனமாகவும் எழுதியதில்லை, மனித இயல்பின் சிக்கல்களையும் இவ்வுலகத்தின் போக்கையும் அவரளவுக்கு நுட்பமாக கவனித்தவர்களும் கிடையாது," என்று அவரது சமகாலத்தில் வாழ்ந்தவரான த ந்யூ யார்க்கரின் பதிப்பாசிரியர் வில்லியம் ஷான் சொல்லியிருக்கிறாராம், விக்கிபீடியாவில் போட்டிருக்கிறார்கள்.


இன்று யதேச்சையாக அவரைப் பற்றிய ஒரு குறிப்பைப் படித்தேன். அதற்கு முன்னுரையாக என்ன எழுதலாமென்று தேடியபோது விக்கிபீடியாவில் இந்தத் தகவல் கிடைத்தது: ரெபக்கா வெஸ்ட் ஹெச் ஜி வெல்ஸ் எழுதிய "திருமணம்" என்ற நாவலைக் கடுமையாக விமரிசித்தாராம். அதைப் படித்துவிட்டு ஹெச் ஜி வெல்ஸ் அவரை லஞ்ச்சுக்கு அழைத்திருக்கிறார். இருவரும் அதையடுத்த பத்தாண்டுகள் தொடர்பில் இருந்தனராம். கண்டனங்கள் காழ்ப்பாக இருக்க வேண்டுமென்பதில்லை- எதிர்ப்பு எதிரிகளை உருவாக்க வேண்டியதில்லை. ஒரு கடும் விமரிசனம் புரிதலில் பிறந்திருக்காவிட்டாலும் புரிதலில் முடியக் கூடும்.


நம்மை வன்மையாகக் கண்டிப்பவர்கள் நம் அன்புக்குரியவர்களாக இல்லாதிருக்கலாம், ஆனால் அவர்களும் நம் நன்றிக்குரியவர்களே- அவர்கள் சொல்வதில் நியாயம் இருந்தால்.


-----


"சிறிது நேரம் நிதானமாக யோசித்தாலே போதும், வசவே விமரிசனம் என்ற ஒரு புதிய பாணியை நிறுவுவதே  நம் கடமை என்பது நமக்குத் தெரிய வரும்," என்று சொல்கிறார் ரெபேக்கா வெஸ்ட், தன் கட்டுரையில்


அவர் ஏன் வசவே விமரிசனமாக வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் சொல்கிறார், நீங்கள் அந்தக் கட்டுரையைப் படித்துப் பார்க்க வேண்டும்- இந்தப் பத்தியை மட்டும் மொழி பெயர்க்கிறேன்:
"... ஆனால் நம்முன் நிற்கும் அனைத்தையும்விட ஒரு சீரியசான கடமை நமக்கு இருக்கிறது. நாம் நம் ஜீனியஸ்கள் சொல்வதை அவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் அணுக வேண்டும் என்பதே அது. முன்னெப்போதையும் விட இப்போது விமரிசனம் முக்கியமானதாக உள்ளது, மிகுந்த அகம்பாவம் கொண்டவர்களாக  இப்போதுள்ள நம் மாபெரும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கை முழுமையையும் தங்கள் களமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். முன்பெல்லாம் அவர்கள் தம் வாசிப்பறைகளில் உட்கார்ந்திருப்பார்கள். மானுடத்தின் உணர்வு சார்ந்த உலகை மட்டுமே அவதானித்திருந்தார்கள்- வாழ்வின் வடிவை விட வண்ணத்தை மற்றவர்களை விட சௌகரியமான இடத்திலிருந்து சிந்திந்தார்கள். சாவதற்குள் இருபதோ முப்பதோ கதைகள் இட்டுக் கட்டினார்கள். இப்போது காலம் மட்டும் அசையாது நின்றால் வாழ்வனைத்தையும் விளக்கி விடலாம் என்ற மமதை மிகுந்தவர்களாகி விட்டார்கள்- உலகைச் சுற்றி தலைதெறிக்க ஓடத் துவங்கி இருக்கிறார்கள் இவர்கள். எந்த நிகழ்வுக்கும் நிதானிப்பதில்லை, போகிற போக்கில் அவற்றைப் பார்த்ததும் தங்கள் மனதுக்குத் தோன்றியபடி சத்தம் போட்டுக் கொண்டு நாலு கால் பாய்ச்சலில் தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள். அவர்களுக்கு இருக்கிற அவசரத்தில் சில சமயம் குழப்பமான ஒரு காட்சியை அவர்கள் காண நேர்கிறது. எந்த துல்லியமும் இல்லாத ஒரு முரட்டு தோற்றத்தைத் தங்கள் வாசகர்களுக்குத் தருகிறார்கள். கணித மேதை கெல்வின் செய்த பிழைகளைத் திருத்துவதை அவரது மாணவர்கள் கடமையாக வைத்திருந்ததைப் போலவே நம் மாபெரும் எழுத்தாளர்களின் இந்த அவசரத்தைக் கண்டனம் செய்வதும் விமரிசகர்களின் கடமையாகிறது. இல்லாவிட்டால் தன்னைச் சுற்றியுள்ள அறிவுச் சூழலின் வலிமையை இவர்களது குழப்பக் காட்சிகள் குன்றச் செய்து விடும். இவர்களது முழுமையடையாத ஆக்கங்கள் இந்த பூமியில் ஜீனியசுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேறாமல் தடுத்து விடும்."
கர்வம் பிடித்தவர்களைக் கடுமையாக விமரிசனம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் சரிதான், ஆனால் அதற்காக ஏன் அவர் வசவே விமரிசனமாக வேண்டும் என்று சொல்கிறார், தெரியவில்லை. அவருக்கென்ன, பெண்ணாய்ப் பிறந்த அதிர்ஷ்டசாலி. ஒரு அளவுக்கு மேல அவரை யாரும் கடுமையாக வைய மாட்டார்கள். ஆண் எழுத்தாளர்கள் படும் பாடு அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது, இல்லையா? :)


எது எப்படியோ, ரெபேக்கா வெஸ்ட் சொல்லியிருப்பன சிந்திக்கத் தூண்டும் விஷயங்கள். இதை எல்லாம் இவர் 1914ல் சொல்லியிருக்கிறார் என்பது ஒரு பெரிய ஆச்சரியம்- ஏதோ நேற்று சொன்ன மாதிரி இருக்கிறது இது.

நம்மை வன்மையாகக் கண்டிப்பவர்கள் நம் அன்புக்குரியவர்களாக இல்லாதிருப்பினும் நம் நன்றிக்குரியவர்களே.

24/3/11

சிறுகதையின் லட்சியம்

இந்த உலகை ஒரு மணல் துகளில் காணவும்
காட்டு மலரில் சுவர்க்கத்தை அறியவும்
உள்ளங்கையில் காலமின்மையை ஏந்தவும்
ஒரு மணித் தியாளத்தில் நித்தியத்தை உணரவும்.

என்று கவிதை எழுதினார் வில்லியம் ப்ளேக்.

வாழ்க்கை கணத்துக்குக் கணம் வாழப்படுவதால், நாம் அதன் மெய்ம்மையை அறிவதானால் அது கணப்போதின் அனுபவமாகவே இருக்க வேண்டும், இல்லையா? காலத்தின் எல்லைகளை நிகழ் கணம் தன் சாத்தியங்களாக வைத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத எல்லைகளைக் கொண்ட காலமனைத்தின் ஆற்றலும் நிகழ் கணத்தில் அடக்கம். நிகழ் கணம் குறுகியதாக இருப்பினும், இதுவே நிரந்தரம், காலமின்மைக்கு நம்மை அழைத்துச் செல்லும் சன்னல். காலம் மறைத்து வைத்திருக்கும் உண்மைகளை உணர நமக்கிருக்கும் திறவுகோல்.

ஸ்டீவன் மில்ஹாசர் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? அவர் சிறுகதையையும் நாவலையும் ஒப்பிட்டு எழுதிய பழைய கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது. இரண்டில் எது சக்தி வாய்ந்தது என்று விவாதிக்கிறார் மில்ஹாசர்.

"அடங்காப் பசியுடையது நாவல், அது அனைத்தையும் விழுங்க விரும்புகிறது," என்கிறார் அவர். "நாவல் விஷயங்களை நாடுகிறது. அது மண்ணாசை பிடித்தது. அதற்கு உலகம் முழுதும் வேண்டும்." மலைகள், கடற்கரைகள், கண்டங்கள் என்று கண்ணில் கண்ட அனைத்தையும் தன் மகோன்னத அணைப்பில் இறுக்கிப் பிடிக்கத் துடிக்கிறது நாவல் என்கிறார் மில்ஹாசர்.

ஆனால் அவர் சிறுகதைகளின் சார்பில்தான் வாதாடுகிறார்-
தன்னியல்பில் நாவல் அனைத்தையும் விளக்கித் தீர்க்க வல்லது; ஆனால் இந்த உலகை விளக்கி மாளாது; எனவே பாஸ்டிய தேடலில் உள்ள நாவல், தன் ஆவலை என்றும் அடைய முடியாது. மாறாக சிறுகதையின் இயல்பு தேர்ந்தெடுக்கும் தன்மை கொண்டது. ஏறத்தாழ அனைத்தையும் விலக்கி வைப்பதால், அது எஞ்சியிருப்பதற்கு நிறைவான வடிவம் தர முடியும். நாவலுக்கில்லாத ஒரு வகை முழுமை தனக்கு உள்ளதென்று சிறுகதை உரிமை கோரவும் முடியும்- தன் முதல் புரட்சிகர மறுதலிப்புக்குப் பின் மிச்சம் இருப்பது அத்தனையயும் தான் ஏற்றுக் கொள்ள முடியும்.
மில்ஹாசர் சொல்வது இன்னும் அழகாகத் தொடர்கிறது-
.. சிறுகதை தன் சிறு மணல் துகளில் தன் முழு கவனத்தையும் குவித்து வைத்திருக்கிறது. அங்கே, அந்த இடத்திலேயே, தன் உள்ளங்கையில் உலகம் இருக்கிறது என்று உக்கிரமாக நம்புகிறது. தன் காதலியின் முகத்தை அறிந்தடைய விரும்புகிற காதலனைப் போல அந்த மணற்துகளை அது அறிய நாடுகிறது. சிறுகதை அந்த மணல் துகள் தன் மெய்யியல்பை வெளிப்படுத்தும் கணத்துக்காகக் காத்திருக்கிறது. அந்த அமானுட விரிதலின் கணத்துக்காக, சின்னஞ்சிறு வித்திலிருந்து மாபெரும் மலர் வெடிக்கும் தருணத்துக்காக, சிறுகதை காத்திருக்கிறது. அந்த கணத்தில்தான் சிறுகதை தன் ஆற்றலை அறிகிறது. அது தன்னினும் பெரிதாகிறது. அது நாவலைவிடவும் பெரிதாகிறது. அது இந்தப் பேரண்டத்துக்கிணையான உருவம் கொள்கிறது. இங்குதான் இருக்கிறது சிறுகதையின் அடக்கமின்மை, அதன் ரகசியத் தாக்குதல். திறப்பே அதன் நெறி. எளிமையே அதன் ஆற்றலின் கருவி.
பாதி தூக்கக்கலக்கத்தில் இதை எழுதுவதால் சரியாக வரவில்லை. ந்யூ யார்க் டைம்ஸில் படித்துக் கொள்ளுங்கள், தவற விடக் கூடாத இந்தக் கட்டுரையை.

23/3/11

சாகப் போகிறவனுக்கான கதைகள் - புனைவும் வாழ்வும்

இந்த ப்ளாகில் நான் ஏன் எழுதிக் கொண்டிருக்கிறேன்? திடீரென்று இலக்கியப் பைத்தியம் பீரிட்டு எழுந்து விட்டதா? அப்படிதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது இந்தப் பழைய பதிவுகளைப் படித்துப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது என்றால், ஏதோ ஒரு கட்டத்தில் எனக்கு இலக்கியம் என்பது அல்ஜீப்ரா இல்லை- வெறும் கலை இல்லை, அது வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது என்று தோன்றியிருக்கிறது. அதற்குக் காரணம் ஜெயமோகன் எழுதிய அறம் கதைகள் என்பதை இப்போதே சொல்லி விடுகிறேன்.

அவை நல்ல கதைகளா குப்பை கதைகளா என்ற விவாதத்தை எல்லாம் விட்டு விடுவோம்- காலம்தான் பதில் சொல்ல முடியும். எனக்கு இது குறித்து ஒரு அபிப்பிராயம் இருக்கிறது- அதற்கென்று ஒரு தளமும் இருக்கிறது, அதனால் அது இங்கே வேண்டாம்.

என்ன சொல்ல வந்தேனென்றால் இங்கு தேர்ந்தெடுத்து செய்திருக்கிற பதிவுகளில் பெரும்பாலானவை ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையையும் இலக்கியத்தையும் இணைத்துப் பேசுகின்றன. எனக்கு இந்த இணைப்பை உறுதி செய்து கொள்ள வேண்டியது இப்போதையத் தேவையாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இதை எப்படி சொல்லலாம்?

நீங்கள் கலை என்றால் இன்னது என்று ஒரு சட்டகம் வடிவமைத்து வைத்திருக்கிறீர்கள். படிப்பது எல்லாவற்றையும் அந்த சட்டகத்தில் பொருத்தி பார்த்து எல்லாம் சரியாக இருக்கிறதா, நல்ல கதை, இல்லையா- கதை நன்றாக வரவில்லை, என்று எழுத்தை ஒரு கலையாகவே அணுகி வருகிறீர்கள்.

இப்போது ஓரிரு கதைகள் அந்த சட்டகத்தில் பொருந்த மாட்டேனென்கிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்வீர்கள்? கதைகளை நிராகரிப்பீர்களா இல்லை சட்டகத்தின் வடிவத்தை மாற்றிக் கொள்வீர்களா?

ஒரு கதை வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது என்று உங்களுக்குத் தோன்றினால், கதையின் சாரம் உங்களுக்குப் பிடிபட்டுவிட்டது என்று பொருள். அனைத்து கதைகளின் சாரமும் வாழ்க்கைதானே? ஒரு பொய்யான உலகை முன்னிறுத்துகிறதா, இல்லை மெய்யான ஒன்றை முன்னிறுத்துகிறதா, எதை ஏற்க வேண்டும், எதை மறுக்க வேண்டும் என்பதெல்லாம் சட்டகப் பார்வை.

என் வாழ்க்கை பொய்கள் நிறைந்ததாக இருக்கலாம். அகங்காரம் மிகுந்ததாக இருக்கலாம். கழிவிரக்கத்தால் அல்லது போரடிப்பதால் எனக்கு இந்த உலகம் தாள முடியாததாக இருக்கலாம். எத்தனையோ காரணங்கள். இப்படிப்பட்ட என் வாழ்வில் நான் அறிந்த உண்மைகளை, அவை கருத்து மயக்கங்களாகவே இருந்தாலும், நினைவுறுத்தி ஒரு கதை எப்போது என் அனுபவமாக, வாழ்க்கைக்குரிய அத்தனை உணர்ச்சிகளோடும் என் வாழ்வை வெளிச்சமிட்டுக் காட்டும் மெய்ம்மை கொண்டதாக வெளிப்படுகிறதோ, அந்தக் கதை ஒரு அனுபவமாகி விட்டதால், என் உணர்வுகளோடு ஒன்றி விட்டதால், என் வாழ்வில் நிகழ்ந்த ஒன்றாகி விடுகிறது.

முதலில் வேறு என்னவாகவோ இருந்த ஹெட்டரை "புனைவின் வேர்கள் நினைவில், நினைவின் வேர்கள் புனைவில்," என்று மாற்றியதும் இதை நினைத்துதான். புனைவு ஏதோ ஒரு இடத்தில் வாழ்வைத் தொடுகிறது, நம் நிஜ வாழ்வு எவ்வளவு நிஜமாக இருந்தாலும் அதில் எவ்வளவோ புனைவுகள் இருக்கின்றன: நினைவே ஒரு புனைவுதானே- அதில் எவ்வளவு பொய்யாக இருந்தாலென்ன எவ்வளவு மெய்யாக இருந்தாலென்ன!

பொய்கள் ஒரு போதும் உண்மையைச் சுட்ட முடியாது என்று சொன்னால் ஒன்றும் செய்வதற்கில்லை- கதை எழுதுவதையும் படிப்பதையும் தடை செய்துவிட்டு அகராதியை மனப்பாடம் செய்ய வேண்டியதே சரி. அதிலும் ஒரு ஆபத்து இருக்கிறது: சொற்கள் தனித்திருக்கும் வரையில் அவற்றை நம்பலாம், அவை ஒன்று சேர்ந்து ஒரு வாக்கியமாகி விட்டாலோ, அப்போது அவை எவ்வளவுக்குப் பேசுகிறதோ, அவ்வளவுக்கும் மௌனமாக இருக்கிறது. எவ்வளவுக்கு வெளிப்படுத்துகிறதோ, அவ்வளவுக்கு மறைத்து வைக்கிறது: நினைவின் வேர்களே புனைவில். ஒன்றும் பண்ண முடியாது.

இந்த 'உண்மை' என்னைத் தொல்லை செய்வதால்தான் புனைவின் ஆக்கத்திலும் அமைப்பிலும் உண்மையின் வெளிச்சத்தைப் பார்க்க விரும்புகிறேன் என்று நினைக்கிறேன். புனைவுகளை வாழ்க்கையோடு பிணைக்கும் விஷயங்களைப் பதிவிடத் தேர்ந்தெடுக்கிறேன் என்று தொன்றுகிறது. புனைவுக்கும் நினைவுக்கும் பெரிய வேறுபாடு இல்லை- நம் அனுபவ வெளிச்சத்தில்தான் இவை மெய்யெனப் பிரகாசிக்கின்றன.

-------------------------------

இந்தப் பதிவின் விஷயத்துக்கு வருவோம். ராபர்டோ பாலானோ என்றொரு பெரிய எழுத்தாளர். இவரைப் பற்றிய விவரமெல்லாம் விக்கிப்பீடியாவில் இருக்கிறது, பார்த்துக் கொள்ளுங்கள்,

இவர் எழுதிய ஒரு புத்தகம் வரப போகிறதாம்- அதிலிருந்து சில பகுதிகளை த ந்யூ யார்க் ரிவ்யூ ஆப் புக்ஸ் என்ற தளத்தில் போட்டிருக்கிறார்கள், நான் சில பத்திகளை மட்டும் பெயர்த்தெடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

துணிந்தவர் உண்டோ- 
                     -ராபர்டோ பொலானோ.

நான் அங்கு சென்ற புத்தகக் கடைகளில் எனக்கு நன்றாக நினைவிருப்பது புத்தகம் விற்பவர்களின் கண்கள்தான். அவை சில சமயம் தூக்கில் போடப்பட்டவனது கண்களைப் போலிருந்தன. சில சமயம் உறக்கம் போன்ற ஒரு திரையால் மூடப்பட்டிருந்தன. அதற்கான காரணம் வேறொன்று என்பது இப்போது எனக்குத் தெரியும். அங்கிருந்ததைவிடத் தனிமை கூடிய புத்தகக் கடைகளை நான் எங்கும் பார்த்ததாக நினைவில்லை. சான்டியாகோவில் நான் புத்தகமெதுவும் திருடவில்லை. அவை மலிவாகவே கிடைத்தன, நான் அவற்றை காசு கொடுத்தே வாங்கினேன். அங்கு கடைசியாகச் சென்ற புத்தகக் கடையில், பழைய பிரஞ்சு நாவல்களை அடுக்கி வைத்திருந்த வரிசையை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, நாற்பது வயது மதிக்கத்தக்க உயரமான ஒல்லியான அந்த புத்தகக் கடைக்காரர்,  மரண தண்டனை விதிக்கப்பட்டவனுக்குத் தன் புத்தகங்களையே பரிந்துரைக்கிற வேலையை ஒரு எழுத்தாளன் செய்வதை சரியென்று நான் நினைக்கிறேனா என்று திடீரென்று என்னிடம் கேட்டார்.

அந்தக் கடைக்காரர் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார், முழங்கை வரை மடித்து விடப்பட்டிருந்த வெண்ணிற சட்டையை அணிந்திருந்தார். அவரது தொண்டைக்குழியில் இருந்த எலும்பு அவர் பேசும்போது நடுங்கியது. அது சரியான செயலாகத் தோன்றவில்லை என்று நான் சொன்னேன். நாம்  மரண தண்டனை விதிக்கப்பட்ட யாரைப் பற்றிப் பேசுகிறோம்?, என்று நான் கேட்டேன். புத்தகக் கடைக்காரர் என்னைப் பார்த்து, சாகக் கிடக்கிறவனிடம் நிச்சயம் தன் புத்தகங்களையே பரிந்துரைக்ககூடிய ஒன்றுக்கும் மேற்பட்ட நாவலாசிரியர்களைத் தனக்குத் தெரியும் என்று சொன்னார். அப்புறம் சொன்னார், தான் பேசிக்கொண்டிருப்பது வாழ்க்கையின் விளிம்புக்கே போய் விட்ட வாசகர்களைப் பற்றியென்று. எனக்கு இது பற்றியெல்லாம் தீர்மானிக்கிற தகுதி கிடையாது, என்றார் அவர், ஆனால் நான் அதை செய்யாவிட்டால் வேறு யாரும் செய்யப்போவதில்லை.

மரண தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு எந்த புத்தகம் கொடுப்பாய் என்று அவர் என்னிடம் கேட்டார். எனக்குத் தெரியவில்லை என்று நான் சொன்னேன். எனக்கும் தெரியவில்லை என்றார் அந்தப் புத்தகக் கடைக்காரர், இது வருத்தப்பட வேண்டிய விஷயம். எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள் எந்தப் புத்தகத்தைப் படிப்பார்கள்? அவர்களுக்கு எந்தப் புத்தகங்கள் பிடிக்கும்? சாகப் போகிறவனின் வாசிப்பறையை உன்னால் எப்படி நினைத்துப் பார்க்க முடியும்?, என்றெல்லாம் அவர் கேட்டார். ஒன்றுமே தோன்றவில்லை, என்று நான் சொன்னேன். நீ இள வயதுக்காரன், எனக்கு நீ இப்படி சொல்வது ஆச்சரியமாக இல்லை என்றார் அவர். பிறகு சொன்னார்: அது அன்டார்டிகாவைப் போல. வட துருவம் போலல்ல, அன்டார்டிகா. எனக்கு (எட்கர் ஆலன் போவின்) ஆர்தர் கார்டன் பிம்முடைய கடைசி நாட்கள் நினைவுக்கு வந்தன, ஆனால் எதுவும் பேசக் கூடாதென்று நான் முடிவு செய்தேன். பார்ப்போம், என்றார் அந்தப் புத்தகக் கடைக்காரர், மரண தண்டனை விதிக்கப்பட்டவனின் மடியில் இந்த நாவலைப் போடும் துணிச்சல் எவனுக்கு இருக்கிறது? நன்றாக விற்பனையாகிக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து ஒரு குவியலில் வீசினார் அவர். நான் அவருக்குக் காசு தந்துவிட்டு வெளியேறினேன். நான் போகத் திரும்பும்போது அந்தப் புத்தகக் கடைக்காரர் சிரிக்கவோ அழவோ செய்திருக்கலாம். ஆனால் நான் வெளியே இறங்குகையில் அவர் சொல்லியது மட்டும் என் காதில் விழுந்தது: இப்படியொரு காரியத்தைச் செய்யும் துணிச்சல் திமிர் பிடித்த, தப்பாய்ப் பிறந்தவன் எவனுக்கு இருக்கும்? அதன்பின் அவர் வேறேதோ சொன்னார், அது என்ன என்பதை என்னால் கேட்க முடியவில்லை.

20/3/11

துயருக்கில்லை மருந்து

ஜூலியன் பார்ன்ஸ் (Julian Barnes) இழப்பையும் மரணத்தையும் குறித்த தன் இருண்ட சிந்தனைகளாய் "அஞ்சுவதற்கில்லை" (Nothing to be Frightened of) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். கூர்மையான நகைச்சுவையுடன் எழுதப்பட்டிருந்தாலும் அது ஒரு துயர்கூடிய புத்தகமாகவே என் நினைவில் இருக்கிறது.

ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் தன் விதவத்துவம் குறித்து எழுதிய புத்தகத்துக்கு நூலுரை எழுத அவரைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது. ந்யூ யார்க் ரிவ்யூ ஆப் புக்ஸ்சில் அவரது நூலுரை மிக அருமையாகத் துவங்குகிறது-
"துயரத்தை ஆற்றுப்படுத்தத்தக்க முறைகள்" என்ற தன் கட்டுரையில் டாக்டர் ஜான்சன் மனித உணர்ச்சிகளில் துக்கத்துக்குள்ள அச்சுறுத்தும் தனித்தன்மையை அடையாளம் காட்டுகிறார். புண்ணியமோ பாபமோ, சாமானிய ஆசைகள் தமக்குள் தத்தமது நிறைவுக்கான வாய்ப்புகளைப் பேச்சளவிலேனும் வைத்திருக்கின்றன. 
தனது இதயத்தை விளிம்பு வரை நிறைக்கத்தக்க ஒரு குறிப்பிட்ட தொகை உள்ளதென்று கருமி மீண்டும் மீண்டும் கற்பனை செய்தி கொள்வான்; பிர்ரஸ் மன்னனைப் போல, வெற்றி பெறத் தவிக்கும் எந்தவொரு மனிதனும் தன் பாடுகள் முடிவடைதலை தன் உள்ளத்தில் பாதுகாத்து வைத்திருப்பான், அதன் பின் தன் வாழ்வின் மிச்ச நாட்களை சுகமாகவோ ஆனந்தமாகவோ, அமைதியாகவோ துதிப்பாகவோ தான் கழிக்க முடியுமென்று நம்புவான்.
ஆனால், துக்கம், "துயரம்,' வேறு வகைப்பட்டது. வலிமேவும் உணர்ச்சிகள்- அச்சம், பொறாமை, கோபம்- இவற்றுக்கும் இயற்கை ஒரு தீர்வை வைத்திருக்கிறது, அத்தீர்வோடு உளைச்சல் முடிவுக்கு வருகிறது.
ஆனால் துயரத்துக்கு இயற்கை மருந்தெதுவும் படைக்கவில்லை; அது பெரும்பாலும் சரி செய்யப்பட முடியாத விபத்துக்களால் நேர்கிறது, தொலைந்த அல்லது உருக்குலைந்தனவற்றைத் தொக்கி நிற்கிறது; அது நம்ப முடியாததை நாடி நிற்கிறது, அண்ட விதிகள் மாற்றப்பட வேண்டும்; இறந்தவர்கள் திரும்ப வேண்டும், அல்லது கடந்த காலம் திரும்பப் பெறப்பட வேண்டும்.

படித்துப் பாருங்கள். ஜூலியன் பார்ன்ஸ் எவ்வளவு அழகாக எழுதுகிறார்... 

19/3/11

இலக்கியமும் மருத்துவமும்

"ஒரு எழுத்தாளனாக நான் மருத்துவனின் வேலையை செய்திருக்கிறேன், ஒரு மருத்துவனாக எழுத்தாளனின் வேலையை செய்திருக்கிறேன்; பிறந்த இடத்தை விட்டு அரை மைல் கூட அப்பாலில்லாத இடத்தில் அறுபத்தெட்டு ஆண்டுகளாக சம்பவங்கள் அதிகமில்லாத சாதாரண வாழ்க்கை வாழ்ந்து ஒரு எழுத்தாளனாகவும் மருத்துவனாகவும் இந்த என் வேலையை நான் செய்திருக்கிறேன்" என்று சொல்கிற வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் தன் எழுத்து முறை பற்றி இப்படி சொல்கிறார்-
"ஐந்து நிமிடங்களோ பத்து நிமிடங்களோ அது எப்போதும் கிடைக்கும். நான் என் ஆபிஸ் டெஸ்கில் டைப்ரைட்டர் வைத்திருந்தேன். செருகியிருந்த காகிதத்தை இழுத்து விட்டால் போதும், எழுதத் தயார்- அவ்வளவே எனக்குத் தேவையாக இருந்தது. நான் மிக வேகமாக வேலை செய்வதை வழக்கமாக வைத்திருந்தேன். வாக்கியத்தின் மத்தியில் இருக்கும்போது ஒரு நோயாளி கதவைத் திறந்து கொண்டு வந்தால் என் மெஷின் தடால் என்று மூடப்படும்- நான் இப்போது ஒரு மருத்துவன். நோயாளி போனதும், மெஷின் வெளியே வரும். என் புத்தி ஒரு உத்தியை வளர்த்துக் கொண்டது: எனக்குள் வளரும் ஏதோ ஒன்று தன்னை அறுவடை செய்ய வேண்டுமென நிர்பந்தித்தது. அதை நான் கவனித்தேயாக வேண்டியதாக இருந்தது. கடைசியில், இரவு பதினோரு மணிக்குப் பின், என் கடைசி நோயாளியும் உறங்கப் போனதும், என்னால் எப்போதும் பத்து பன்னிரெண்டு பக்கங்களை அடித்துப் போடத் தேவையான அவகாசம் காண முடிந்தது. உண்மையைச் சொல்வதானால் என்னை நாளெல்லாம் துளைத்து சித்திரவதை செய்து கொண்டிருந்த தீவிர எண்ணங்களில் இருந்து என் மனதை விடுவித்துக் கொள்ளாமல் என்னால் ஓய முடியவில்லை. அந்த வதையிலிருந்து சுத்திகரிக்கப்பட்டவனாய், கிறுக்கி முடித்ததும், எனக்கு ஒழிவு கிடைத்தது.
வில்லியம் கார்லோஸ் வில்லியம்சை எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கொண்டாடுவதில் நான் பெருமை கொள்கிறேன்.

--------------

இலக்கியம் எவ்வளவுதான் புனிதமானதாக இருக்கட்டுமே, அது கண்ணில்லாதவர்களுக்கு வண்ணங்களையும், காது கேளாதவர்களுக்கு இசையையும், பேச வராதவர்களுக்கு குரலையும், கல் நெஞ்சர்களைக் கனிவித்து அவர்களுக்குக் கருணையையும்தான் கொடுக்கட்டும்: இலக்கியவாதிகள் ஆண்டவனால் ஆகாத அதிசயங்களையும் நிகழ்த்திக் காட்டட்டும்- அதனாலெல்லாம் அவர்கள் மருத்துவர்களை விட உயர்ந்தவர்கள் ஆகி விடுவார்களா என்ன? உலகை உய்விக்க வந்த தோரணைதான் என்ன, சிறுமை கண்டு பொங்கல் படைக்கிற சாகசம்தான் என்ன!: எழுத்தை மறைத்துப் பார்த்தால் பெரும்பாலான எழுத்தாளர்கள் சிறுமைகளால் வீணாய்ப் போன அற்பர்களாக மட்டுமே அறியப்படுவார்கள் என்று நினைக்கிறேன்.

நான் ஏன் இப்படி உளறுகிறேன்?

இந்த மருத்துவர் சொல்வதைக் கேளுங்கள்- ஐந்து நிமிடங்கள்தான் பேசுகிறார். ஆனால் எந்த இலக்கியவாதியாலும் எளிதில் தொட முடியாத புள்ளியைத் தொடுகிறார்: அவர் தன் தொழிலில் மிக முக்கியமான விஷயமாக எதை நம்புகிறார் தெரியுமா? தன் நோயாளியின் படுக்கைக்குப் போய் அவனுக்குப் போர்த்து விடுவதைத்தான். உனக்குப் போர்வை கொண்டு வரட்டுமா, உன்னை போர்த்து விடட்டுமா என்றெல்லாம் கேட்கும்போது நான் அவனது நலனை நாடுகிறேன், அவனுக்கு சுகமளிக்க முனைகிறேன் என்ற நிலையில் அவனது உள்ளத்தைத் தொடுகிறேன். இந்த ஆற்றுப்படுதலே மருத்துவனின் முக்கிய கடமை என்று நான் நம்புகிறேன், என்கிறார் டாக்டர் டேவிட் அடினாரோ.

அவசர சிகிச்சை கொடுக்கும் மருத்துவன் தன் நோயாளியை கொஞ்சம் நன்றாக உணரச் செய்ய வேண்டும், அந்த சமயத்தில் மோசமான எதுவும் நடந்து விடாதபடிக்கு அவனை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும், அவனது நோய்க்குறிகளுக்கான காரணங்களை அவனுக்கு விளக்க வேண்டும் என்று சொல்கிறார் டாக்டர் டேவிட் அடினாரோ- இவையே அவனது கடமைகள்.

இலக்கியம் பற்றி பேசுகிறவர்கள் இந்த அளவுக்கு செய்தாலே பெரிய சாதனை என்று நினைக்கிறேன்.

17/3/11

சிறுகதையின் வடிவமும் குவிமையமும்

சில எழுத்தாளர்கள் தங்கள் சிறுகதை எப்படி தோற்றம் கொள்கிறது என்பதையும் அதன் வடிவமைப்பு அமையும் விதத்தையும் இங்கே விவாதித்திருக்கிறார்கள். சுவாரசியமாக இருக்கிறது.

டேனியலா ஈவான்ஸ் ஏதோ ஒன்று மாற்றம் கண்ட அல்லது மாற மறுத்த கணத்தை நோக்கி கவனம் குவிதலே சிறுகதையின் வடிவம் என்று சொல்கிறார். எந்த இடத்தில் இந்த மாற்றத்துக்கான அழுத்தம் மிகுகிறதோ அதுதான் சிறுகதையின் வடிவத்தைத் தீர்மானிக்கிறது என்று அவர் சொல்கிறார். மிக எளிமையான கருத்தாக இருந்தாலும், இது விரிவான சிந்தனைக்குரிய ஒன்றாகத் தோன்றுகிறது.

ஆலன் ஹீத்காக் நமக்குப் பழக்கப்பட்ட ஒரு கருத்தை முன் வைக்கிறார்- கதை எழுதும்போது எழுத்தாளன் பாத்திரத்தோடு ஒத்துணர்வு மிகுந்து அவனுக்கு இசைவாக- பாத்திரமாகவே மாறி- கதையை சொல்ல வேண்டும் என்று சொல்கிறார் அவர். எழுத்தாளைனின் உணர்வுகளும் கற்பனையும் பாத்திரங்களின் தன்மையைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஒரு எழுத்தாளனின் வேலை தன் கதாபாத்திரத்தின் புத்தி, கற்பனை, மனப்பாங்கு மற்றும் உணர்ச்சிகளைக் கூட்டி, அவனது வாழ்வின் நிதர்சனத்தை விவரிக்கக்கூடிய மொழியை அடைவதுதான் என்கிறார் அவர். எழுத்து என்பது அவருக்கு ஒத்திசைவு (எம்பதி) நிறைத்த இடமாக இருக்கிறது- எழுத்தாளனும் வாசகனும் இங்கு மட்டுமே இணைகிறார்கள்.

வாலரி லேகன் ஏதோ ஒரு அத்துமீறல், ஏதோ ஒரு எல்லைக் கோடு மீறப்படும் இடத்தில்தான் சிறுகதை நிற்கிறது என்று சொல்கிறார். எது அனுமதிக்கப்பட்டதாக இருக்கிறதோ, எது பழகிப் போன ஒன்றாக இருக்கிறதோ அது மீறப்படும்போது ஒரு புதிய தரிசனம் கிடைக்கிறது. இதுவே சிறுகதையின் குவிமையம் என்கிறார்.

படித்துப் பாருங்கள்.

15/3/11

இயற்கைப் பேரழிவுகள்


நாம் பார்த்த ஜப்பானிய ராட்சத திரைப்படங்களுக்கு அளவே இருக்காது- காட்ஜில்லாவில் துவங்கி எத்தனை எத்தனை விந்தை மிருகங்கள்!- இவை இன்று ஒரு கிடையாகவே (genre) மாறி விட்டன.

ந்யூ யார்க் டைம்ஸில் உலகில் வேறு எவரையும் விட ஜப்பானியர்களுக்கு ஏன் விந்தை உருவ ராட்சத மிருகங்களின் மேல் ஈர்ப்பு இருக்கிறது என்று சுவையாக எழுதியிருக்கிறார்கள். எல்லா நாடுகளும் வெவ்வேறு வகையில் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன, ஆனால் ஜப்பானியர்களின் கற்பனை மட்டும் ஏன் இந்த திசையில் விரிகிறது என்பதை சரியாக விளக்கவில்லை. வேறெங்காவது இது பற்றி விவரம் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

1954ல் அமேரிக்கா ஒரு அணு ஆயுத சோதனை செய்தது. அது எதிர்பார்த்ததைவிட ஒன்றரை மடங்கு வீரியமுள்ளதாக இருந்திருக்கிறது. தூரத்தில் கடலில் எங்கேயோ போய்க் கொண்டிருந்த ஜப்பானிய மீன்பிடி படகொன்றை அதன் கதிர் வீச்சு தாக்கவே, மீனவர்கள் உரிந்த தோளும் கதிரியக்க மீன்களுமாக கரை திரும்பியிருக்கிறார்கள். அந்த மீன்கள் சந்தையில் விற்பனையும் ஆயினவாம். இதைத் தொடர்ந்து எழுந்த பீதியில் கொஜிரா என்ற முதல் காட்ஜில்லா படம் வெளியானது- அதை அச்சமும் அழுகையுமாக ஜப்பானியர்கள் பார்த்தார்களாம்.

அதைத் தொடர்ந்து சுரங்கம் தோண்டும்போது விழித்துக்கொண்ட ரோடான் என்ற அரக்க மிருகங்கள், அணுகுண்டு சோதனையில் பிறந்த மோத்ரா, கமெரா என்ற ராட்சத கடல் ஆமை, வாரன் என்ற ராட்சத பறக்கும் அணில் என்று மனிதனின் கவனமில்லாத சேட்டைகளால் உயிர்பெற்ற இயற்கையின் சீற்றங்கள் ஜப்பானியர்களின் அச்சங்களை எதிர்கொள்ளும் புனைவுகளாய் வெற்றி பெற்றன.

கனவுகள் நம் உள்ளத்தின் உட்கிடைகளை அச்சு அசலாக வெளிப்படுத்துகின்றன என்றால் ஒரு பண்பாட்டில் வெற்றி பெரும் கலைப் படைப்புகள் அதன் அச்சங்களையும் ஆவல்களையும் பேசுகின்றன என்று கொள்ளலாம். அப்படி பார்க்கும்போது ஜப்பானின் மான்ஸ்டர் மூவிகள் தனி கவனத்துடன் பார்க்கப்பட வேண்டியவை- ஜப்பான் தன் அச்சுறுத்தல்களை ராட்சதத்தனமானவையாக, இயற்கையின் அதிபயங்கர ஆற்றல் கொண்டனவாக எதிர்கொள்கிறது.

அதற்கேற்றார் போலவே சுனாமி, அணு உலை வெடிப்பு போன்ற துயர் நிகழ்வுகளும் ஜப்பானியர்களுக்கு ஏற்படுவது வருந்தத்தக்கதே. அவர்களுக்கு நம் அனுதாபங்கள்.

14/3/11

காத்திருக்கிறது காலம்- நினைவின் பாதை

நினைவை ஒரு சுரங்கம் என்று சொல்லலாம்- நாம் நம் வாழ்க்கையில் திரட்டிய மொத்த சொத்தும் அங்கேதான் இருக்கிறது, இல்லையா? கவலைப்படும் நேரத்தில் ஆறுதலும், மனமொடிந்த நேரத்தில் நம்பிக்கையும், அஞ்சும் பொழுதில் துணிச்சலும் நாம் பெருவதானால் அதை நினைவிலிருந்தே பெற வேண்டும்.

ஆனால் நினைவு ஜடபொருளல்ல- ஊருக்கு வெளியே வாங்கி வைத்த நிலம் போலவோ நிரந்தர காப்பீட்டுத் தொகை போலவோ இல்லை அது: நினைவின் தன்மை நிலையற்றது. வங்கி லாக்கரில் வைர நகையை பதுக்கி வைத்தவன் அந்தந்த நாளின் அவசங்களுக்கேற்ப அங்கு கல்லையும் பொன்னையும் காண்பது போன்ற நிலை.

எனவே நினைவை சுரங்கம் என்று சொன்னால் அது பொன்வயலாகவே இருக்க வேண்டுமென்பதில்லை- பெரிய பெரிய மலைக்கோட்டைகளில் இருப்பதாக சொல்லப்படும் அரசர்களின் அவசர காலத்துக்கு உதவும் சுரங்கப் பாதையாகவும் இருக்கலாம்- ஒவ்வொரு நினைவும் சமகால அனுபவங்களைத் தப்ப மாற்றுப் பாதை கொண்டதாக இருக்கிறது. இந்தப் பாதையைக் கொண்டு வெளிச்சம் அடைவதும், இருட்டடிப்பு செய்வதும் அவரவர் தேர்வு.

ஏன் இதையெல்லாம் எழுதுகிறேன் என்றால் இப்போது தனி மனித வாழ்வில் தன் பிரத்யேக துக்கத்தை விவரிக்கும் சுயசரிதைகள் அதிக அளவில் வெளியாகி பரபரப்பாக விற்பனையாகின்றன என்று ஒரு கட்டுரை சொல்கிறது. இவ்வகை புத்தகங்களின் வெற்றியும் தோல்வியும் எவ்வளவுக்கு ஒளிவு மறைவு இருக்கிறது என்பதை ஒட்டிய ஒன்று என்கிறார் ஆசிரியர். அது குறித்து சில மாற்று கருத்துகள் இருக்கலாம்.

ஆனால் நிரந்தரமின்மையைக் கருத்தில் கொண்டால் வாழ்வே ஒரு பெரும் துக்கம்தான், இல்லையா? எதை நாம் இழக்காமலிருக்கப் போகிறோம்? இந்த நினைவு எழுந்ததென்றால் எவ்வளவு அழகிய அனுபவமும் இதயத்தைத் துளைக்கும் வலியைக் கொடுப்பதாகவே இருக்கும். இருக்கிறது- தன்னை மறந்து ஒரு அழகிய அனுபவத்தில் லயித்தவன் அதில் கொஞ்சம் துக்கத்தை உணராமல் இருக்க முடியாது.

"அடையும்வரை அறிய முடியாத இடமாக இருக்கிறது துக்கம். நம்மால் நிகழும் முன்னே துக்கத்தை உணர முடியாது- இங்கேதான் இருக்கிறது நாம் நினைத்துப் பார்க்கும் துக்கத்துக்கும் உள்ளபடியே துக்கத்தின் இயல்புக்கும் இடையான வேற்றுமை: தொடரும் இல்லாமையின் முடிவின்மையை, வெறுமையை, பொருளின் மறுமையை, அயராது தொடரும் பொருளற்ற கணங்களின் அனுபவத்தை நாம் எதிர்கொள்ளும் துக்கத்தை அறிவதற்கில்லை" என்கிறார் ஜோவான் டிடியன்.

இருக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரையைப் படித்தவுடன் போர்ஹே எழுதிய இந்தக் கவிதை நினைவுக்கு வந்தது- இதுவும் துக்கம்தான். ஆனால் இதில் நம்பிக்கையின் ஒளி இருக்கிறது: நினைவு இருளில் புதைந்திருக்கும் சுரங்கம் என்ற உணர்வையும் தாண்டி அது பாதையுமாகும் என்ற உணர்வே இந்தக் கவிதைக்கு வெளிச்சம் தருகிறது என்று நினைக்கிறேன்.

பலமுறை நான் என்னைக் கேட்டுக்கொண்டிருக்கின்றேன், எக்காரணங்கள்
தொட்டு நான் என் அந்திப்பொழுது சாயும்போது கற்கத் துவங்கினேன்,
நிறைவுறுமென்று குறிப்பாய் எந்தவொரு நம்பிக்கையுமில்லாமல்,
கூர்மழுங்கிய நாவுடைய ஆங்கிலோ-சாக்ஸன்களின் மொழியை.
ஆண்டுகள் ஆண்டழித்த காரணத்தால் என் நினைவின்
பிடிநழுவிப் போகின்றன நான் வீணே திரும்பத் திரும்பப்
படித்துப் பழகிய சொற்கள். அவ்வாறே என் வாழ்வும்
புனைந்து கலைக்கிறது தன களைத்த சரித்திரத்தை.
அப்போது நானே சொல்லிக் கொள்கின்றேன்: தக்கவொரு
ரகசிய வழி இருக்கக்கூடும்- ஆன்மாவுக்குத் தன்
இறவாமையை உணர, அதன் அகண்ட பராக்கிரம வட்டம்
அனைத்தையும் உட்கொள்ளும், அத்துணையும் சாதிக்கும்.
என் கவலைகளுக்கப்பால், இந்த எழுத்துக்கப்பால்
காத்திருக்கிறது காலம், வரையற்று, வரவேற்று.


(Jorge Luis Borges தன வசமிருந்த Beowulf என்ற புத்தகத்தில், “At various times I have asked myself what reasons ” என்று துவங்கும் இந்தக் கவிதையை எழுதி வைத்திருந்தாராம். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை செய்திருப்பவர் Alastair Reid.
Borges Old Englishஐ 1955ல், தனது ஐம்பதுகளின் மத்திம பருவத்தில், கற்கத் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.)

10/3/11

சிறுகதைகள் குறித்த ஒரு தொடர்

கார்டியனில் சிறுகதைகள் குறித்த ஒரு அருமையான தொடர் வருகிறது. எளிமையான நடையில் முக்கியமான அடிப்படைத் தகவல்களைத் தருகிறார்கள்- ஜேம்ஸ் ஜாய்ஸ் பற்றிய கட்டுரையைப் பாருங்கள்.

ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதி ஒரே ஒரு சிறுகதைத் தொகுப்பு மட்டும்தான் வந்திருக்கிறது- ஆனால் அவர் செகாவ் அளவுக்கு சிறுகதையின் வடிவத்தை பாதித்திருக்கிறார் என்று சொல்கிறார் கட்டுரையாசிரியர். டப்ளினர்ஸ் தொகுப்பில் ஜாய்ஸ் செய்தது இப்போதும் செய்வதற்கரிய செயலாகவே இருக்கிறது.

6/3/11

மொழிபின் வாக்கியார்த்தம்

517 பக்க நாவல்- ஒற்றை வாக்கியத்தில். கிரேக்க யுத்தத்தில் துவங்கி அண்மைக்கால யுத்தங்கள் வரை ஐரோப்பாவை உலுக்கிய போர்களின் நினைவுகள், ரயிலில் பயணிக்கும் ஒருவனின் மனதில். போர் மனிதனின் தவிர்க்க முடியாத நிழலாக நீண்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டால், அவன் வரலாறு ஒற்றை வாக்கியத்தில் எழுதப்படுவதைக் குறை சொல்ல முடியாதுதானே?

சிசிலியின் மரணத் தீவில் லவ்ரியும் அவன் மனைவியும் எட்டு நரக ஆண்டுகளை அவர்களுடைய இரண்டாவது எரிமலையின் நிழலில் வாழ்ந்தார்கள், ஒவ்வொரு நாளும் கிராமத்தினர் மால்கமைத் தங்கள் முதுகில் சுமந்து வீட்டுக்குக் கொண்டு சேர்க்க வேண்டியிருந்தது, அவனை மீனவர்கள் விடியல் பொழுதில் ஒரு சாலையில் கண்டெடுத்தார்கள், உயர்ந்தெழும் சரிவும் உறக்கமும் அவனை தோற்கடித்திருந்தன, அவன் மயக்கத்தில் விழுந்துக் கிடந்தான், கடைசியில் பார்த்தால் நான் சைரக்யூசுக்கான ரயிலில் ஏறாதது நல்லதுக்குதான், அவனை சிசிலிய இரவில் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பேன், சாராய புட்டியோடும் என் காட்டுமிராண்டித்தனத்தோடுமான போராட்டத்தில்- நான் என் இளம் வயதில் எதை உடைத்தாலும் அல்லது என் சகோதரி லேடாவைப் படுத்தி எடுத்தாலும், என் அப்பா, அவர் நீ ஒரு காட்டுமிராண்டி என்று என்னிடம் சொல்வார் ஆனால் என் அம்மா அவள் குறுக்கிட்டு அவரைக் கடிந்து கொள்வாள் இல்லை உன் பிள்ளை ஒரு காட்டுமிராண்டியில்லை, அவன் உன் மகன் என்று, இப்போது ஒரு உலகின் முடிவை இன்னும் நெருங்கிய நிலையில் நான் ஆச்சரியப்படுகிறேன், என் பிதா, அந்த மாபெரும் இளைத்தவர், அவர் சொன்னது சரிதானோ என்று, ரெக்கியோ, எமிலியாவின் தலைநகர், எவ்வளவு மென்மையான சொல், அதை ரயில் நெருங்குகையில் தோன்றுகிறது, நான் ஒரு காட்டுமிராண்டி, கொடூரமானவன், நாகரிகமில்லாதவன்...

ரயிலில் பயணிக்கும் நம் நாயகனின் நினைவுகள் ரயிலின் பயணம் போலவே நீண்டு செல்கிறது, மூச்சு விடாமல், தொடர்ந்து, 516 பக்கங்களுக்கு ஒற்றை வாக்கிய நாவலாய்.



"ஸோன்" என்ற Mathias Énardன் நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெருமளவில் பேசப்படத் துவங்கியுள்ளது.

இலக்கண வரைகள் இல்லாமை இந்த நாவலுக்கு ஒரு திறந்த பார்வையைத் தருகிறது. மனிதன் படைத்துப் போரிடும் மற்ற எல்லைகள் - தேசங்கள், நாடுகள், இனங்கள் என்பன போன்ற பிரிவெல்லைகள் குறித்த கதாநாயகனின் தீவிர ஒற்றைச் சிந்தனைக்கு நாவலின் வடிவம் பதில் தருகிறது. அவனது மனவோட்டத்துக்கு எதிராக இந்த நாவலின் இலக்கணத்தில் மொழிகளும் எண்ணங்களும் இடங்களும் தடையின்றிப் புழங்குகின்றன.

என்று ந்யூ யார்க் டைம்ஸில் அருமையான மதிப்புரை செய்திருக்கிறார்கள். அதே போல் நரேடிவ், செண்டன்ஸ் ஆகிய இரு சொற்களும் அறிதல் மற்றும் தீர்ப்பளித்தல் ஆகிய இரு பொருளும் தருவதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். தமிழில் இப்படி சொல்ல முடியுமா என்று தெரியவில்லை - ஒரு பிரச்சினையை தெய்வ சந்நிதியில் வைக்கும்போது "வாக்கு கிடைத்துவிட்டது" என்று நாம் சொல்லும்போது தீர்ப்பாகி விட்டது என்ற பொருள் வருமென்று நினைக்கிறேன்.

வாக்கியம், மொழிபு, உரை- இவை உட்பொருளை வெளிப்படுத்துவதாகவும் அதன் தன்மை குறித்து மறை தீர்ப்புகளைத் தம்முள் கொண்டு தீர்மானிப்பதாகவும் இருக்கின்றன என்று சொல்ல முடியும், இல்லையா?

ஒற்றை வாக்கிய புதினம் என்பது ஒரு ஸ்டண்டாக இல்லாமல், பொருள் பொதிந்த உத்தியாக இருக்கிறது என்பது வியப்பளிக்கிறது.

5/3/11

சும்மா கொடுத்தால் கோடி புண்ணியம்

கிழக்கு பதிப்பகத்தின் கிளியரன்ஸ் சேல் குறித்து சிலபல எதிர்மறை விமரிசனங்கள் இணையத்தில் எழுந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். பொதுவாக பெரும்பாலானவர்கள் பாராட்டு தெரிவித்தாலும், ஒரு சிலர் கிழக்கின் இச்செயல் குறித்த தங்கள் அவநம்பிக்கைகளையும் சந்தேகங்களையும் வெளிப்படுத்தியிருந்தனர். நானேகூட சில புத்தகங்களை கொள்ளை மலிவாக வாங்கியிருந்தாலும் இது குறித்து அதிருப்தியில்தான் இருந்தேன்.

ஆனால் இத்தகைய வணிக உத்திகள் வியாபாரத்துறையில் லாபம் தருகிறது என்று சொல்கிறார்கள். இது புத்தகங்களுக்கும் பொருந்துமா என்று சந்தேகப்பட்டேன், பொருந்தும் போல்தான் தெரிகிறது.

பாருங்கள், உலக புத்தக இரவை ஒட்டி இன்று இங்கிலாந்தில் தேர்ந்தெடுத்த இருபத்தைந்து புத்தகங்களின் ஒரு மில்லியன் காப்பிகளை (பத்து லட்சம் பிரதிகள் என்று நினைக்கிறேன்) இலவசமாகக் கொடுக்கிறார்கள். இருபதாயிரம் பேர் இந்த இருபத்தைந்து புத்தகங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தலைக்கு நாற்பத்தெட்டு நபர்களுக்கு இலவசமாகக் கொடுக்க இருக்கிறார்கள். எஞ்சிய புத்தகங்கள் சிறைச்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்குக் கொடுக்கப்பட இருக்கின்றன.

இதனால் இந்த 'இலவச' புத்தகங்களில் மதிப்பும் விற்பனையும் குறையும் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை.

இங்கே உள்ள செய்தியின்படி இலவசம் அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்தில் இந்த இருபத்தைந்து புத்தகங்களும் ஐம்பத்து ஆறாயிரம் பிரதிகள் கூடுதலாக விற்றிருக்கின்றன! இந்தக் கூடுதல் விற்பனை ஓரிரு புத்தகங்களின் விற்பனையை மட்டும் ஒட்டி நிகழ்ந்ததல்ல, பரவலாக பதினாறு புத்தகங்கள் கூடுதல் விற்பனை கண்டிருக்கின்றன.

நல்ல செய்திதானே?

போன வாரம் இந்த மாதிரி ஒரு அமெரிக்க எழுத்தாளரின் இரண்டாவது புத்தகம் சரியாக விற்பனையாகாததால் அதன் பதிப்பாளர் நாவலின் பிரதிகளை இலவசமாக விநியோகம் செய்ய முடிவு செய்திருப்பதாக செய்தி ஒன்று படித்து அதிர்ந்தேன். அவர் கூறிய காரணம் என்னவென்றால், அந்த ஆசிரியர் எழுதிய முதல் புத்தகம் விமரிசகர்களால் பாராட்டப்பட்டு நல்ல விற்பனை கண்டது, இந்தப் புத்தகமும் சிறப்பாக இருந்தாலும் எந்த காரணத்தாலோ விமரிசகர்களால் கவனிக்கப்படவில்லை, அதனால் புத்தகங்கள் படிக்கப்படாமல் போய் விடக்கூடாது என்ற அக்கறையேயாகும். துரதிருஷ்டவசமாக நான் இந்த செய்தியை எங்கு படித்தேன் என்று குறித்து வைத்துக்கொள்ள மறந்துவிட்டேன்.

இந்த செய்தியைப் பார்த்ததும் அவர் செய்தது சரிதான் என்று தோன்றுகிறது. கிழக்கு பதிப்பகம் செய்ததும் புத்திசாலித்தனமான காரியம் என்ற எண்ணம் எழுகிறது.

சில சுட்டிகள்-




அண்மையில் சொல்வனம் இணைய இதழில் Half of a Yellow Sun என்ற நாவலை ஏழுதிய Chimamanda Ngozi Adichie அவர்களின் பேட்டி ஒன்றைப் படித்திருப்பீர்கள். அந்தப் புத்தகம் தற்போது இலவசமாகக் கொடுக்கப்படும் இருபத்தைந்து புத்தகங்களின் பட்டியலில் இருக்கிறது. இதன் பிடிஎப் கோப்பை World Book Night தளத்தின் இந்த பக்கத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

4/3/11

நிகழ்கலையின் நிழலுருவங்கள்

நான் இந்தக் கட்டுரையை விரும்பிப் படித்தேன்- சில முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றார் ஆசிரியர்-
இந்தக் கதையைப் பாருங்கள்: நடுத்தர வயதான ஒரு நாகரிக மனிதர் தன்னைப் பித்தாக்கிய காதலை (amour fou) நினைத்துப் பார்க்கிறார். அவரது வெளிநாட்டுப் பயணங்களில் ஓரு வீட்டில் அறை எடுத்துத் தங்கும்போது ஆரம்பிக்கிறது அவரது கதை. அந்த வீட்டுகாரர்களின் மகளைக் கண்டதும் அவர் தன்னை இழக்கிறார். அவள் பதின்ம வயதுகளையும் அடையாதவள், அவளது ஈர்ப்புகளுக்கு அவர் அக்கணமே அடிமையாகிறார். அவளது வயது குறித்து பயப்படாமல் அவர் அவளோடு நெருங்கிப் பழகுகிறார். முடிவில் அவள் இறக்கிறாள். கதை சொல்லி என்றென்றும் அவள் நினைவுக்குரியவராய்- தனித்திருக்கிறார். அந்தப் பெண்ணின் பெயர் அவரது கதையின் தலைப்பாகிறது : லோலிடா ( Lolita).

நான் விவரித்துள்ள கதையின் ஆசிரியர், ஹீன்ஸ் வோன் லிச்பர்க் (Heinz von Lichberg) தன் லோலிடாவின் கதையை 1916ல் பதிப்பித்தார். விளாடிமிர் நபகோவின் ( Vladimir Nabokov) நாவல் வெளிவருவதற்கு நாற்பது ஆண்டுகள் முன். லிச்பர்க் ஒரு பிரபல பத்திரிக்கையாளராக பின்வந்த நாஜி காலகட்டத்தில் அறியப்பட்டார், அவரது இளமைக்கால எழுத்து காணாமல் போனது. 1937 வரை பெர்லினில் இருந்த நபகோவ் லிச்பர்கின் கதையை அறிந்தே தானும் கையாண்டாரா? இல்லை முன் எழுதப்பட்ட கதை மறைந்திருந்த அறியப்படாத நினைவாக நபகோவின் மனதில் இருந்ததா? க்ரிப்டம்னீசியா ( cryptomnesia) என்றழைக்கப்படும் இத்தகைய நிகழ்வுகளுக்கு இலக்கிய வரலாற்றில் எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. மற்றொரு விளக்கம் இப்படிப் போகிறது : நபகோவுக்கு லிச்பர்கின் கதை நன்றாகவே தெரிந்திருக்கிறது, மேற்கோள் கலையில் தேர்ந்தவரான தாமன் மான் (Thomas Mann) "உயர்நிலை பிரதியாக்கம்" என்றழைத்த உத்தியை தானும் கையாள நபகோவ் முனைந்திருக்கிறார். இலக்கியம் என்பது எப்போதும் அறிந்த விஷயங்கள் வேறு வடிவம் கொண்டெழும் உலைகலனாகவே இருந்திருக்கின்றது. நாம் நபகோவின் லோலிதாவை ஏன் கொண்டாடுகிறோமோ அந்த விஷயங்களில் வெகு சிலவே முந்தைய படைப்பில் இருக்கின்றன; முந்தையதன் தழுவல் பிந்தையது என்று சொல்ல வழியில்லை. இருப்பினும்: நபகோவ் தெரிந்தே கடன் வாங்கி மேற்கோள் காட்டினாரா?
கலை எவ்வளவுக்கு தனி முயற்சி, எவ்வளவுக்கு கூட்டு முயற்சி என்பதை விவாதிக்கும் கட்டுரை. பொறுமையாகப் படித்தால் பல திறப்புகள் நிகழக்கூடும்.

3/3/11

மேகன் ஓ'ரூர்க்

சென்ற பதிவில் மேகன் ஓ'ரூர்க் (Meghan O’Rourke) அவர்களின் அஞ்சலைப் படித்திருப்பீர்கள் - தன் தாய் குறித்து அவர் எழுதிய குறிப்புகள் ந்யூ யார்க்கரில் இங்கே- 

என் அம்மா மரணமடைவதற்கு ஒரு வாரம் முன்னர் என் அப்பா ஒரு கிருஸ்துமஸ் மரத்தை வீட்டுக்குக் கொண்டு வந்தார். அதை விளக்குகளால் அலங்கரித்தார். அது என் அம்மாவின் படுக்கையிலிருந்து ஐந்தடி தொலைவில் இருந்தது. வண்ண விளக்குகளின் வெம்மையான சோபையில் அவள் வெயில் பூசிய மாநிறம் சேர்ந்தவளாயிருந்தாள்.

ஓய்வறையில் நான் “The Hound of the Baskervilles,” நாவலின் பழைய பிரதி ஒன்றை எடுத்துக் கொண்டேன். அவள் அதை நான் நான்காம் கிரேட் படிக்கும்போது எனக்கு கிருஸ்த்மஸ் பரிசாகத் தந்திருந்தாள். நான் அவள் அருகே படுத்துக்கொண்டு அதைப் படித்தேன். அவள் கண்விழிக்குமுன் நான் எழுந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. ஒரு போல் கஞ்சி (bowl of cereal) செய்வேன். ஸ்லீப்பிங் பேக்கில் நுழைந்து என்னை ஜிப் செய்து கொள்வேன். அவள் எழுந்ததும் சமையலறைக்குள் உறக்கம் கலைக்காத ஆடைகளுடன் வருவாள், "ஹி மெக்," என்றென்னை அழைப்பாள். அவளுடனான என் பிணைப்பைத் தளர்த்திக் கொள்ள முயற்சிக்கையில்தான் நான் அவள் எனக்கு இன்னும் இன்னும் வேண்டும் என்ற என் பசியை உணர்வேன். தாய் துவக்கமில்லாக் கதை. அதுவே அவள்.

ஒரு இரவு. நான் இருளில் விழிக்கையில் என் அப்பா கீழே வந்திருப்பதைக் கண்டேன். அவர் என் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது சட்டையின் பாக்கெட்டுகளில் முஷ்டியிட்டு, தோள்கள் வளைந்து நின்றார் பல நிமிடங்கள், அவளது உறங்கும் முகத்தை வெறித்திருந்தார்.

அந்த அவளது இறுதி நாட்களில் என் அம்மா மிக இளமையாகத் தோற்றமளிக்கத் துவங்கினார். அவளது முகம் அவ்வளவு எடை குறைந்திருந்தது, ஒரு குழந்தை போல் எலும்புகள் தென்பட்டன. அவளது புருவங்களும் கண்ணிமைகளும் அடர் கரும் நிறம் கொண்டன. நான் அவளது கைகளைப் பற்றி நின்றேன். அவளது முகத்தைத் தடவித் தந்தேன். அவளது சருமம் மெழுகு போல் தோற்றம் கொள்ளத் துவங்கிய நாட்கள், சிறு கரடுகள் அதில் தென்பட்டன, அவளது செதில்கள் உதிரும் காலம் போல்.

அந்த கிருஸ்துமஸ்ஸில் அவள் இறந்த போது நாங்கள் அனைவரும் அவளருகே இருந்தோம். அவள் சுவாசம் தொய்வடைந்தது, அவள் எங்களைப் பார்க்கத் தன் கண்களைத் திறந்தாள். எங்களிடம் சொல்வதற்கிருந்த விஷயங்களை நாங்கள் சொன்னோம். அவள் எங்களை நீங்கிப் போனாள்.

1/3/11

துயர் மேவும் எரிதழல்

தன் கணவரின் இழப்பு குறித்து ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் அவர்களும், தன் தாயின் இழப்பு குறித்து மேகன் ஓ'ரூர்க் அவர்களும் இவ்வாண்டு வாழ்க்கைக் குறிப்பு எழுதி அஞ்சலி செலுத்துகிறார்கள். இவர்கள் இடையே நிகழ்ந்த அஞ்சல் உரையாடலின் சில பகுதிகள்-

ஓட்ஸ்: மேகன்- நீ சொல்வது சரி என்றுதான் நானும் நினைக்கிறேன். எழுதுவதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம். ஒரு குழந்தையைப் போல் நிகழ்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறோம். நமக்கு நேர்ந்த நிகழ்வுகளால் துவண்டு போய், அவற்றைப் புரிந்து கொள்ள முடியாமல் நாம் இருக்கும் நிலையில் பேசாப் பொருளை சொல்லுக்குள் கொணர்வதால் நிகழ்வுகளை ஏதோ ஒரு வகையில் நமக்குரியனவாக மாற்ற முடியும் என்று கற்பித்துக் கொள்ள விரும்புகிறோம்.

"ஒரு விதவையின் கதை"யின் பெரும்பகுதியை சமகால நிகழ்வுகளே தீர்மானித்தன- அவற்றின் உட்பொருள் குறித்த இறுகிய சிந்தனை அல்ல. எழுதிய பின்னரே "ஒரு விதவையின் கதை"யைத் தொகுக்க நினைத்தேன். அது என்னைபோல் வேகுளியாகவும் தயாராய் இல்லாமலும் இருப்பவர்களுக்கு அறிவுரை அளிக்கும் என்று நினைத்தேன். ஆனால் இவை அனைத்திலும் எஞ்சி நிற்பது முடிவில் வரும் சுருக்கமான ஒற்றை வரி அத்தியாயம்தான். எப்பாடுபட்டாயினும் நீ உயிரைப் பிடித்துக் கொண்டிருக்க ஒரு வழி கண்டாக வேண்டும்.- இதுவே வைதைவ்யத்தின் சாரமாகும்.

எனக்கு இது எந்த வகையிலும் ஆறுதல் அளிப்பதாக இருந்திருக்காது என்று நினைக்கிறேன். சடங்குகள் முரண்நகை மிகுந்து இருக்கின்றன- ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட ஒரு மரணத்தின் அச்சுறுத்தலைத் தவிர்க்க சடங்குகள் ஒரு கருவியாக இருக்கின்றன.

ஓ'ரூர்க்: சடங்குகள் என்றதும் நான் ஒப்பாரிகளை நினைத்துப் பார்க்கிறேன். விதவைகள் தங்கள் முடியை விரித்துப் போட்டுக் கொள்வதும், ஆடைகளைக் கிழித்துக் கொள்வதும் நினைவுக்கு வருகின்றன. துக்கிப்பவர் சங்கடமின்றி தன் துக்கத்தின் பருண்ம உக்கிரத்தை வெளிப்படுத்த இவை உதவுகின்றன. எனக்கு உங்களைப் பற்றித் தெரியாது, நான் துக்கத்தின் முதல் சில மாதங்களில் அவ்வப்போது இந்த சங்கட நிலையில் இருந்தேன்- சப்வேயில் வேற்றார் ஒருவர் நிஷ்டூரமாக நடந்து கொள்ளும்போது அழுது விடப்போகிறேன் என்று கலங்குவேன். எனது இழப்புக்கும் அப்பால், "எப்படி இருக்கிறாய்?" என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று நான் யோசிக்க வேண்டியிருக்கிறதே என்ற கோபம் இருந்தது. "ஹாம்லட்"டைத் திரும்பத் திரும்பப் படித்தேன். திடீரென்று அவனது பாத்திரம் எனக்குப் பிடிபட்டது. அவனது அப்பா அப்போதுதான் இறந்திருக்கிறார், ஆனால் அவன் அதைப் பேசுவதை யாரும் விரும்புவதாயில்லை. உலகம் "களைத்துப் போய், சலிப்பு தட்டி, சுவை குன்றிய, பயனற்ற ஒன்றாக இருக்கிறது" என்று அவன் உணர்ந்ததில் ஆச்சரியமில்லை.

துக்கத்தை ஏன் எழுதுகிறோம்? அதைவிட்டு நீங்கவா அல்லது அதை நமக்கு உரியதாக்கிக் கொள்ளவா? இரண்டும்தான் என்று நினைக்கிறேன். நம் உணர்வுகளை எழுதும்போது அது நமக்கு மட்டும் உரியது என்ற நிலையைத் தாண்டி அது நம் அனைவருக்கும் உரிய ஒன்று என்ற பொதுமையை நாம் உணர்கிறோம்- ஆனால் அத்தகைய பகிர்தல் நம் இழப்பின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில்லை: அது முன்னைவிட இப்போது கூடுதல் மதிப்பு கொண்டதாக இருக்கிறது. இழப்பின் வலிமை மிகுந்திருந்தாலும், பகிர்தல் நம் மன உறுதிக்கு உரம் சேர்ப்பதாய் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இந்தக் கட்டுரையின் முடிவில், மேகன் ஓ'ரூர்க் சொல்கிறார்,

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் எழுதிய "வேனில் காலத்தில் ஒரு விதவையின் புலம்பல்" என்ற கவிதையைப் பாருங்கள்-


"துக்கம் எனக்குரிய படுகை
அங்கு புதிய புல்கள்
கங்குகளாய் முன்னே போல்
இக்கங்குகள் இருந்ததில்லை
சில்லென்ற நெருப்பு
இவ்வாண்டென்னைச் சூழ்ந்தாற் போல்"


இந்த சில்லென்ற நெருப்பு வித்தியாசமான கணப்பு தருகிறது, இல்லையா? நாளெல்லாம் நாம் எரிகிறோம், நினைவென்னும் எரிதழலை அடுத்தடுத்த கைமாற்றித் தருகிறோம்.


சொற்களின் ஓசை

புத்தகங்களால் நாம் சொற்களின் ஓசை இன்பத்தை இழந்து விட்டோமென்று நினைக்கிறேன். முழுதும் இழந்து விடவில்லை, அதன் முக்கியத்துவத்தை மறந்து விட்டிருக்கிறோம்.
சிறந்த கவிதைகளின் மையத்தில் இருப்பது இசையமைதியே- ஓசைகள் ஒன்றை ஒன்று தொட்டு எதிரொலிக்கும் இசையைச் சொல்கிறேன். எவ்வகை எழுத்தாக இருப்பினும் அதன் கவர்ச்சிகளில் மிக முக்கியமானவற்றுள் ஓசை ஒழுங்கும் ஒன்று. ஓசையை நினைக்காமல் உரைநடை எழுதுவது என்பது உன் ரெஸ்யூமைத் தந்து ஒருவனை மயக்க முயற்சிப்பது போன்றது. தகவல்கள் எல்லாம் இருக்கக்கூடும், ஆனால் மின்சாரம் இருக்காது
என்று எழுதுகிறார் மேகன் ஓ'ரூர்க்.

எப்போதும் எழுதிய வரிகளை உரக்க வாசித்துப் படித்துத் திருத்துவதே உசிதம். இறுக்கமான கணங்களில் மொழி அமைதியாகவும், உணர்வுகள் மேலோங்கிய கணங்களில் அதற்குத் தக்க ஒழுங்கோடும் சொற்கள் சீராக அமைய அது உதவும். ஆனால் இப்போதெல்லாம் நம்மில் எத்தனை பேர் அப்படி செய்கிறோம்?

மொழியைப் பூடகமாய் ஓசைகளைக் கொண்டு உட்பொருளைப் போர்த்த நினைப்பவர்கள் மட்டுமே அவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேகப்படுகிறேன். தெளிவாக எழுத நினைப்பவர்களுக்கு சொற்களின் ஓசை மிக முக்கியமான ஒன்று, ஆனால் நாம் அது குறித்து அறியாதவர்களாக இருக்கிறோம்.