31/7/11

பேச்சின் லயமும் கவிதையின் இசையும்

ராபர்ட் ஃப்ராஸ்ட் நாடறிந்த கவிஞர். எட்வார்ட் தாம்சன் என்ற விமரிசகர்-கவிஞரைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பையும், The Road not Taken என்ற கவிதையின் பின்னணியையும் குறித்த ஒரு அற்புதமான கட்டுரை இங்கே இருக்கிறது, அவசியம் படித்துப் பாருங்கள் .

எட்வார்ட் தாமஸ் ஆடன், டைலன் தாமஸ், டெட் ஹ்யூஸ் ("எங்கள் பிதாமகர்"), பிலிப் லார்கின் போன்றவர்களால் பெரிய அளவில் கவிஞராக மதிக்கப்பட்டவர். "ஆங்கில கவிதையின் சொர்க்கவாசலின் பொற்சாவிகளை வைத்திருப்பவர்" என்று டைம்ஸால் புகழப்பட்டவர். எஸ்ரா பவுண்டின் திறமையை அடையாளம் காட்டியவர் .இவர் ராபர்ட் பிராஸ்ட் பற்றி எழுதியது அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கத் துணை செய்தது.

அவர்களுடைய நட்பு மற்றும், அந்த ஒரு குறிப்பிட்ட கவிதையின் தாக்கம் பற்றி அறிய கட்டுரையைப் படியுங்கள், இங்கே நான் ஏறத்தாழ பேச்சு மொழியில் இயல்பாக எழுதப்பட்ட பிராஸ்டின் கவிதைகளைப் பற்றிய ஒரு பத்தியை அதன் அழகுக்காகவும் கூர்மையான அவதானிப்புக்காகவும் இங்கே மொழி பெயர்த்துத் தருகிறேன்-
பாஸ்டனுக்கு வடக்கே என்பது ஒரு புரட்சிகரமான படைப்பு என்பதில் சந்தேகமில்லை. தத்தம் வழியில் தனித்தனியே எது நல்ல கவிதைக்குத் தேவை என்று பிராஸ்டும் தாமசும் இனங்கண்டுகொண்ட தன்மைகளைப் பதினெட்டே கவிதைகளில் இந்தத் தொகுப்பு நிகழ்த்திக் காட்டியது. இருவருக்கும் கவிதையின் ஆற்றல் சந்தத்திலோ வடிவத்திலோ இருக்கவில்லை, அதன் லயத்தில் (ரிதம்) அதை அடையாளம் கண்டு கொண்டனர். வாசிக்கும் கண்ணல்ல செவிக்கும் காதுகளே கவிதையை அறியும் அவயமாக இருந்தது. தாமசுக்கும் பிராஸ்டுக்கும் கவிதையின் அடிகளின் மீட்டரை விட சொற்றொடர்களுக்கு உண்மையாக இருப்பதே அவசியமாக இருந்தது. கவிதையின் முன்னுதாரணங்களைவிட உரையாடலின் ரிதமே முக்கியமாக இருந்தது. பிராஸ்ட் இதை சேடன்ஸ் என்று அழைத்தார். மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் நிகழும் உரையாடல்களை நீங்கள் என்றேனும் கேட்டிருந்தால், வார்த்தைகள் சரியாக பிடிபடாவிட்டாலும் அந்த உரையாடலின் பொதுப் பொருளை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று பிராஸ்ட் நம்பினார். நாம் பேசும் வாக்கியங்களிலும் அதன் தொனியிலும் ஒலிவடிவ பொருள் பொதிந்திருக்கிறது, என்றார் அவர், அதில் ஒரு "உட்பொருளின் ஓசை" உள்ளதாக நம்பினார். பேசும் குரலின் லயத்தால் அம்பலப்படுத்தப்படும் இந்த உட்பொருளின் வழியாகவே கவிதை மிக உக்கிரமான வகையில் தன் செய்தியைச் சொல்கிறது. "தன்னை எதுவேனும் ஆழத் தொட்டிருந்தாலும் அவன் பேசுவதைக் காட்டிலும் சிறப்பாக அவ்வளவு எளிதில் எந்த மனிதனும் எழுத மாட்டான்" என்று குறிப்பிடுகிறார் தாமஸ்.

30/7/11

தகவல் நேரம்

நேற்றோ அதற்கு முந்தைய நாளோ, நான் பார்க்காத நேரம் பார்த்து தனது ஆயிரமாவது ஹிட்டைப் பெற்றிருக்கிறது நம் நேசத்துக்குரிய பதினொன்றாம் பரிமாணம். அடி வாங்கிய தகவல்களை அவதானித்தால் இந்தியாவைவிட ஆஸ்திரேலிய வாசகர்களின் சிறப்பு கவனத்தை நாம் ஈர்த்திருக்கிறோம் என்ற உண்மை புலப்படுகிறது. மேலதிக தகவலாக அண்மைக்காலமாக உக்ரைனிய வாசகர்களும் நம் பதிவுகளைப் படிக்கத் தலைப்படுவது இந்த ப்ளாகின் சர்வதேச பார்வையை உறுதி செய்வதாகவும் உற்சாகமிளிப்பதாகவும் உள்ளது.

நண்பர்கள் பிச்சைக்காரன், சசரிரி கிரி ஆகியோரும் கணிசமான அளவில் வாசகர்களை நமக்குத் திரட்டித் தந்திருக்கின்றனர். அவர்களுக்கும் அடியேனின் மனமார்ந்த நன்றிகள்.

ஆஸ்திரேலிய மற்றும் உக்ரைனிய வாசக அன்பர்களுக்கு என் உளங்கனிந்த நன்றியறிவிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். நார்வே, பெரு மற்றும் போட்ஸ்வானா வாசகப் பெருமக்கள் விரைவில் நம் வழமையான வாசகர்களாவார்கள் என்ற என் உள்ளக் கிடக்கையையும் இந்த மகிழ்ச்சி மிகுந்த தருணத்தில் வெளிப்படுத்துகிறேன்.

வாழ்க தமிழ் இலக்கியம்! வளர்க தமிழ் இலக்கிய வாசகர் வட்டங்கள்!

இனி உங்கள் பார்வைக்கு மட்டும் நம் பெருமை பேசும் ஆதாரங்களாக சில ஸ்க்ரீன்ஷாட்கள்:





இதில் தேர்ந்தெடுத்த பதிவுகளை டிவிட்டரில் பகிர்ந்து கொண்ட டிவிட்டரரட்டையர்கள் திரு @rsgiri, மற்றும் திரு @vNattu ஆகிய இருவரையும் இத்தளத்தின் வாசகர்கள் தவறாமல் பின்தொடர வேண்டும் என்று மேலதிக நன்றியுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

29/7/11

இப்பதிவில் ஒரு முக்கியமான கட்டுரை விரிவாகப் பேசப்படும்

இந்த தளத்தின் நீண்ட நாள் வாசகர்களுக்கு ஜெஃப் டையர் புதியவரல்ல. அவர் ந்யூ யார்க் டைம்ஸில் தொடர்ந்து எழுதுகிறார் என்ற இனிய செய்தியைக் கொண்டாடும் வகையில் அங்கே அவரது முதல் கட்டுரை அறிமுகம்: இதிலிருந்து தேர்ந்தெடுத்த பத்தியைத் தருவது கடினம். ஏன் என்று அறிய படித்துப் பாருங்கள் - An Academic Author’s Unintentional Masterpiece

28/7/11

எழுத்தாளர்கள் விமரிசனம் செய்யலாமா?

எழுத்தாளர்கள் விமரிசகர்களாக இருக்கலாமா கூடாதா என்ற கேள்வியை விவாதிக்கும் ஒரு கட்டுரை இங்கே இருக்கிறது.

புலிட்ஸர் பரிசுக்கான தகுதிப் பட்டியலில் இடம் பெற்ற நாவலை எழுதியவரும் நியூஸ்வீக், நியூ யார்க் டைம்ஸ் போன்ற இதழ்களில் புத்தக மதிப்புரை எழுதுபவருமான டேவிட் கேட்ஸ் ஒருத்தரே இரண்டையும் செய்யலாம் என்று சொல்கிறார்-
"புனைகதை எழுபவர்- அதிலும், என்னைப் போல், புனைகதை எழுத்து பற்றி பாடம் எடுப்பவரால் இன்னொருத்தர் எழுதிய கதையில் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பதைப் பார்க்க முடியும். அவர் எடுத்த முடிவுகளைப் புரிந்து கொள்ள முடியும். எழுத்தாளர்களாக இல்லாதவர்களுக்குத் தெரியவே தெரியாத புனைகதையின் சிக்கல்களுக்கு கதையில் எவ்வளவு புத்திசாலித்தனமான தீர்வுகள் காணப்பட்டிருக்கின்றன, வானத்திலிருந்து ஆச்சரியமான விஷயம் வந்து விழுந்துவிட்டதுபோல் கதையை எழுதியவன் திகைத்த கணங்கள்- இவை இன்னொரு எழுத்தாளனுக்கே புலப்படும்,"
டைம் இதழின் தலைமை புத்தக மதிப்புரையாளராக இருந்த லெவ் க்ராஸ்மேன் வேறு விதமாக இதை அணுகுகிறார்- போலீஸ்காரன் திருடனாக மாறியபின் போலீஸ் வேலை செய்கிற மாதிரி இருக்கிறது எனக்கு நான் நாவல் எழுதிய பின் மற்றவர்கள் புனைவுகளை விமரிசனம் பண்ணுவது, என்கிறார் அவர்:
"புனைகதை எழுதுவது என்பதில் உன்னை அதை ரிவ்யூ செய்வதற்கு லாயக்கில்லாமல் செய்கிற ஏதோ ஒன்று இருக்கிறது. நீ ஒரு நாவலை எழுதும்போது புனைவு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற அந்த ஒரு தகதகக்கும் லட்சியமே கருத்தாக இருந்து கொண்டிருக்க வேண்டும். உன் ரசனையை வலியக் குறுக்கிக் கொள்கிறாய், நீ எழுதிக் கொண்டிருக்கும் அந்த ஒரு எதிர்காலப் படைப்பைத் தவிர மற்றவை அனைத்தும் காணாமல் போய் விடுகின்றன.

நாவலாசிரியனாக இருப்பதற்கு கர்வம் தேவைப்படுகிறது, ஆனால் நல்ல விமரிசகனாக இருக்க உனக்குத் தன்னடக்கம் வேண்டும்"
வாழ்க்கையில் எதுதான் கருப்பு வெள்ளையாக இருக்கிறது, சரி தப்பு என்ற நம் நம்பிக்கைகளைத் தவிர? இந்த விஷயத்திலும் சில நல்ல நாவலாசிரியர்கள் சில சமயம் நல்ல விமரிசனம் செய்கிறார்கள், சில நல்ல விமரிசகர்கள் சில சமயம் அபத்தமாக புனைவுகளைப் புரிந்து கொள்கிறார்கள் என்று சொல்லலாம்: ஆனால் தனிப்பட்ட முறையில் நான் க்ராஸ்மன் கட்சி: நீ புனைவுகளை எழுத முயன்று தோற்றுப் போய்கூட அவற்றின் வடிவ சிக்கல்களையும் மொழியாளுமையின் தேவைகளையும் புரிந்து கொள்ளலாம்: அதை உணர நீ வெற்றிகரமான எழுத்தாளனாக இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை.

23/7/11

நம் அனைவருக்கும் விதிக்கப்பட்ட கதி

கதை கவிதைகளில் எது நல்ல படைப்பு, ஏன் அது நல்ல படைப்பாகிறது என்பன குறித்த விவாதங்களுக்கு முடிவேயில்லை. அவை பெரும்பாலான சமயங்களில் காட்டமான சண்டையாகி உறவைக் குலைக்கிறது. இலக்கிய விவாதம் செய்பவர்களுக்கு நீண்ட கால நண்பர்கள் இருந்தால் ஆச்சரியம்தான். அப்படிப்பட்டவர்களுக்கு அபார சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்.

கம்யூனிச ரஷ்யாவில் சகிப்புத்தன்மையை எதிர்பார்த்திருக்க முடியாது. இருந்தாலும் இந்த கடிதத்தின் ஒரு பத்தியைப் பாருங்களேன், ஏன் நாம் இந்த மாதிரியான விஷயங்களில் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெளிவாக சொல்கிறார்:

ரஷ்யாவை விட்டு வெளியேறுவது எனக்கு கசப்பாக இருக்கிறது. நான் இங்கேதான் பிறந்தேன், இங்கேதான் வளர்ந்தேன், இங்கேதான் வாழ்ந்தேன், எனது ஆன்மாவில் உள்ளவையனைத்துக்கும் நான் ரஷ்யாவுக்கே கடன்பட்டிருக்கிறேன். ரஷ்யாவின் குடிமகனாக இருப்பதை நிறுத்தியதும் நான் ரஷ்ய கவிஞனாக இருப்பதை நிறுத்திவிடப் போவதில்லை. நான் திரும்புவேன் என்று நம்புகிறேன்; கவிஞர்கள் எப்போதும் திரும்பி வருகிறார்கள்- உயிரோடோ காகிதத்திலோ... நம் அனைவருக்கும் விதிக்கப்பட்டிருக்கும் கதி ஒன்றே- மரணம். இந்த வாக்கியங்களை எழுதிக் கொண்டிருக்கும் நான் இறப்பேன், இவற்றைப் படிக்கும் நீங்களும் இறக்கவே செய்வீர்கள். நமது ஆக்கங்களே எஞ்சியிருக்கும், அவையும் என்றும் இருக்கப் போவதில்லை. அதனால்தான் எவரொருவர் மேற்கொண்ட காரியத்திலும் மற்றவர்கள் குறுக்கிடக் கூடாது.
ரஷ்யாவை விட்டு வெளியேறுமுன் இதை எழுதியவர் ஜோசப் ப்ராட்ஸ்கி. இந்தக் கடிதம் பிரஷ்னேவுக்கு எழுதப்பட்டது.

தகவலுக்கு நன்றி- பேக் இஷ்யூஸ்

22/7/11

மொழியாக்கம் செய்வது எப்படி?

அருணவ சின்கா வங்காளத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பவர். இவரது மொழியாக்கங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அரங்கிலும் கவனம் பெற்றுள்ளன. மொழி பெயர்ப்பு கலை குறித்து அவரது பத்து குறிப்புகள் இங்கே:

மூல நூலைப் படிப்பது மட்டும் போதாது, உன் தலைக்குள் கேட்கும் குரலை கவனிக்க வேண்டும்.
முதல் வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப திருத்தி எழுது- நீ அந்த குரலைப் பிடித்து விட்டாய் என்ற திருப்தி கிடைக்கும் வரை.
எழுத்தாளரின் குரல் பிடிபட்டதும் முதல் வரைவு வடிவத்தை விரைவாக முடித்து விடு- அந்தக் குரல் வெகு நேரம் தங்காது.
ஃப்ளோவில் இருக்கும்போது மூல நூலில் உள்ள கடினமாக பகுதிகளுக்கு விடை காண மொழியாக்கத்தை நிறுத்தி யோசிக்காதே; மூல மொழியில் உள்ளபடியே வைத்து விட்டு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று காரியத்தை கவனி.
முதல் வரைவு வடிவத்தில் மூல நூலில் உள்ளதை அப்படியே மொழிபெயர்க்க வேண்டும். மேற்பரப்பில் உள்ளதை அப்படியே பிரதி எடுக்க வேண்டும். எடிட்டராக இருக்காதே.
தேவைப்பட்டால் முதல் மொழிபெயர்ப்பின் சொலவடைகளை அப்படியே உன் மொழிக்கு மாற்றிக் கொள், எதையும் விட்டு விடக் கூடாது.
முதலில் செய்த மொழி பெயர்ப்பைத் திருத்தும்போது மூல நூலில் உள்ளதைப் பார்க்காதே, இப்போது நீ மொழிபெயர்க்கும் மொழியில் முதல் முறை எழுதுவதைப் போல் திருத்தி எழுது.
மூல நூலில் விளக்கப்படாமலும் குழப்பமாகவும் உள்ள பகுதிகளைக் காப்பாற்று. அவற்றுக்கு விளக்கம் கொடுக்காதே.
திருத்திய மொழிபெயர்ப்பை சில மாதங்கள் ஆறப் போடு. சற்று இடைவெளி தந்துவிட்டு அதைத் திரும்ப எடு.
இறுதி வடிவம் வரும்வரை உன்னிப்பாய் கவனிக்கும் காதலனாக இரு. அனைத்தையும் விசாரி. போற்றி மகிழவும், கோபப்படவும், வருத்தப்படவும், மொழிபெயர்ப்பின் வழியாக மூல நூலைத் திரும்பக் காதலிக்கவும் தேவையான அவகாசம் எடுத்துக் கொள்.

புத்தக விமரிசனத்தின் பொன் விதிகள்


A thing of beauty is a joy for ever:
Its loveliness increases; it will never
Pass into nothingness; but still will keep
A bower quiet for us, and a sleep
Full of sweet dreams, and health, and quiet breathing...

விமரிசகர்கள் தங்களால் விமரிசிக்கப்படும் புத்தகங்களைப் படிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது முன்வைக்கப்படுகிறது. இந்தப் புத்தகத்தின் விஷயத்தில் புத்தகாசிரியரின் குற்றச்சாட்டை நாம் முன்கூட்டியே ஏற்றுக் கொள்கிறோம், அவரது படைப்பை நாம் படிக்கவில்லை என்ற உண்மையை நேர்மையாக ஒப்புக் கொள்கிறோம். நாம் எம் கடமையை விரும்பித் தவறினோம் என்று சொல்வதற்கில்லை- உண்மை அதற்கு மாறான ஒன்று- இந்தக் கதையை முழுதாகப் படிக்க அமானுட பிரயத்தனப்பட்டோம். கதையே அமானுடமான ஒன்றுதான், ஆனால் எம்மாலானவை அவ்வளவும் முயன்றும், இந்த ரொமாண்டிக் கவிதையின் நான்கு பாகங்களில் முதலாம் ஒன்றைத் தாண்டி மேற்செல்ல முடியவில்லை. எமக்கு அந்த ஆற்றல் இல்லை என்ற குறை, ஆற்றலின்மையோ அல்லது வேறெந்த குறையோ, எதுவாக இருப்பினும் எம் குறை எமக்கு மிகுந்த துயர் தருவதாக உள்ளது, அத்துயருக்கு ஆறுதலாய் ஒரே ஒரு விஷயத்தைதான் சுட்ட முடியும்- நாம் இன்னமும் பார்த்திராத அந்த மூன்று பாகங்களில் என்ன இருக்கிறது என்பதைக் குறித்து எவ்வளவுக்கு அறியாமலிருக்கிறோமோ, அவ்வளவுக்கே படிக்க முயன்று படுதோல்வியடைந்த இந்த முதல் பாகம் என்ன சொல்ல வருகிறது என்பதைக் குறித்தும் படித்துப் பார்த்து அறிந்திருக்கிறோம்.
ஸ்லேட்டில் இந்த மேற்கோளைப் படித்தேன். நடை மிகவும் பழசாக இருக்கிறதா?-  இது 1818ல் ஜான் வில்சன் க்ரோக்கர் என்பவரால் என்டைமியான் என்ற படைப்பைக் குறித்து எழுதப்பட்டது.

நம்மை யாரும் குற்றம் சொல்ல முடியாது!

"எழுத்தாளர்களின் நூல்கள் வாசிக்கப்பட்டு அந்நூல்களின் சாரமாக அமையும் வரிகள் மேற்கோளாக முன்வைக்கப்பட்டால் மட்டுமே அவை உண்மையில் சிந்தனைகளைத் தூண்டும். நீர்ப்பாசியைக் கொக்கி போட்டு அள்ளக் குளம்முழுக்க அசைந்து வருவதுபோல அந்த மேற்கோள் அந்த மொத்த சிந்தனையாளனையே நம்மை நோக்கிக் கொண்டுவரும். 
மேல்நாட்டுச் சிந்தனையாளர்கள் பலர் மேற்கோள்கள் மூலமே பெரும்பாதிப்பை செலுத்தியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் எமர்ஸன், எலியட் போன்றவர்கள்..."
மேலும் இது:
சரியான ஓர் மேற்கோள் வழியாக ஒரு நல்ல ஆசிரியனை நாம் சட்டென்று இன்னொருவருக்கு அறிமுகம்செய்து வைக்கமுடியும் என்பதைக் காணலாம். அவ்வாறுதான் இலக்கியவாதிகள் பரவிச்செல்கிறார்கள்...
- படைப்பாளிகளின் மேற்கோள்கள்

21/7/11

குரலைப் பற்றி சில குறிப்புகள்

நினைவே W.G. Sebaldன் தவிர்க்க முடியாத கருப்பொருளாக இருக்கிறது: தேசங்களுக்கும் தனி மனிதர்களுக்கும் நினைவோடு வாழ்வது எப்படிப்பட்ட வலியாக இருக்கிறதென்றும் நினைவின்றி வாழ்வது எப்படிப்பட்ட ஆபத்தாக இருக்கிறதென்றும் எழுதுகிறார். அவரது புத்தகங்களின் கதை சொல்லிகள் தொடர்ந்து நினைவுறுத்திக் கொள்ளும் நிலையிலேயே வாழ்கிறார்கள்- Austerlitzன் கதைசொல்லியும் "The Emigrants"ன் அயல்வாழ்வின் நான்கு இணை கதையாடல்களும் கவனத்தை மிகவும் ஈர்ப்பனவாக உள்ளன. அனைத்தும் வேறொன்றாக உருமாறுகின்றன: இடங்களும், நபர்களும், அவர்களுடைய கதைகளும் அனுபவங்களும், இவையனைத்தையும்விட வெவ்வேறு காலங்கள் ஒன்றிலொன்று கசிந்து தங்கள் அடையாளங்களை இழக்கின்றன- பெரும்பாலும் நீண்ட, வேரற்ற பிறர் கூற்றை விவரிக்கும் பத்திகளில் இப்படி நேர்கிறது. "Vertigo"வின் கதைசொல்லி இந்த உத்தியின் சுருக்கமான விளக்கம் தருகிறார்: "வெகு தொலைவில் இருந்தாலும் ஒத்த இயல்பு கொண்ட நிகழ்வுகளுக்கிடையான இணைப்பை அறிதல்"
- டபிள்யு. ஜி. செபால்ட்

பட்டப்படிப்பை முடித்ததும் தான் கல்லூரியில் கட்டுரைகளை எழுதிய வடிவம் சரியான எழுத்தல்ல என்று Naipaul முடிவு செய்தார். திரும்பவும் எழுதிப் பழகத் துவங்கினார். இம்முறை எளிய, நேரடியான தகவல்களை மட்டுமே தன் எழுத்தில் பயன்படுத்தினார். ""மதில் மேல் இருந்தது பூனை" என்பது போன்ற வாக்கியங்களைத்தான் ஏறத்தாழ எழுதத் துவங்கினேன்". மூன்று ஆண்டுகள் இந்த விதியைக் கடைபிடித்தார். அண்மையில் ஒரு இந்திய செய்தித்தாளின் வேண்டுகோளுக்கேற்ப அவர் துவக்க எழுத்தாளர்களுக்கு ஏழு விதிகளைப் பட்டியலிட்டார்:

  1. பத்து முதல் பன்னிரெண்டு சொற்களைத் தாண்டாத வாக்கியங்களை எழுது.
  2. ஒவ்வொரு வாக்கியமும் ஒரு விஷயத்தைத் தெளிவாக சொல்லட்டும் (இப்படித் தொடரும் வாக்கியங்களாலானது ஒரு பத்தி)
  3. சிறிய சொற்களைப் பயன்படுத்து - உன் சொற்களில் சராசரியாக ஐந்து எழுத்துக்கள் இருக்கட்டும்.
  4. உனக்குப் பொருள் தெரியாத வார்த்தையைப் பயன்படுத்தாதே
  5. உரிச்சொற்களைத் தவிர்த்துவிடு- வண்ணம், அளவு, எண் இவற்றுக்கான உரிச்சொற்களை மட்டும் கையாள வேண்டும் (adjectives)
  6. உணர்வுகளால் அறியக்கூடிய விஷயங்களைச் சுட்டும் சொற்களைப் பயன்படுத்து, பொதுப்படையான, அருவ விஷயங்களைப் பேசாதே
  7. இந்த ஆறு விதிகளையும் ஆறு மாதங்கள் தினமும் தொடர்ந்து பழகு.

- நைபால்

விறுவிறுப்பாக எழுதுவதே Greeneன் சிறப்பு. த்ரில்லர், துப்பறியும் கதை போன்றவற்றை கிரீன் கேவலமாக நினைப்பதில்லை. தன் நாவல்களை "பொழுதுபோக்குகள்" என்று வகைப்படுத்தி தன் அத்தியாயங்களை அடுத்தது என்ன என்று நினைக்கும்படி முடிக்க அவர் அஞ்சவில்லை, இதை வர்ஜினியா வுல்பால் ஏற்றுக்கொண்டிருக்கவே முடியாது. ஸ்பெக்டேட்டரில் சினிமா விமரிசகராக இருந்த அனுபவத்தைப் பயன்படுத்தி திரைப்படங்களின் காலத்துக்குரிய இறுக்கத்துடன் நாடகீய மற்றும் நகைச்சுவை கதை சொல்லலை அவர் இணைத்து எழுதுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மாபெரும் நாவல்கள் முடிவில்லாமல் நீண்டன என்றால் க்ரீனின் ஆற்றல் அவரது சுருங்கச் சொல்லும் திறனில் இருக்கிறது- தன் நாவல்களை எண்பதாயிரம் வார்த்தைகளில் முடித்தார். நீங்கள் அவற்றை ஒரே அமர்வில் படித்துப் புரிந்து கொண்டுவிட முடியும். இது நாடகங்களின் ஒருங்கிணைந்த தன்மையை நாவல்களில் திரும்பப் பெறுகிறது. அவர் தன் தினப்படி லட்சியமான ஐநூறு சொற்களை எழுதி முடித்ததும் நிறுத்தி விடுவார் - வாக்கியத்தின் மத்தியிலும் கூட.
- க்ரஹாம் கிரீன்.

ஆங்கில இலக்கியத்தின் சில முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் மோர் இன்டல்லிஜண்ட் லைப்பில் இருக்கிறது. அறிமுகம் செய்பவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல.

இத்தொடர் இங்கே இருக்கிறது.



19/7/11

வாசிப்பின் மரணம்

எழுத்தின் மரணம் அது தவறாகப் புரிந்து கொள்ளப்படும்போது நிகழ்கிறதென்றால், வாசிப்பின் மரணம் சில துரதிருஷ்டமான கணங்களில் தன் வாசகனால் ஒரு எழுத்தாளன் புரிந்து கொள்ளப்படும்போது நிகழ்கிறது. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இன்று என் நண்பர் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரின் பெயரைச் சொல்லி தனி வாழ்வில் அவர் இன்னொரு எழுத்தாளரைவிட மோசமானவர் என்றார். "இது தெரிந்து எனக்கு என்ன ஆகப் போகிறது?"," என்று நினைத்துக் கொண்டேன். அவரை நான் என் வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்ப்பதற்கும் வாய்ப்பில்லாத நிலையில் எங்களுக்குள் எந்த கொடுக்கல் வாங்கலும் நிகழப்போவதில்லை- அவரது தனிப்பட்ட வாழ்வில் அவருக்கு இருக்கக்கூடும் குறைகளை நான் அறிந்து கொள்வது அவரது புனைவுகளிலிருந்து என்னைப் பாதுகாக்கும் என்று நண்பர் நினைத்திருக்கலாம். ஆனால் எனக்கு அத்தகைய தடுப்பரண்களில் ஆர்வமில்லை.

எழுத்துக் கலை குறித்து எட்டு எகிப்திய எழுத்தாளர்களின் குறிப்புகள்

பிரமாதமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது, இருந்தாலும் மீண்டும் துவங்குவதானால் எங்கிருந்தாவது துவங்க வேண்டுமே- எப்படி எழுதுவது என்று சொல்லித் தருகிறார்கள் எட்டு எகிப்திய எழுத்தாளர்கள்:

8 Egyptian novelists share their ‘rules’ for writing | Al-Masry Al-Youm: Today's News from Egypt

இவர்களில் மிரால் அல் தகாவி சொல்கிறார்:


  • எழுத்து ஒரு கனவு. உருகியோடும் சக்தி- உன் நினைவை நீங்குமுன் அதைப் பற்றிக் கொள்ள முயற்சி செய்.
  • எழுத்து ஒரு எளிய காதல்- நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பவர்களிடம் அது விசுவாசமாக இருக்கிறது, புகழையும் பணத்தையும் தேடுபவர்களிடமல்ல.
  • எண்ணங்கள் அனைத்தும் முட்டாள்தனமானவை, நம்ப முடியாதவை, இரவல் வாங்கப்பட்டவை, துவங்கத் தகுதியற்றவை- நீ அவற்றை எழுதுவதன் முன் அப்படித்தான் தோன்றும்.
  • சொல்ல வந்த எண்ணம் நிறைவு பெறவில்லை என்று ஒத்திப் போடப்படும் எழுத்து முழுமை பெறாது- மறைந்தே போகும்.
  • எழுதத் துவங்கிய எதையும் முடிக்காமல் கைவிடாதே- கைவிடப்பட்டபின் அது உன்னிடம் திரும்பாது.
  • எழுத்து பதிப்பாகும். ஆனால் பதிப்பித்தல் ஒரு எழுத்தாளனை உருவாக்குவதில்லை. நிறைய எழுது. அது பதிப்பிக்கப்படுமா என்பதைப் பற்றி கவலைப்படாதே.

11/7/11

புத்தக மதிப்புரைகள்

ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கான ப்ளாக்கர்கள் புத்தக மதிப்புரை செய்கிறார்கள். இவர்களில் பலர் நூலகர்கள். இன்னும் சிலர் தேர்ந்த வாசகர்கள். பலர் அமேசான் போன்ற தளங்களின் பயனர்கள். எப்படி பார்த்தாலும் ஆங்கிலத்தில் புத்தகங்கள் சார்ந்த வலையுலகம் மிக ஆரோக்கியமாகவே இருக்கிறது.

இந்த ப்ளாக் அப்படிப்பட்ட ஒன்று- அதன் சிறப்பான வடிவமைப்புக்காகவே சுட்டியைத் தருகிறேன். இவர் தன் மதிப்புரைகளை எழுதி பதிப்பிப்பதைக் காட்டிலும் அவற்றை வகை பிரித்து, தேவையான சுட்டிகளை சேகரித்துத் தருவதற்கே அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார் என்று நினைக்கிறேன்.

Book Reviews by Danny Yee (fiction + nonfiction)

10/7/11

யோக்கியமான முயற்சிகள்

யோக்கியமான முயற்சிகள்

சுஜாதா தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகளுள் பதினெட்டை மட்டும் தொகுத்து ஒரு புத்தகம் பதிப்பித்துள்ளார். அதன் முன்னுரையில் அவர் எழுதியிருப்பது பால்ஹனுமான் ப்ளாகில் இருக்கிறது:

"நான் பார்ப்பதையும் உணர்வதையும் என்னால் இயன்ற அளவுக்கு எளிமையாகவும் சிறப்பாகவும் சொல்வதுதான் என் குறிக்கோள்!" என்று எர்னஸ்ட் ஹெமிங்க்வே ( Ernest Hemingway) சொன்னதுடன் எனக்கு சம்மதம். ”ஒரு எழுத்தாளன் கடவுள், அவநம்பிக்கை போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயலக் கூடாது. அவன் தொழில் கடவுளைப் பற்றியும் அவநம்பிக்கைகளைப் பற்றியும் நினைப்பவர்களை வர்ணிப்பது என்று செக்காவ் ( Chekov) ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார். அவரே மற்றொரு கடிதத்தில் “பிரச்னைக்குத் தீர்வு காண்பதையும் பிரச்னை என்ன என்று சொல்வதையும் குழப்பாதே; ஒரு கலைஞனுக்குப் பின்னதுதான் கட்டாயமானது” என்கிறார்.

இந்தப் பதினெட்டு கதைகள் எவற்றிலும் நான் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயலவில்லை. பிரச்னைகளை ஒழுங்காக விவரிப்பதில்தான் — சொல்லுவதில்தான் அக்கறை காட்டியுள்ளேன். இயன்ற அளவுக்கு எளிதாகவும், சிறப்பாகவும் என்னால் கவனிக்க முடிகிறது. காட்சிகளை வித்தியாசமாகப் பார்க்க முடிகிறது. அதைத் தமிழில் எழுத முடிகிறது. இந்த மூன்று தகுதிகளையுமே நான் முழுமையாகப் பெற்றிருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். பெற்றுவிட்டால் எழுதுவது எல்லாமே சிறந்ததாக இருக்க வேண்டும். இல்லை. இவை சிறந்த கதைகள் இல்லை. சிறந்த கதைகளை நோக்கிய என் யோக்கியமான முயற்சிகளின் அத்தாட்சிகள்..."

மிகவும் ரசித்துப் படித்த பதிவு.

பால்ஹனுமான் ப்ளாகுக்கு என் நன்றிகள்.

நாற்காலி

நான் விரும்பிப் படிக்கும் வலைதளங்களில் ஒன்று லாங்குவேஜ் லாக். அங்கு ஒரு குறிப்பிட்ட சொல் கிளைத்துக் கிளம்பி வேரில் வேறு வடிவில் திரும்பச் சேர்வதைப் பற்றி எழுதியிருந்தார்கள், படித்துப் பாருங்கள் கங்காரு!

அங்கு எழுதியிருக்கும் விஷயத்தை சுருக்கமாக சொல்கிறேன்.

ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகளிடையே பொது மொழி கிடையாதாம். ஒவ்வொருத்தர் கங்காருவை ஒவ்வொரு பெயரில் அழைத்து வந்தார்கள். வெள்ளைக்காரர்கள் முதல் முறையாக ஆஸ்திரேலியா சென்றபோது அங்கே ஒரு கங்காருவைக் கண்டுபிடித்ததும் உள்ளூரில் இருந்த ஒருவரை அழைத்து அது என்ன என்று விசாரித்திருக்கிறார்கள். கூகூ யிமிதிர் என்ற பழங்குடியைச் சேர்ந்த அந்த நபர், அதுதான் கங்காரு என்று சொல்லியிருக்கிறார். அதன்பின் வெள்ளைக்காரர்கள் ஆஸ்திரேலியாவெங்கும் பரவுகையில் கங்காரு என்ற பெயரும் மற்ற பழங்குடியினரிடையே நிலைபெற்றது, சில குழப்பங்களுடன்.

நம் ஊரில் ஹாமில்டன் பாலம் அம்பட்டன் பாலமானது போல், சில பழங்குடியினர் இந்த சொல்லைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர். உதாரணத்துக்கு க்வையேகல் என்ற பழங்குடியினர் கங்காரு என்றால் பெரிய உருவம் என்று நினைத்துக் கொண்டு வெள்ளைக்காரர்களிடம் ஆடு மாட்டையெல்லாம் கங்காரு என்று அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். அப்புறம் புரிந்து கொண்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால், கூகூ யிமிதிர்கள் பத்து வகை கங்காரு பெயர்களை வைத்திருந்தார்களாம். அந்த வெள்ளைக்காரர் ஒரு பெரிய கருப்பு நிற கங்காருவைக காட்டி இது என்ன என்று கேட்டதால் அவர் அது ஒரு கங்காரு என்று சொல்லியிருக்கிறார், அது அப்புறம் அத்தனை கங்காருக்களுக்கும் பொதுப் பெயராகிவிட்டிருக்கிறது. அதே அவர் ஒரு சிறிய சிவப்பு கங்காருவைக் காட்டி இது என்ன என்று கேட்டிருந்தால் அந்த கூகூ யிமிதியர், அதுவா, அது ஒரு நாற்காலி (nharrgali) என்று சொல்லியிருப்பாராம்!

அதன்பின் அந்த க்வையேகல் மக்கள் ஆடு மாடுகளையெல்லாம் நாற்காலிகள் என்று சரியாக சொல்லியிருப்பார்கள் என்ற சேதியை விடுங்கள், நாமெல்லாரும் ஆஸ்திரேலியர்களை கங்காருக்கள் என்று அழைக்காமல் நாற்காலிகள் என்று இன்று அழைத்துக் கொண்டிருப்போம்!

எதிர்பாராத விபத்துகள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன பார்த்தீர்களா?

(இதை ஏன் இங்கு எழுதுகிறேன் என்று பார்க்கிறீர்களா, அதுதான் ஹெட்டரில் போட்டிருக்கிறதே, "புனைவின் வேர்கள் நினைவில், நினைவின் வேர்கள் புனைவில்"!)

9/7/11

ஆன்டன் செகாவ் - சில நினைவுகள்.


ஒரு நண்பர், எல்லாரும்தான் எல்லாமும் எழுதுகிறார்கள், ஆனால் எதை எவ்வளவு நுட்பமாக எழுதுகிறார்கள் என்பதுதான் ஒரு இலக்கியவாதியை சாதாரண எழுத்தாளரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது, இல்லையா, என்று கேட்டார்.  இருக்கலாம்.

ஆனானப்பட்ட செகாவ் பற்றியே டால்ஸ்டாய்க்கு அவ்வளவு பெரிய அபிப்பிராயம் இருக்கவில்லை என்று படித்தேன், ஆச்சரியமாக இருக்கிறது.

2/7/11

பேனாக்கள் வண்ணத் தூரிகைகளா கில்லட்டின் கத்திகளா? - இந்தா பிடி சாபம்!

(10.7.2011 தேதியிட்ட பிற்குறிப்பு:

இந்தப் பதிவுக்கான அவசியமே இப்போது கேள்விக்குறியாகப் போய் விட்டது. திரு ஆர்வி தன் தளத்தில் "சுஜாதாவின் மூன்று முகங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரது இடமும்" என்ற தலைப்பில் ஒரு அருமையான கட்டுரையை எழுதி நம் பதிவின் காரணங்களைச் சாய்த்து விட்டார். எப்போதும் ஒருத்தர் நம் கணிப்பில் உயரும்போது நமக்கு நம் அறியாமை மற்றும் சிறுமை குறித்து வருத்தமே எழும். அந்த வருத்தத்துடன், ஆனால் நல்ல ஒரு விமரிசனத்தைப் படித்த மகிழ்ச்சியுடன் ஆர்வி அவர்களிடம் இந்தக் கட்டுரையில் ஆங்காங்கே காணப்படும் உரத்த, தடித்த குரலுக்கு மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் இதற்கு முந்தைய பதிவுகளில் சுஜாதாவின் புத்தகங்கள் குறித்து எழுதிய குறிப்புகள் போலல்லாமல் இந்தக் கட்டுரையில் சுஜாதாவையும் ஒரு எழுத்தாளராக மதித்து, ஒரு எழுத்தாளரின் படைப்புகளை அணுகுவதற்கான விமரிசன முறைகளைக் கையாண்டிருக்கிறார் ஆர்வி. ஒரு கட்டுரையாகவே அது தனித்து நிற்கக்கூடிய அளவில் சிறப்பானதாக இருக்கிறது. அதைப் படித்தல் நலம். காலாவதியான இந்தப் பதிவைப் பார்க்க வந்தமைக்கு நன்றி. பின் வருவன இதற்கு முன் 2.7.2011 அன்று எழுதியவை)