21/8/11

காத்தோடு போயாச்சு!

இப்போது 90களில் இருக்கும் என் கஸின் இரண்டாம் உலகப் போரில் வார்சா கெட்டோவில் இருந்தார். அவரும் கெட்டோவில் இருந்த மற்ற பெண்களும் தினமும் தையல் வேலை செய்தாக வேண்டும். நீ புத்தகத்தோடு மாட்டிக்கொண்டால் ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் மரண தண்டனை தந்து விடுவார்கள். அவருக்கு ‘Gone With the Wind’ன் ஒரு காப்பி கிடைத்திருந்தது. தினமும் தூங்கக் கிடைக்கும் நேரத்தில் மூன்று முதல் நான்கு மணி நேரம் அவர் அதைப் படிப்பதற்கு செலவிடுவார். அடுத்த நாள் தையல் வேலையைச் செய்யும் அந்த ஒரு மணி நேரத்தில் அவர் தான் படித்த கதையை தன்னுடனிருப்பவர்களுக்குச் சொல்வார் . ஒரு கதைக்காக இந்தப் பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்தார்கள். என் கஸின் இதை என்னிடம் சொன்னபோது எனக்கு நான் செய்வது மிகவும் முக்கியமானதெனப் புரிந்தது. கதைகள் ஆடம்பரமல்ல. அவற்றுக்காக நீ வாழவும் சாகவும் செய்கிறாய்.
- நீல் கைமன்

Gone with the wind இலக்கியமா என்ன என்று கேட்டால் நம்மில் பலர் திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி திருதிருவென்று முழிப்போம், பாருங்கள், அதற்காகவும் சாகத் தயாராக இருக்கிறார்கள். வேறெங்கோ வேறொருவர் சொன்ன மாதிரி, சரியான சமயத்தில் உன்னைச் சேர்ந்து உன் வாழ்க்கைக்குப் பொருள் தரும் புத்தகம்தான் இலக்கியம். அதை ஒரு நிறப்பிரிகை போல் பார்ப்பதுதான் நியாயம். ஒரு காலகட்டத்தில் உங்களுக்கு முக்கியமாகத் தெரிந்த புத்தகம் பின்னொரு சமயத்தில் அற்பமாகத் தெரியலாம். ஆனால் நம் உணர்வுகள் உண்மையானவையாக இருந்திருந்தால், அது இன்றைக்கும் வேறொருவருக்கு முக்கியமாக இருக்கக்கூடும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலே மேலே சென்று கொண்டிருக்கிறவர்கள் ஏறிய ஏணியை எட்டி உதைக்கலாம், தவறில்லை, அதை சுமந்து செல்ல முடியாது. ஆனால் அதை அப்படியே விட்டு வைக்கவும் செய்யலாம்- இன்னொருத்தருக்கு உபயோகமாக இருக்கும்.

17/8/11

எந்த ஒரு மனிதனும் குறியீடாக முடியாது - சினுவா அசேபே

என்னை ஒரு குறியீடாகப் பயன்படுத்துவது உனக்கு புத்திசாலித்தனமாக இருக்கலாம், ஆனால் என் மானுடத்தை ஒரு சிறிய அளவில் குறைப்பதையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்- சினுவா அசேபே.

சினுவா அசேபே இனவெறியை எதிர்கொள்ளும் விதம் முக்கியமானது. காலனியத்துக்கு எதிரானதாக மேற்கத்திய இலக்கியத்தில் போற்றப்படும் ஜோசப் கான்ராடின் "இருளின் மையம்" ஒரு இனவாத ஆக்கம் என்கிறார் அசேபே, அவர் கான்ராடையும் ஒரு இனவாதி என்று சொல்கிறார். கான்ராட் ஆப்பிரிக்கர்களை முழுமையான மனிதர்களாகக் கருதவில்லை, ஆப்பிரிக்காவையும் ஆப்பிரிக்கர்களையும் வெள்ளையர்களின் நாகரிகத்தின் எல்லைகள் எதுவரை என்பதைச் சித்தரிக்கும் திரையாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் கான்ராட் என்பது அவரது குற்றச்சாட்டு.
"ஆப்பிரிக்கா களமாகவும் பின்புலமாகவும் மட்டுமே இருக்கிறது, அது ஆப்பிரிக்கரின் மனிதத்தன்மையை மறுதலிக்கிறது. நம்மால் அடையாளம் கண்டுகொள்ளப்படக்கூடிய மானுடம் நீக்கப்பட்ட ஒரு மெடாபிஸிகல் போர்க்களமாக ஆப்பிரிக்கா இருக்கிறது. அலைவில் அவதியுறும் ஐரோப்பியன் தன்னைப் பணயம் வைத்து அதனுட் புகுகிறான். ஒரு அற்ப ஐரோப்பிய மனம் சிதைவுருவதைச் சித்தரிக்கும் துணைக்கருவியாக ஆப்பிரிக்காவைப் பயன்படுத்துவதில் உள்ள அபாரமான வக்கிர அகங்காரம் யாருக்கும் தெரியவில்லையா?
தன் பாத்திரங்களின் பார்வையில், அவற்றின் மனவோட்டதின் வழியாக கான்ராட் தன் புனைவைச் சித்தரிக்கும் தொனியைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்பவர்களுக்கு அசேபேவின் பதில்-
"கதைசொல்லியின் அற மற்றும் உள வாதனைக்கும் தனக்கும் இடையில் ஒரு சுகாதாரத் திரை விரித்துக் கொள்வது கான்ராடின் நோக்கமாக இருக்கிறது என்றால் அவரது முயற்சி முழுமையாகத் தோல்வியுற்றதாக எனக்குத் தெரிகிறது. அவர் தெளிவாகவும் போதுமான அளவிலும் அதற்கு மாற்றாக இருக்கக்கூடிய ஒரு கருதுகோளைத் தன் புனைவில் சுட்டத் தவறி விட்டார். நாம் அதைக்கொண்டு அவரது பாத்திரங்களின் கருத்துகளையும் செயல்களையும் எடை போட்டுப் பார்க்க அது துணை செய்திருக்கும். தனக்குத் தேவை என்று அவர் நினைத்திருந்தால் அதற்கு இடம் ஏற்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கான்ராடுக்கு இல்லாமலில்லை. கான்ராட் மார்லோவை அங்கீகரிப்பதாகத் தோன்றுகிறது...
மேற்கத்திய உலகை எதிர்கொள்ளும் பிறர் இன வேற்றுமைகளை நேருக்கு நேர் எதிர் கொண்டாக வேண்டும். அந்த வகையில் சினுவா அசெபேயுடனான இந்த நேர்காணல் சிந்திக்க வைக்கும் ஒன்று.

16/8/11

ஆற்று நீருக்குத் தன் பாதை தெரியாதா?

நாவல் என்று பார்த்தால் உலகின் முதல் நாவலாக ஜப்பானின் கெஞ்சி கதைகளைச் சொல்கிறார்கள். அது1008ஆம் ஆண்டு எழுதப்பட்டதாம் (தமிழில் 1879- பிரதாப முதலியார் சரித்திரம்). ஐரோப்பாவின் முதல் நாவல் 1605ல் எழுதப்பட்ட Don Quixote என்று சொல்கிறார்கள். சிறுகதைகள் ஐரோப்பாவில் பதினான்காம் நூற்றாண்டில் எழுதப்படத் துவங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் (நாம் இன்று இலக்கியமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் சிறுகதைகள் புதுமைப்பித்தன் காலத்தை ஒட்டி எழுதப்படத் துவங்கியவை என்று நினைக்கிறேன்)

என் எழுத்து முறை - சினுவா அசேபே

இது சென்ற பதிவின் தொடர்ச்சி. சினுவா அசேபே தன் எழுத்து முறை குறித்து பேசுகிறார்.

கேள்வி:
உங்கள் ஆக்கம் உருவாவது குறித்து ஏதேனும் சொல்ல முடியுமா? முதலில் எது வருகிறது? ஒரு பொது எண்ணம், அல்லது குறிப்பாய் ஒரு சூழ்நிலை, கதையோட்டம், பாத்திரம்?

அசேபே:
ஒவ்வொரு புத்தகத்துக்கும் அது ஒரே மாதிரி இருப்பதில்லை. பொதுவாகப் பேசினால், முதலில் வருவது ஒரு பொதுப்படையான எண்ணம் என்றுதான் நான் சொல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து, அதனுடன் என்று சொல்ல வேண்டும், பிரதான பாத்திரங்கள் வருகின்றன. நாம் பொதுப்படையான எண்ணக்கடலில் வாழ்கிறோம், அதில் நாவலாக எதுவுமில்லை, ஏனென்றால் ஏராளமான பொதுக் கருத்துகள் இருக்கின்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட கருத்து ஒரு பாத்திரத்தோடு இணையும் கணம் ஒரு என்ஜின் அதை செலுத்துவது போன்றது, அங்கே நாவல் துவக்கம் பெறுகிறது. குறிப்பாக இறைவனின் அம்பு என்ற நாவலில் வரும் எசூலூ போன்ற தனித்துவம் மிக்க அதிகாரம் செலுத்தும் பாத்திரங்கள் உள்ள நாவல்கள் விஷயத்தில் இப்படித்தான் நடக்கிறது. மக்களில் ஒருவன், அதைவிட, இனிமேலும் சுகவாசம் இல்லை, என்பன போன்ற பேராளுமையாய் இல்லாத பாத்திரங்கள் கொண்ட நாவல்களின் துவக்க கட்டங்களில் பொது எண்ணம் பெரும்பங்காற்றுகிறது என்று நினைக்கிறேன். ஆனால் துவக்க கட்டத்தைத் தாண்டிவிட்டபின் இனியும் பொதுக் கருத்துக்கும் பாத்திரத்துக்கும் வேற்றுமை இருப்பதில்லை- இரண்டும் வேலை செய்தாக வேண்டும்.

(பிளாட் என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன என்று தெரியவில்லை. கதையோட்டம் என்ற சொல்லை அந்தப் பொருளில் பயன்படுத்துகிறேன். )

கேள்வி:
கதையோட்டத்தின் இடம் என்ன? நீங்கள் எழுத எழுத கதையோட்டத்தை உருவாக்கிக் கொள்கிறீர்களா? அல்லது பாத்திரங்களில் இருந்து, கதைக்கருவிலிருந்து கதையோட்டம் வளர்கிறதா?

அசேபே:
நாவல் உருவாகத் துவங்கியதும் அது நிறைவு பெற்றுவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டால் நான் கதையோட்டத்தைப் பற்றியோ கதைக்கருவைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. அவை தாமாகவே உருப்பெறும், இப்போது பாத்திரங்கள் கதையை இழுத்துச் செல்லத் தலைப்படுகிறார்கள். ஏதோ ஒரு கட்டத்தில் கதையும் அதன் நிகழ்வுகளும் நீ நினைத்த மாதிரியில்லாமல் உன் கட்டுப்பாட்டை மீறி விடுகிறது என்பது போலாகிறது. சில விஷயங்கள் ஒரு கதையில் இருந்தாக வேண்டும், அது இல்லாமல் கதை நிறைவு பெறுவதில்லை. அவை தாமாகவே கதைக்குள் வந்து விழும். அவை அப்படி வந்து சேரவில்லை என்றால் உனக்குப் பிரச்சினை வந்து விட்டது என்று பொருள், அப்போது உன் நாவல் நின்று விடுகிறது.

தீவிரமான எழுத்தாளர்களில் யாரும் நேரம் வரட்டும் எழுதுவோம் என்று காத்திருப்பதாகத் தெரியவில்லை. அசேபேயின் ருடீன் இப்படி போகிறது:

பொழுது விடிந்ததும் நான் எழுதத் துவங்கிவிடுகிறேன். நான் இரவு வெகு நேரமும் எழுதுகிறவன்தான். பொதுவாக நான் தினமும் இத்தனை சொற்கள் எழுத வேண்டும் என்று கணக்கு வைத்துக் கொண்டு எழுதுவதில்லை. நிறைய எழுதினாலும் எழுதாவிட்டாலும் தினமும் எழுத வேண்டும் என்ற ஒழுங்கு இருக்க வேண்டும். நீ நிறைய எழுதும் நாளில் நிச்சயம் நன்றாகத்தான் எழுதியிருப்பாய் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. என் மேல் ஒரு கடுமையான டைம்டேபிளை சுமத்திக் கொள்ளாமல் எப்படி தினப்படி ஒழுங்காக எழுதுவது என்பதற்கான முயற்சியைத் தொடர்கிறேன், அப்படி செய்ய முடிந்தால் எனக்கு முழு நிறைவாக இருக்கும்.

(அசெபேயின் புகழ் பெற்ற நாவல் குறித்த நல்ல ஒரு அறிமுகம் இங்கே இருக்கிறது: Things Fall Apart / Invitation to World Literature)

15/8/11

நம் கதைகள் நமதாக இருக்கட்டும் - சினுவா அசேபே

ஒருவரின் கதை உனக்குப் பிடிக்கவில்லையென்றால், நீயே உன் கதையை எழுது.

ஊமை சனங்கள் பேச்ச்சற்றவர்கள் மட்டுமல்ல, பார்வையற்றவர்களும்கூட என்கிறார் சினுவா அசேபே, இந்த நேர்காணலில்- இதுவே இலக்கியத்தின் நியாயமாகிறது.

பின் நான் வளரலானேன், நல்லவனாக இருக்கிற வெள்ளையன் எதிர்கொள்ளும் காட்டுமிராண்டிகளின் பக்கம் இருக்க வேண்டியவன் நான் என்பதையே அறியாமல் அந்த சாகசக் கதைகளைப் படிக்கலாயினேன். வெள்ளையரின் பார்வையில் பார்ப்பது என் அனிச்சையான இயல்பானது. அவர்கள் அருமையானவர்கள்! அவர்கள் அற்புதமானவர்கள். மற்றவர்கள் அப்படியல்ல... அவர்கள் முட்டாள்களாகவும் அவலட்சணமானவர்களாகவும் இருந்தனர். உனக்கென்று கதைகள் இல்லாததன் ஆபத்தை நான் இப்படித்தான் எதிர்கொண்டேன். அருமையான பழமொழி ஒன்றுண்டு- சிங்கங்கள் தங்கள் சரித்திரத்தை எழுதும்வரை வேட்டையின் வரலாறு வேடனைத்தான் போற்றும். இதை நான் வெகு காலம் சென்றபின்தான் உணர்ந்தேன். அதை உணர்ந்ததும் நான் எழுத்தாளனாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகிவிட்டது.

தன் வரலாற்றைத் தன் குரலில், தன் பார்வையில் பதிவு செய்ய வேண்டியதைப் பேசும் அசேபே அந்தப் பார்வை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் விளக்குகிறார்-

கே:
எழுத்தாளர்கள் பொதுப் பிரச்சினைகளில் எவ்வளவு ஈடுபாடு காட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

அசேபே:
நான் வேறு யாருக்கும் எந்த விதிமுறையும் வகுக்கவில்லை. ஆனால் எழுத்தாளர்கள் எழுத்தாளர்களாக மட்டும் இருப்பதில்லை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் குடிமக்களும்கூட. பொதுவாக அவர்கள் விபரமறிந்த வயதினராக இருக்கின்றனர். சீரியசான உயர்கலை என்பது மானுடத்துக்கு உதவவும், அதற்கு சேவை செய்யவுமே எப்போதும் இருக்கிறது என்பதே என் நிலைப்பாடு. அதன் கடமை குற்றம் சாட்டுவதல்ல. மானுட நேயத்துக்கு முட்டுக்கட்டை போடுவதுதான் அதன் குறிக்கோள் என்றால் கலையை கலை என்று நாம் எப்படி அழைக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதனை அசௌகரியப்படுத்துவது அதன் நோக்கமாக இருக்கலாம், ஆனால் அடிப்படையில் மானுட நேயத்துக்கு எதிராக இருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால்தான் எனக்கு இனவாதம் சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது, அது மானுடத்துக்கு எதிராக இருப்பதால். சிலர் இவன் தன் மக்களைப் புகழ வேண்டும் என்று சொல்கிறான் என்று நினைக்கிறார்கள். அடக் கடவுளே! போய் என் புத்தகங்களைப் படித்துப் பாருங்கள். நான் என் மக்களைப் போற்றுவதில்லை. நான்தான் அவர்களுடைய கடுமையான விமர்சகன். "நைஜீரியாவின் பிரச்சினை" என்ற என் துண்டுப் பிரசுரம் வரைமீறிய ஒன்று என்று சிலர் நினைக்கிறார்கள். என் எழுத்தால் எனக்குப் பல பிரச்சினைகள் வந்திருக்கின்றன. கலை மானுடச் சார்பு கொண்டதாக இருக்க வேண்டும். எத்தியோப்பியாவுக்குச் சென்று பல நோய்களோடு திரும்பினாரே ராம்பூ (Rimbaud), அந்த பிரெஞ்சு நாட்டுக்காரரைப் பற்றி யெவ்டுஷென்கோதான் சொன்னார் என்று நினைக்கிறேன், ஒரு கவிஞன் அடிமைகளை வைத்து வர்த்தகம் செய்ய முடியாதென்று. அடிமை வர்த்தகத்தில் இறங்கியபின் ராம்பூ கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டார். கவிதையும் அடிமை வியாபாரமும் சேர்ந்திருக்க முடியாது. அதுதான் என் நிலைப்பாடு.

சுவையான கருத்துகள். ஆனால் நாம் யார் என்பதற்கு விடை காண்பது அவ்வளவு சுலபமல்ல- காலம் நம் வரலாறுகளை அவ்வளவு சிக்கலாகப் பிணைத்திருக்கிறது. பெரும்பாலும் நாம் யார் என்பது நம்மை வெறுப்பவர்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது. இதற்கு எதிர்வினையாக தன் வரலாற்றைப் பதிவு செய்பவன், மானுடச் சார்புடன் எழுத வேண்டும் என்பதைத் தன் கடமையாக வைத்துக் கொள்வது சிக்கலான பாதையைத் தேர்ந்தெடுப்பதாகவே இருக்கும். ஆனால் வேறு வழியில்லை என்றும் சொல்லலாம்.


12/8/11

"ஒற்றை அடியில் வீழ்த்திச் சாய்க்க வேண்டும்"

நேற்று படித்ததில் Georges Simenon குறித்த இந்த மேற்கோள் நன்றாக இருந்தது, நேர்மையாக இருந்த காரணத்தால்:

"எழுத்தாளன் என்பவன் இல்லை," என்கிறார் அவர் தன் வாசகர்களிடம். "புதினமும் வாசகனும் மட்டுமே உள்ளனர். எந்த அளவுக்கு அந்தப் புதினம் வாசகனால் எழுதப்பட்டதாகத் தோற்றமளிக்கிறதோ அந்த அளவுக்கு அது சிறந்த புதினமாகிறது. நாவல் என்பது சிறியதாக இருக்க வேண்டும், ஒரு அமர்வில் படித்து முடித்துவிடக் கூடியதாக இருக்க வேண்டும். அது ஆவணமாக இருக்கக் கூடாது, அது மிகைப்படுத்தப்பட்ட சித்திரமாக இருக்கக் கூடாது. அது தன் வாசகனை வலுவான ஒரு ஒற்றை அடியில் வீழ்த்திச் சாய்க்க வேண்டும்". கூட்டத்தில் உள்ள அனைவருக்கும் தான் சொல்வது ஏமாற்றமாயிருக்கிறது என்பதை முழுமையாக உணர்ந்தவராய் சிமெனோன் தொடகிறார், இந்த இலக்கியக் கொள்கைகள் தன் நாவல்களைத் தவிர மற்ற எவை குறித்தும் உண்மையாகாது என்று.

ந்யூ யார்க்கரில் பிரெண்டன் கில், A Different Stripe — Simenon on the Novel

11/8/11

மீண்டும் விழு, இன்னும் நன்றாக விழு

சில பேர் தாங்கள் எழுதியதைத் திரும்பத் திரும்ப திருத்தி எழுதிக் கொண்டே இருப்பார்கள்- என் நண்பரொருவர் ஒரு சிறுகதையை எழுத ஆரம்பித்துவிட்டால், ஒரு நாளைக்கு மூன்று முறை அவரது கதை திருத்தப்பட்டு எனக்கு அஞ்சல் செய்யப்படும். இது குறைந்தது இரண்டு வாரங்களுக்குத் தொடரும். அவருக்குத் தன் கதை நிறைவு பெற்றுவிட்டது என்ற நம்பிக்கை வருவதற்குள் எனக்கு அவரது கதை மனப்பாடமாகிவிடும். அப்புறமும் திருத்தங்கள் தொடரும்.

முன்னாவது பரவாயில்லை, அச்சிட்டு வந்து விட்டால் ஒன்றும் பண்ண முடியாது, இப்போது எல்லாம் மென்பொருள்தானே, நினைத்த திருத்தங்களை நினைத்தபோது செய்து கொள்ளலாமே, நீங்கள் செய்வீர்களா என்று சில எழுத்தாளர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அதில் ஜான் பான்வில் என்பவர் சொன்னது படிக்க நன்றாக இருந்தது-
"
இது ஒரு சுவையான கேள்வி. ஏன், நாம் காகிதத்தில் திருத்தியே மீண்டும் பதிப்பிக்கலாமே என்ற எண்ணம்தான் முதலில் தோன்றியது- ஆடன் தன் கவிதைகளில் பலவற்றைத் திருத்தி மீண்டும் பிரசுரம் செய்திருக்கிறார். எனவே, முன் எப்போதும் இல்லாத ஒன்றை இந்த புதிய தொழில்நுட்பம் நமக்கு சாத்தியப்படுத்தி உள்ளது என்று நான் நினைக்கவில்லை. என்ன ஒன்று, இப்போது திருத்தங்களை செய்வது சுலபமாகவும் செலவு குறைவாகவும் இருக்கிறது.

"என்னைப் பொருத்தவரை என் பழைய ஆக்கங்களுக்குத் திரும்புவது என்பது என்னால் தாள முடியாத ஒன்று. என் பான்வில் புத்தகங்கள் என்னை எதிர்நோக்கி நிற்கும் அவமானங்கள் என்று நான் இதற்கு முன் பலமுறை சொல்லியிருக்கிறேன். இது தவறாக புரிந்து கொள்ளப்படலாம்: நம் எல்லாருக்கும் தெரியும், என் புத்தகங்கள் மற்ற எல்லாருடைய புத்தகங்களையும்விட சிறந்தவை, என் திறமையை நினைத்துப் பார்த்தால் மட்டுமே அவை தோல்விகள். என்னால் அவற்றின் குறைகளை மட்டுமே பார்க்க முடிகிறது. நான் பூரணத்துவத்தைத் தேடிச் செல்கிறேன், அது கிடைக்காத விஷயம். பெக்கட் சொல்கிற மாதிரி, "மீண்டும் விழு, இன்னும் நன்றாக விழு". அதுதான் கலைஞனின் விதி. எனவே என் கடந்த கால தோல்விகளை இனி வரும் தலைமுறைகளுக்குக் கொடையாய் கொடுத்துவிட்டு இனி என்னால் எவ்வளவு நன்றாக விழ முடியுமோ அவ்வளவு நன்றாக விழ நான் முயற்சிக்கிறேன்.

2/8/11

மாற்றம் என்பது நிலைத்திருப்பதே...

என் கணக்கு சரியாக இருந்தால், இந்த ப்ளாகுக்கு ஏழு வாசகர்கள் இருக்கிறார்கள். உக்ரேனிய வாசகரைக் கடந்த ஒரு வாரமாகக் காணவில்லை; ஆஸ்திரேலிய வாசகர் அவ்வப்போது தலை காட்டுகிறார்; போட்ஸ்வானா வாசகர் தொடர்ந்து இங்கு நடப்பதை அவதானித்து வருகிறார். சர்வதேச நண்பர்கள் மூவருக்கும் நன்றி.

உக்ரேனிய வாசகரை இழந்து விட்ட நிலையில் தற்போது மற்ற இரு தேசங்களையும் சேர்ந்த வாசகர்களுக்காக எழுத வேண்டியிருக்கிறது; ஆஸ்திரேலிய வாசக அன்பரின் மௌன சம்மதத்தைப் பெற்றதாக நினைத்துக் கொண்டு போட்ஸ்வானா தேசத்தைச் சேர்ந்த அன்பருக்காக ஆப்பிரிக்க விவகாரங்களை எழுதவிருக்கிறேன்,..

கென்யாவைச் சேர்ந்த வஞ்சிக்கு நியாச்சே என்ற பெண் ஜெஸ்டாட் தெரபிஸ்ட் எழுதியுள்ள சில விஷயங்கள் கவனிக்கத்தக்கன-

நான் வளர்ந்த கென்யாவில் ஒரு வானிலை நிகழ்வு ஏற்படுவதுண்டு. அதைக் குரங்குத் திருமணம் என்று அழைப்போம். இதைக் காட்சிப்படுத்திப் பாருங்கள்: கண்ணைக் கவரும் கதிரொளி, உருண்டு திரண்ட மேகங்கள், மெல்லிய தூறல் முதல் வானைப் பிளந்து கொட்டும் மழை, சில சமயங்களில் வானவில். இங்கிலாந்தில் இதை சன்ஷவர் என்று அழைப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஹ்ம்ம்ம்ம்ம்... என் "வாழ்கைக் கதையை" மெய்யாக நான் நினைக்கத் துவங்கும்போது என் உள்ளத்தில் இத்தகையே நிகழ்வே ஏற்படுகிறது. என்னால் வெயிலை உணர முடிந்தாலும் நான் நனைவதைத் தவிர்க்க முடிவதில்லை, வானவில்லின் முடிவில் உள்ள வண்ணங்கள் என் வாழ்வில் வரவே வராதோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

நான் அனுபவித்துத் தீர்ப்பதையும் முயன்றிருக்கிறேன், வைராக்கியத்தையும் முயன்றிருக்கிறேன், ஆன்மீக சுத்திகரிப்பையும் சாமியாடித் தீர்வையும் முயன்றிருக்கிறேன். என் வாழ்வை விவரிக்கும் வாக்கியங்களை மாற்றி எழுதும் முயற்சியில் நான் அவற்றை இன்னமும் ஆழ எழுதியிருக்கிறேன் என்பதை ஜெஸ்டாட் தெரபியின் நடைமுறை பயிற்சியின்போது அறிகையில் நான் அடைந்த ஆச்சரியத்தை நினைத்துப் பாருங்கள். நான் பெஸ்ஸர் (1970) என்பவர் எழுதிய "மாற்றத்தின் விடையிலிக் கோட்பாடு" என்ற ஆய்வுக்கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.

ஒரு நீண்ட கதையைச் சுருங்கச் சொல்வதானால், நான் நானாக எவ்வளவுக்கு இருக்கிறேனோ, அவ்வளவுக்கு என்னில் மாற்றம் ஏற்படுகிறது: புத்துயிர்ப்பும் இவ்வாறே நிகழ்கிறது; இதற்கு மாறாக, நான் எவ்வளவுக்கு மாற்றமடைய முயற்சிக்கிறேனோ, அவ்வளவுக்கு மாற்றம் கடினமாகிறது.
இதற்கும் இலக்கியத்துக்கும் நம் ப்ளாகுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கும் அன்பர்கள் ஹெட்டரைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்: புனைவின் வேர்கள் நினைவில்- நினைவின் வேர்கள் புனைவில்...

1/8/11

இலக்கணப் பிழைகளும் நம்பகத்தன்மையும்

எப்போதும் எழுத்தில் நம் கண்களை முதலில் கவர்ந்து நமக்கு எரிச்சலூட்டுவது எழுத்துப் பிழைகளே. அதற்கடுத்தபடி, இலக்கணப் பிழைகள். எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும், சுவாரசியமில்லாத, முதிர்ச்சியில்லாத நடையும் நம்பகத்தன்மைக்கு எதிராக இயங்குகின்றன. நான் இந்தக் கட்டுரையை சுவாரசியமாக எழுதினால், நீங்கள் தொடர்ந்து படிக்கக்கூடும், சில விஷயங்களை நம்பவும் கூடும். ஆனால், படிக்கும்போதே இவனுக்கு ஒன்றும் தெரியாது என்கிற மாதிரி எழுதினால் நான் உண்மையைச் சொன்னாலும் நீங்கள் நம்பப் போவதில்லை.

பழைய கட்டுரைதான்- நன்றாக எழுதப்பட்ட எதிர்மறை விமரிசனங்கள், மோசமாக எழுதப்பட்ட ஆதரவு விமரிசனங்களைக் காட்டிலும் சந்தையில் பொருட்களை விற்கிறதாம். இது எந்த அளவுக்குப் போய் விட்டதென்றால் ஜப்போஸ் என்ற வணிக தளம் பல நூறாயிரம் டாலர்களை தன் தளத்தில் உள்ள பின்னூட்டங்களின் இலக்கணம் மற்றும் எழுத்துப் பிழைகளை நீக்குவதற்கு மட்டும் செலவிடுகிறதாம்.

பிழையற்ற நடையின் முக்கியத்துவத்தை அறிய கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

அழகின் சிறு ஒளி

எண்பதாயிரம் யூரோ மதிப்புள்ள கடலூன்யா சர்வதேசப் பரிசைப் பெற்ற ஹரூகி முரகாமி ஆற்றிய, பெருமளவில் அணுசக்திக்கு எதிரான, உரையில் என்னைக் கவர்ந்த பகுதி-
ஜப்பானிய மொழியில் மூஜோ (無常) என்ற சொல் உண்டு. எதுவும் நிலைத்திருப்பதில்லை என்பதே அதன் பொருள். இந்த உலகில் பிறந்தவையனைத்தும் மாறுதலுற்று மறைந்தே போகும். இந்த உலகில் நமக்குச் சாரமாய் நித்தியமாகவோ நிலையானதாகவோ எதுவுமில்லை. உலகைக் குறிந்த இந்தப் பார்வை பௌத்தத்திலிருந்து பெறப்பட்டது, ஆனால் மூஜா என்னும் கருத்துரு ஜப்பானியர்களின் ஆன்மாவில் தீத்தழும்பாய் உருவேற்றம் பெற்றுள்ளது, அது ஜப்பானிய இன பொது புத்தியில் வேர் கொண்ட ஒன்று.

"எல்லாம் இப்போது போயின" என்ற எண்ணம் விரக்தியை வெளிப்படுத்துகிறது. இயற்கைக்கு எதிராகச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம். ஜப்பானிய மக்கள் இந்த விரக்தியில் அழகின் வெளிப்பாட்டைக் கண்டுள்ளனர்.

வேனிற்பருவத்தின் செர்ரி மலர்ச் செறிவை, கோடையின் விட்டில்பூச்சிகளை, இலையுதிர் காலத்தின் செவ்விலைகளை நாங்கள் நேசிக்கிறோம். அவற்றை பேராவலுடன் கூட்டம் கூட்டமாகக் கண்டு ரசிப்பதை ஒரு மரபின் தொடர்ச்சியாக செய்வதை நாங்கள் இயல்பான விஷயமாக நினைக்கிறோம். செர்ரி மலரும் இடங்கள், விட்டில் மற்றும் சிவந்த இலைகள் தத்தம் பருவங்களில் சிறப்பிக்கப்படும் இடங்களில் ஹோட்டல்களில் முன்பதிவு கிடைப்பது எளிதல்ல, அங்கு கூட்டம் கூட்டமாக மக்கள் பயணம் வந்து கூடியிருப்பதை எப்போதும் காண்கிறோம்.

ஏன்?

செர்ரி மலர்கள், விட்டில் பூச்சிகள், செவ்விலைகள் தங்கள் அழகை வெகு விரைவில் இழக்கின்றன. இந்த மகத்தான கணத்தின் தரிசனம் பெற நாங்கள் வெகு தொலைவு பயணம் செய்கிறோம். அவை வெறுமே அழகாக மட்டுமில்லை, இப்போதே அவற்றின் அழகு மறையத் தொடங்கி விட்டது, அவற்றின் சிறு ஒளியையும் அழகின் பிரகாசத்தையும் இழக்கத் துவங்கி விட்டன என்பதை உறுதி செய்து கொள்வதில் சிறிது நிறைவடைகிறோம். அழகின் உச்சம் தொட்டுக் கடந்து செல்லப்பட்டு மறைந்து விட்டது என்ற உண்மை எங்கள் மனதுக்கு சாந்தியளிக்கிறது.