3/1/11

இலக்கியத்தின் வரைபடம்

நானே இதற்கு முன் ஓரிரு விமரிசனங்கள் எழுதிவிட்டு, உனக்கெதற்கு இந்த வீண் வேலை என்று வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்- படைப்பு அதன் வாசகனுடன் நேரடியாக உரையாட வேண்டுமாம், அதன் பொருளும் முக்கியத்துவமும் அவரவரே தீர்மானித்துக் கொள்ள வேண்டிய ஒன்றாம்- இன்னும் என்னென்னவோ சொல்லி, நான் ஏதோ அடுத்தவன் பர்சில் இருந்து பணத்தைத் திருடி விட்ட மாதிரி வசவு விழுந்தது. ஆனால் எனக்கென்னவோ விமரிசனம் என்பது அவசியம் என்றுதான் தோன்றுகிறது.

ந்யூ யார்க் டைம்ஸில் விமரிசனத்தின் முக்கியத்துவம் குறித்து ஆறு கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றின் சாரத்தை மட்டும் தமிழில் சுருக்கமாகத் தருகிறேன்.

வாசகர்கள் தனிமையில் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்த காலம் போயிற்று, இப்போது ஒரு புத்தகத்தைக் கையில் எடுக்கிற வாசகன் அந்தப் புத்தகத்தோடும் அதன் சக வாசகர்களோடும் உரையாடுகிறான், இணையம் பல குரல்களில் பேசுகிறது அவனுடன். இங்கு ஒரு விமரிசகனுக்கு இனி என்ன வேலை இருக்க முடியும் என்று கேட்கிறார் ஸ்டீபன் பர்ன்ஸ்

இனியும் அவனால் பண்பாட்டின் கதவுகளின் காப்பானாக இருக்க முடியாது- சமகாலம் ஒரு திறந்த புத்தகமாக இருக்கிறது. எது நல்ல படைப்பு என்று தரம் பிரித்துத் தருகிற இடத்தில் ஏகப்பட்ட நெரிசல்- இலக்கியமே மூச்சாய் வாழ்ந்து நல்ல புத்தகங்களைக் கை காட்டி இலக்கியத் தரத்தை நிறுவி பொது புத்தியைத் தன் எழுத்தால் பண்படுத்த நினைக்கிற விமரிசகனுக்கு இன்று வேலையில்லை. வாசகர்கள் தமக்குள் உரையாடித் தங்கள் பண்பாட்டின் தரங்களை நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.

விமரிசகனுடைய கை ஓங்கியிருந்த காலம் எழுத்தாளனுக்கு சாதகமாயில்லாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும்- தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் ஒரு படைப்பு வாசகனை சென்றடைவதை தடுக்கக் கூடியனவாக இருந்தன. எப்போதும் விமரிசகன் விளிம்பில் நிற்க வேண்டியவன், ஆனால் அவன் மையத்தில் தன்னை இருத்தி வைத்துக் கொள்ளும் சூழல் முன்னர் இருந்தது. இப்போது இல்லை. அந்த இடத்துக்கு வாசகர்கள் வந்து விட்டது நல்லதுதான்.

அப்படியானால் விமரிசனத்துக்கு இனி இடமில்லையா? இருக்கிறது. அடிப்படையில் விமரிசகனின் வேலை பரவலாக கவனிக்கப்படாமல் இருக்கிற படைப்புகளை அடையாளம் காட்டுவதே. இதைத் தேர்ந்த விமரிசகனையன்றி வேறு யாராலும் செய்ய முடியாது.

அதே போல் ஒரு குறிப்பிட்ட புத்தகம் எந்த மரபில் வருகிறது, எந்த புத்தகங்களை ஒத்திருக்கிறது, எவ்வகையில் அது வேறுபடுகிறது என்பதையும் அவன்தான் விவாதித்தாக வேண்டும். மனதின் இயக்கத்தைப் புதினங்கள் பிரதிபலிப்பதால் ஆக்கங்களின் ஆதாரங்கள், அவற்றுக்கிடையே இருக்கிற ஒற்றுமை வேற்றுமைகள், இவற்றை விவாதிப்பது அவனது அவசியமான பணியாக ஆகி விட்டிருக்கிறது. சுருக்கமாக சொன்னால், பண்பாட்டின் காவலனாக இருந்த விமரிசகன் இனி இலக்கியத்தின் வரைபடம் எழுதுகிறவனாக இயங்க வேண்டியிருக்கிறது.

இதில் என் கருத்து என்ன என்பதையும் சொல்ல வேண்டும்- ஓரளவுக்கு புத்தகங்களைப் பற்றி படித்தவர்கள் வேண்டுமானால் யாரும் எனக்கு எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை என்று சொல்லலாம். ஆனால் வெறுமே புத்தகங்களை மட்டும் படிப்பவர்கள் அவற்றைக் குறித்த முரண்பாடுகளில்லாத பார்வையை உருவாக்கிக் கொள்ள மற்றவர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. அதை நண்பர்கள் மூலம் செய்து கொள்ளலாம், ஆனால் நம் எல்லார்க்கும் தேர்ந்த வாசகர்கள் நண்பராக அமையும் கொடுப்பினை இல்லை. தேர்ந்த ஒரு விமரிசகரை அப்படி ஒரு துணையாக தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது- அவர் பண்பாட்டின் வாயில்காப்பானாக ஒருக்கலாம், வரைபடத்தை விரித்துக் காட்டுபவராக இருக்கலாம்- எப்படிப்பட்டவரை நம் துணையாக ஏற்றுக் கொள்கிறோம் என்பது நம் தெரிவே யாரும் நம்மை இந்த விஷயத்தில் கட்டாயப்படுத்துவதில்லை, இல்லையா?

சிலிகான் ஷெல்ப் என்ற தளத்தை நீங்கள் தொடர்ந்து படித்து வந்தால், ஏன் விமரிசகர்கள் வேண்டும் என்பதைம், விமரிசனப் பார்வை என்பது எப்படி மெல்ல மெல்ல உருவாகிறது என்பதையும் நிகழ் காலத்தில் காணலாம்.