7/6/11

நாவல்கள்- காலப் பயணம்

வழக்கமாக இங்கே சிறுகதைகளைப் பற்றிதான் எழுதுவது- அவ்வப்போது கவிதை- எப்போதாவது நாவல் என்று இருக்கிறது. ஆனால் இன்று படித்த ஒரு விஷயம் மிகவும் சுவையாக இருக்கிறது. முடிந்தால் முழு கட்டுரையையும் இங்கே படித்துப் பாருங்கள். சமகால நாவல்களை எழுதுவது சாத்தியமா என்ற கேள்வியை விவாதிக்கிறார் க்ரஹாம் ஸ்விப்ட் (Graham swift).

"நாம் கடந்த காலத்தில் எழுதப்பட்ட நாவல்களைப் படிக்கும்போது அவை அவர்களுக்கு சமகாலத்தில் இருந்த உலகைக் குறித்து எழுதப்பட்டதாக நாம் நினைத்துக் கொள்ளக் கூடும்- டிக்கன்ஸின் டிக்கன்ஸியம் அவர் தன் சமகால நிகழ்வுகளோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பதில் சார்ந்திருக்கிறது என்று நினைக்கிறோம். உண்மையைச் சொல்வதானால், அவரது நாவல்கள் பெரும்பாலும் ஒரு பத்தாண்டு அல்லது அதைவிட அதிக காலம் பின்நோக்கிப் பார்க்கின்றன. டால்ஸ்தாயின் போரும் அமைதியும் ஆயிரத்து எண்ணூற்று அறுபதுகளில் எழுதப்பட்டது, ஆனால் கதைக்களம் நெப்போலிய யுத்தகாலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. போர் தனது கருக்களில் ஒன்றாக இருந்ததால், டால்ஸ்டாய் ஆயிரத்து எண்ணூற்று ஐம்பதுகளின் மத்தியில் நிகழ்ந்த க்ரிமிய போரைப் பற்றி எழுதியிருக்கலாம். அது அவரது நேரடி அனுபவமாகவுமிருந்தது. க்ரிமியா பற்றி அவரது செபஸ்டபோல் என்ற புத்தகத்தில் அவர் எழுதவும் செய்தார், ஆனால் அது ஒரு அற்புதமான செய்தித் தொகுப்பு. டால்ஸ்டாய் இறக்கும்போது ப்ரௌஸ்ட் ஒரு நாவல் தொடரைத் துவங்கிக் கொண்டிருந்தார்... அதை அவர் தன் வாழ்நாள் முழுதும் தொடர்ந்தார், எனவே அதில் நிகழ்காலம் என்பதே இருப்பதற்கில்லை. அந்த நாவிளின் பெயரே நாவல் ஒரு வடிவம் என்ற வகையில் எதைக் குறித்து தன்னியல்புகலில் ஒன்றாய் இருக்கக்கூடும் என்பதைச் சொல்கிறது- காலத்தின் ஓட்டம்...

நாவல்கள் காலம் செல்வதைப் பேசுகின்றன என்று சொல்கிறார் ஸ்விப்ட். யோசித்துப் பார்த்தால் அதுவும் சரியாகவே இருக்கிறது. அதன் வடிவம், காலத்தின் பரிமாணங்களைப் பேசத் தகுந்த ஒன்று, இல்லையா?

காலத்தின் நிலையாமையை விவரித்து ஆய்வு செய்வது நாவல்கள் செய்யக்கூடிய முதன்மையான பணிகளில் ஒன்றாக இருக்கலாம். அவை ஒரு நீண்ட பார்வையைக் கைகொள்ளத் தக்க சாதனமாக இருக்கின்றன, மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் காட்ட உகந்தவை, காலத்தால் இயக்கப்படும் மானுட நடவடிக்கைகள் அதற்கேற்ற களம். ஆனால் இதனாலெல்லாம், கறாராகப் பேசுவதானால் சமகாலம் குறித்து இருக்கவே முடியாது என்று சொன்னாலும் நாவல்கள் தமக்கென்று ஒரு சமகாலம் கொண்டவையாக இருக்க முடியாது என்று பொருள் கொள்ள முடியாது. வெறுமே சமகாலம் என்றிருப்பது தரக்கூடிய பரவசத்தைவிட உச்சமான பரவசம் ஒன்றை அவை தம்முள் கொண்டிருக்க முடியாது என்று சொல்வதற்கில்லை- அவற்றுக்கு உடனடித்தன்மை இருக்கிறது.

நூற்றைம்பது ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட ஒரு நாவலை, அதுவும் எழுதப்பட்ட ஆண்டைவிட ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட கதையை சொல்லும் நாவலை, நாம் ஏன் இரட்டை சரித்திரத் தாவலை சாதித்துப் படிக்க வேண்டும்? டால்ஸ்டாயின் எழுத்தில் இருக்கும் 'அப்போது' உயிருள்ள 'இப்போது' என்றாகிவிட்டதை நாம் வாழ்ந்துணரும் வகையில் விவரிக்கக்கூடிய ஆற்றல அவருக்கு இல்லாவிட்டால் இது எப்படி சாத்தியம்? நமக்கிருப்பது போலவே அவர்களுக்கும் இருந்திருக்கும் என்று நாம் நம்புகிறோம். பரிதாபத்துக்குரிய சமகால ஜீவிகளாக நாம் இருப்பதிலிருந்து நம்மை விடுவித்து அக்கணமே காலத்தைக் கடந்து நம்மை இணைக்காவிட்டால் இது எப்படி சாத்தியம்? "நானும் இங்கிருந்திருக்கிறேன்" என்ற விவரிக்க முடியாத, உறையவைக்கும் உணர்வை நம்மில் கிளர்த்தெழச் செய்யாவிட்டால் நாம் வேறு எதற்காக வேறொரு காலத்தைப் பேசும் எந்தவொரு நாவலை நோக்கியும் பயணிக்க வேண்டும்?