4/11/11

சீன இணைய இலக்கியச் சூழல்

சீன இலக்கியச் சூழலைப் பற்றி கேள்விப்படும் விஷயங்கள் பிரமிக்க வைப்பனவாக இருக்கின்றன. நாம் சீனா என்றால் இளப்பமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்- ஆனால் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கடும் அடக்குமுறையை எதிர்கொண்டு நம்மால் நினைத்தும் பார்க்க முடியாத பேரிழப்புகளையும் தியாகங்களையும் தாங்கி வாழும் பண்பாடு. படைப்பூக்கம் இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகள், தங்களுக்கு ஏற்ற தீர்வுகள் காண நிர்பந்திக்கப்பட்ட மக்கள். இன்று ஓரளவு சுதந்திரக் காற்று வீசத் துவங்கியிருக்கிறது: இதற்கே என்ன ஒரு மறுமலர்ச்சி என்று வியப்பாக இருக்கிறது.


சீனாவில் இணையத்தில் ஏராளமான தொடர்கதைகள் எழுதப்படுகின்றனவாம். அவற்றை ஏறத்தாழ பத்தொன்பது கோடியே ஐம்பது லட்சம் பேர் படிக்கிறார்களாம்- சகல விதமான கதைகளும் எழுதப்படுகின்றன, இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் நாற்பது சதவிகிதத்தினர் இந்தக் கதைகளைப் பதிப்பிக்கும் தளங்களின் வாசகர்களாக இருக்கிறார்கள். இது எழுத்தாளர்களுக்கும் இணைய தளங்களுக்கும் பணம் சம்பாதித்துத் தருகிறது.

இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்: நான் சென்னையில் நடந்த இண்டிபிளாக்கர் சந்திப்புக்குச் சென்றிருந்தேன். சந்திப்பின் முடிவில் நடைபெற்ற கலந்துரையாடலில், "தமிழில் எழுதும் பிரபல வலைபதிவர்களில் ஒருவர் சராசரியாக இணையத்தில் தன் எழுத்தின் மூலம் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அளிக்கப்பட்ட பதில், "நாங்கள் இதை தமிழ் பற்று காரணமாகவே செய்கிறோம். இதில் எங்களுக்கு ஒரு பைசா வருவதில்லை. வலைப்பதிவர் என்றில்லை, எந்த ஒரு எழுத்தாளனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் தமிழில் எழுதிப் பிழைக்க முடியாது: திரைப்படங்களில் பணியாற்றி புகழ் பெற்றவர்களுக்கு வேண்டுமானால் இது சாத்தியமாக இருக்கலாம்". இது உண்மை என்று நினைக்கிறேன், ஆனால் எவ்வளவு வேதனையான விஷயம் பாருங்கள்.

சீனா விஷயத்துக்கு வருகிறேன். அங்கேயும் இந்த மாதிரி வலை பதிவர்கள் இலவசமாகக் கிடைக்கும் வலை மனைகளில் தங்கள் கதைகளைத் தொடராக எழுதுகிறார்கள். அவற்றை யாரும் இலவசமாகப் படிக்கலாம். ஆனால், தொடர்கதை ஓரளவு பிரபலமானதும், சில சாம்பிள் அத்தியாயங்களைத் தவிர, தொடர்கதை முழுவதுமே விஐபி பிரிவுக்கு மாற்றப்படுகிறது. தொடர்கதையின் இனி வரும் அத்தியாயங்களை காசு கொடுத்துதான் படிக்க வேண்டும்.

ஒரு லட்சம் சொற்களுக்கு இரண்டு முதல் மூன்று யுவான் வாசக கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது (இன்றைய நிலவரத்தில் இது பதினாறு முதல் இருபத்து இரண்டு ரூபாய் என்று நினைக்கிறேன்). ஒரு லட்சம் சொற்களை எழுதினால் வெறும் இருபது ரூபாய்தான் கிடைக்குமா என்று வருந்த வேண்டியதில்லை: ஏறத்தாழ பத்தொன்பது கோடியே ஐம்பது லட்சம் பேர் படிக்கிறார்கள் என்று சொல்லும்போது, இது எழுத்தாளர்களுக்கு நல்ல வருவாய் தரும் அமைப்பாக இருக்கிறது. உதாரணத்துக்கு ஹுவாங் வீ என்ற புகழ்பெற்ற இணைய எழுத்தாளர் (பதிவர் என்றுதான் நியாயமாக சொல்ல வேண்டும்) தன் எழுத்தின் மூலம் பத்து லட்சம் யுவான்கள் சம்பாதிக்கிறாராம். இது ஏறத்தாழ ஏழே முக்கால் லட்ச ரூபாய்! - இதனால் பல இணைய தொடர்கதைகள் பலபத்து லட்சம் சொற்களையும் தாண்டி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன.

இதில் இன்னொரு திகைக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் இப்படி எழுதப்படும் கதைகள் பிரபலமடைந்தபின் தொலைகாட்சி தொடர்களாகவும் கேம்களாகவும் மறு அவதாரம் எடுக்கின்றன என்பதுதான்.

இந்த விஷயம் அனைத்தும் இங்கே இருக்கின்றன- PUBLISHING PERSPECTIVES.

தமிழில் எழுத்தாளனே தன் புத்தகத்தைக் கூவி கூவி விற்க வேண்டியிருக்கிறது: அவன்தான் என்றில்லை, தொடர்ந்து தன் வாசகர்களுடன் உரையாடுபவர்களும்கூட நல்ல வேலைகளில் இருந்து கொண்டு லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் இலவச இணைய இலக்கியவாதிகளின் கேலிக்கும் கேளிக்கைக்கும் தப்புவதில்லை. எழுத்தாளர்களின் தேவை இலக்கியவாதிகளைவிட அதிக அளவு வாசகர்கள்தான். ஆனால், எல்லாமே தமிழனுக்கு என்றால் தனிதானே!