31/10/11

துணுக்கு

பில் கேட்ஸ் தன் தளத்தில் புத்தக மதிப்புரைகள் எழுதி வருகிறார்- மதிப்புரைகளை இங்கே காண்க..

எந்த ஒரு நுட்பமான வாசகனைப் போலவே அவரும் படிக்காத புத்தகங்களின் அட்டைகளைப் பார்த்து மகிழ்கிறார்/ மலைக்கிறார்- "இதை எல்லாம் படிப்பதற்காக எடுத்து வைத்திருக்கிறேன்" என்று பெருமையடித்துக் கொள்கிறார்.

ஆனால் நமக்கும் அவருக்கும் உள்ள வேறுபாடு அவர் தான் வாசிக்கும் புத்தகங்களை வகைப்படுத்தி வைத்திருப்பதில் இருக்கிறது- "Prime Movers of Globalisation", "Lords of Finance" போன்ற புத்தகங்கள் பர்சனலாம்!

(நம்மைப் போலவே அவரது பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் மிகக் குறைவாகவே வருகின்றன- பதிவுலகில் சமத்துவம் நிலவுகிறது என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது)

29/10/11

சமகால அமெரிக்க சிற்றிதழ்கள்

அமெரிக்காவில் உள்ள சிறு பத்திரிக்கைகள் எப்படிப்பட்ட படைப்புகளை ஆதரிக்கின்றன என்ற கட்டுரை ஒன்றை ஒரு ஆங்கில இணைய இதழில் படித்தேன். இந்தக் கட்டுரையை எழுதியவர் அதன் சாரத்தை இங்கே தருகிறார்..

தமிழகத்தில் உள்ள சிறுபத்திரிக்கைகளில் எழுதுபவர்களுக்கு இந்தக் குறிப்புகள் பயனுள்ள கையேடாக அமையலாம்.

27/10/11

ஆர்க்டிக் சாகசம்

ஆங்காங்கே கண்ணில் படும் ஆங்கில இணைய இதழ்களைத் தொகுத்து வைக்கலாம் என்றிருக்கிறேன்.

La Petite Zine என்ற இணைய இதழ் பாருங்கள்.

எரிதழல் கவிதைகள் பதிப்பிக்க விரும்புகிறார்கள். உரைநடையானால் ஆயிரம் சொற்களுக்குள் கட்டுரையை முடித்துக் கொள்ள  வேண்டுமாம். நல்ல கொள்கை- போரடிக்காமல் இருப்பதில் பிடிப்பதைப் பதிப்பிக்கிறார்கள்.

சான்றுக்கு ஒன்று.



ஆர்க்டிக் சாகசம்.
- ஸ்டெபானி பார்பர்

அது வெண்மையில் வெண்மையாய்
இருந்திருக்க வேண்டும்- பனியில் ஒரு பனிக்கரடி.
ஆனால் அது 3-டியில் இருந்ததால், என்னிடம் கண்ணாடிகள் இல்லாததால்,
நீலமும் சிவப்புமாய் இரட்டித்திருந்தது.
அப்போது இவ்வளவு சில்லிட்டிருக்கவில்லை, ஆனால்
அது தன் தனிமையைக் காத்திருந்தது.

ஜோரான் ஜிவ்குவிச்

த்ரான்ஸ்த்ரோமர் என்று ஒருத்தர் இருப்பதே எனக்கு அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்ததும்தான் தெரிய வந்தது. இத்தனைக்கும் அவரது கவிதைகள் இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளனவாம் :(

இனியும் இப்படி இருக்கக் கூடாது என்று இணையத்தை மேய்ந்ததில் ஜோரான் ஜிவ்குவிச் என்று ஒருத்தர் இருக்கிறார் என்று கேள்விப்படுகிறேன். செர்பிய எழுத்தாளராம். இன்றைய உலக இலக்கியம்  என்ற சஞ்சிகையின் அண்மைய இதழில் அவருக்கு ஒரு சிறப்புப் பகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள். அதனால் அவர் பெரிய ஆள்தான் என்று தெரிய வருகிறது.

நண்பர்கள் வாசித்து உய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். யாரேனும் அவரது படைப்புகளை மொழி பெயர்த்தால் நலம்.


14/10/11

திருப்பு முனை

பதிப்புத்துறை மேற்கில் செல்லும் திசையைப் பார்த்தால் இங்கு புத்தகம் வெளியிடுபவர்கள் நிறைய யோசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றும் நம் பேர் அச்சில் வருவதைப் பார்ப்பதில்தான் ஆனந்தம் இருக்கிறது என்றாலும்- அது ஒரு இறவாமையை சுட்டுகிறது, கணினியின் திரையில் உள்ள எழுத்துகளைப் போல் அவ்வளவு சீக்கிரம் மறையாதிருப்பதால். மற்றபடி, புத்தகத்தை அச்சிடுவது, அதை கடைக்காரர்களிடம் விற்பனைக்குத் தருவது, எல்லாவற்றுக்கும் மேலாக- அதன் விற்காத பிரதிகளை ஒரு இடத்தில் சேகரித்து வைப்பது, இதுபோன்ற பெரிய தலைவலிகளை ஈபுக்குகள் தீர்த்து வைக்கின்றன.

இந்த செய்தியைப் பாருங்கள்- பரபரப்பாக விற்பனையாகும் புத்தகங்களை எழுதும் பாரி ஐஸ்லர் , தன் அடுத்த இரண்டு புத்தகங்களுக்கு ஐந்து லட்சம் டாலர்கள் தருவதாகச் சொன்ன பதிப்பகத்தை நிராகரித்து, தானாகவே ஈபுக்காக வெளியிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதன்பின் அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, சென்ற மாதம் அவர் எழுதிய அண்மைய ஈபுக்கைப் பதிப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில் இம்மாதம் அச்சுப் பிரதி வெளியாக இருக்கிறது.

"புத்தகங்களை பதிப்பிப்பது எனக்கு ஒரு தொழில், சித்தாந்தமல்ல," என்று சொல்லும் ஐஸ்னர், தனது ஈபுக் முந்தைய புத்தகங்களின் மொத்த விற்பனையை ஒரே மாதத்தில் தூக்கி சாப்பிட்டு விட்டது என்று மகிழ்கிறார்- எவ்வளவு குறைந்த விலையில், எவ்வளவு தரமான வடிவில், எவ்வளவு விரைவில் எவ்வளவு அதிக வாசகர்களுக்குத் தன் புத்தகங்கள் கிடைக்கின்றனவோ அவ்வளவுக்கு அந்த வியாபார உத்தி வரவேற்கப்பட வேண்டியது என்பது அவரது நோக்கமாக இருக்கும் போலிருக்கிறது.

ஐந்து, பத்து ஆண்டுகளில் நம் ஊரிலும் நிலைமை இந்த மாதிரி ஆகி விடும் என்று நினைக்கிறேன். பதிப்பகத்துறையினர் விழித்துக் கொள்ள வேண்டும்- எழுத்தாளர்களுக்கான பொற்காலம் வரவிருக்கிறது. தமிழ் இலக்கியத்துக்கு இது ஒரு திருப்புமுனையாகவும் அமையலாம்.

செய்தி இங்கே- npr

10/10/11

ஷெல் ஷாக்குடு!

ஷெல்லி வாழ்க!

ஆங்கிலத்தில் ஏராளமான புக் பிளாக்குகள் இருக்கின்றன, இவை தவிர இலவசமாக தரமான இதழ்களும் இணையத்தில் வாசிக்கக் கிடக்கின்றன. சரி, படிப்பதுதான் படிக்கிறோம், ஊர் உலகத்தில் என்னதான் பேசிக் கொள்கிறார்கள் என்பதைப் பதிவு பண்ணி வைத்துக் கொள்வோம் என்றே இந்த ப்ளாகைத் துவங்கினேன். அவ்வப்போது கோபம், வருத்தங்களைத் தீர்த்துக் கொள்ளவும் இது பயன்பட்டு வருகிறது.

சென்ற நவம்பர் மாததில் இருந்து இந்த அக்டோபர் வரை, ஏறத்தாழ ஒரு ஆண்டில், இதுவரை 1778 ஹிட்டுகளைப் பெற்றுள்ளது இந்த ப்ளாக்- ஏதோ எதையும் எழுதவில்லை, அதனால் யாரும் படிக்கவில்லை என்றில்லை: இதுவரை 106 பதிவுகள் வலையேற்றப்பட்டுள்ளன. பதினொரு மாதங்கள் என்று பார்த்தால் உக்ரைன், ஆஸ்திரேலியா, போட்ஸ்வானா உட்பட உலகெங்கும் உள்ள தமிழர்களின் நல்லாதரவால் சராசரியாக மாதம் 161.6 ஹிட்கள், நாளொன்றுக்கு 5.39 ஹிட்கள், பதிவொன்றுக்கு 16.77 ஹிட்கள் என்ற அளவில் உலக இலக்கியத்தைப் பேசியுள்ளது இந்த ப்ளாக்.

நேற்று ஒரு மாபெரும் அதிசயம் நடந்தது. அதுவரை ஷெல்லிக்கு இவ்வளவு பெரிய வாசகர் வட்டம் இருப்பது தெரியாமல் போய் விட்டது- படம் சொல்லாத கதையை வார்த்தைகளா சொல்லி விடப் போகின்றன?


ஓராண்டு சாதனையில் ஐந்தில் ஒரு பங்கை ஒரே நாள் முறியடித்து விட்டது! இன்று மேலும் ஐம்பது அடிகள் விழுந்துவிட்ட நிலையில் இது எங்கே போய் முடியும் என்றே தெரியவில்லை.

ஷெல்லி இல்லாவிட்டால் என்னைப் போன்ற பிளாக்கர்கள் பரவலான கவனம் பெற வழியே இல்லை போலிருக்கிறது- தமிழ் நாட்டிலேயே அவருக்கு இத்தனை பவர் இருந்தால் அவர் பிறந்த ஊரில் ஷெல்லிதான் அப்பாடக்கராக இருப்பார் என்று நினைக்கிறேன்.

வாழ்க ஷெல்லி!


9/10/11

பாரதியை விடுங்கள், பாவம் ஷெல்லி.

எது இலக்கியம் என்று கேட்டால் ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்வார்கள், ஒருவர் வாழ்க்கையின் இலக்கைக் காட்ட வேண்டும் என்பார், இன்னொருத்தர் வாழ்வை உள்ளபடியே சொன்னால் போதும் என்பார். இது அவரவர் மனப்பாங்கைப் பொறுத்த விஷயம்- வாழ்க்கையின் பொருள் என்ன என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்? நீங்கள் எப்படிப்பட்ட ஆளாக இருக்கிறீர்கள் என்பதற்கொப்ப உங்களுக்கு அது பல்வேறு பொருட்களை உணர்த்தலாம்- அவை ஒன்றோடொன்று முரண்படக்கூட வேண்டியதில்

8/10/11

மோசக்கார உலகம்

ஏய்த்தல் குறித்த ஒரு புத்தக விமரிசனம் படித்தேன். அதில் உள்ள ஒரு இயற்கை நிகழ்வு குறித்த விபரம் இங்கிருக்கிறது.

விஷயம் இதுதான். ப்ளிஸ்டர் பீட்டில்கள் என்று ஒரு வகை பூச்சிகள் உள்ளன. இவற்றின் லார்வாக்கள் ஒன்று கூடி ஒரு பெண் தேனீயைப் போன்ற தோற்றம் தருகின்றன, அது மட்டுமல்ல, அதன் pheramoneஐயும வெளிப்படுத்துகின்றன. இந்தப் பெண் தேனீயைக் கூட ஆசையுடன் பறந்து வரும் ஆண் தேனீக்களைப் பற்றிக் கொள்கின்றன. இந்த லார்வாக்களின் எடை தாளாமல் விழும் ஆண் தேனீ, தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறது. ஆனாலும் சில பீட்டில்களை அவற்றால் அகற்றவே முடிவதில்லை. இந்த ஆண் தேனீ மெய்யான பெண் தேனீயைக் கூடும்போது,  ப்ளிஸ்டர்கள் பெண் தேனீயைத் தொற்றிக் கொண்டு, அதன் கூட்டுக்குள் போய், தேனீக்கள் கொண்டு வரும் சாப்பாட்டை உண்டு வளர்கின்றன!

இயற்கை எவ்வளவு கேவலமாக இருக்கிறது பார்த்தீர்களா, மனிதனைத் திட்டி என்ன பிரயோசனம்?

இதையெல்லாம் தன் புத்தகத்தில் எழுதியிருக்கிற ஆசியரிடம், ஒத்திசைவு (empathy) பற்றி நீங்கள் எழுதவேயில்லையே என்று கேட்டால், ஏயப்பதில் இந்த ஒத்திசைவு உணர்வுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கிறது, இதைப் பற்றி நான் ஏன் (குரு) பில் ஹாமில்டனிடம் "ஒத்திசைவு பற்றி என்ன சொல்வாய் பில்?" என்று கேட்டேன், அதற்கு அவர், "எம்பதியா? அப்படி என்றால்?" என்று கேட்டார், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்கிற மாதிரி, அதனால் நான் அதை அத்தோடு விட்டேன் என்கிறார்.

முன்னமே சொன்ன மாதிரி, மனிதர்களைச் சொல்லிக் குற்றமில்லை, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நூறு ப்ளிஸ்டர் பீட்டில்கள்கள் இருக்கின்றன போலும்.

7/10/11

செய்தி

துமாஸ் த்ரான்ஸ்த்ரேமர் என்ற எண்பது வயதான ஸ்வீடிஷ் கவிஞருக்கு இவ்வாண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள்.

அறுபது மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவாம். இருந்தாலும், இவர் யார் என்னவென்றே எனக்குத் தெரியாது- இவர் ஒரு உளவியல் மருத்துவர் என்பதே எனக்கு செய்தியாக இருக்கிறது.