14/10/11

திருப்பு முனை

பதிப்புத்துறை மேற்கில் செல்லும் திசையைப் பார்த்தால் இங்கு புத்தகம் வெளியிடுபவர்கள் நிறைய யோசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றும் நம் பேர் அச்சில் வருவதைப் பார்ப்பதில்தான் ஆனந்தம் இருக்கிறது என்றாலும்- அது ஒரு இறவாமையை சுட்டுகிறது, கணினியின் திரையில் உள்ள எழுத்துகளைப் போல் அவ்வளவு சீக்கிரம் மறையாதிருப்பதால். மற்றபடி, புத்தகத்தை அச்சிடுவது, அதை கடைக்காரர்களிடம் விற்பனைக்குத் தருவது, எல்லாவற்றுக்கும் மேலாக- அதன் விற்காத பிரதிகளை ஒரு இடத்தில் சேகரித்து வைப்பது, இதுபோன்ற பெரிய தலைவலிகளை ஈபுக்குகள் தீர்த்து வைக்கின்றன.

இந்த செய்தியைப் பாருங்கள்- பரபரப்பாக விற்பனையாகும் புத்தகங்களை எழுதும் பாரி ஐஸ்லர் , தன் அடுத்த இரண்டு புத்தகங்களுக்கு ஐந்து லட்சம் டாலர்கள் தருவதாகச் சொன்ன பதிப்பகத்தை நிராகரித்து, தானாகவே ஈபுக்காக வெளியிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதன்பின் அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, சென்ற மாதம் அவர் எழுதிய அண்மைய ஈபுக்கைப் பதிப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில் இம்மாதம் அச்சுப் பிரதி வெளியாக இருக்கிறது.

"புத்தகங்களை பதிப்பிப்பது எனக்கு ஒரு தொழில், சித்தாந்தமல்ல," என்று சொல்லும் ஐஸ்னர், தனது ஈபுக் முந்தைய புத்தகங்களின் மொத்த விற்பனையை ஒரே மாதத்தில் தூக்கி சாப்பிட்டு விட்டது என்று மகிழ்கிறார்- எவ்வளவு குறைந்த விலையில், எவ்வளவு தரமான வடிவில், எவ்வளவு விரைவில் எவ்வளவு அதிக வாசகர்களுக்குத் தன் புத்தகங்கள் கிடைக்கின்றனவோ அவ்வளவுக்கு அந்த வியாபார உத்தி வரவேற்கப்பட வேண்டியது என்பது அவரது நோக்கமாக இருக்கும் போலிருக்கிறது.

ஐந்து, பத்து ஆண்டுகளில் நம் ஊரிலும் நிலைமை இந்த மாதிரி ஆகி விடும் என்று நினைக்கிறேன். பதிப்பகத்துறையினர் விழித்துக் கொள்ள வேண்டும்- எழுத்தாளர்களுக்கான பொற்காலம் வரவிருக்கிறது. தமிழ் இலக்கியத்துக்கு இது ஒரு திருப்புமுனையாகவும் அமையலாம்.

செய்தி இங்கே- npr