29/10/11

சமகால அமெரிக்க சிற்றிதழ்கள்

அமெரிக்காவில் உள்ள சிறு பத்திரிக்கைகள் எப்படிப்பட்ட படைப்புகளை ஆதரிக்கின்றன என்ற கட்டுரை ஒன்றை ஒரு ஆங்கில இணைய இதழில் படித்தேன். இந்தக் கட்டுரையை எழுதியவர் அதன் சாரத்தை இங்கே தருகிறார்..

தமிழகத்தில் உள்ள சிறுபத்திரிக்கைகளில் எழுதுபவர்களுக்கு இந்தக் குறிப்புகள் பயனுள்ள கையேடாக அமையலாம்.


நான் புரிந்து கொண்டது சரியாக இருந்தால் பார்மலிஸ்டுகள் இப்படி சொன்னார்கள்: "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!" என்று விவேக் கடைசியாகப் பேசி ஷாட் ஓகே பண்ணும் தருணம் சிங்க்ரானிக்கான ஒன்று- அந்த கணத்தில் எப்படியோ இருந்த நான் இப்படியாக ஆவது ஏக காலத்தில் உணரப்படுகிறது. ஆனால் அதற்குப்புறம், விவேக் கோபப்படுவது டயாக்ரானிக்கான ஒன்று- எப்படியோ இருந்த நான் இப்படியாக ஆகி விட்டேன்: இரண்டுக்கும் இடைவெளி கடக்க முடியாததாகி விட்டது. இந்த வேற்றுமையை உணர்த்தும் விதமாகவோ என்னமோ அடுத்த காட்சியில் போஸ்டர் ஒட்டப்பட்டு விவேக் பலராலும் அவமானப்படுத்தப்படுகிறார்- அவரது வாழ்க்கை திரும்பிப் போக முடியாதபடிக்கு ஒரு முட்டுச் சந்தில் அவரை நிறுத்தி விட்டது. இந்தப் படத்தின் இயக்குனர் இவ்வகையிலாக ரஷ்யன் பார்மலிஸத்தைத் தன் திரைப்படத்தில் கையாண்டிருக்கிறார். அவர் நிச்சயம் அதிமேதாவியாகவே இருக்க வேண்டும், அன்னாருக்கு என் வந்தனங்கள்.

விஷயத்துக்கு வருகிறேன், மேற்கூறிய கட்டுரையை எழுதியவர் இலக்கியம் என்பது ஏக காலத்தில் வாசிக்கப்படும் ஒன்று என்று நம்புகிறார்: பழமையும் புதுமையும் ஏக காலத்தில் உணரப்படும் ஒன்று- பழமையின் பின்னணியில்தான் புதுமை உருவாகிறது. எந்த ஒரு படைப்பும் தன் களனாய் உள்ள மரபைக் காத்து, அதைக் கடந்து செல்லும் புத்தாக்கத்தையும் ஏக காலத்தில் நிகழ்த்துகின்றன. இது பற்றி இங்கே.

அவ்வகையிலான புதுமைகள் என்னென்ன அமெரிக்க சிற்றிதழ்களில் நிகழ்கின்றன என்று பன்னிரெண்டு விஷயங்களைப் பேசுகிறார் கட்டுரையாசிரியர். நான் முன் சொன்ன மாதிரி நாம் இதை அறிந்து கொண்டு தமிழிலும் நடைமுறைப்படுத்தியாக வேண்டும். எனவே, சிற்றிதழ்களில் எழுதுபவர்கள் இந்த அட்டவணையில் குறிப்பிடப்படும் வகையில் எழுதப்பட்ட ஆக்கங்களை இந்தக் கட்டுரையின் சுட்டியோடு இணைத்து அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிற்றிதழ் நடத்துபவர்களும் கவனிக்க.

நகைமுரண். உண்மையாக உளப்பூர்வமாக கதை சொன்ன காலம் மலையேறி விட்டது. உணர்ச்சிகளைத் திரட்டி நெஞ்சை அடைக்கும் கதைகளை எழுதுவதைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ள கதாசிரியர்கள் கவனிக்க- உங்கள் கதைகள் நவீன அமெரிக்க சிற்றிதழ் எடிட்டர்களின் தொண்டைகளை மட்டுமே அடைக்கும்: அவற்றை ஜீரணிக்க முடியாது என்பதல்ல கேள்வி, விழுங்கவே முடியாது. உள்ளத்தை உருக்கும் கண்களும் தழுதழுக்கும் குரலும் இனி வேலைக்காகாது: மேலுயர்ந்த புருவம், எள்ளி நகைக்கும் புன்னகை: இவையே இன்றைய கதைசொல்லியின் தேவைகள்.

ஏறத்தாழ அனைத்து அமெரிக்க சிற்றிதழ்களும் இணையம் சார்ந்து இயங்குவதால், நண்பர்களே, நீண்ட கதை கட்டுரைகளுக்கு இங்கு வேலையில்லை. முவ்வாயிரம் சொற்களுக்கு மேல் எதையும் நீங்கள் எழுதக் கூடாது. பொதுவாக ஆயிரத்து ஐநூறு முதல் இரண்டாயிரம் சொற்களில் நீங்கள் உங்கள் திறமையைக் காட்ட வேண்டும். சுருங்கச் சொல்லுதல் இன்று மதிக்கப்படுகிறது.

கோலம் போடுவதானால் பதினாறு புள்ளிக்கு பதினாறு என்று போடாமல் நாலுக்கு நாலு என்று போட வேண்டும். குழப்பங்கள் இல்லாத, சுத்தமான, துடைத்துவிட்ட மாதிரியான, தெளிவான தோற்றம் உங்கள் படைப்பின் மதிப்பைக் கூட்டும். பத்து ஆண்டுகள் முன் இருந்த இணைய தளங்களின் தோற்றத்தை இன்றிருப்பனவற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

இதை விளக்குவது கொஞ்சம் கடினம்- தோன்றி மாறியும் கணங்கள், முக்கியமில்லாதவை, சராசரியானவை- இவற்றை மிக முக்கியமானவையாக, மதிப்புள்ளவையாக, அழகு மிகுந்தவையாக, ஆழமான பொருளை உணர்த்துபவையாகப் பேச வேண்டும். ஒற்றை ஆளாய் கோட்டையைக் காப்பாற்றும் வீரனல்ல ஹீரோ: தன்னை மோத வரும் பைக்குகளிடமிருந்து நடைபாதைகளில் துள்ளியோடும் பாதசாரி, போலீஸ்காரனைப் பார்த்ததும் வலப்புறம் வரும் லாரியைக் கட் செய்து தலைதெறிக்க தப்பிக்கும் பைக்கோட்டி: யாருக்கும் எதையும் சொல்லாமல் சும்மா நின்று கொண்டிருக்கும் மொட்டை மரம்: இவற்றை எல்லாம் "தருணமிதுவன்றோ!" என்று புலகாங்கிதப்பட்டு எழுத வேண்டும்.

நாஸ்டால்ஜியா. முன்னைவிட இப்போது அது மிகவும் மதிக்கப்படுகிறது. சிற்றிதழ்களில் புதுமையாக எழுத வேண்டுமென்றால் வரலாற்றுப் பிரக்ஞை, சமகால சிந்தனை இது அது என்று எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு முப்பது நாற்பது ஆண்டுகளுக்குமுன் நீங்கள் பார்த்த பெண்ணைப் பற்றி, படத்தைப் பற்றி, புத்தகத்தைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி பேசுங்கள். இதுதான் அமெரிக்க சிற்றிதழ் இலக்கியத்தில் கொலோச்சுகிறதாம்.

ஆடம்பரம். சிக்கனமாக விஷயத்தை மட்டும் எழுதிய காலம் முடிந்து விட்டது. வார்த்தை ஜாலத்துக்கே இப்போது மதிப்பு. ஒவ்வொரு வார்த்தையும் வாசகனை வசீகரிக்க வேண்டும், கதையல்ல, நடைதான் இன்று பாராட்டப்படுகிறது.

கசப்பாக இருக்கிறது, அமெரிக்க சிற்றிதழ்களில் மரபார்ந்த அழகியலை மற்றும் ரசனையை கோட்பாட்டியல் வென்று விட்டதாம். என்ன கோட்பாடு என்று கேட்காதீர்கள், ஏதோ ஒன்று, எதுவானாலும் சரி: கலையின் அடிப்படையில் ஏதோ ஒரு கோட்பாடோ கருத்தாக்கமோ இருக்க வேண்டுமாம். நீங்கள் உண்மைக்கு மிக அருகில் ஒட்டிச் செல்கிற நிமிஷக் கதைகளை எழுதுபவன் நான் என்று உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டால், அமெரிக்க சிற்றிதழ்கள் உங்கள் படைப்புகளைப் பிடுங்கிக் கொண்டு போய் விட வாய்ப்பிருக்கிறது. அல்லது நம் இதழின் கோட்பாடு, பின் பச்சைய பின் புழுங்கல் சுற்றுப்புறச் சூழல் சார்ந்த ஒன்று என்று அடித்து விடுங்கள். உங்கள் சிற்றிதழ் அமெரிக்காவில் பல விருதுகளை வெல்லக் கூடும்.

எல்லாவற்றையும் வரிசையாக சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் வாக்கியங்களையும் முடிந்த இடத்தில் வெட்டுங்கள்- முடியாத இடத்திலும்கூட. "அவன் அங்கிருந்த லட்டை ஆசையோடு பார்த்தான். யாரும் இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் தேடினான். யாருமில்லை. லபக் என்று அதை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்."- இப்படியெல்லாம் எழுதக்கூடாது. "லட்டு. லபக்கினான்"- அது! சூப்பர். யாராவது இலக்கியவாதி உங்களிடம் என்னய்யா இது, சுஜாதா மாதிரி எழுதறே? என்று கேட்டால் "செபால்டு மாதிரி பாராடேக்டிக்கா எழுதறேன் நீ செபால்டு பட்சி கீறியா இன்னா, ஹைப்போடாக்டிக்கா எழுதினு கீற நீ இப்போ இன்னான்ற!" என்று அடித்து விடுங்கள், திகைப்பூண்டு மிதித்த மாதிரி முகம் வியர்த்து நிற்பார் இலக்கியவாதி, உறைந்து போய்.

இதன் நீட்சியாக நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கொலாஜ்தான் இருபதாம் நூற்றாண்டின் கலை வடிவமாம். மக்களே, வெட்டினால் மட்டும் போதாது, தவறாமல் வரிசையைக் கொஞ்சம் மாற்றி ஒட்டத் தவறாதீர்கள்.

இதன் அடுத்த நீட்சியாக கதையை நீட்டி வளர்த்துச் செல்லாதீர்கள். சொல்லப்போனால், கதை இங்கிருந்து அங்கே செல்கிறது என்ற பேச்சே வரக்கூடாது. அகதையாடல். ஆமாம், நீங்கள் கதை சொல்வதானால் அதை கதை மாதிரியே சொல்லாதீர்கள். கவிதையானால் புரிந்து கொள்கிற மாதிரி இருக்கக் கூடாது. இருக்கிறது. இதுதான் கதை/ கவிதை. எது, என்ன, எங்கே, எப்படி இப்படி- இதெல்லாம் பேச்சே இல்லை. இருக்கிறது. அவ்வளவே.

சாமானிய விஷயங்களை எழுதுங்கள். உன்னதங்களை, உச்சங்களைப் பேசாதீர்கள். சிரிப்பார்கள்.

நீங்கள் எழுதுவது எதுவானாலும் அது மூன்றாம் மனிதனின் தொனியில் இருக்கக் கூடாது. நேரடியாக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்ததை என்னிடம் சொல்வது போல் பேசுங்கள்- வாக்குமூலம் தருகிற மாதிரி.

----

என்னடா இது ஒரு மணி நேரத்துக்கும் மேல் கஷ்டப்பட்டு இந்த அமெரிக்க சிற்றிதழ் இழவை எழுதியிருக்கிறானே இவன் என்று நினைக்க வேண்டாம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் இந்தப் புள்ளியில்தான் நிற்கப் போகிறோம். அப்போது நீங்கள் கீழே விழும் இடத்தில் தமிழ் சிற்றிதழ் இருந்தால், உங்கள் ரத்தம் இந்த கண்ணிகளில்தான் சிந்தும்.