9/10/11

பாரதியை விடுங்கள், பாவம் ஷெல்லி.

எது இலக்கியம் என்று கேட்டால் ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்வார்கள், ஒருவர் வாழ்க்கையின் இலக்கைக் காட்ட வேண்டும் என்பார், இன்னொருத்தர் வாழ்வை உள்ளபடியே சொன்னால் போதும் என்பார். இது அவரவர் மனப்பாங்கைப் பொறுத்த விஷயம்- வாழ்க்கையின் பொருள் என்ன என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்? நீங்கள் எப்படிப்பட்ட ஆளாக இருக்கிறீர்கள் என்பதற்கொப்ப உங்களுக்கு அது பல்வேறு பொருட்களை உணர்த்தலாம்- அவை ஒன்றோடொன்று முரண்படக்கூட வேண்டியதில்
லை.

இங்கே இந்த கட்டுரையாசிரியர் , தன் இயல்பு புனைவென்ற மெய்ம்மையை முழுமையாக உணர்ந்து, அதைத் தன்னில் வெளிப்படுத்துவதே இலக்கியம் என்று சொல்கிறார். கட்டுரையாளரின் சொற்களில் சொல்வதானால்,
கவிதை நமக்குத் தரக்கூடியது எது என்று யோசித்தால், எதன் இல்லாமை நம்மை ஆன்மிக வறுமையில் ஆழ்த்தும் என்று யோசித்தால், கவிதை தன் மெய்ம்மையை வெளிப்படுத்தும் கணங்களே நமக்குத் தேவையாக இருக்கிறது என்று சொல்லவேண்டும். தன் புனைவுத் தன்மையை முழுமையாய் உணர்ந்த மெய்ம்மை, நம் மனதில் அதன் இறுதி இடத்தை உணர்ந்த மெய்ம்மை. "இலக்கியம்" நமக்கு இந்தப் புரிதலைத் தருவதில்லை. கவிதையின் ஆற்றலும் தீவிரமும் தரும் தாக்கம், கவிதை தன்னிலேயே சிறப்பாய் வெளிப்படுத்தும் தாக்கம், இதுவே இந்த உண்மையை உணர்த்துகிறது.
இந்து மற்றும் புத்த ஞான மரபில் வந்தவர்கள் நம்மில் எவரேனும் இருந்தால், அவர்களுக்கு இது இலக்கியம் குறித்த சரியான புரிதலாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

இது ரொம்பவுமே பண்டிதத்தனமாக இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு, நமக்குப் பிடித்தமான எழுத்தாளர், வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸின் மேற்கோள் ஒன்று இருக்கிறது:
இலக்கியத்தில் புனிதம் என்று எதுவும் இல்லை. அது ஒரு மூலையிலிருந்து மறு மூலைவரை சபிக்கப்பட்ட ஒன்று, மாற்றம், மாற்றம் மட்டுமே இலக்கியம். இலக்கியத்தில் மாற்றத்தைத் தவிர வேறொன்றுமில்லை, மாற்றம் என்பது எள்ளி நகையாடல். எனக்கு எந்த எழவை எழுதப் பிடிக்கிறதோ, அதை எனக்கு எப்போது எழுதத் தோன்றுகிறதோ அப்போது எனக்கு எப்படி எழுதத் தோன்றுகிறதோ, அப்போது அதை எழுதுவேன்- மாற்றத்தின் மெய்யான உயிர்ப்பு என் எழுத்தில் இருந்தால் அது அப்போது உருப்படியாக இருக்கும்,"
வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் நேரடியாகப் பேசுபவர். அழகு குறித்து எந்த கவலையும் கொள்ளாமல், நேரடித்தன்மையே அழகு என்று சொல்பவர். அவர் சொன்னதை, பாரதியின் சொற்களைக் கடன் வாங்குவதானால், இலக்கியம் என்பது தன் தாக்கத்தில்,
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள்
இந்தவுரு வெய்தித்தன் ஏற்றம் விளக்குதல்போல்,
இருக்கும் ஒன்று. அழகை உணர்த்துகிறது என்பது போக, நிலையாமை குறித்தும் மாற்றம் குறித்தும் தான் பேசுகிறதோ இல்லையோ, இலக்கியத்தின் தாக்கம் அதை உணர்த்துவதாக இருக்க வேண்டும் என்கிறார் கட்டுரையாசிரியர் கர்டிஸ் வைட்.



எந்த ஒரு படைப்பும் தன்னள்ளவில் நிலையாமையை உணர்த்த வேண்டும் என்பது ஒரு புறம் இருக்க, இலக்கியமே அடிப்படையில் நிலையற்ற ஒன்றுதான்-
தன் காலங்களோடும் கலைகளோடும் மேஜர் மற்றும் மைனர் ஆளுமைகள் கொண்ட கானன்களோடும், இவை அனைத்தையும்விட முக்கியமாக விமரிசகர் விம்சட்டின் சொற்களில் சொல்வதானால், "கவி நினைவுச் சின்னமாக இருக்கக்கூடிய படைப்புகள்",  இருக்க முடியும், அவற்றைத் தொகுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் கூடிய (உதாரணத்துக்கு இங்கே ஒரு கானன்) இலக்கியம் என்ற அந்த ஒரு பிளாடோனிய சங்கதியே இருந்ததா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நினைவுச் சின்னமாக இருக்கக்கூடிய கவிதை என்ற கருத்துருவைப் போன்ற ஒசிமாண்டிய சங்கதிகள் இன்று மிகச் சிலவே உள்ளன. "மாபெரும் படைப்புகள், செவ்வியல் ஆக்கங்கள்- இவையெல்லாம் இன்று மகோன்னத சிதிலங்களாக மாறி விட்டன. எல்லையற்ற வெறுமையாய் உள்ள ஒரு பண்பாட்டை ஒட்டி மட்டுமே அவை வாசிக்கப்படுகின்றன. ஷெல்லியின் ஒசிமண்டியஸ் போன்ற ஒரு படைப்புக்கு நாம் முன் அளித்த மரியாதை இன்று சிறுபிள்ளைத்தனமான கனவுகள் நிறைந்த வேறொரு காலத்தின் மிச்சங்களாகத் தோற்றம் தருகின்றன. இப்போதெல்லாம் எந்த ஒரு படைப்பையும் டிஎஸ் எலியட் சொன்னதுபோல் "இது ஒரு செவ்வியல் படைப்பு" என்று சொல்ல முடிவதில்லை. ஒரு உயரத்தில் உட்கார்ந்து கொண்டு நம்மை எள்ளிச் சிரிப்பது போல், "இந்த 1950களின் சங்கதியை இன்னும் நம்புகிறாயா?" என்று பார்க்கிறார்கள். "மாபெரும் படைப்புகள்" என்ற கதையாடல் தன் நியாயத்தை இழந்து விட்டது, நாம் நம் நம்பிக்கையை இழந்து விட்டோம்"
இதில் கானன்கள் பற்றிய விக்கிப்பீடியா சுட்டியில் உள்ள இந்த வாக்கியங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கவை-
தனிப்பட்ட கவிஞர்களை மேஜர் மற்றும் மைனர் கவிஞர்கள் என்று பகுப்பதும், அவர்களது கவிதைகளை மேஜர் மற்றும் மைனர் கவிதைகளாக அடையாளம் காண்பதும் கானனிய மரபின் தூண்களின் ஒன்றாக இருந்தது. அதன் நோக்கத்தை கோல்டன் ட்ரெஷரியைத் தொகுத்த பால்கிரேவின் சொற்கள் புலப்படுத்துகின்றன. அவர், "நடையின் மிகைப்படுத்தப்பட்ட தற்காலிக போக்குகளைக் கடந்து செல்ல முனைந்ததாக"க் குறிப்பிடுகிறார், தன் நோக்கம், "நவீனம் புராதனம் என்றெல்லாம் பார்க்காமல், எக்காலத்துக்கும் பேசக்க்கூடிய உண்மை கொண்ட படைப்புகளை இனங்காண்பதே" என்று அவர் எழுதுகிறார். காலத்துக்கொவ்வாத இந்த லட்சியம் இலக்கிய வரலாற்றில் இருநூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது விந்தையாக இருக்கிறது- இதன் நோக்கம் தான் பேசும் காலத்தை விவரிப்பது என்று சொல்லிக் கொள்ளவும் செய்கிறார்கள்.


இலக்கியம் என்பது மாறுவதாக இருக்கலாம், இலக்கியம் மாறுதலைப் பேசுவதாக மட்டுமே இருக்கலாம், ஆனால் இந்த இலக்கியம் படைத்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் மெய் என நம்பிய சில விழுமியங்கள், "பொய்யாய்ப் பழங்கனவாய்ப் போனாலும்",  அவர்கள் அதை வாழ்ந்து காட்டினார்கள் என்ற வகையில் நமக்கு வாழ்க்கையின் காலத்தைக் கடந்த தன்மையை உணர்த்துகின்றன- என் தனிப்பட்ட காமமோ அழகின் அனுபவமோ, காலத்தோடு மறையலாம், ஆனால் அது மனிதர்கள் அனைவருக்கும் உரியது என்ற வகையில் காலத்தைக் கடந்து நிற்கிறதல்லவா? கட்டுரையில் இருந்து,
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கங்களில் பைரனின் படைப்புகளைப் பிரசுரம் செய்தபோது ஜான் மர்ரே பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டே அதைச் செய்தார்- அந்தப் படைப்புகள் தெய்வ நிந்தனையாகவோ, அதிகாரத்தில் இருப்பவர்களால் அவதூறாகவோ கருதப்பட்டால் அவர் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்று தெரிந்தே பைரனைப் பதிப்பித்தார். பைரனும் மர்ரேவுக்கு உதவுவதாயில்லை. தன் வாழ்வில் செய்தது போன்றே வேண்டுமென்றே பொது மக்களின் சகிப்புத் தன்மையை சோதிக்கும் வகையில் தன் கவிதைகளை எழுதினார். இன்னொரு உதாரணத்தைப் பார்ப்பதானால், ஷெல்லி, தன் பதிப்பாளர் தாமஸ் ஹுக்கமுக்குத் தன் க்வீன் மாப் என்ற கவிதையைப் பிரசுரம் செய்வது குறித்து இப்படி எழுதினார்- "நீங்கள் சட்டத்தின் கரங்களை அஞ்சாவிட்டால், பொது கருத்து உங்களுக்கு எதிராகத் திரும்பும் என்று கவலைப்படாவிட்டால், இதை இப்போதே அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று விரும்புகிறேன்," ஹூக்கமுக்கு அந்த அச்சம் இருந்திருக்க வேண்டும்- அவர் அந்த நாத்திக, புரட்சிக் கவிதையைப் பிரசுரிக்க மறுத்து விட்டார் ("தெய்வத்தை நிந்திக்கும் படைப்புகளுக்கும் தேசத் துரோக படைப்புகளுக்கும் எதிராக அன்று சட்டம் இருந்தது). இதனால், அந்தப் படைப்பின் முதல் பதிப்பு ஷெல்லியால் தன் சொந்த செலவில் சில பிரதிகளே அச்சிடப்பட்டு அவர்களது நண்பர்களிடையே விநியோகிக்கப்பட்டது. இருப்பினும், 1817ல், இந்தக் கவிதையின் புரட்சிகர அரசியலும் நாத்திகமும் ஷெல்லிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன. அவர் தன் குழந்தைகளுக்கான உரிமை கோரி வழக்கு தொடர்ந்தபோது, இக்காரணங்கள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டன- அவர் தன் வழக்கில் தோற்றார், தன் குழந்தைகளைக் கடைசி வரை பார்க்க முடியாமலேயே இறந்தார். பிரஞ்சுப் புரட்சி மற்றும் நெப்போலியனைத் தொடர்ந்து புரட்சிகர நிலைப்பாட்டை எடுத்திருந்த ஷெல்லி, பைரன், லீ ஹண்ட் போன்ற கவிஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் எழுத்தைத் தொடர வேண்டி இங்கிலாந்தை விட்டுத் தப்பி ஓடினார்கள். பெரும் அச்சுறுத்தலுக்கும், சில சமயம் சிறைப்படுத்தலுக்கும் உள்ளான பதிப்பாளர்கள் வழியாக . தாயகத்துடன் தங்கள் உரையாடலைத் தொடர்ந்தனர்.
ஆனால் காலம் இருக்கிறது பாருங்கள், அது படைப்புகளை மட்டுமே காப்பாற்றித் தருகிறது- அதன் வரலாற்றை, அது தன்னுள் தேக்கி வைத்திருக்கும் தனிமனித வாழ்வை, அதன் அனுபவத்தை, சுவாரசியப்படாது என்ற ஒரே காரணத்தால் மெல்ல மெல்ல மறதித் திரையிட்டு மறைத்து விடுகிறது. எனவே, தெரிந்தோ தெரியாமலோ, புத்திசாலித்தனமாகவோ முட்டாள்தனமாகவோ,  படைப்பு எழுதப்பட்ட காரணம், நோக்கம் காணாமல் போய், படைப்பு மட்டுமே, அழிந்த சமயங்களின் இறந்த தெய்வங்களைப் போல் உணர்ச்சிகளற்ற ஒரு கற்சிலையாய் மிஞ்சி நிற்கிறது. படைப்பின் உணர்ச்சிகளை இனி அதன் விமரிசகர்களும் வாசகர்களும் தத்தம் உணர்ச்சிகளால் இட்டு நிரப்பிக் கொண்டாக வேண்டும்.

இப்படித்தான், பாவம், ஷெல்லியின் கவிதைகள் " மாற்றத்துக்கான உணர்ச்சிகரமான அறைகூவல்கள் மட்டுமே" என்று கல்கியால் புறந்தள்ளப்பட்டு அது இன்று நம்முடைய மரபையே மறைக்கக்கூடிய "பாரதி மாயை"யைக் காயப்படுத்த உதவும் என்ற ஒரே காரணத்தால் விதந்தோதப்படுகிறது.

காலத்தைக் கடந்து நிற்கும் படைப்புகளைத் தேடுவதானால் அதை உயிரற்ற காகிதத்தில் கண்டு பிடிக்க முடியாது, ரத்தமும் சதையுமாக வாழ்ந்த மனிதன், அவனது காலம், அதில் அவனது பங்களிப்பு என்று அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் மட்டுமே ஓரளவு புரிந்து கொள்ளப்பட முடியும்.

மாற்றம் மட்டுமே இலக்கியம், மாற்றத்தை உணர்த்துவதே இலக்கியம் என்பதெல்லாம் சரி, அதுதான் வாழ்க்கை என்பதெல்லாம் சரியாக இருக்கட்டும், அதைப் பேசவில்லை - காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கக் கூடிய ஒன்றை அடையாளம் காட்டுகிறேன் பேர்வழி என்று பாலைவனச் சோலை என்றொன்று இருக்கிறதே, mirage, chimera என்றெல்லாம் சொல்வார்களே, அந்த மாதிரி ஆகிவிடக் கூடாது இலக்கியம்- வரலாற்றைப் பொருட்படுத்தாத, அதில் இயங்கிய மனிதனின் தனிமனித வாழ்வனுபவத்தைப் பொருட்படுத்தாத, ஈரமற்ற, கருணையற்ற, கறாரான விமரிசக அளவுகோல்கள் எவ்வளவு சரியாக இருந்தாலும், அவை தன் குரல் பலத்தால் ஒரு chimerical இலக்கிய வெளியை மட்டுமே நிர்மாணிக்க முடியும். இது ஒரு புனைகதை எழுத்தாளனுக்கு மாபெரும் சாதனையாக இருக்கலாம், ஆனால் முதிர்ந்த விமரிசகனுக்குப் பெருமை சேர்க்காது.