19/12/11

பஜனை மடங்களைப் பற்றி சில குறிப்புகள்

நவீனத்துவத்தின் தாக்கங்களில் மிக முக்கியமான ஒன்று மனிதனின் தனித்துவத்தைப் பேசுதல்; நம் அனைவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு என்பதையும், அதன் சாத்தியங்களை அறிதலும் வெளிப்படுத்தலும் முக்கியம் என்பதையும் நாம் இயல்பான விஷயங்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். தனி மனித சுதந்திரம் என்று சொல்லும்போது, இந்த தனியன் வந்து விடுகிறான். பெரும்பாலும் சுதந்திரமாக அறியப்பட்டாலும், சில மேலை இலக்கிய மற்றும் தத்துவவாதிகளின் எழுத்தில் ஒரு பெரும்சுமையாக இதன் நீட்சியான தனிமை உணரப்படுகிறது.

இப்போது உருள் பெருந்தேர் சிறிதளவுக்கு மாற்று கோணத்தின் வெளிச்சம் பெறுவது போல் உள்ளது. மேற்கில் எழுதப்படும் புத்தகங்களில் சில, புனித உணர்வை மீளப் பெறுவது குறித்துப் பேசுகின்றன. அவற்றில் ஒன்று குறித்துப் படித்த மதிப்புரை இன்று குறிப்பிடத்தக்கதாகத் தோன்றுகிறது:

17/12/11

இரு கட்டுரைகள்

நல்ல நாளிலேயே மனிதன் நாலையும் யோசித்துக் கொண்டிருப்பான், உலகைக் குறித்து, மனிதர்களைக் குறித்து, உறவுகளைக் குறித்து என்று. அந்த எண்ணங்கள் அவனது வாழ்க்கையை பாதிப்பதாக இருக்கும் என்பதை சொல்லவே வேண்டும். எண்ணங்கள் செயல்களின் ஒத்திகை என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். ஆனால், சிந்திப்பதே, கற்பனையே ஒரு மனிதனின் தொழிலாகப் போய் விட்டால், அவன் மற்ற மனிதர்களைப் போல் இருப்பது கடினம். கற்பனையால் பாதிக்கப்பட்ட ஒருவர் பிலிப் கே டிக். பாதிக்கப்பட்ட என்று நாம் சொல்கிறோம், ஆனால் செறிவடைந்த ஒருவர் என்றும் சொல்லலாம்: அவரது எழுத்துகள் எவ்வளவு ஆற்றல் மிகுந்தவையாக இருக்கின்றன. அவர் தனது மனமயக்கங்களை லட்சக்கணக்கான சொற்களில் எழுதியுள்ளார். அவற்றுள் சில ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது.

பிலிப் கே டிக் பற்றிய அந்த மதிப்புரை இங்கே.


ஒரு வகை புத்தக விமரிசனம், அந்தப் புத்தகம் எதைச் சொல்கிறது, எப்படிச் சொல்கிறது, அவை குறித்த விமரிசகரின் கருத்துகள் என்ன என்பது. இன்னொரு வகை விமரிசனம் அதைவிட கொஞ்சம் புதியது, நுட்பமானது- ஜெப் டயரின் இந்த மதிப்புரையைப் பாருங்கள். தான் விமரிசிக்கும் நாவல் வாழ்க்கையை எப்படி பார்க்கிறதோ, எப்படி விவரிக்கிறதோ, அதே பார்வையில் அந்த நாவலையும் அணுகியிருக்கிறார் டயர். நாவல் எதைப் பேசுகிறதோ, அது இந்தக் கட்டுரை வழியாக நமக்குக் கிடைத்து விடுகிறது.

15/12/11

கதைக்கும் கட்டுரைகள்

அண்மைக்காலத்தில் படித்த கட்டுரைகளில் ஜேம்ஸ் வுட் எழுதிய இந்தக் கட்டுரை மனதைக் கவர்ந்த ஒன்று. அதன் சாரத்தைக் கொடுக்க முயற்சி செய்கிறேன். ஜான் ஜெரமையா சலிவன் என்பவர் எழுதிய புத்தகத்தின் மதிப்புரை, ஆனால் அதில் வுட் சில அருமையான விஷயங்களைத் தொட்டிருக்கிறார்.
நீண்ட முகப்புக் கட்டுரையாக இருந்தாலும் சரி, விமரிசனக் கட்டுரையாக இருந்தாலும் சரி, சமகால அமெரிக்க பத்திரிக்கைக் கட்டுரைகளின் நற்காலம் இது. இதை எதிர்பார்த்திருக்க முடியாத சூழலில் இது நிகழ்ந்திருக்கிறது. .... புதிய பத்திரிக்கைகள் வெற்றி பெரும் வழியைக் கண்டு விட்டன: ஏதோ ஒரு நம்பிக்கையில் பழைய பத்திரிக்கைகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன, ஏதோ ஒரு நம்பிக்கையில் தொடர்கின்றன.
தமிழிலும்கூட கதைகளைப் படிப்பவர்களைவிட கட்டுரைகளைப் படிப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

7/12/11

புறவழிச் சாலைகள்

மருத்துவர்கள் கவிஞர்களாக இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. வாழ்வின் கூர்முனையில் நிற்பவர்கள் அவர்கள். சாதாரணர்களுக்குக் காணக் கிடைக்காத உணர்வின் உச்ச கணங்கள் அவர்களுக்கு அன்றாட நிகழ்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் எல்லா மருத்துவர்களும் கவிதை எழுதுவதில்லை என்பதுதான் கேள்வியாக இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் ஒரு மருத்துவக் கல்லூரியில் கவிதைப் போட்டி வைத்தார்களாம். அதில் ஒரு கவிதை:

அபேசியா
-நோவா கபூனா

மூளையில் சில நெடுஞ்சாலை
அமைப்புகள் இருப்பதாய் கற்கிறோம்:
கார்பஸ் கல்லோசம்,
ஸ்பைனோதலமிக்,
ஆப்டிக் ரேடியஷன்.

ஆனால் அங்கு வேறு சாலைகளும் உண்டு.
பார்வைக்கு மறைந்திருக்கும்
அழகிய ந்யூரல் பின்புலங்கள்:
புழுதிச் சாலைகள், அதிகம் பயன்படுத்தப்படாதவை.

நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருக்கும்போது
சில சமயம் நாம் அவற்றைக் காணலாம்:
கான்சர்,
சர்ஜரி,
ஸ்ட்ரோக்.

எங்கள் துயரர் ஒருவருக்கு மூளையில் கட்டி.
நாங்கள் அவளது நெடுஞ்சாலைகளை
ஒரு இறகை வரைந்து சோதித்தோம்:
"இது என்ன?"

அவள் அளித்த பதில்
அழகிய புறவழிச் சாலையில் வந்தது:
"ஒரு பறவை
உதிர்த்த
இலை"