19/12/11

பஜனை மடங்களைப் பற்றி சில குறிப்புகள்

நவீனத்துவத்தின் தாக்கங்களில் மிக முக்கியமான ஒன்று மனிதனின் தனித்துவத்தைப் பேசுதல்; நம் அனைவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு என்பதையும், அதன் சாத்தியங்களை அறிதலும் வெளிப்படுத்தலும் முக்கியம் என்பதையும் நாம் இயல்பான விஷயங்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். தனி மனித சுதந்திரம் என்று சொல்லும்போது, இந்த தனியன் வந்து விடுகிறான். பெரும்பாலும் சுதந்திரமாக அறியப்பட்டாலும், சில மேலை இலக்கிய மற்றும் தத்துவவாதிகளின் எழுத்தில் ஒரு பெரும்சுமையாக இதன் நீட்சியான தனிமை உணரப்படுகிறது.

இப்போது உருள் பெருந்தேர் சிறிதளவுக்கு மாற்று கோணத்தின் வெளிச்சம் பெறுவது போல் உள்ளது. மேற்கில் எழுதப்படும் புத்தகங்களில் சில, புனித உணர்வை மீளப் பெறுவது குறித்துப் பேசுகின்றன. அவற்றில் ஒன்று குறித்துப் படித்த மதிப்புரை இன்று குறிப்பிடத்தக்கதாகத் தோன்றுகிறது:


நம்பிக்கையையும் அதன் வெளிப்பாடாக அமையும் உணர்வையும் பேசுகிறது புத்தகம்: பண்டைய கிரேக்கர்கள் வாழ்கைக்கு அர்த்தமிருக்கிறது என்று நம்ப அவர்களது இறை நம்பிக்கை எவ்வளவுக்குக் காரணமாக இருந்தது?
கிரேக்கர்கள் தெய்வங்களை நம்பினார்கள் என்று சொல்வது இயல்பாக இருக்கலாம். இது ஒரு வரலாற்றுக் கேள்வி. இது குறித்து நாங்கள் எந்த இறுதி முடிவையும் சொல்லப் போவதில்லை. ஆனால் முக்கியமான விஷயம் இதுதான்: வாழ்க்கையில் உன்னதங்களை அறிய நம் இருப்பின் மைய உண்மையாக இருக்கும் ஒன்றை வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டும் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்- உன் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள் உன் வாழ்வில் நடந்தபடி உள்ளன. வாழ்க்கையில் போற்றத்தக்கது எது என்ற ஹோமரின் புரிதல் நன்றியுணர்வே என்ற விடையைக் கண்டு அதை நியாயப்படுத்தி உறுதிப்படுத்தக் காரணமாக இருந்த விஷயம் மானுட இருப்பின் இந்த அற்புதப் பின்னணி குறித்த உணர்வேயாகும். அந்த நன்றியுணர்வு அதேனாவையோ இயேசுவையோ விஷ்ணுவையோ நோக்கி வெளிப்படுகிறதா, அல்லது அதற்கு எவரும் பாத்திரமாயில்லையா என்பது தொடர்பற்ற கேள்வி.
எதுதான் கேள்வி?
பிரச்சினை மீபொருண்மை சார்ந்த ஒன்றல்ல- கடவுளோ கடவுளர்களோ அமானுட ஜீவர்களாக உள்ளனரா, அவர்களது வெவ்வேறு இயல்புகள் எவை என்பதல்ல விஷயம். சரியான கேள்வி இயற்காட்சியியல் சார்ந்த ஒன்று: எத்தகைய உலக அனுபவங்களும் சுய புரிதல்களும் உலகைக் குறித்த இந்த மீபொருள் மற்றும் இறை விவரிப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்துள்ளன? இதுதான் அர்த்தமுள்ள கேள்வி. கடவுள்தான் காரணப்பொருளா என்பதல்ல, நன்றியுணர்வே சரியான எதிர்வினையாக இருக்குமா என்பதே நாம் கேட்க வேண்டிய கேள்வி.
"சோபிப்பனவெல்லாம்" என்ற புத்தகத்தின் மதிப்புரையில் இவ்வளவும் பேசப்படுகின்றது.
இந்தப் புத்தகமெங்கும் எழுப்பப்படும் கேள்வி அறம் சார்ந்த ஒன்று. இந்தப் புத்தகம் பங்கு கொள்ளும் நீண்ட தத்துவ மரபை ஆக்கிரமிக்கும் கேள்வி அது: நலவாழ்வு வாழ்வது எப்படி? இந்தக் கேள்வியை மாற்று வடிவில் எழுப்புகிறது இந்நூல: எதை, அல்லது, எதனில் நாம் நம்பிக்கை வைத்தால் நம் இன்றைய வாழ்வு நமக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும்? தலைகால் புரியாத இக்காலத்தில் வாழ்வதற்கு மட்டுமல்ல, நல்லபடி வாழவும், தேவையாக இருக்கிற நம்பிக்கை எது? ட்ரைபஸ் மற்றும் கெல்லி முன்போல் இப்போது உலகம் 'சோபை' கொண்டதாக இல்லை என்கின்றனர். இதனால், "நம் வாழ்க்கை தயக்கமும் தடுமாற்றமும் நிறைந்த ஒன்றாக சில அபரித கணங்களில் தோற்றமளிக்கிறது, நம் தெரிவுகள் ஒன்றுமில்லாத விஷயங்களின் அடிப்படையில் செய்யப்படுகின்றன".
----

இந்த விஷயமாய் இன்னொன்று சொல்ல வேண்டும்.

முன்பெல்லாம் பஜனை மடங்கள் ஆன்மீக மையங்களாக இருந்தன என்று நினைக்கிறேன். பாட்டு தெரிந்தவன் தெரியாதவன் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் ஒன்றாக இசை வழியாக தங்கள் அறிவுக்கு அப்பாற்பட்ட அந்த transcendental உணர்வைத் தொட்டார்கள். அங்கே வளர்ந்த கர்நாடக சங்கீதம் இன்று சபாக்களில் ஒலிக்கிறது, அன்று உடன் இசைத்தவர்கள் இன்று ரசிகர்களாகப் பிரிந்து நிற்கிறார்கள்- அந்த ரசனையைப் பேசவும்கூடவே நிறைய இசைத்துறை சார்ந்த தனித்தகவல்கள் தேவைப்படுகின்றன. இசைக்கும் பக்திக்கும் சம்பந்தமே இல்லாமல் போய் விட்டது. புனித பிம்பங்கள் நம் திரையரங்குகளை ஆக்கிரமிக்கின்றன.

இசை பற்றி நிறைய விஷயம் தெரிந்த ஒருவரே. "அன்றைக்கு பெரிய பெரிய வித்வான்கள் அறிமுகமான பஜனை மடங்கள் இப்போதெல்லாம் வெறிச்சோடிப் போய் விட்டதே," என்ற என் கேள்விக்கு, "அவர்களுக்கு வேறு பொழுதுபோக்குகள் கிடைத்து விட்டது" என்று சொன்னார். இன்று பஜனை மடம் என்பது அவ்வளவு இளப்பமாகப் போய் விட்டது, அவை மனிதனின் பொழுதுபோக்குத் தேவையை மட்டும் நிறைவு செய்தன என்று உணர்பவர்களையும் சொல்பவர்களையும் குற்றம் சொல்லிப் பயனில்லை.

பொய்திகழும் உலகநடை என்சொல்கேன் என்சொல்கேன்
பொழுதுபோக் கேதென்னிலோ
பொய்யுடல் நிமித்தம் புசிப்புக் கலைந்திடல்
புசித்தபின் கண்ணுறங்கல்
கைதவ மலாமலிது செய்தவம தல்லவே...

.
என்று பாடினார் தாயுமானவர்,

நீக்கப் பிரியா நினைக்கமறக் கக்கூடாப்
போக்குவர வற்ற பொருளணைவ தெந்நாளோ.


என்பதும் தாயுமானவரே. நம் அன்றாட வாழ்வின் சராசரிகளுக்கு அப்பால், இந்த கொடுக்கல் வாங்கல் போக்கு-வரத்தாகிய transactionகளுக்கு அப்பால் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை அன்றைய ஞானிகள் சூத்திரங்களில், பாடல்களில் சொல்லி வைத்துச் சென்றார்கள். இன்று அதெல்லாம் பஜனை மட சங்கதிகளாகி விட்டன.

இன்று இலக்கியம் அதைச் செய்ய முடியும். கடவுள் என்று யாரையும் கை காட்டாவிட்டாலும் புசிப்புக்கும் உறக்கத்துக்கும் அப்பால், அதைவிடப் பெரிய விஷயம் இருக்கிறது என்று வாழ்க்கைக்கு ஒரு புனிதத்துவத்தை இலக்கியம் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன்.

---

இப்போது நாம் மேற்கண்ட ஆங்கிலக் கட்டுரைக்குத் திரும்பச் செல்வோம். பலதெய்வ வாழ்வு, அல்லது உயர்ந்த வாழ்வு என்று புத்தகத்தில் இது சொல்லப்படுகிறது என்கிறார் கட்டுரையாளர்:

பல புனிதங்கள் கொண்ட உலகில் வாழக் கற்றவன், விளையாட்டின் கட்டற்ற ஆனந்த அனுபவத்துக்கு ஆட்படவும் தன்னை அனுமதித்துக் கொள்பவனாக இருப்பான், அதே நேரத்தில், அபாயகரமான மேடைப்பேச்சாளனின் தீவிரவாத மொழிமைப்பாட்டில் வசப்பட்டுவிடாமல் தன்னைக் காத்துக் கொள்ளும் பகுத்தறிவு உள்ளவனாகவும் இருப்பான். அவன் சோபிப்பனவற்றை உணரக்கூடிய நுண்புலன்களை வளர்த்துக் கொண்டவன், தெய்வங்கள் திரும்பக்கூடிய வெளியைத் தன்னில் திறந்து கொண்டவன்.

இந்தப் பகுதி புத்தகத்தில் இங்கே இருக்கிறது.

இதன் பொருள் என்ன? விளையாட்டு என்று எதைச் சொல்கிறார்? கூட்டங்களில் கூடிப் பெறும் களியனுபவங்கள். இவைதானே வழிபாட்டின் சாரம்? இவைதானே புனிதத்துவத்துக்கு ஆதாரமாக இருக்க முடியும்? ஆனால், இவற்றோடு வரும் கோட்பாடுகளில் மதிமயங்கிவிடக் கூடாது.

இன்று' இந்த அனுபவம் இசைக் கச்சேரிகளில், அரசியல் மேடைகளில், விளையாட்டு அரங்கங்களில், போராட்டங்களில் பெறக்கூடியதாக இருக்கிறது- நம்மூரில் ஆலய வழிப்பாட்டிலும் திருவிழாக்களிலும் நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது, நான் பேசுவது படித்த, நவீனத்துவத்தில் நிலை பெற்றுவிட்ட நம்மவர்களைப் பற்றி. ஆனால், மானுடத்துக்கு அப்பாற்பட்ட உண்மை ஒன்று மானுட வாழ்வில் இயங்குகிறது என்ற நம்பிக்கை தரக்கூடிய பொருளை வாழ்க்கைக்கு இவை தர முடியுமா? ஒரு கட்டத்தில் கூட்டங்களில் நாம் அடையும் களியாட்டம் நம்மைக் கோட்பாடுகளுக்கு அடிமைப்படுத்தி கொலைக்களங்களில் நிறுத்தி விடுகிறதா இல்லையா?

முடிவில் கட்டுரையாளர் எழுப்பும் கேள்வி,
சமய அடிப்படையிலான, பல தெய்வ வழிபாடு நலவாழ்வு வாழத் தேவையாக இருக்கிறது என்பது உண்மையா? அல்லது, கற்பனை வளம் செறிந்த இலக்கிய மனப்பாங்கு போதுமானதாக இருக்கிறதா? இவ்விரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான் என்ன? தெய்வம் அல்லது தெய்வங்கள் உண்டா இல்லையா என்ற மீபொருண்மை நம் கேள்வியல்ல என்றால், வாழ்வை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்ற இயற்காட்சியியல் சார்ந்த கேள்வியே அவசியமான ஒன்று என்றால் இப்புத்தகத்தை எழுதியவர்கள் கைப்பற்ற நினைக்கும் உலகம் புனிதமானது என்ற புரிதலனுபவம் நமக்கு ஏன் தேவைப்படுகிறது?
அப்படியானால் வாழ்வை நாம் எதிர்கொள்ள புனிதத்துவத்தை உணர்த்தும் நம்பிக்கை தேவையில்லை என்றால் எதுதான் தேவை?

இலக்கியம் போதுமானதாக இருக்கலாம் என்கிறார் விமர்சகர்.

---

துணிச்சலான கருத்துதான். ஏற்கனவே மேற்கோள் காட்டிய பகுதியை மீள்பதிவு செய்கிறேன் இது இலக்கிய வாசகனுக்குப் பொருந்துமா பாருங்கள்:
பல புனிதங்கள் கொண்ட உலகில் வாழக் கற்றவன், விளையாட்டின் கட்டற்ற ஆனந்த அனுபவத்துக்கு ஆட்படவும் தன்னை அனுமதித்துக் கொள்பவனாக இருப்பான், அதே நேரத்தில், அபாயகரமான மேடைப்பேச்சாளனின் தீவிரவாத மொழிமைப்பாட்டில் வசப்பட்டுவிடாமல் தன்னைக் காத்துக் கொள்ளும் பகுத்தறிவு உள்ளவனாகவும் இருப்பான். அவன் சோபிப்பனவற்றை உணரக்கூடிய நுண்புலன்களை வளர்த்துக் கொண்டவன், தெய்வங்கள் திரும்பக்கூடிய வெளியைத் தன்னில் திறந்து கொண்டவன்.
இவனுக்குக் களி அனுபவங்கள் ஏற்படுவது தனிமையில், வாசிப்பில், அதை அவன் கூட்டமாகக் கொண்டாடுவது இலக்கிய அரங்குகளில், இல்லையா? இது ஒரு நுட்பமான அனுபவம். இதைக் காத்துக் கொள்ள வேண்டுமேன்றால், அவன் "மேடைப்பேச்சாளனின் தீவிரவாத மொழிமைப்பாட்டில் வசப்பட்டுவிடாமல் ... சோபிப்பனவற்றை உணரக்கூடிய நுண்புலன்களை வளர்த்துக் கொண்டவனாக" இருக்க வேண்டும்.

இவையே இன்றைய பஜனை மடங்களின் தேவை, அவற்றுக்கான நியாயம்.

பஜனை மடங்கள் வாழ்க! :)