7/12/11

புறவழிச் சாலைகள்

மருத்துவர்கள் கவிஞர்களாக இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. வாழ்வின் கூர்முனையில் நிற்பவர்கள் அவர்கள். சாதாரணர்களுக்குக் காணக் கிடைக்காத உணர்வின் உச்ச கணங்கள் அவர்களுக்கு அன்றாட நிகழ்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் எல்லா மருத்துவர்களும் கவிதை எழுதுவதில்லை என்பதுதான் கேள்வியாக இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் ஒரு மருத்துவக் கல்லூரியில் கவிதைப் போட்டி வைத்தார்களாம். அதில் ஒரு கவிதை:

அபேசியா
-நோவா கபூனா

மூளையில் சில நெடுஞ்சாலை
அமைப்புகள் இருப்பதாய் கற்கிறோம்:
கார்பஸ் கல்லோசம்,
ஸ்பைனோதலமிக்,
ஆப்டிக் ரேடியஷன்.

ஆனால் அங்கு வேறு சாலைகளும் உண்டு.
பார்வைக்கு மறைந்திருக்கும்
அழகிய ந்யூரல் பின்புலங்கள்:
புழுதிச் சாலைகள், அதிகம் பயன்படுத்தப்படாதவை.

நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருக்கும்போது
சில சமயம் நாம் அவற்றைக் காணலாம்:
கான்சர்,
சர்ஜரி,
ஸ்ட்ரோக்.

எங்கள் துயரர் ஒருவருக்கு மூளையில் கட்டி.
நாங்கள் அவளது நெடுஞ்சாலைகளை
ஒரு இறகை வரைந்து சோதித்தோம்:
"இது என்ன?"

அவள் அளித்த பதில்
அழகிய புறவழிச் சாலையில் வந்தது:
"ஒரு பறவை
உதிர்த்த
இலை"