15/12/11

கதைக்கும் கட்டுரைகள்

அண்மைக்காலத்தில் படித்த கட்டுரைகளில் ஜேம்ஸ் வுட் எழுதிய இந்தக் கட்டுரை மனதைக் கவர்ந்த ஒன்று. அதன் சாரத்தைக் கொடுக்க முயற்சி செய்கிறேன். ஜான் ஜெரமையா சலிவன் என்பவர் எழுதிய புத்தகத்தின் மதிப்புரை, ஆனால் அதில் வுட் சில அருமையான விஷயங்களைத் தொட்டிருக்கிறார்.
நீண்ட முகப்புக் கட்டுரையாக இருந்தாலும் சரி, விமரிசனக் கட்டுரையாக இருந்தாலும் சரி, சமகால அமெரிக்க பத்திரிக்கைக் கட்டுரைகளின் நற்காலம் இது. இதை எதிர்பார்த்திருக்க முடியாத சூழலில் இது நிகழ்ந்திருக்கிறது. .... புதிய பத்திரிக்கைகள் வெற்றி பெரும் வழியைக் கண்டு விட்டன: ஏதோ ஒரு நம்பிக்கையில் பழைய பத்திரிக்கைகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன, ஏதோ ஒரு நம்பிக்கையில் தொடர்கின்றன.
தமிழிலும்கூட கதைகளைப் படிப்பவர்களைவிட கட்டுரைகளைப் படிப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
இதற்குத் துறை சார்ந்த ஆர்வத்தை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது: புனைவு அதன் எல்லைக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன், கற்பனையும் நம்பகத்தன்மையும் சமன்பாட்டில் உள்ள நிலையில் மட்டுமே புனைவு சாத்தியம். நம்ப முடியாத, நம்பிக்கையைக் கோராத கற்பனையைப் புனைவு என்று அங்கீகரிப்பது எளிதாக இருக்காது. ஒரு பொய், புனைவாக மாற வேண்டுமெனில், தான் ஒரு உண்மையைச் சுற்றிப் புனையப்பட்டுள்ளதென்ற உணர்வை அது அளிக்க வேண்டும். இன்று அப்படிப்பட்ட உண்மைகள் அரிதாகி விட்டதென்பது ஒரு புறம் இருக்கட்டும்- நம் மனம் அப்படிப்பட்ட புனைதலை ஏற்க மறுக்கிறது- நமக்கு உண்மையின் மீதுள்ள நம்பிக்கை போய்விட்டது போலவே புனைவின் மீதுள்ள நம்பிக்கையும் போய்விட்டது. ஆனால் இதை ஒரு காரணமாக வுட் நினைக்கிறார் என்று சொல்ல முடியவில்லை:
இதற்கு பல காரணங்கள் உண்டு. தினசரிகள் அழிவதைத் தடுக்க முடியாத நிலையில் அவை விட்டுச் செல்லும் பண்பாட்டு, இலக்கிய வெளியின் சில பகுதிகளை சிறிய மற்றும் பெரிய பத்திரிக்கைகள் கைப்பற்றத் துவங்கி விட்டன. அங்கீகரிக்கப்பட புனைவுலகின் மரபாக அறியப்படும் விஷயங்களுக்கு எதிராகவோ, அல்லது அவற்றிலிருந்து தப்பிக்கும் முகமாகவோ, சமகால கட்டுரை சில காலமாக கூடுதல் ஆற்றல் பெற்று வருகிறது.
பத்திரிக்கைகள் படைப்பு சார்ந்ததாகவும் செய்தித்தாள்கள் செய்தி சார்ந்ததாகவும் இருந்த காலத்தை வுட் நினைவு கூர்கிறார் என்று நினைக்கிறேன். பத்திரிக்கைகள் பண்பாடு மற்றும் இலக்கியம் குறித்த தகவல்களை வாசகனுக்குக் கொடுக்க வேண்டும்; அவனுக்கு அதற்கான தேவை இருக்கிறது- ஆனால் அது கிடைக்காதபோது, படைப்பை நோக்கமாகக் கொண்ட பத்திரிக்கைகளே அந்தத் தேவையை நிறைவு செய்கின்றன. அப்போது, செய்திகளாக இருக்க வேண்டிய கட்டுரைகள் புனைவின் ஆற்றலைக் கூட்டிக் கொள்வதைத் தவிர்க்க முடியாது, இல்லையா?

கட்டுரைகள் புனைவின் ஆற்றலைப் பெறும்பொது புனைவின் சாயம் வெளுத்துவிடுகிறது. வுட் டையரை மேற்கோள் காட்டுகிறார்:
எழுதப்படும் விஷயத்தின் வெளிப்பாட்டு சாத்தியக்கூறுகளை சிறைபிடித்துலும் நாவலாக்குதலும் கைகோர்த்துச் செல்வதை நாம் இப்போது அடிக்கடி காண்கிறோம். படைப்பாளியின் உணர்வுகளும் எண்ணங்களும் நாவல்படுத்தப்பட்டு, புனைவின் கான்க்ரீட் தளத்தில் நிறுவப்படுவதைக் காண்பது அலுப்பாக இருக்கிறது. இதை நினைக்கும்போது நாவலை வெளிப்பாட்டு சாதனமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் நேரம் வந்து விட்டது என்று தோன்றுகிறது.
மிலன் குந்தெராவின் படைப்பில் புனைவு என்பது "நாவலாக்கத்தின் கடைசி தோலும் உரிக்கப்பட்டுவிட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இருக்கிறது," என்பதே டையருக்கு அவரது எழுத்தில் ஈர்ப்புள்ள விஷயமாக இருக்கிறது. "நாவலிய கட்டுரையை" குந்தெரா வலியுறுத்துவதை டையர் விரும்புகிறார் என்று குறிப்பிடுகிறார் வுட்.

இதை விளக்கும் வகையில் ஜேம்ஸ் வுட் எழுதும் விஷயங்களை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். கட்டுரைகள் மட்டுமல்ல, கதைகளும் அவர் சொல்லும் திசையில் பயணிப்பதாக எண்ண இடமிருக்கிறது.
நாவலாக்கம் என்று டையர் எதைச் சொல்கிறார் என்பது நன்றாகவே புரிகிறது: கரு, சூத்திரங்கள், காட்சிகள், போராட்டம், வசனம், முக்கியமான விவரணைகள் என்று தடதடத்துத் தொடரும் ரயில் வண்டி. இந்தப் புனைவுலகின் பொய்மையை நுட்பமாக அம்பலப்படுத்துவதில் Roland Barthes தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். நாவலாக்கத் தூண்டும் அந்த பயங்கர முனைப்பைக் குற்றம் சாட்டுவது போல் சில சமயம் புனைவு என்று மட்டும் குறிப்பிட்டார். நாவலை வெளிப்பாட்டுக் கருவியாகப் பயன்படுத்துவதைத் தொடர்ந்து காப்பாற்றித் தர வேண்டும் என்ற விருப்பம் டையரை விட எனக்குக் கூடுதலாக இருக்கிறது. புனைவின் புனைவுத் தன்மைக்கு ஒரு சிறப்பிடத்தை ஒதுக்கி வைக்க நான் விரும்புகிறேன். இப்படி எல்ல்லாம் பேசும்போது நாவல் எழுதுபவர்களுக்கே நாவலாக்கதின் இந்த கனமான தளவாடங்களைப் பற்றிய உணர்வு இல்லை என்ற எண்ணம் எழலாம். உண்மையைச் சொல்வதானால், ஒரு நாளைப் போல அவர்கள் அதைச் சொல்லி சலித்துக் கொள்கிறார்கள். ஆனால் டையரின் இருப்பு கொள்ளாமையை நாம் ஆதரிக்காமல் இருப்பது எளிதல்ல : எழுத்தின் கிடைகளை (genre) உடைத்து வீசும் சுதந்திரத்துக்கு அவரது படைப்புகளே ஒரு உதாரணமாக இருக்கிறது.
இதெல்லாம் ஆங்கிலத்தில் படிக்கும்போது நன்றாக இருக்கிறது, ஆனால் தமிழில் சாரத்தை மட்டும் பிழிந்து தரும்போது எல்லாம் சக்கையாகி விடுகிறது, என்ன செய்ய!- மொத்தத்தில் வுட் சொல்வது இதுதான்: ஒரு விஷயத்தை நாவலாக்கும்போது அதில் பல உத்திகள் செயல்படுகின்றன. நாம் விவரம் தெரியாதவர்களாக இருந்தால் பரவாயில்லை, நமக்கு இந்த உத்திகள் எல்லாம் வெளிச்சம் போட்ட மாதிரி தெரிகின்றன, நமக்குத் தெரியும் என்பது நாவலை எழுதுபவனுக்கும் தெரிந்திருக்கிறது. வாசிப்பவனுக்கும் அலுப்பாக இருக்கிறது, எழுதுபவனுக்கும் வேறு வழி இல்லாத தொல்லையாக இருக்கிறது புனைவுலகம். ஆனால்,கட்டுரையைப் பாருங்கள் என்கிறார் ஜேம்ஸ் வுட்
.
சமகால கட்டுரை நாவலாக்கத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டிருப்பதாக வெளிப்பார்வைக்கு அவ்வப்போது தோற்றம் தருவதாக இருக்கிறது: கரு இருக்க வேண்டிய இடத்தில் ஒரு ஒதுக்கம், அல்லது எண்களிடப்பட்ட பத்திகளின் பிளவு: உறைந்த உண்மை இருக்க வேண்டிய இடத்தில் மெயம்மைக்கும் புனைவுக்கும் இடையிலான ஒரு எல்லாம் தெரிந்த, புத்திசாலித்தனமான ஊசலாட்டம் இருக்கலாம்; மூன்றாம் நபரைப் பேசும் இயல்புவாத எழுத்தாளனின் ஆளுமையற்ற இடத்தில் கட்டுரையாளனின் ஆளுமை அடிக்கடி எட்டிப் பார்க்கிறது, இதற்கான சுதந்திரத்தைப் புனைவில் எடுத்துக் கொள்ள முடியாது. நாவலுக்கு எதிரான இந்த உத்திகள் அனைத்தும் உண்மையைச் சொல்வதானால் நாவலின் வரலாற்றிலிருந்து கடன் வாங்கப்பட்டவை. இது நமக்குத் தெரிந்திருந்தாலும் அதனால் இலக்கியம் சுதந்திரமாக இயங்குவது நமக்குத் தரும் மகிழ்ச்சியைக் குறைப்பதில்லை.
எவ்வளவு பேசினாலும் பிரயோசனமில்லை, சரியான உதாரணங்களே இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள உதவும். பேயொன்தான் இதற்கு அல்டிமேட் உதாரணம் என்று நினைக்கிறேன். ஆனால் அவரது உத்தி மிகவும் நுட்பமான ஒன்று- பரவலாக வாசகர்களைக் கவரக்கூடிய அ முத்துலிங்கத்தின் கட்டுரைகளையோ சொல்வனத்தில் சுகா எழுதும் கட்டுரைகளையோ யாரும் ரசிக்காமல் இருக்க முடியாது. இவர்களது கட்டுரைகள் எவ்வளவுக்குக் கதைகளைப் படிக்கும் அனுபவத்தைத் தருகின்றன என்று பாருங்கள்

அதுதான் விஷயம். இது ஏன், எப்படி என்று புரிந்து கொண்டவர்கள் நல்ல கட்டுரைகளை மட்டுமல்ல, நல்ல கதைகளையும் தருகிறார்கள்.