26/4/11

இலக்கிய பீடங்களின் இளகிய தளங்கள்

தமிழில் உள்ள எழுத்தாளர்கள் பலரும் அண்மைக்காலமாகத் தங்கள் புத்தகங்களை ஆங்கிலம் மற்றும் உலக மொழிகளில் மொழி பெயர்த்தால் தங்களுக்கு உலக அளவில் சிறந்த எழுத்தாளர்கள் என்ற அங்கீகாரம் கிடைக்குமென்று நம்புவது போல் தெரிகிறது. இதில் தவறொன்றுமில்லை என்று நினைக்கிறேன், உலகெங்கும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது என்பது இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது விளங்குகிறது.

Tim Parks discusses the Nobel Prize for Literature in the TLS

இந்தக் கட்டுரை முழுவதுமே மொழி பெயர்க்கப்பட வேண்டியது. நான் தற்போதைக்கு ஒரு சில பத்திகளை மட்டுமே தேர்ந்தெடுத்துத் தருகிறேன்.

உலக அளவில் புகழ் பெற்றிருந்தாலன்றி ஒரு நாவலாசிரியர் புகழ் பெற்றவராக இன்று கருதப்படுவதில்லை. எல்லா இடங்களிலும் அவர் அங்கீகரிக்கப்பட்டாலன்றி அவருக்கு எங்கும் அங்கீகாரம் கிடைப்பதில்லை. வெளி நாடுகளில் மதிக்கப்படும்போது ஒரு எழுத்தாளருக்கு அவரது தாய் நாட்டில் கிடைக்கும் மதிப்பும்கூட குறிப்பிடத்தக்க அளவில் பெருகுகிறது. அவரது தேசம் எவ்வளவு குறுகியதாக இருக்கிறதோ, அவரது மொழி எவ்வளவு முக்கியமில்லாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கு இந்தப் போக்கு மிகுந்திருக்கிறது. ஆங்கில மொழி சார்ந்த பண்பாடுகளில் இத்தகைய மனப்பாங்கு அவ்வளவு பெரிய அளவில் உணரப்படுவதில்லை. ஆனால் ஹாலந்து அல்லது இத்தாலி போன்ற தேசங்களில் இது முற்றிலும் உண்மையாக இருக்கிறது. இதன் தவிர்க்க முடியாத விளைவு என்னவென்றால், அறிந்தோ அறியாமலோ, பல எழுத்தாளர்களும் தங்கள் வாசகர்களை தம் தேசிய அளவில் கருதாமல், உலக அளவில் நினைக்கத் தொடங்கியிருக்கின்றனர். 
ஒரு பக்கம் மொழி பெயர்ப்புக்கும் மறு பக்கம் சர்வதேச இலக்கிய விருதுகளுக்கும் உள்ள மாறும் அடையாளத்தைக் கருத்தில் கொண்டோமானால் நாம் இத்தகைய வளரச்சியின் பின்னுள்ள மனநிலையை உணர வரலாம். உலக அரங்கில் ஒரு எழுத்தாளர் முன்னிறுத்தப்படுகிறார் என்றால், அவரது படைப்புகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டாக வேண்டியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட படைப்பை விளம்பரப்படுத்தி அது குறித்து பரபரப்பு ஏற்படுத்த வேண்டுமென்றால் அதன் பதிப்பாளர் இந்த மொழி பெயர்ப்புகள் வெளிவர ஏற்பாடு செய்தாக வேண்டும். அத்தனையும் வெவ்வேறு பிரதேசங்களில் ஏறத்தாழ ஒரே நேரத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட வேண்டும்- இந்த மொழி பெயர்ப்புகள் எழுத்தாளரின் தாய்நாட்டில் அந்தப் படைப்பு வெளிவரும் முன்னரே பதிப்பிக்கப்பட்டாக வேண்டும். இவ்வகையில் ஒரு நாவல் உலகெங்கும் வெளி வருகிறது, இப்படி செய்யும்போது ஒவ்வொரு பிரதேசத்திலும் அதன் மதிப்பு கூடுகிறது. இதைப் பார்த்தால் ஒரு நாவலின் துவக்க கட்ட விளம்பரப் பிரச்சாரத்தில் மொழி பெயர்ப்புகள் தவிர்க்க இயலாத முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கின்றன என்று தெரிகிறது. ஆனால் அதே சமயம் முன்னைவிட இப்போது மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. தங்களுக்குப் பிடித்த நாவலாசிரியரை மொழி பெயர்த்தது யார் என்பதை ஒரு சில வாசகர்களே அறிந்திருக்கின்றனர்- இத்தனைக்கும் ஒவ்வொரு பக்கத்தின் தொனி மற்றும் உணர்வையும் பெருமளவில் அவர்தான் தீர்மானிக்கிறார். 
அதே சமயம், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச இலக்கிய விருதுகளின் எண்ணிக்கையும் அவற்றுக்குக் கிடைக்கும் கவனமும் உக்கிரமாகக் கூடுகின்றன....

நாவலாசிரியரர்களின் புகழுக்கு மொழி பெயர்ப்பாளர்கள் பெருமளவுக்கு காரணமாக இருந்தாலும் அவர்கள் வாசகர்களிடையே கவனம் பெறுவதில்லை என்பதை எழுதும் முகமாகவே டிம் பார்க்ஸ் இத்தனையையும் எழுதியுள்ளார். ஆனால் இவர் எழுதியுள்ள விஷயம் நமக்கு உலக அரங்கில் புத்தகங்கள் எப்படி விற்பனை செய்யப்படுகின்றன, அதற்கு மொழி பெயர்ப்புகள் எவ்வளவு பெரிய உதவி செய்கின்றன என்பதைக் காட்டுவதாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இப்போதெல்லாம் Jonathan Franzen போன்ற ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் ஒவ்வொரு வரைவு வடிவமும், முழுமை பெற்ற ஒவ்வொரு அத்தியாயமும் உடனடியாக உலகெங்கும் உள்ள மொழி பெயர்ப்பாளர்களுக்கு பதிப்பாளரால் மின் அஞ்சல் செய்யப்படுகின்றன என்கிறார் டிம் பார்க்ஸ். கேட்கவே கசப்பாக இருக்கிறது இல்லையா, ஆனால் வர்த்தகத்தில், அது இலக்கிய வர்த்தகமானாலும், கால தாமதம் இழப்பையே தருவிக்கும் என்று நினைக்கிறேன். அது எப்போதும் தவிர்க்கப்பட வேண்டியதே, முதலீடு செய்திருப்பது உங்கள் பணம் என்றால் நீங்களும் இதைத்தான் சொல்வீர்கள், இல்லையா?

டிம் பார்க்ஸ் மொழி பெயர்ப்பு குறித்து சொல்வது உண்மைதான்- ஒரு மொழி பெயர்ப்பாளரின் பாடு இன்னதென்று நாம் மொழி பெயர்த்தாலான்றி தெரிந்து கொள்ள முடியாது.

"ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு கதாசிரியனின் பிரத்யேக நடைதான் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். ஆனால் பல மொழிபெயர்ப்பாளர்களும் வேறொரு அதிகாரத்துக்கு உட்படுகிறார்கள், "நல்ல பிரஞ்சு அல்லது ஜெர்மன் அல்லது இத்தாலியன்" என்ற பழகிப்போன மொழி நடைக்கு," என்று குறை சொல்கிறார் மிலன் குந்தெரா, Testaments Betrayed என்ற புத்தகத்தில். உண்மைதானே? தமிழில்கூட நல்ல தமிழில் எழுதப்படுகிற மொழி பெயர்ப்புகளே அதிகம்- அந்நிய நடையின் சாயல் தவறானதாகக் கருதப்படுகிறது. தமிழ் நெருடலில்லாமல், எளிமையாக இருக்க வேண்டும் என்பது மிக கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டிய மொழி பெயர்ப்பு நடைமுறையாக இருக்கிறது.

இதை எழுதிவிட்டு டிம் பார்க்ஸ் கேட்கிறார்,

அப்படியானால் ஒரு கேள்வி எழுகிறது: எப்படிப்பட்ட இலக்கியம் சர்வேதேச வாசகர்களை அடைகிறது? பல பெரிய நாவல்கள் ஒரே சமயத்தில் பல மொழி பெயர்ப்பாளர்களிடையே பிரித்துக் கொடுக்கப்படுகிறது- இயன்ற அளவுக்கு விரைவாக, மொழிபெயர்ப்பாளருக்கும் மூல நூலுக்கும் உள்ள இணக்கத்தைப் பொருட்படுத்தாமல் இப்படிப்பட்ட தொழில்முறை மொழி பெயர்ப்பு செய்யப்படும்போது எப்படிப்பட்ட இலக்கியம் அதைப் பிழைத்து வெளி வருகிறது?

அவர் எழுப்பும் கேள்வியில் நியாயம் இருக்கிறது என்று நினைக்கிறேன்-

ஒரு டட்ச் பதிப்பக எடிட்டர் சொல்கிறார், டட்ச் நாவல் ஒன்றின் சர்வதேச உரிமைகளை அவர் விற்க வேண்டும் என்று நினைத்தால், ஹாலந்து குறித்து உலகெங்கும் உள்ள பிம்பத்தோடு ஒத்துப் போனால்தான் அந்த நாவல் விற்பனையாகிறது என்று. ஒரு இத்தாலிய எடிட்டரின் குறிப்பு இது: வெளிநாட்டில் உள்ள இத்தாலிய நாவலாசிரியர் தன் நாட்டின் ஊழலைக் கண்டனம் செய்தாக வேண்டும், அல்லது அவர் இதாலோ கால்வினோ, உம்பர்டோ இகோ, ராபர்டோ கலாசோ போன்றவர்களிடம் நாம் காணும் சந்தோஷமான அறிவுத்தேட்டையை தானும் பிரதிபலித்தாக வேண்டும். மைனாரிட்டி இன எழுத்தாளர்களது படைப்புகள் அவர்களுடைய சமூகங்களைப் பற்றிப் பேசினால்தான் அவற்றைப் பதிப்பாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது அடிக்கடி நிகழும் அனுபவமாக இருக்கிறது.

இதனால் என்ன ஆகிறது? இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதப்படும் நாவல்களில் நாம் பொதுவாக காணும் சில விஷயங்கள் அறச் சீற்றம் அல்லது சமூக நீதி குறித்த அக்கறையால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதை எளிதில் சொல்லி விடலாம்- எந்த வகையான நாவல் பதிப்பிக்கப்படுகிறது என்பதை அதன் ஆசிரியர் அல்ல, பதிப்பாளரும் எடிட்டரும்தான் தீர்மானிக்கிறார். எழுத்தாளர் அவர்களது குரலாக மட்டுமே இருக்கிறார். ஒரு பிம்பத்தைப் பிரதிபலித்து அதற்கு மெய்ம்மை தரும் வேலையைதான் சர்வதேச அரங்கில் தம் எழுத்தை முன் வைக்க நினைக்கும் எழுத்தாளர்கள் செய்கிறார்கள் என்று சொல்லலாம். இந்தத் தேவையால் இவர்கள் தம் தேசத்தை ஒரு விசித்திரமான இடமாக சித்தரிக்க வேண்டியிருக்கிறது என்கிறார் டிம் பார்க்ஸ்- அமெரிக்கர்கள் அமேரிக்கா குறித்து எழுதும் நாவல்களில் இத்தன்மை இருப்பதில்லை- அவற்றில் அமெரிக்கா உள்ளபடியே விவரிக்கப்படுகிறது.

இலக்கியம் உலகமயம் ஆகும்போது அது நமக்கு விடுதலை தருவதில்லை. பல தேசங்களைக் குறித்து நாம் அறிய வேண்டிய அவசியம் நமக்கு இருப்பதால் விரைவாகப் பயன்படுத்தப்படக்கூடிய லேபல்களை நாம் கையில் எடுக்கிறோம், மற்றவர்களைப் பற்றிய பிம்பங்களை உறுதி செய்து கொள்கிறோம். மொழிபெயர்ப்பாளன் எவ்வளவு வேகமாக வேலை செய்ய வேண்டி வருகிறதோ அவ்வளவுக்கு, உறுதியாக சொல்கிறேன், அவனது படைப்பு இறுதியில் தட்டையாகவும் போது நடையை ஒத்ததாகவும் இருக்கும்,

என்று முடிக்கிறார் டிம் பார்க்ஸ்.

மொழி பெயர்ப்புகள் அவசியம்தான், மறுக்க முடியாது. ஆனால் சர்வதேச விற்பனைக்கான விளம்பரங்களாகவும் விருதுகளுக்கான தயாரிப்புகளாகவும் மூலப் பிரதிகளே அணுகப்படும்போது இழப்பு தாய் மொழி இலக்கியத்துக்குதான்.

கட்டுரை என்று பார்த்தால் இது விருதுகள், முக்கியமாக நோபல் பரிசு குறித்த கட்டுரை- நோபல் பரிசு பெறத் தயார் செய்யப்படும் இலக்கியம் எப்படி தனித்தன்மையற்ற ஒன்றாக, தாய்மொழியில் தன் தாய் நாட்டைச் சேர்ந்தவர்களை நோக்கிப் ஆக்கப்படும் ஒன்றாக இல்லாமல், உலக சந்தையை நோக்கி, தன்னைக் குறித்த பிம்பங்களை உறுதி செய்யும் கருவியாக படைக்கப்பட்டு, தட்டையான, மூலப் பிரதிக்கு விசுவாசமாயில்லாத சாமானிய எளிய நடையில் மொழி பெயர்க்கப்படுகிறது என்பதே டிம் பார்க்சின் கவலை. ஆனால் அது நம் கவலை இல்லை என்பதால், எனக்கு இந்தக் கட்டுரையில் முக்கியமானதாகத் தெரிந்த விஷயங்களை மட்டும் இங்கு மொழி பெயர்த்திருக்கிறேன்.

அவர் நோபல் பரிசு குறித்து சொல்லும் ஒரு விஷயத்தை மட்டும் பதிவு செய்கிறேன்- அது விருதுகள் குறித்த ஒரு முக்கியமான கோணத்தை முன் வைக்கிறது-

ஒரு எழுத்தாளருக்கு எதையும் விட உயர்ந்த உச்ச அங்கீகாரம் வழங்கப்படுகிறது என்ற கருத்தே சந்தேகத்துக்கிடமில்லாமல் இலக்கிய ஆர்வலர்களுக்கு வசீகரமான ஒன்றாக இருக்கிறது. நோபல் பரிசின் மூலம் நவீன இலக்கியத்தின் உலகளாவிய பரப்பு பிரகடனப்படுத்தப்படுகிறது, அதே வேளை ஒருவர் அதன் அரசனாக மகுடம் சூட்டப்படுகிறார். ஒரே கணத்தில், ஒருவர் போப்பாண்டவரால் புனிதராக அறிவிக்கப்படும்போது நிகழ்வது போல், தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளரின் ஸ்டேட்டஸ் புத்துருவம் பெறுகிறது, அவரது படைப்பு சமகாலத்தைச் சேர்ந்த ஒன்றாக இருப்பதிலிருந்து செவ்வியல் தன்மை கொண்டதாக மறு அவதாரம் எடுக்கிறது. ஸ்வர்க்கத்தில் யார் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரில் ஒருவராக இருக்க வேண்டும் என்பதை வாடிகன் தீர்மானிப்பதைப் போலவே, அதே நியாயத்துடன் அதே அதிகாரத்தின் அடிப்படையில் இது செய்யப்படுகிறது- இவர்கள் எந்த நியாயமும் அதிகாரமும் இல்லாமல் இதை செய்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும்கூட நாம் இவர்களின் அவதாரங்களாகத் தவிக்கிறோம், காரணம், இதன்மூலம் அடையப்படும் கவனம் அதீதமான, மிகைப்படுத்தப்பட்ட இலக்கிய ஆசைகளை நியாயப்படுத்தி அவற்றுக்கு அங்கீகாரம் தருகிறது.

சர்வதேச விருதுகள், அவ்வளவு ஏன், உள்ளூர் விருதுகள் குறித்து நமக்கிருக்கும் பிரமையை இந்தக் கட்டுரை ஓரளவு போக்குகிறது என்று நினைக்கிறேன். விருதுகள் தம் அதிகாரத்தை நிறுவிக் கொள்கின்றன, ஒரு படைப்புக்கோ அல்லது ஒரு எழுத்தாளனின் இடத்துக்கோ அது பட்டா தருவதில்லை. விருதுகளைப் பெருமையாக நினைப்பவன், தன் படைப்புகளை விருது தரும் நிறுவனங்களின் அதிகாரத்துக்குட்பட்டவையாக ஒப்புக் கொள்கிறான், அவ்வளவே. விருதுகள் மட்டும் ஒரு படைப்பின் தரத்தைத் தீர்மானிக்க முடியாது, ஒரு எழுத்தாளனின் இடத்தை நிறுவ முடியாது. தன்னம்பிக்கை இல்லாத சமுதாயங்களில் மட்டுமே விருதுகளின் அங்கீகாரம் விமரிசகர்களின் மதிப்பீடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்.