15/8/11

நம் கதைகள் நமதாக இருக்கட்டும் - சினுவா அசேபே

ஒருவரின் கதை உனக்குப் பிடிக்கவில்லையென்றால், நீயே உன் கதையை எழுது.

ஊமை சனங்கள் பேச்ச்சற்றவர்கள் மட்டுமல்ல, பார்வையற்றவர்களும்கூட என்கிறார் சினுவா அசேபே, இந்த நேர்காணலில்- இதுவே இலக்கியத்தின் நியாயமாகிறது.

பின் நான் வளரலானேன், நல்லவனாக இருக்கிற வெள்ளையன் எதிர்கொள்ளும் காட்டுமிராண்டிகளின் பக்கம் இருக்க வேண்டியவன் நான் என்பதையே அறியாமல் அந்த சாகசக் கதைகளைப் படிக்கலாயினேன். வெள்ளையரின் பார்வையில் பார்ப்பது என் அனிச்சையான இயல்பானது. அவர்கள் அருமையானவர்கள்! அவர்கள் அற்புதமானவர்கள். மற்றவர்கள் அப்படியல்ல... அவர்கள் முட்டாள்களாகவும் அவலட்சணமானவர்களாகவும் இருந்தனர். உனக்கென்று கதைகள் இல்லாததன் ஆபத்தை நான் இப்படித்தான் எதிர்கொண்டேன். அருமையான பழமொழி ஒன்றுண்டு- சிங்கங்கள் தங்கள் சரித்திரத்தை எழுதும்வரை வேட்டையின் வரலாறு வேடனைத்தான் போற்றும். இதை நான் வெகு காலம் சென்றபின்தான் உணர்ந்தேன். அதை உணர்ந்ததும் நான் எழுத்தாளனாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகிவிட்டது.

தன் வரலாற்றைத் தன் குரலில், தன் பார்வையில் பதிவு செய்ய வேண்டியதைப் பேசும் அசேபே அந்தப் பார்வை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் விளக்குகிறார்-

கே:
எழுத்தாளர்கள் பொதுப் பிரச்சினைகளில் எவ்வளவு ஈடுபாடு காட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

அசேபே:
நான் வேறு யாருக்கும் எந்த விதிமுறையும் வகுக்கவில்லை. ஆனால் எழுத்தாளர்கள் எழுத்தாளர்களாக மட்டும் இருப்பதில்லை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் குடிமக்களும்கூட. பொதுவாக அவர்கள் விபரமறிந்த வயதினராக இருக்கின்றனர். சீரியசான உயர்கலை என்பது மானுடத்துக்கு உதவவும், அதற்கு சேவை செய்யவுமே எப்போதும் இருக்கிறது என்பதே என் நிலைப்பாடு. அதன் கடமை குற்றம் சாட்டுவதல்ல. மானுட நேயத்துக்கு முட்டுக்கட்டை போடுவதுதான் அதன் குறிக்கோள் என்றால் கலையை கலை என்று நாம் எப்படி அழைக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதனை அசௌகரியப்படுத்துவது அதன் நோக்கமாக இருக்கலாம், ஆனால் அடிப்படையில் மானுட நேயத்துக்கு எதிராக இருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால்தான் எனக்கு இனவாதம் சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது, அது மானுடத்துக்கு எதிராக இருப்பதால். சிலர் இவன் தன் மக்களைப் புகழ வேண்டும் என்று சொல்கிறான் என்று நினைக்கிறார்கள். அடக் கடவுளே! போய் என் புத்தகங்களைப் படித்துப் பாருங்கள். நான் என் மக்களைப் போற்றுவதில்லை. நான்தான் அவர்களுடைய கடுமையான விமர்சகன். "நைஜீரியாவின் பிரச்சினை" என்ற என் துண்டுப் பிரசுரம் வரைமீறிய ஒன்று என்று சிலர் நினைக்கிறார்கள். என் எழுத்தால் எனக்குப் பல பிரச்சினைகள் வந்திருக்கின்றன. கலை மானுடச் சார்பு கொண்டதாக இருக்க வேண்டும். எத்தியோப்பியாவுக்குச் சென்று பல நோய்களோடு திரும்பினாரே ராம்பூ (Rimbaud), அந்த பிரெஞ்சு நாட்டுக்காரரைப் பற்றி யெவ்டுஷென்கோதான் சொன்னார் என்று நினைக்கிறேன், ஒரு கவிஞன் அடிமைகளை வைத்து வர்த்தகம் செய்ய முடியாதென்று. அடிமை வர்த்தகத்தில் இறங்கியபின் ராம்பூ கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டார். கவிதையும் அடிமை வியாபாரமும் சேர்ந்திருக்க முடியாது. அதுதான் என் நிலைப்பாடு.

சுவையான கருத்துகள். ஆனால் நாம் யார் என்பதற்கு விடை காண்பது அவ்வளவு சுலபமல்ல- காலம் நம் வரலாறுகளை அவ்வளவு சிக்கலாகப் பிணைத்திருக்கிறது. பெரும்பாலும் நாம் யார் என்பது நம்மை வெறுப்பவர்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது. இதற்கு எதிர்வினையாக தன் வரலாற்றைப் பதிவு செய்பவன், மானுடச் சார்புடன் எழுத வேண்டும் என்பதைத் தன் கடமையாக வைத்துக் கொள்வது சிக்கலான பாதையைத் தேர்ந்தெடுப்பதாகவே இருக்கும். ஆனால் வேறு வழியில்லை என்றும் சொல்லலாம்.