16/8/11

ஆற்று நீருக்குத் தன் பாதை தெரியாதா?

நாவல் என்று பார்த்தால் உலகின் முதல் நாவலாக ஜப்பானின் கெஞ்சி கதைகளைச் சொல்கிறார்கள். அது1008ஆம் ஆண்டு எழுதப்பட்டதாம் (தமிழில் 1879- பிரதாப முதலியார் சரித்திரம்). ஐரோப்பாவின் முதல் நாவல் 1605ல் எழுதப்பட்ட Don Quixote என்று சொல்கிறார்கள். சிறுகதைகள் ஐரோப்பாவில் பதினான்காம் நூற்றாண்டில் எழுதப்படத் துவங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் (நாம் இன்று இலக்கியமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் சிறுகதைகள் புதுமைப்பித்தன் காலத்தை ஒட்டி எழுதப்படத் துவங்கியவை என்று நினைக்கிறேன்)


எது எப்படி இருந்தாலும் எழுதப்பட்ட வடிவில் புனைவுகள் ஐரோப்பாவில் குறைந்தது ஒரு நானூறு ஆண்டுகளாக இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளலாம். சீனா ஜப்பான் என்று போனால் ஆயிரம் ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் (அங்கு நவீன இலக்கியம் எப்போது ஆரம்பிக்கிறது என்று தெரியவில்லை). தமிழில் அதிகபட்சம் ஒரு நூறு ஆண்டுகள் என்று சொல்லலாமா?

காவியங்களாக இல்லாத கதைகள், பாடல்களாக இல்லாத கவிதைகள்- செவிப்பதற்காக அன்றி வாசிப்பதற்காக படைக்கப்பட்டவை, நம்மிடையே ஒரு நூறாண்டு காலமாகப் புழங்குகின்றனவா? இருநூறு என்றே வைத்துக் கொள்வோம், என்ன மோசம் போய் விடப் போகிறது?- ஐரோப்பாவில் நானூறு, (சீனா/ஜப்பான் தெரியவில்லை)- நாம் மிக இளையவர்கள். நம் விமரிசகர்களால் இலக்கியமாகப் பேசப்படும் புதினங்கள் மிக இளையவை- நூறு ஆண்டுகள்?

நம்மால் தீவிரமாகப் பேசப்படும் புனைவுகளின் வயது நூறுக்கும் குறைவு என்று சொல்லலாமா? சொல்லலாம் என்றுதான் நினைக்கிறேன்: செவிப்பதற்காகச் செய்யப்பட்ட ஆக்கங்கள் நோக்கத்திலும் வடிவமைப்பிலும் வாசிக்கச் செய்யப்பட்டவையினின்று இயல்பில் பெரிதளவில் வேறுபட்டவை, இல்லையா? அப்படி இருக்கும்போது, நம் இலக்கிய வரலாறு குறித்த பிரக்ஞை இயல்பான ஒன்றா அல்லது வலிய கட்டமைக்கப்பட்ட மாயத் தோற்றமா?

ஐம்பது ஆண்டு கால இலக்கியத்தைப் பேசும்போது இதில் எதெல்லாம் காலத்தைக் கடந்து நிற்கக்கூடியவை என்று வரையறுப்பது எந்த இலக்கணத்தின், எந்த இலக்கியப் பின்புலத்தின் அடிப்படையில்? தனி மனித ரசனை என்றுதான் சொல்ல வேண்டும். கம்ப ராமாயணம் போன்ற ஒரு படைப்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்தால் அதிகம், இல்லையா? கம்ப ராமாயணத்தைப் போன்ற படைப்புகள் நம்மிடையே எத்தனை இருக்கின்றன? கம்ப ராமாயணத்தைவிடக் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும் படைப்புகள் என்று பட்டியலிட்டால்கூட, கடந்த நூறாண்டு கால ஆக்கங்களைத் தவிர்த்தோமானால், நூறு தேறுமா?

இந்த நூறும் எந்த அடிப்படையில் தேறின? தேறாமல் உதிர்ந்த படைப்புகள் எத்தனை? காலத்தால் புறக்கணிக்கப்பட்ட படைப்புகளைக் கருதாமல், படைப்புகள் ஏன் காலத்தைத் தாண்டி நிற்கின்றன என்று எப்படி பேச முடியும்? அதற்கு ஒரு தலைமுறை, அல்லது மூன்று, அது போதுமா? உயிரின் வரலாற்றைப் பேசுகிறோம், பரிணாம வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறோம்- மனிதனைத் தவிர வேறெந்த உயிரும் இந்த உலகில் இருந்ததற்கான தடயம் இல்லை என்றால், உயிரின் பிறப்பையும் இருப்பையும் புரிந்து கொள்வது எப்படி?

இப்போது நாம் பேசும் புத்தகங்கள், புனைவுகள் அப்படிப்பட்டவை. இருப்பது இதுதான். இதில் எது மிஞ்சும் என்று சொல்லத் தேவையான தரவுகள் தமிழில் இல்லை. அதை இன்று வரையறுப்பது அவரவரது தனி மனித ரசனை மட்டுமே.

இதை அறியாதவர்கள் கொஞ்சம் உலக இலக்கியம் பேசலாம். அங்கேயும் இந்த மாதிரி canonகள் இருக்கின்றன. அவையே சிக்கிச் சீரழிகின்றன- இங்கே பாருங்கள்.

இங்கே இப்போதுதான் நவீன இலக்கியம் என்ற ஒன்றே வளர்கிறது. அதற்குள் ஒரு தொன்மையான பின்புலத்தில் நின்று கொண்டிருப்பதான பாவனையில் காலத்தைத் தன் கைக்கோலால் (அரை அடி ஸ்கேல் என்று அதை தம் கல்விக்குப் பயன்படுத்தும் அப்பருவத்தினர் சொல்லிக் கொள்வார்கள்) வரையருப்பவர்கள் அநியாயத்துக்கு அவசரப்படுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும், வேறு வழியில்லை. இவர்கள் போடும் பட்டியலில் உள்ள கதைகள் கிளியொன்று எடுத்துக் கொடுக்கும் சீட்டுகள் போன்றவை- காலம் அவற்றை ஏற்றுக் கொள்ளும் என்று நாம் கருத இடமில்லை, அது அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

இதைப் படித்து நண்பர்கள் சிலர் அயர்ச்சியுற வேண்டாம், யாரும் இங்கே எழுதப்படும் விஷயங்களைப் படிப்பதில்லை என்றாலும், கூகுள் தேடலில் என்றாவது ஒரு நாள் யாரேனும் பிரதாப முதலியார் சரித்திரம் என்று தேடி இங்கே வந்து விழ வாய்ப்பு இருக்கிறது: அவருக்கு இதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்- "என்ன இது, எந்தக் குதிரை ஜெயிக்கும் என்று என் புக்கியை நம்பி காசு கட்ட முடியாதா?" என்று கவலைப்பட வேண்டாம் நண்பரே, உங்கள் கவலையின் பிரகாசமான பக்கத்தைப் பாருங்கள்- நீங்களும் கொஞ்சம் முயற்சி செய்து பத்திருபது சிறுகதைகள் எழுதினால் போதும், உங்களுக்குத் முயற்சியும் திறமையும் இருந்தால், உங்கள் கதைகளில் ஒன்று இவர்கள் போடும் சிறந்தவை நூறு பட்டியல்களில் ஏதேனும் ஒன்றில் இடம் பெறும் வாய்ப்பிருக்கிறது. நேற்று பிறந்தவை, ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் ரஷ்ய மொழிகளில் எழுதுகிறவனை நினைத்துப் பாருங்கள், தமிழில் எழுதுகிறவனை நினைத்துப் பாருங்கள். நான் சொல்வது புரியும்.

எனக்குச் சொழியை உருட்டிப் போடுவதிலோ, என் அபிமான கிளியை விட்டு சீட்டு எடுத்துப் படிப்பதிலோ நம்பிக்கை இல்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் மேற்கோள் காட்டுவது மட்டுமே- ஆகவே, அண்மைக் காலத்தில் ஆகச் சிறந்த நவீன எழுத்தாளர்கள் என நான் கேள்விப்படும் சிலரில் ஒருவரான எலிப் படுமன் இந்தப் பட்டியல்களில் இருக்கும் புத்தகங்களைப் பற்றி சொல்வதை சொல்வதை இங்கே முழு ஒப்புதலோடு பதிவு செய்கிறேன்:
சரியான புத்தகம் உன்னை சரியான காலத்தில் வந்தடைய வேண்டும், யாரையும் எல்லா புத்தகங்களும் தொட்டுவிட முடியாது. இலக்கியம் என்பது அழகாகவும் தேவையான ஒன்றாகவும் கருதப்படுகிறது- குறிப்பிட்ட ஒரு காலத்தில் குறிப்பிட்ட ஒரு புத்தகத்தில் உன்னால் களிப்படையவோ அதை வாசிப்பதோ உனக்கு சாத்தியமாக இல்லாது போனால், நீ வேறொன்றைப் படிக்கப் போ, உனக்கு அதில் ஒன்றுமில்லை என்பது உன் குற்றமல்ல.
உன் குற்றமல்ல என்று சொன்னவர் உன் மேதமையல்ல என்றும் சொல்லியிருக்க வேண்டும். தமிழ் தெரிந்திருந்தால் சொல்லியிருப்பாரோ என்னவோ.