ஏறத்தாழ ஒரு புக்மார்க்காக அவர் பிலிப் ராத்துக்கு எழுதிய கடிதத்தின் இந்தப் பகுதியை இங்கு சுட்டுகிறேன்- முக்கியமான ஒன்றாக எனக்கு இது தோன்றுகிறது -
மேற்கில் இருந்த கம்யூனிஸ்டுகளைக் குறித்தே இதை சொல்கிறேன்- அவர்கள் விஷயத்தில் நிஜமாகவே ஒரு விஷயம் புதிராக இருக்கிறது, அவர்களால் எப்படி ஸ்டாலினை ஏற்றுக் கொள்ள முடிந்தது? இதுவரை வாழ்ந்த சர்வாதிகாரிகளில் மிக அரக்கத்தனமானவர்களில் ஒருவர் அவர். ஸ்டாலினும் ஹிட்லரும் போலந்தைப் பகிர்ந்து கொண்டது, ஹிட்லர் ரஷ்யாவின் மீது படையெடுக்க வழி கோலிய பிரஞ்சு தேசத்தின் தோல்வி போன்றவையெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தங்கள் விசுவாசத்தை மறு பரிசீலனை செய்ய வைத்திருக்கும் என்றுதான் நீ நினைப்பாய். ஆனால் அப்படி எதுவும் ந்கழவில்லை. நான் 1948ல் பாரீஸ் போய் சேர்ந்தபோது அங்கே அறிவுலக முன்னோடிகளாக இருந்த Sartre, Marleau-Ponty வகையறாக்கள் ஸ்டாலினின் ரத்தக் கடல் குறித்து அறிந்திருந்தாலும் கட்சிக்கு விசுவாசமாகத்தான் இருந்தனர் என்பதை கவனித்தேன். ஒவ்வொரு தேசத்துக்கும், ஒவ்வொரு அரசுக்கும் தனக்கென்று ஒரு கடலோ குளமோ குட்டையோ இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும்கூட ஸ்டாலின் ஒரு "நம்பிக்கை"யாக இருந்தார்- அவருக்கும் ஹிட்லருக்கும் உள்ள ஒற்றுமைகள் தெளிவாகத் தெரிந்தாலும்கூட.காழ்ப்புணர்வு தார்மீக நியாயங்களைக் கைக்கொள்ளல் ஆகாது என்று நினைக்கிறேன். அது நீதியை மீட்டுத் தருகிறதோ இல்லையோ, அக்கிரமக்காரர்களுக்கும் அதிகார வெறியர்களுக்கும் நம்மை ஆளும் அதிகாரத்தை கைமாற்றித் தந்து விடுகிறது.
சுருக்கமாகவே சொல்கிறேன்- இதுதான் காரணம்: தன் தேசத்தின் மீதான வெறுப்பில்தான் காரணத்தைத் தேட வேண்டும். பிரஞ்சுக்காரர்களைப் பொருத்தவரை அது கலைஞர்களாகிய"சுதந்திர உணர்வாளர்களுக்கும்" ஆளும் பூர்ஷ்வாக்களுக்கும் இடையில் எப்போதுமிருக்கும் மோதல். அமெரிக்காவில் தேசத் துரோகத்தை விசாரிக்கும் ஹவுஸ் கமிட்டிகள் போன்ற மக்கார்த்தியின் ஆட்களுக்கு எதிரான போர், இதுதான் ஹென்றி வாலஸ் போன்றவர்களின் கட்சிக்காரர்கள் இடது சாரிகள் சொல்லும் நியாயமாக இருந்தது. முதன்மையான எதிரி உள்ளே இருக்கிறான் (லெனினின் முதலாம் உலக யுத்த கோஷம்). கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்தால் நீ ஒரு மக்கார்த்தி ஆள்- இதில் இரண்டு தரப்புகள் இருக்க வாய்ப்பேயில்லை.
என்ன சொல்வது, இது ஒரு ஆழ்ந்த, வக்கிரமான மூடத்தனம். ஸ்டாலினியம் என்றால் என்ன என்பதைப் பார்க்க பயங்கரமான அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இருந்திருக்கவில்லை. ஆனால் தீவிரவாதம் பேசுகிறவர்களும் இயக்கத்தினரும் அனைவருக்கும் தெரிந்த உண்மைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுத்தனர்.