22/5/11

கதையும் நிகழ்வும்

"கதையில் உள்ளத்தைக் கவரும் நிகழ்ச்சிகளும் வர வேண்டும். அதே சமயத்தில் “இப்படி நடந்திருக்க முடியமா?” என்ற சந்தேகத்தை எழுப்பக் கூடிய நிகழ்ச்சிகளையும் விளக்க வேண்டும்.

பிரத்தியட்சமாகப் பார்த்த உண்மையான நிகழ்ச்சிகளாயிருக்கலாம். ஆனால் படிக்கும்போது “இது நம்பக் கூடியதா?” என்று தோன்றுமானால், கதை பயனற்றதாகிவிடுகிறது.

சுருங்கச் சொன்னால், கதையில் கதையும் இருக்க வேண்டும். அதே சமயத்தில் அது கதையாகவும் தோன்றக் கூடாது!

இம்மாதிரி கதைகள் புனைவது எவ்வளவு கடினமான கலை என்பதைக் கதை எழுதும் துறையில் இறங்கி வெற்றியோ தோல்வியோ அடைந்தவர்கள்தான் உணர முடியும்.

இந்த நூலின் ஆசிரியர் ஸ்ரீ கு. அழகிரிசாமி அத்தகைய கடினமான கலையில் அபூர்வமான வெற்றி அடைந்திருக்கிறார். மிக மிகச் சாதாரணமான வாழ்க்கைச் சம்பவங்களையும் குடும்ப நிகழ்ச்சிகளையும் வைத்துக் கொண்டு கதைகள் புனைந்திருக்கிறார். படிக்கும்போது இது கதை என்ற உணர்ச்சியே ஏற்படுவதில்லை. "

>>>அமரர் கல்கி அவர்கள் கு அழகிரிசாமியின் "அன்பளிப்பு" என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய அருமையான விமர்சனம் சிலிகான் ஷெல்பில் இருக்கிறது.

21/5/11

ஆப்பிள் மரம் - ஒரு சிறுகதை அறிமுகம்

நம்மில் பலர் நாம் படித்த புத்தகங்கள் பற்றி பதிவு எழுதுகிறோம். ஒரு சிறுகதையின் அறிமுகம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும்படி Daphne Du Maurierன் The Apple Tree குறித்து எழுதியிருக்கிறார் பாருங்கள்-

எனக்கு அவரது பல சிறுகதைகள் விருப்பமானவையாக இருக்கின்றன. ஆனால் அவரது "The Apple Tree" என்ற சிறுகதை என் மனதை நீண்ட நாட்களுக்கு அலைக்கழித்திருக்கிறது.
அண்மையில் காலமான தன் மனைவி மிட்ஜ், அவளது நித்திய கண்டனத்தின் ஒரு பகுதியாக ஒரு ஆப்பிள் மரமாகத் திரும்பி வந்திருக்கிறாள் என்று நம்புகிறவன் ஒருவனின் கதை இது. அவன் தனது நீண்ட மணவாழ்வை நினைத்துப் பார்க்கிறான். தங்கள் புதுமண வாழ்வின் பால்ய பருவத்தில் அவன் சிவந்த கன்னங்கள் கொண்ட களத்துவேலை செய்கிற ஒரு பெண்ணை முத்தமிடும்போது மிட்ஜிடம் தான் சிக்கிக்கொண்டதையும் அதன் பின்வரும் ஆண்டுகளில் தொடர்ந்த மனத் தொய்வையும் மௌனமான கோபத்தையும் அவன் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறான். மிட்ஜ் எதுவும் சொல்வதில்லை. ஆனால் அவள் தான் வாழ்வின் கடைசி நாள் வரை தன் அடிமைத்தனமான அர்ப்பணிபால் அவனை தண்டிகிறாள். நிமோனியாவில் சாகும்போதுகூட, அவள் கவனமாக ஒரு மருத்துவமனைக்குப் போய் விடுகிறாள், அவனுக்குத் தொல்லை தரக்கூடாது என்று. அவளது ஊமை வன்முறை அவனை வாழ்நாளெல்லாம் வெட்கிக் குனிய வைக்கிறது, அவள் இறந்த பின்னும்கூட இந்த தண்டனை தொடர்கிறது.

எனக்கு இந்தக் கதையில் பிடித்த விஷயங்களில் ஒன்று இது. அவளது கணவன் கடைசியில் மரத்தை வெட்டிச் சாய்க்கிற காட்சி கொடூரமான வன்முறை நிறைந்த ஒரு கொலைபோல் என் வயிற்றைப் பிறட்டுகிறது- கதை தான் சஸ்பென்ஸால் நம் நரம்புகளை முறுக்கி இசைக்கிறது. ஆனாலும்கூட இந்தக் கதையில் துரதிருஷ்டசாலி மிட்ஜ் குறித்த குறிப்புகளில் நுட்பமான நகைச்சுவை இருக்கிறது. அவளது கணவன் அவள் சுவர்க்கத்தின் கதவுகளுக்கு வெளியே காத்திருப்பதை நினைத்துப் பார்க்கிறான், "மிகப் பின்தங்கி நிற்கிறாள், வரிசைகளில் அங்கு நிற்பதே அவள் விதியாக இருந்திருக்கிறது". அவள் சுவர்க்கத்தின் சுழற்கதவின் அருகில் அவன் மேல் கண்டனப்பார்வையுடன் நிற்கும் காட்சி அவன் கண்முன் தோன்றுகிறது, "ஒரு வாரத்துக்கு இந்தத் தோற்றம் அவனுடன் இருந்தது, நாட்பட நாட்பட வெளிறி மறைந்தபின் அவன் அவளை மறந்தான்"

அவன் அவளுக்காக இரங்கும் நாட்கள் குறைவே, அது சுவையான வன்மத்துடன் விவரிக்கப்பட்டிருக்கிறது. அவனது மனைவியின் நினைவுகள் இரக்கமில்லாத குரூரத்துடன் விவரிக்கப்படுகின்றன. மரம் எப்போதும் "கூனியிருப்பதாகவும்" 'குனிந்திருப்பதாகவும்' வர்ணிக்கப்படுகிறது. அதன் மொட்டுக்களின் விவரிப்பு அவலட்சணமான சொற்களால் செய்யப்படுகிறது: "மிகச் சிறிதாகவும் ப்ரௌனாகவும் இருந்தன. அவற்றை மொட்டுக்கள் என்றுகூட சொல்ல முடியாது. அவை சிறு கிளைகளில் திப்பிய அழுக்கு போல் இருந்தன, உலர்ந்த குப்பை போல்... அவற்றைத் தொடுகையில் அவனுள் ஒரு வகையான அசூயை எழுந்தது"- ஒரு உடலாய் இருந்தபோது அவளை அவன் எந்த அளவுக்கு வெறுத்திருக்கிறான் என்பதைப் பார்க்கிறீர்கள்.

மெல்ல மெல்ல அந்த மரம் அவன் வாழ்வை களங்ப்படுத்துகிறது. இரவில் ஒரு மரம் கீழே விழுகிறது. அவன் அதை எரிக்கும்போது அது வீட்டை ஒரு நோய்வாய்ப்பட்ட பச்சை நாற்றத்தால் நீங்காமல் நிறைக்கிறது, அவனது சமையல்காரப் பெண் அந்த மரத்தின் ஆப்பிள்களைக் கொண்டு ஒரு ஜாம் செய்து தருகிறாள். அதை சாப்பிட்டதும் அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. கதை மெல்ல மெல்ல ஒரு கொடுங்கனவாக மாறுகிறது. அவளது கணவன் அந்த மரத்தைத் தன் வாழ்விலிருந்து நீக்க முயற்சி செய்கிறான். அவன் தான் குற்ற உணர்வைத் தப்ப முயல்கிறான் என்றும் சொல்லலாம். அவனுக்குப் பெண்கள் மீதிருக்கும் வெறுப்பின் உக்கிரத்தைப் பார்க்கும்போது இதையும் உறுதியாக சொல்ல முடிவதில்லை. அவன் அனுபவங்கள் பிரமைதானா? அல்லது பழிவாங்கும் ஆவிதான் மரமாக வந்திருக்கிறதா? அந்தக் கணவனுக்கு விடுதலை கிடையாது, ஆப்பிள் மரம் தீய சக்தியாக மாறத் துவங்குகிறது, அதன் வேர்கள் அவனை இறுகப் பிணைக்கின்றன.
Polly Samson, Haunted by the Apple Tree

இந்த சிறுகதையை இந்த தொகுப்பில் படிக்கலாம்-
பிடிஎப் கோப்பு

Daphne Du Maurier குறித்த ஒரு சிறு அறிமுகம் இங்கே.


சென்ற பதிவில் வில்லியம் ட்ரெவரின் மேற்கோள் ஒன்றை கவனிக்க-
"வாழ்க்கையிலிருந்து துயரத்தை நீக்கி விட்டால், வாழ்க்கையில் இருந்து ஒரு பெரிய, நல்ல விஷயம் அப்புறப்படுத்தப்பட்டு விடும். ஏனென்றால் சோகமாக இருப்பது என்பது குற்றவுணர்வுடன் இருப்பது போன்ற ஒன்று. இவை இரண்டுக்கும் கெட்ட பெயர் இருக்கிறது. ஆனால் உண்மையைச் சொல்வதானால் குற்றவுணர்வு ஒன்றும் அவ்வளவு மோசமான மனநிலையல்ல. எல்லாரும் சில நேரம் குற்றவுணர்வை அறிந்திருக்க வேண்டும். நான் குற்றவுணர்வைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். அது நமக்கு புத்துயிரூட்டக் கூடிய ஒன்றாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்."

19/5/11

வில்லியம் ட்ரெவர்- சில மேற்கோள்கள்.


வில்லியம் ட்ரெவர் சில மேற்கோள்கள்:

என்னைவிட மற்றவர்களின் மேல் எனக்கு ஆர்வம் கூடுதலாக இருக்கிறது. மற்றவர்கள் எனக்கு வசீகரமானவர்களாக இருக்கிறார்கள்.

எனக்கு எழுத்து முழுக்க முழுக்க மர்மமான ஒன்றாக இருக்கிறது. நான் எழுத்து ஒரு மர்மம் என்று நினைக்கவில்லையென்றால் அது முழுக்கவுமே பிரயோசனமில்லாத செயலாகிப் போயிருக்கும். எதுவும் எனக்கு எப்படி முடியப் போகிறதென்று தெரிவதில்லை, அடுத்த இரு வரிகள் எவையாக இருக்கக் கூடும் என்பதுகூட எனக்குத் தெரியாது.

வாழ்க்கையிலிருந்து துயரத்தை நீக்கி விட்டால், வாழ்க்கையில் இருந்து ஒரு பெரிய, நல்ல விஷயம் அப்புறப்படுத்தப்பட்டு விடும். ஏனென்றால் சோகமாக இருப்பது என்பது குற்றவுணர்வுடன் இருப்பது போன்ற ஒன்று. இவை இரண்டுக்கும் கெட்ட பெயர் இருக்கிறது. ஆனால் உண்மையைச் சொல்வதானால் குற்றவுணர்வு ஒன்றும் அவ்வளவு மோசமான மனநிலையல்ல. எல்லாரும் சில நேரம் குற்றவுணர்வை அறிந்திருக்க வேண்டும். நான் குற்றவுணர்வைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். அது நமக்கு புத்துயிரூட்டக் கூடிய ஒன்றாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

என் கதைகள் உணர்வுகளைப் பற்றியவை. மாற்று உண்மைகளைப் பற்றியவையல்ல. அனைத்து வகை உணர்ச்சிகளும் ஆய்ந்து, நினைத்துப் பார்த்து, அறிய நினைத்து அச்சுக்குத் தரத் தகுந்தவையாக எனக்குத் தோன்றுகிறது. நான் அறிய நினைத்து எழுதுகிறேன், மற்ற எந்த காரணத்தைவிடவும் அதுவே பொருத்தமான ஒன்று. அதனால்தான் நான் பெண்களைப் பற்றி நிறைய எழுதுகிறேன், நான் பெண்ணாக இல்லாததால், பெண்ணாக இருத்தல் என்பது எப்படியிருக்கும் என்பதை நான் அறியாதிருப்பதால் அதைப் பற்றி அதிகம் எழுதுகிறேன். நான் எதுவாக இல்லையோ, எதுவாக இருக்க முடியாதோ, அதை இன்னும் அதிகமாக அறிவதுதான் எனக்கு அதை எழுதுவதற்கான உத்வேகத்தைத் தருகிறது.

ஒருவனின் வாழ்க்கை அல்லது உறவின் கணநேரப் பார்வையே ஒரு சிறுகதையாகும். ஒரு உறவை எடுத்துக் கொண்டு அதை ஏறத்தாழ படம் பிடித்துக் காட்ட முடியும். ஒரு நாவலின் பேருருவில் அந்த உறவின் தன்மை மறைந்துவிடும். எனக்கு அதைப் பிரித்துப் பார்த்து, என் பாத்திரங்களை நன்றாக கவனிக்கப் பிடித்திருக்கிறது"

எது சொல்லப்படாமல் இருக்கிறதோ, அதுதான் மிக முக்கியமானது.



ஆங்கில வடிவம் கார்டியனில் இருக்கிறது.

18/5/11

அரசியலும் ஆன்மாவும்

இந்த ப்ளாக் கொஞ்சம் திசைமாறி இப்போது அரசியல் எழுத்து மற்றும் மானுட எழுத்து-(குறிப்பாக அரசியலாக இல்லாத, மானுடத்தை நோக்கிப் பேசும் எழுத்துக்குப் பெயர் என்ன?)- பற்றி விவாதிக்கிறது- நினைவும் புனைவும் கலந்து, ஒன்றுக்கொன்று அறிவூட்டி படைப்பாக வெளிப்படுவதை சில நாட்களாகப் பேசிக் கொண்டிருந்தோம். இங்கிருந்து அரசியல் எழுத்துக்குப் போவதென்பது ஒரு பெரிய தாவல். ஆனால் அது அப்படியொன்றும் நம் ப்ளாகின் பேசுபொருளுக்கு அன்னியமானதல்ல என்று நினைக்கிறேன்,.

Adrienne Rich என்பவரது பேட்டி ஒன்றை பாரிஸ் ரிவ்யூவில் படித்தேன் - Adrienne Rich on ‘Tonight No Poetry Will Serve’. அதில் அவர் சொல்லும் சில விஷயங்கள் கவனிக்கத்தக்கவை-
வேறெந்த வழியிலும் என்னால் தொட முடியாத, என்னை விடாத நாட்டங்கள் மற்றும் ஆசைகளைக் கொண்டு கலை படைப்பதற்கான வழிக்கான- கருவிகளுக்கான- தேடலாய் எனது எழுத்து இருந்திருக்கிறது என்பதை இப்போது என் எண்பதுகளில் என்னால் பார்க்க முடிகிறது. பொதுமைப்படுத்தி சொல்வதானால் நான் உலகை வரலாறாக அறியும் பிரக்ஞையாகக் காண நினைத்தேன்- மானுட தேவைகள், மானுட உள்ளங்கள், உழைப்புகள், நேயங்கள் (மானுட குரூரமும் பேராசையும்தான்) இவற்றாலான வரலாறாகக் காண நினைத்தேன். நான் Cold Warன் துவக்க காலங்களில் எழுதத் துவங்கினேன். இளம் வயதில் எங்களுக்குக் கம்யூனிசம் மற்றும் அணு குண்டு குறித்த அச்சம் புகட்டப்பட்டிருந்தது- இத்தனைக்கும் அணுகுண்டை எங்கள் அரசே பயன்படுத்தியிருந்தது. எனது முதல் புத்தகத்தின் முதல் கவிதை (“Storm Warnings” in A Change of World [1951]) அந்த அச்சத்தைப் பிரதிபலிக்கிறது - எங்கள் கவலையையும் இயலாமையையும். அதிகாரம் சார்ந்த உறவுகளை நான் கணித்த வண்ணம் அவை எனது கவிதைகளிலும் உரைநடைகளிலும் காலம்தோறும் நிறைத்திருக்கிறது. இந்த உலகில் என் அனுபவங்களை, என் படிப்பினைகளை, நான் எதிர்கொண்டு உருமாற்றும் இடமாக எனக்கு கவிதை இருந்திருக்கிறது..

1950களில் பதிப்பிக்கப்பட்ட Snapshots of a Daughter-in-Law என்ற தொகுப்பில் “From Morning Glory to Petersburg” என்ற கவிதை இருக்கிறது. ஒரு கலைக்களஞ்சியத்தின் தலைப்புகளாலானது அந்தக் கவிதை. பகுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு வாழத் தகுந்த பொருளை எவ்வாறு உன்னால் கட்டமைத்துக் கொள்ள முடியும் என்ற கேள்வியை ஒரு தேர்வு செய்யப்பட்ட உத்தியாய் அந்தக் கவிதை கேட்டது. உன்னால் ஒருங்கிணைக்க முடியாத 'தகவல்களோடு' நீ எப்படி வாழ முடியும்? கவிதையால் இந்த ஒருங்கிணைப்பை நிகழ்த்துவது ஒரு வழி.
அதிகார அமைப்புகளின் அரசியலால் உணர்வுகளின் உலகில் வாழும் நாம் பாதிக்கப்படுகிறோம், இல்லையா? மொழியை அரசியல் பின்னப்படுத்துகிறது- அன்பு என்றோ மனித நேயம் என்றோ நாம் பேசும்போது, யாருக்கு என்ற கேள்வியைத் தாண்டி செல்வது அவ்வளவு எளிதாக இல்லை. இதைக் கவிதையின் வாயிலாக சாத்தியப்படுத்த முடியும் என்கிறார் அட்ரியன் ரிச் என்று நினைக்கிறேன்: கவிதை என்றில்லை, எந்த ஒரு உள்ளார்ந்த உண்மையை வெளிப்படுத்தும் படைப்பும் இதை சாத்தியமாக்கக்கூடும், மொழியின் அமைப்பைக் கொண்டு உரையாடுவதால், கவிதையில் இது எளிதாகிறது என்று தோன்றுகிறது.

இந்தப் பேட்டியில் கவிதையின் கடமைகள் எவையென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அட்ரியன் ரிச் பதில் சொல்கிறார்-
கவிதைக்கென்று தனியாகவோ அனைத்து இடங்களிலும் பொருந்தக்கூடியதாகவோ கடமைகள் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சூழல்களில் மாபெரும் மானுட செயல்பாட்டால் நேரும் ஆக்கச்செயல் இது. 'நமது' என்று நாமழைக்கும் சமகாலத்தில், பொய்த்தகவல்களும் உற்பத்தி செய்யப்பட்ட கவனச்சிதறல்களும் சுழலாய் அலைகழிக்கும் இக்காலத்தில் கவிதைக்கு என்ன கடமை இருக்கக்கூடும்? நடிக்காமல் இருப்பது, பொய்யான களங்கமின்மையைக் கைகொள்வது, அடுத்த வீட்டில் அல்லது பக்கத்து ஊரில் நடப்பதைத் திரையிட்டு மறைத்துக் கொள்ளாமல் இருப்பது. ஆழமற்ற சூத்திரங்கள், சோம்பலான விரக்தி, மூச்சு முட்டும் சுய- பிரதாபம் இவற்றைத் தவிர்ப்பது.

நம் ஒவ்வொருவருக்கும் சாத்தியமாயிருக்கக்கூடிய- நேர்மை, பெருந்தன்மை, துணிவு, தெளிவு இவற்றின் உதாரணமாக இருத்தல்- இதைத் தவிர வேறெதுவும் நம்மை கௌரவமான மனிதர்களாக இருக்கும்படி கட்டாயப்படுத்த முடியாது. இதுவே நம் சமுதாய அமைப்பை இறுகப் பிணைக்கவும் செய்யும்.

17/5/11

அர்த்தங்களே கலையின் இயல்பு...

எழுத்து குறித்த நல்ல கட்டுரை, ஒருவரை நோக்கி எழுதப்பட்டிருந்தாலும் இது அனைவருக்கும் பொருந்தக் கூடியது - ஓர் ஈழ எழுத்தாளருக்கு...
கலையின் பரப்பு எப்போதுமே கிரேஃபீல்ட் எனப்படும் பகுதிகளால் ஆனது. தெளிவு அல்ல தெளிவின்மையே கலையின் இயல்பு. அர்த்தம் அல்ல அர்த்தங்களே அதன் இயல்பு. அது சொல்வதில்லை உணர்த்துகிறது. அது சிந்தனையின் விளைவல்ல சிந்திக்கவைக்கும் ஒரு மொழிக்களம் மட்டுமே.

கருத்துக்கள், கொள்கைகள், நிலைபாடுகள் போன்ற பெருவெட்டான விஷயங்களால் ஆனதல்ல கலை. அது சிறிய விஷயங்களாலானது. நுண்மைகளால் மட்டுமே கட்டமைக்கப்படுவது. கலை ஒரு கலைஞனின் சிருஷ்டி அல்ல. அவன் தன்னை மீறிய விஷயங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுப்பதன் விளைவு.....
படித்துப் பாருங்கள், இந்த மாதிரி இன்னும் நிறைய இருக்கிறது-
இலக்கியம் மொழியாலானது. உணர்ச்சிகள் எண்ணங்கள் மட்டுமல்ல படிமங்களும்கூட இங்கே மொழிதான்.

மொழியின் ஒழுங்கே வேறு. ஒரு எண்ணத்தை அல்லது ஒரு நறுமணத்தை மொழிக்குள் கொண்டுவருவதற்கான சவாலென்பது இரவுபகலில்லாமல் மொழியை மட்டுமே அளாவிக்கொண்டிருப்பதனால்தான் கைகூடும். ஒரு சிந்தனை அல்லது உண்ர்வு எழுந்தாலே அது மொழிவடிவமாக மனதில் எழுவதற்குப்பெயர்தான் இலக்கியத்தேர்ச்சி.

மனம் என்னும் மேடை மேலே...

ஈர்ப்பு என்று வந்தால், காதல் என்று வந்தால், எல்லாரும் ஒரே குட்டையில்தான் இருக்கிறோம். யூரிபிடிஸ், சொபோக்லஸ், ஷேக்ஸ்பியர், செகாவ், ஸ்ட்ரின்ட்பர்க், அனைவரும் ஒவ்வொரு தலைமுறையும் எதிர்கொண்டு தன் வழியில் புலம்பும் அதே தீர்க்க முடியாத பிரச்சினைகளோடுதான் போராடினார்கள்.  நான் அவற்றை ஒரு குறிப்பிடதத்தக்க கோணத்தில் என் திரைப்படங்களில் விவரித்து, அவற்றை வைத்து மகிழ்வித்தேன். மற்றவர்கள், தங்கள் காலத்தில், தங்கள் பேச்சுவழக்குகள் மற்றும் குறியீடுகளால் அதையே செய்தார்கள். 
என்னிடம் இருப்பது வேறு வகை ஒப்பனை சாதனங்களாக இருக்கலாம், ஆனால் முடிவில் பார்த்தால் நாம் அனைவரும் ஒரே விஷயத்தைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறோம். இதனால்தான் நான் அரசியலைப் படமெடுக்கவில்லை. வாழ்க்கையில் நிலைத்து நிற்கும் பிரச்சினைகள் அரசியல் அல்ல-  நம் பிரச்சினைகள் இருப்பு சார்ந்தவை, அவை உள்ளம் சார்ந்தவை, அவற்றுக்கு விடை கிடையாது- எப்படியானாலும் நமக்கு திருப்தி தரக்கூடிய விடை கிடையாது. 
Woody Allenஐ ஒரு பொருட்படுத்தத்தக்க எழுத்தாளராக நினைக்காதவர்கள் இருக்கலாம், ஆனால் அவரது திரைப்படங்கள் குறித்த கருத்து இருக்க வேண்டும் என்பது சிந்தனையாளனுக்கான அடையாளங்களில் ஒன்றாகும். அவர் தனக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களைப் பட்டியலிடுகிறார் இங்கே-

16/5/11

காலத்தின் தேவை - கலைஞனும் படைப்பும்

நமக்கு Proust, Joyce போன்றவர்கள் தேவையில்லை; இவர்களைப் போன்றவர்கள் ஒரு ஆடம்பரம், தனது அடிப்படை இலக்கியத் தேவைகள் முழுமை பெற்ற பின் மட்டுமே ஒரு செழுமையான பண்பாட்டுக்கு கிடைக்கக் கூடிய கூடுதல் உத்வேகம் இவர்களது எழுத்தால் கிடைக்கும். நம் சமகாலத் தேவை ஷேக்ஸ்பியர், மில்டன் அல்லது போப் போன்ற ஒருவர்; தங்கள் பண்பாட்டின் பலம் நிறைந்தவர்கள், தங்கள் காலத்தின் எல்லைகளுக்கு அப்பால் செல்லாமல், சமகாலத்தில் இயங்கி, அதில் எது தனித்துவம் கொண்டதாக இருக்கிறதோ அதற்கு ஒரு மகோன்னதத் தருணத்தைத் தருபவர்களே நமக்கு வேண்டும். தங்களுக்கு உள்ள தடைகளை ஏற்கக்கூடிய மாபெரும் கலைஞர்கள் வேண்டும், ப்ராடஸ்டண்ட் விழுமியங்களைக் கொண்டு ஒரு காவியம் இயற்றக்கூடிய படைப்பூக்கத்தைத் தங்கள் சூழல் மீதான உக்கிர நேசிப்பில் அடையக்கூடியவர்கள் வேண்டும், எனது எழுத்தின் பல தோல்விகள் எவையாக இருப்பினும், அது நான் பிறந்த காலத்தை நான் நேசித்தேன் என்பதைப் பிரகடனப்படுத்தும் அறிக்கையாக இருக்கட்டும்.

இதைத் தன் தாய்க்கு ஒரு கடிதத்தில் எழுதியபோது ஜான் அப்டைக்குக்கு வயது பத்தொன்பது!

ஏராளமாக எழுதிக் குவித்தவர். எழுத்துக்காகவே வாழ்ந்தவர். ஜான் அப்டைக்கின் தனிக் குறிப்புகள் பொதுப்பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இதைப் பற்றி ஒரு அருமையான கட்டுரை ந்யூ யார்க் டைம்ஸில் இருக்கிறது, படித்துப் பாருங்கள்.

எது சிறந்த படைப்பு, அதற்கான படைப்பூக்கம் எங்கிருந்து வருகிறது, அது எத்தகைய சமுதாயத்தில் சாத்தியமாகிறது என்பன அவ்வளவு எளிதாக விடை கண்டுவிடக் கூடிய கேள்விகளல்ல. இதைப் பற்றிய விவாதங்களைப் படிக்கும்போது, ஜான் அப்டைக் எழுதியதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்- தங்கள் காலத்தின் முரண்களைத் தங்கள் எழுத்தில் வெளிப்படுத்தக்கூடிய ஷேக்ஸ்பியர் போன்றவர்கள் ஒரு பண்பாட்டுத் தேவையாக இருக்கிறார்கள்: அதன் பின்னரே எழுத்தின் சாத்தியங்களை விரிக்ககூடிய நுட்பமான சோதனை முயற்சிகள் வருகின்றன என்கிறார் அப்டைக்.

" எனது எழுத்தின் பல தோல்விகள் எவையாக இருப்பினும், அது நான் பிறந்த காலத்தை நான் நேசித்தேன் என்பதைப் பிரகடனப்படுத்தும் அறிக்கையாக இருக்கட்டும்," என்று அப்டைக் அறைகூவல் விடுப்பது புது ரத்தம் பாய்வது போன்ற உணர்வை எழுப்புகிறது, இல்லையா?

15/5/11

ஆர் கே நாராயண் நினைவு அஞ்சலி

மறைந்த தமிழ் எழுத்தாளர் ஆர் கே நாராயண் அவர்களுடைய பத்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இங்கிலாந்தில் உள்ள கார்டியன் என்ற நாளேட்டில் ஒரு அஞ்சலி கட்டுரை எழுதியிருக்கிறார், மார்லோ மற்றும் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதிய Charles Nicholl.
மால்குடி கதைகள் மெல்ல நீளும் தென்னிந்தியத் தொலைக் காட்சித் தொடர்கள். சிற்றூர்களுக்குரிய சதித்திட்டங்கள் மற்றும் ஆசைகள் நிறைந்தவை. அவை 1980களில் வாரத் தொடராக தொலைகாட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டன. தொலைகாட்சித் தொடர்கள் அனைத்தையும் போலவே, இதற்கு எளிதில் அடிமையாகிவிட வாய்ப்பிருக்கிறது. மால்குடி வெறியராகவும் கூடும், ந்யூ யார்க் நகர அடெல்பி பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஜேம்ஸ் பென்னெல்லியைப் பாருங்கள்- "ஒழுங்குபடுத்தப்பட்ட இந்து உலகத்தின் வெளிப்பாடாக மால்குடி நகரம்" என்ற தலைப்பில் அவர் ஒரு ஆய்வு செய்திருக்கிறார், அதற்காக ஆர் கே நாராயண் கதைகளை ஆதாரமாகக் கொண்டு மால்குடியின் வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார் இவர். தனது ஆய்வை 1978ல் அமெரிக்க சமய அகாதெமியில் வாசித்திருக்கிறார். இந்த வரைபடம் மால்குடியின் செழுமை கூடிய மெய்ம்மைக்கு ஒரு சமர்ப்பணமாகும். அவ்வளவு ஏன், இந்த வரைபடமும்கூட மால்குடித்தனமான முயற்சியுமாகும். இந்த வரைபடத்தால் பென்னெல்லி மகிழ்ந்திருக்க வேண்டும், 1981ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அவரது "மால்குடி நாட்கள்" என்ற தொகுப்பின் முன்னட்டையில் அவரது வேண்டுகோளின்படி இந்த வரைபடம் அலங்கரிக்கிறது.

"ஒழுங்குபடுத்தப்பட்ட உலகம்" என்று பென்னெல்லி அவதானித்த தன்மை, ஆர் கே நாராயணின் படைப்புகளை விமரிசனத்துக்கு உள்ளாக்கும் காரணமாக இருந்திருக்கிறது. இந்நாட்களில் நாராயணின் புகழ் கொஞ்சம் தோய்வடைந்திருக்கிறது- அவரது சுருக்கமான குரல் பட்டாசாய் வெடிக்கும் திறமைகள் மற்றும் அரசியல் களத்தில் செயல்படும் புதிய இந்திய புனைகதை உலகத்துக்குத் தொடர்பற்றதாக இருக்கிறது. வி எஸ் நைபால் அவரது எழுத்தில் உள்ள 'உறைதன்மை'யைப் பற்றி பேசியிருக்கிறார்; அவர் விவரிக்கும் உலகம் ஒரு fable ஆகும்- ஆனால் நைபால் நுட்பமாக ஒரு உண்மையை குறிப்பிருகிறார்- நாராயணின் கவனம் சமுதாய மாற்றத்தின் புறவெளியில் இருக்கவில்லை, மாறாக, "அதன் ஆழத்தில் நிகழும் சாமானிய வாழ்வை அவதானித்தார்- சின்னச்சின்ன திட்டங்கள், பெரியபெரிய பேச்சு, பற்றாக்குறை"- மால்குடிய சூழலின் அருமையான சுருக்கம்"
படித்துப் பாருங்கள்- இங்கிலாந்தில் இருக்கும் ஆங்கில நாளேடு ஒன்று நினைவு வைத்துக் கொண்டு ஆர் கே நாராயண் நினைவு நாளன்று அஞ்சலி செலுத்துவது பெருமையாக இருக்கிறது.

14/5/11

பாத்திரமும் கொள்பொருளும்

சில சமயங்களில் சில விஷயங்கள் கூடி வந்து விடுகின்றன. இயல்பாகவே அப்படி அமைந்து விடுகிறது என்று நினைக்கிறேன்- தன்னிச்சையாக அமைவதாக இல்லாமல் ஒரு வேளை இவை நம் தேர்வுகளாகவும் இருக்கலாம்.

நேற்றைய பதிவில் எஸ் ராமகிருஷ்ணனை மேற்கோள் செய்திருந்தேனல்லவா, அதில் இரு வாக்கியங்கள்-
மலையின் நிழல் ஆற்று நீரில் படரும் போது மலையை தான் வீழ்த்திவிட்டதாக ஆறு ஒரு போதும் நினைப்பதில்லை,

மாறாக மலையை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்வதாகவே கருதுகிறது, அப்படிதான் வாழ்வை தன் எழுத்தில் பிரதிபலிப்பு செய்கிறான் எழுத்தாளன்.
வாழ்வை, அதன் வேர் முதல் கனி வரை தன் எழுத்தில் பிரதிபலிக்க முடிகிறது என்பதால் எழுதுபவன் அதை வென்றுவிட்டதாக சொல்ல முடியாது, அதை ஆளும் அதிகாரம் அவனுக்குக் கிடைத்து விட்டது என்று நினைப்பதற்கில்லை- அவ்வளவு ஏன், தான் அதை விழுங்கி விட்டதாக, அதைவிட தான் உயர்ந்து நிற்பதாக, வாழ்வின் குறைநிறைகளைக் கடந்து விட்டவனாக அவன் தன்னைக் கற்பனை செய்வதற்கில்லை- இதை எஸ் ராமகிருஷ்ணனின் ஆறும் மலையும் சுட்டிக் காட்டுகின்றன என்று நினைக்கிறேன்.

ஜெயமோகன் இதையே வேறு திசையில் இருந்து அணுகுகிறார்-
"... எழுதியவை அவன் அறிந்தவை அல்ல, உள்ளுணர்வும் படைப்பூக்கமும் ஒன்றாகும் நேரத்தில் அவனிடம் கைகூடுபவை. ஆகவே அவனை விட பெரியவை. எழுதும்போது மட்டுமே அவனறிந்தவை. அவற்றை எழுதிவிட்டமையாலேயே அவன் நான் நான் என்று எண்ணிக் கொள்கிறான்."
தன் அகங்காரம் குறித்த கட்டுரையாக அது இருந்தாலும் அதில் அவர் எழுப்பும் கேள்விகள் நம்மெல்லாருக்கும் பொதுவானவை- நூற்று நாற்பது எழுத்துகளைத் தட்டிவிட்டு இன்றைக்கு எத்தனை பாலோயர்ஸ் கூடியிருக்கிறார்கள் என்று கணக்கு பார்க்கிற கடைக்குட்டி எழுத்தாளன் முதல் உலகத்தின் சிறந்த எழுத்தாளன் வரை அனைவராலும் எதிர்கொள்ளப்படுபவை-  என் எழுத்து என்னைப் பற்றி என்ன சொல்கிறது?

நியாயமாகப் பார்த்தால் இந்தக் கேள்வியே வரக்கூடாது- ஆனால் அது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இதிலிருந்து விடுபட ஒரு வழிதான் இருக்கிறது: அதையும் ஜெயமோகன் உலகெலாம் என்ற பெரியபுராணத்தின் முதல் பாடல் குறித்த தன் முந்தைய கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்-
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

இவ்வரிகளின் பொருளை கூர்ந்து பார்க்கும்போது ஆழமான வியப்பு நம்மை ஆட்கொள்கிறது. உலகத்தை முழுக்க உணர்ந்தாலும் உணரமுடியாதவன் , உலகத்தில் உள்ளவர்கள் எவராலும் உணரமுடியாதவன் என முதல் வரி அறிவுக்கு அப்பாற்பட்டவனாக ஈசனைக் கற்பிதம் செய்கிறது . அடுத்த வரி நிலவைச் சூடியவன் கங்கையை அணிந்தவன் என மிகத் திட்டவட்டமாக ஒரு சித்திரத்தை அளிக்கிறது . அடுத்த வரி எல்லையே இல்லாத பேரொளி என மிக அருவமாக இறையை உருவகித்துக் கொள்கையில் அதற்கடுத்தவரி அம்பலத்தில் ஆடுபவன் என வகுத்துரைக்கிறது . அருவமும் உருவமும் ஆனவனின் பாதங்களை பணிவோமென அறைகூவுகிறது இப்பாடல் .

உண்மையில் புராணங்களுக்கு உள்ள கடமையே இதுதான் . அறிவுக்கும் அளவைகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றை அறிவுக்கும் புலன் அனுபவங்களுக்கும் உட்பட்டதாக வகுத்து உரைக்க முயல்பவை அவை. புரணங்களின் கற்பனை வீச்சு முழுக்க இதற்குத்தான் பயன்படுத்தப் படுகிறது. தமிழ் புராணங்களில் முதன்மையானதாகிய பெரிய புராணம் முழுக்கவே கடலைச் சிமிழில் அடைத்துக்காட்டவும் ,வானை ஆடியில் பிரதிபலித்துக் காட்டவும் மாபெரும் கவிமனம் செய்யும் முயற்சியைக் காணலாம்.
இங்கே எஸ் ராமகிருஷ்ணனின் வரிகளை நினைத்துப் பாருங்கள்- "மலையின் நிழல் ஆற்று நீரில் படரும் போது மலையை தான் வீழ்த்திவிட்டதாக ஆறு ஒரு போதும் நினைப்பதில்லை, மாறாக மலையை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்வதாகவே கருதுகிறது, அப்படிதான் வாழ்வை தன் எழுத்தில் பிரதிபலிப்பு செய்கிறான் எழுத்தாளன்."

இறைவன் இருக்கும் இடத்தில் வாழ்வையும் புராணம் என்ற இடத்தில் நம் டிவிட்டையும் பொருத்திப் பார்த்தால், "என் எழுத்து என்னைப் பற்றி என்ன சொல்கிறது?" என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடுகிறது, இல்லையா?

o0o0o0o0o0o0o0o0o0o
இது வேறு.

இந்த மாதங்களில் என்ற வெளிப்படையாக எழுதப்பட்ட கட்டுரையில்  ஜெயமோகன் ஈழப் படுகொலைகளையும் அது தன்னை பாதித்த விதம் குறித்தும் எழுதுகிறார். உண்மையாக சொன்னால், மனதைத் தொடும் கட்டுரை.

ஒரு பக்கம் சகோதரர்கள் (அவ்வளவு உணர்ச்சிப்பட வேண்டாமென்றால், அந்த அளவு பாவனை பொருத்தமில்லை என்று சொன்னால்) சக மனிதர்கள் ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்யப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய துயரம், வலி. மறு பக்கம், அரசியல் நிலைப்பாடுகள், அறம் சார்ந்த சில நம்பிக்கைகள். என்ன செய்ய முடியும்?

நேற்று ஒரு ஆங்கில கட்டுரையைக் குறித்து எழுத நினைத்து அதை எப்படி அணுகுவது என்று புரியாமல் வரைவு வடிவில் வைத்திருக்கிறேன்-All the frogs croak before a storm: Dostoevsky versus Tolstoy on Humanitarian Interventions | openDemocracy என்ற அந்தக் கட்டுரை சென்ற நூற்றாண்டில் செர்பியாவில் உள்ள ஸ்லாவ்கள் துருக்கிய ஆட்டோமான் பேரரசை எதிர்த்தபோது கடும் அடக்குமுறையை சந்தித்தார்கள்- அப்போது சக ஸ்லாவ்களைக் காக்க ரஷ்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாஸ்தொவ்ஸ்கி எழுதினார்- ஆனால் டால்ஸ்டாயின் நிலைப்பாடு வேறு மாதிரி இருந்தது- அந்த சூழலில் எழுதப்பட்ட அன்னா கரனினா என்ற நாவலில் இந்த உரையாடல் வருகிறது-
"ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டிருந்த பல பிரிவுகளைச் சேர்ந்த படித்தவர்களும் இப்போது ஒற்றுமையாகி விட்டார்கள். பிரிந்து கிடந்தவர்கள் ஒன்றாகிவிட்டார்கள். பொது ஊடகங்கள் அனைத்தும் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப சொல்கின்றன, அனைவரும் தங்களைத் தாக்கி ஒரே திசையில் கொண்டு செல்லும் மாபெரும் துயரத்தை உணர்வதில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்" 
"ஆமாம், செய்தித் தாள்கள் எல்லாம் ஒன்றையே சொல்லிக் கொண்டிருக்கின்றன," என்றான் இளவரசன். "உண்மைதான். ஆனால் இதே போல்தான் புயல் மழை வருவதற்கு முன் தவளைகள் எல்லாம் கத்துகின்றன. அவைகள் போடுகிற சத்தத்தில் எதுவும் காதில் விழுவதில்லை"
டால்ஸ்டாய் போரை ஆதரிக்கவில்லை என்றால் தாஸ்தெவ்ஸ்கி அதை முழு மனதுடன் ஆதரித்தார். அன்னா கரனினா நாவலின் இறுதிப்பகுதி டால்ஸ்டாயின் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதால் அது தொடர்கதையாக வெளிவந்து கொண்டிருந்த பத்திரிக்கையின் ஆசிரியர் அதைப் பிரசுரிக்க மறுத்து விட்டாராம். பிறகு அதை நூல் வடிவில் வெளிவரும்போது சேர்த்திருக்கிறார்கள்.

அந்தக் கட்டுரையில் சில உள்ளரசியல்கள் இருக்கின்றன. ஆனால் நான் சொல்ல விஷயம் அதுவல்ல. அவகாசம் கிடைத்தால் அது பற்றி தனி பதிவுதான் போட வேண்டும்.

;

எண்ணங்களே உலகம்

இந்த பிளாக்கின் பிரதான நோக்கம் இது எனக்கு ஒரு புக்மார்க்காகப் பயன்படுகிறது என்பதுதான்- என்னை யோசிக்க வைத்த இலக்கியம் குறித்த கட்டுரைகளை இங்கே என் சில கருத்துகளை சேர்த்து சேமித்து வைக்கிறேன், அவ்வளவுதான். கட்டுரைகள்தான் முக்கியமே தவிர, என் கருத்துகள் அல்ல. அதனால் எதையும் விவாதிக்கவோ தெளிவுபடுத்திக் கொள்ளவோ நான் இங்கு வரவில்லை- இங்கிருக்கும் பதிவில் கட்டுரைகளின் அறிமுகங்கள் என்ற அளவில் மட்டுமே எழுதப்படுகின்றன.

0o0o0o0o0o0

மேலை நாட்டு விமரிசகர்களின் ஹரோல்ட் ப்ளும் (Harold Bloom) மிக முக்கியமானவர். லிஸ்ட் போடுகிறவர்கள் அனைவருக்கும் தாத்தா. வழக்கம் போலவே அவரது புத்தகம் ஒன்று பதிப்பிக்கப்படுவதையொட்டி பரவலாக அவர் பற்றிய பேச்சு எழுந்திருக்கிறது. பாஸ்டன் ரிவ்யூவில் அவரது தரமான பேட்டி ஒன்று வெளியாகி இருக்கிறது, படித்துப் பாருங்கள், ஆங்கில இலக்கியவாதிகள் பலரைப் பற்றியும், விமரிசனத் துறை பற்றியும் சிந்திக்க வேண்டிய விஷயங்களை சொல்லியிருக்கிறார்.

கேள்வி: உங்கள் அனாடமி ஆஃப் இன்ஃப்ளூயன்ஸ் என்ற புத்தகத்தைப் படிக்கும்போது நீங்கள் இதுவரை எழுதியவற்றில் இதுதான் மிகவும் சுயம் சார்ந்த விமரிசனமாக இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு எழுந்தது- நீங்கள் முதன்முதலில் படித்த எழுத்தாளர்கள், அவர்களது குறிப்பிட்ட சில பதிப்புகள், உங்கள் ஆசிரியர்கள், உங்கள் வாசிப்பில் நீங்கள் திரும்பத் திரும்பத் தொடர்ந்த உறவுகள், உங்கள் வாழ்வு முழுவதையும் இலக்கியத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டது- இவை பற்றிய நினைவுகளும் குறிப்புகளும் புத்தகமெங்கும் விரவியிருக்கின்றன. 
ப்ளூம்: எனக்கும் வயது கூடிக்கொண்டு போகிறது. அதனால்தான் நான் இப்போது "The Hum of Thoughts Evaded in the Mind" என்ற ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்போது நான் விமரிசனத்துக்கும் சுயசரிதைக்கும் இடையில் இருக்கிற எல்லையைத் தாண்டி விட்டேன், அதற்காக நான் என் மனைவியைப் பற்றியோ பிள்ளைகளைப் பற்றியோ பேசப் போவதில்லை. ஒரு மனிதனின், ஆசிரியனின், விமரிசகனின், வாசகனின் அறிவு மற்றும் ஆன்ம வளர்ச்சியைப் பேசப் போகிறேன், அது தவிர நான் எப்போதும் ஆஸ்கார் வைல்டின் தேவ வாக்கைத் தொடர்பவன்- என்னைப் போலவே அவரும் அற்புதமான வால்டர் பாடரின் வழிவந்தவர்-, ஆஸ்கார் வைல்ட், "சுயசரிதையின் ஒரே நாகரீகமான வடிவம் இலக்கிய விமரிசனம்தான்," என்று சொல்லியிருக்கிறார். நானானால், "வாழ்க்கைக் குறிப்புகளின் ஒரே நாகரிக வடிவம் இலக்கிய விமரிசனம்," என்று சொல்வேன். இப்படி ஒரு வட்டத்தில் இது போய்க கொண்டிருக்கிறது.
மனிதன் இந்த உலகில் இருந்தாலும் அவனது உலகம் அவனுடைய தலைக்குள்தான் இருக்கிறது- அங்கேதான் அவன் வாழ்கிறான். எண்ணங்கள் நிறைந்த உலகில், எண்ணங்களின் சாயம் பூசிய நிகழ்வுகளை, எண்ணங்களின் துணையால் எதிர்கொண்டு, எண்ணங்களாக அவற்றை சேமித்து வைத்துக் கொள்கிறான். நாமெல்லாரும் நம் வாழ்வின் கதைசொல்லிகள்.

இலக்கிய விமரிசகன் இதை நன்றாக அறிந்தவன். பொதுவாக மற்றவர்கள், வாழ்க்கையைப் பற்றி, அது ஏதோ வார்த்தைகள் தொடாத உலகத்தில் இருக்கிறது என்ற பாவனையில் பேசும்போது, இலக்கிய விமரிசகன் மட்டுமே அதை ஒரு புனைவாக, பிரதியாகப் பார்க்கிறான். அதை, அது குறித்த படைப்புகளின் வழியாக அணுகுவதே சரியாக இருக்கும் என்று உணர்ந்திருக்கிறான்.

ஒரு எழுத்தாளனுக்குத் தரப்படும் பணம், விருதுகள் அனைத்தையும்விட என் விமரிசனமே அவனுக்கு உயர்ந்த வெகுமதியாக இருக்கும் என்று இலக்கிய விமரிசகன் சொல்லும்போது, அவன் தற்பெருமை பேசவில்லை:  விமரிசனங்கள் வழியாக அவன் அந்த எழுத்தாளனின் அக வாழ்வை சித்தரிக்கிறான்: அகவாழ்வு மட்டுமே உண்மையான வாழ்வாக இருப்பதால், அங்கேதான் அவனது உண்மையான வாழ்க்கை விவரிக்கப்படுகிறது.

நாம் பிறரைப் பற்றி சொல்பவை அனைத்தும் நம்மைப் பற்றியே சொல்லிக் கொள்வதன் மாற்று வடிவங்கள் என்பதால், இலக்கிய விமரிசனம் தன்வரலாறாகவும் ஆகிறது. நம்மை தனித்துவர்களாகப் பிரிக்கும் புற வாழ்வு விபத்துக்கள், நிகழ்தகவு சாத்தியங்களின் தொடர் நிகழ்வுகள் என்பதால் அகம் மட்டுமே நம்மெல்லாருக்கும் பொதுவானது: அவை முழுமையான வடிவில் வெளிப்படும் படைப்புகளில் எழுத்தாளனும் வாசகனும்,  படைப்பாளியும் விமரிசகனும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்கிறார்கள்: அகவெழுச்சியின் பல்வேறு நிறைவடைந்த சாத்தியங்களாக.

11/5/11

நினைவுகளின் மீட்பன்

திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தாகூர் விருது பெறும்போது தான் ஆற்றிய உரையின் தமிழ் வடிவைத் தன் தளத்தில் பதிவு செய்திருக்கிறார்- அதில் அவர் எழுத்தையும் நினைவையும் குறித்துப் பேசிய இந்த விஷயங்கள் என்னைக் கவர்ந்தன-
எழுத்தாளன் என்பவன் நினைவுகளின் சேகரிப்பாளன், மறதிக்கு எதிராக நினைவு மேற்கொள்ளும் கலகத்தை அவன் முன்னெடுத்துப் போகிறான்,

மறக்கப்பட்ட. மறக்கடிக்கப்பட்ட. அதிகாரம் அரசியலால் விலக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட நினைவுகளை மீள்உருவாக்கம் செய்வதும். நினைவுகளின் வழியே மனிதர்களை காலம் தாண்டி நிலை பெறச் செய்வதுமே எழுத்தாளனின் வேலை

நினைவுகள் வீரியமிக்க விதைகளைப் போன்றவை, அவை உரிய இடத்தில் ஊன்றினால் முளைத்துக் கிளைத்து வளர்ந்துவிடும் என்பதை எழுத்தாளன் அறிந்திருக்கிறான், அந்த வகையில் அவனும் ஒரு விவசாயியே, இயற்கை ஒரு போதும் கடந்த காலத்தை நினைவில் வைத்துக் கொள்வதில்லை என்பதையே எழுத்தாளன் சுட்டிக் காட்டுகிறான்,

மலையின் நிழல் ஆற்று நீரில் படரும் போது மலையை தான் வீழ்த்திவிட்டதாக ஆறு ஒரு போதும் நினைப்பதில்லை,

மாறாக மலையை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்வதாகவே கருதுகிறது, அப்படிதான் வாழ்வை தன் எழுத்தில் பிரதிபலிப்பு செய்கிறான் எழுத்தாளன்.

தாகூர் விருது பெற்ற திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நம் உளமார்ந்த வாழ்த்துகள்.

o0o0o0o0

இந்தப் பதிவை என் பெருமதிப்புக்குரிய டிவிட்டர் நண்பர் திரு @rsgiri அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் கேட்ட ஒரு கேள்விக்கு விடையை எப்படி சொல்வது என்று தெரியாமல் ஏறக்குறைய ஒரு மாத காலமாக முழித்துக் கொண்டிருந்தேன்- திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் உரையை மேற்கோள் காட்டுவது சுலபமாக இருக்கிறது- அது நான் சொல்லக்கூடிய எதையும் காட்டிலும் தெளிவாகவும், ஆழமாகவும் இருக்கிறது.


புனைவின் வேர்கள் நினைவில் - ஒத்துக்கறேன். நினைவின் வேர்கள் புனைவில் - கொஞ்சம் விளக்கம் சொல்லுங்களேன் @nan_triFri Apr 15 02:12:48 via web


நன்றி கிரி. நல்ல கேள்வி :)