19/5/11

வில்லியம் ட்ரெவர்- சில மேற்கோள்கள்.


வில்லியம் ட்ரெவர் சில மேற்கோள்கள்:

என்னைவிட மற்றவர்களின் மேல் எனக்கு ஆர்வம் கூடுதலாக இருக்கிறது. மற்றவர்கள் எனக்கு வசீகரமானவர்களாக இருக்கிறார்கள்.

எனக்கு எழுத்து முழுக்க முழுக்க மர்மமான ஒன்றாக இருக்கிறது. நான் எழுத்து ஒரு மர்மம் என்று நினைக்கவில்லையென்றால் அது முழுக்கவுமே பிரயோசனமில்லாத செயலாகிப் போயிருக்கும். எதுவும் எனக்கு எப்படி முடியப் போகிறதென்று தெரிவதில்லை, அடுத்த இரு வரிகள் எவையாக இருக்கக் கூடும் என்பதுகூட எனக்குத் தெரியாது.

வாழ்க்கையிலிருந்து துயரத்தை நீக்கி விட்டால், வாழ்க்கையில் இருந்து ஒரு பெரிய, நல்ல விஷயம் அப்புறப்படுத்தப்பட்டு விடும். ஏனென்றால் சோகமாக இருப்பது என்பது குற்றவுணர்வுடன் இருப்பது போன்ற ஒன்று. இவை இரண்டுக்கும் கெட்ட பெயர் இருக்கிறது. ஆனால் உண்மையைச் சொல்வதானால் குற்றவுணர்வு ஒன்றும் அவ்வளவு மோசமான மனநிலையல்ல. எல்லாரும் சில நேரம் குற்றவுணர்வை அறிந்திருக்க வேண்டும். நான் குற்றவுணர்வைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். அது நமக்கு புத்துயிரூட்டக் கூடிய ஒன்றாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

என் கதைகள் உணர்வுகளைப் பற்றியவை. மாற்று உண்மைகளைப் பற்றியவையல்ல. அனைத்து வகை உணர்ச்சிகளும் ஆய்ந்து, நினைத்துப் பார்த்து, அறிய நினைத்து அச்சுக்குத் தரத் தகுந்தவையாக எனக்குத் தோன்றுகிறது. நான் அறிய நினைத்து எழுதுகிறேன், மற்ற எந்த காரணத்தைவிடவும் அதுவே பொருத்தமான ஒன்று. அதனால்தான் நான் பெண்களைப் பற்றி நிறைய எழுதுகிறேன், நான் பெண்ணாக இல்லாததால், பெண்ணாக இருத்தல் என்பது எப்படியிருக்கும் என்பதை நான் அறியாதிருப்பதால் அதைப் பற்றி அதிகம் எழுதுகிறேன். நான் எதுவாக இல்லையோ, எதுவாக இருக்க முடியாதோ, அதை இன்னும் அதிகமாக அறிவதுதான் எனக்கு அதை எழுதுவதற்கான உத்வேகத்தைத் தருகிறது.

ஒருவனின் வாழ்க்கை அல்லது உறவின் கணநேரப் பார்வையே ஒரு சிறுகதையாகும். ஒரு உறவை எடுத்துக் கொண்டு அதை ஏறத்தாழ படம் பிடித்துக் காட்ட முடியும். ஒரு நாவலின் பேருருவில் அந்த உறவின் தன்மை மறைந்துவிடும். எனக்கு அதைப் பிரித்துப் பார்த்து, என் பாத்திரங்களை நன்றாக கவனிக்கப் பிடித்திருக்கிறது"

எது சொல்லப்படாமல் இருக்கிறதோ, அதுதான் மிக முக்கியமானது.



ஆங்கில வடிவம் கார்டியனில் இருக்கிறது.