14/5/11

எண்ணங்களே உலகம்

இந்த பிளாக்கின் பிரதான நோக்கம் இது எனக்கு ஒரு புக்மார்க்காகப் பயன்படுகிறது என்பதுதான்- என்னை யோசிக்க வைத்த இலக்கியம் குறித்த கட்டுரைகளை இங்கே என் சில கருத்துகளை சேர்த்து சேமித்து வைக்கிறேன், அவ்வளவுதான். கட்டுரைகள்தான் முக்கியமே தவிர, என் கருத்துகள் அல்ல. அதனால் எதையும் விவாதிக்கவோ தெளிவுபடுத்திக் கொள்ளவோ நான் இங்கு வரவில்லை- இங்கிருக்கும் பதிவில் கட்டுரைகளின் அறிமுகங்கள் என்ற அளவில் மட்டுமே எழுதப்படுகின்றன.

0o0o0o0o0o0

மேலை நாட்டு விமரிசகர்களின் ஹரோல்ட் ப்ளும் (Harold Bloom) மிக முக்கியமானவர். லிஸ்ட் போடுகிறவர்கள் அனைவருக்கும் தாத்தா. வழக்கம் போலவே அவரது புத்தகம் ஒன்று பதிப்பிக்கப்படுவதையொட்டி பரவலாக அவர் பற்றிய பேச்சு எழுந்திருக்கிறது. பாஸ்டன் ரிவ்யூவில் அவரது தரமான பேட்டி ஒன்று வெளியாகி இருக்கிறது, படித்துப் பாருங்கள், ஆங்கில இலக்கியவாதிகள் பலரைப் பற்றியும், விமரிசனத் துறை பற்றியும் சிந்திக்க வேண்டிய விஷயங்களை சொல்லியிருக்கிறார்.

கேள்வி: உங்கள் அனாடமி ஆஃப் இன்ஃப்ளூயன்ஸ் என்ற புத்தகத்தைப் படிக்கும்போது நீங்கள் இதுவரை எழுதியவற்றில் இதுதான் மிகவும் சுயம் சார்ந்த விமரிசனமாக இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு எழுந்தது- நீங்கள் முதன்முதலில் படித்த எழுத்தாளர்கள், அவர்களது குறிப்பிட்ட சில பதிப்புகள், உங்கள் ஆசிரியர்கள், உங்கள் வாசிப்பில் நீங்கள் திரும்பத் திரும்பத் தொடர்ந்த உறவுகள், உங்கள் வாழ்வு முழுவதையும் இலக்கியத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டது- இவை பற்றிய நினைவுகளும் குறிப்புகளும் புத்தகமெங்கும் விரவியிருக்கின்றன. 
ப்ளூம்: எனக்கும் வயது கூடிக்கொண்டு போகிறது. அதனால்தான் நான் இப்போது "The Hum of Thoughts Evaded in the Mind" என்ற ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்போது நான் விமரிசனத்துக்கும் சுயசரிதைக்கும் இடையில் இருக்கிற எல்லையைத் தாண்டி விட்டேன், அதற்காக நான் என் மனைவியைப் பற்றியோ பிள்ளைகளைப் பற்றியோ பேசப் போவதில்லை. ஒரு மனிதனின், ஆசிரியனின், விமரிசகனின், வாசகனின் அறிவு மற்றும் ஆன்ம வளர்ச்சியைப் பேசப் போகிறேன், அது தவிர நான் எப்போதும் ஆஸ்கார் வைல்டின் தேவ வாக்கைத் தொடர்பவன்- என்னைப் போலவே அவரும் அற்புதமான வால்டர் பாடரின் வழிவந்தவர்-, ஆஸ்கார் வைல்ட், "சுயசரிதையின் ஒரே நாகரீகமான வடிவம் இலக்கிய விமரிசனம்தான்," என்று சொல்லியிருக்கிறார். நானானால், "வாழ்க்கைக் குறிப்புகளின் ஒரே நாகரிக வடிவம் இலக்கிய விமரிசனம்," என்று சொல்வேன். இப்படி ஒரு வட்டத்தில் இது போய்க கொண்டிருக்கிறது.
மனிதன் இந்த உலகில் இருந்தாலும் அவனது உலகம் அவனுடைய தலைக்குள்தான் இருக்கிறது- அங்கேதான் அவன் வாழ்கிறான். எண்ணங்கள் நிறைந்த உலகில், எண்ணங்களின் சாயம் பூசிய நிகழ்வுகளை, எண்ணங்களின் துணையால் எதிர்கொண்டு, எண்ணங்களாக அவற்றை சேமித்து வைத்துக் கொள்கிறான். நாமெல்லாரும் நம் வாழ்வின் கதைசொல்லிகள்.

இலக்கிய விமரிசகன் இதை நன்றாக அறிந்தவன். பொதுவாக மற்றவர்கள், வாழ்க்கையைப் பற்றி, அது ஏதோ வார்த்தைகள் தொடாத உலகத்தில் இருக்கிறது என்ற பாவனையில் பேசும்போது, இலக்கிய விமரிசகன் மட்டுமே அதை ஒரு புனைவாக, பிரதியாகப் பார்க்கிறான். அதை, அது குறித்த படைப்புகளின் வழியாக அணுகுவதே சரியாக இருக்கும் என்று உணர்ந்திருக்கிறான்.

ஒரு எழுத்தாளனுக்குத் தரப்படும் பணம், விருதுகள் அனைத்தையும்விட என் விமரிசனமே அவனுக்கு உயர்ந்த வெகுமதியாக இருக்கும் என்று இலக்கிய விமரிசகன் சொல்லும்போது, அவன் தற்பெருமை பேசவில்லை:  விமரிசனங்கள் வழியாக அவன் அந்த எழுத்தாளனின் அக வாழ்வை சித்தரிக்கிறான்: அகவாழ்வு மட்டுமே உண்மையான வாழ்வாக இருப்பதால், அங்கேதான் அவனது உண்மையான வாழ்க்கை விவரிக்கப்படுகிறது.

நாம் பிறரைப் பற்றி சொல்பவை அனைத்தும் நம்மைப் பற்றியே சொல்லிக் கொள்வதன் மாற்று வடிவங்கள் என்பதால், இலக்கிய விமரிசனம் தன்வரலாறாகவும் ஆகிறது. நம்மை தனித்துவர்களாகப் பிரிக்கும் புற வாழ்வு விபத்துக்கள், நிகழ்தகவு சாத்தியங்களின் தொடர் நிகழ்வுகள் என்பதால் அகம் மட்டுமே நம்மெல்லாருக்கும் பொதுவானது: அவை முழுமையான வடிவில் வெளிப்படும் படைப்புகளில் எழுத்தாளனும் வாசகனும்,  படைப்பாளியும் விமரிசகனும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்கிறார்கள்: அகவெழுச்சியின் பல்வேறு நிறைவடைந்த சாத்தியங்களாக.