18/5/11

அரசியலும் ஆன்மாவும்

இந்த ப்ளாக் கொஞ்சம் திசைமாறி இப்போது அரசியல் எழுத்து மற்றும் மானுட எழுத்து-(குறிப்பாக அரசியலாக இல்லாத, மானுடத்தை நோக்கிப் பேசும் எழுத்துக்குப் பெயர் என்ன?)- பற்றி விவாதிக்கிறது- நினைவும் புனைவும் கலந்து, ஒன்றுக்கொன்று அறிவூட்டி படைப்பாக வெளிப்படுவதை சில நாட்களாகப் பேசிக் கொண்டிருந்தோம். இங்கிருந்து அரசியல் எழுத்துக்குப் போவதென்பது ஒரு பெரிய தாவல். ஆனால் அது அப்படியொன்றும் நம் ப்ளாகின் பேசுபொருளுக்கு அன்னியமானதல்ல என்று நினைக்கிறேன்,.

Adrienne Rich என்பவரது பேட்டி ஒன்றை பாரிஸ் ரிவ்யூவில் படித்தேன் - Adrienne Rich on ‘Tonight No Poetry Will Serve’. அதில் அவர் சொல்லும் சில விஷயங்கள் கவனிக்கத்தக்கவை-
வேறெந்த வழியிலும் என்னால் தொட முடியாத, என்னை விடாத நாட்டங்கள் மற்றும் ஆசைகளைக் கொண்டு கலை படைப்பதற்கான வழிக்கான- கருவிகளுக்கான- தேடலாய் எனது எழுத்து இருந்திருக்கிறது என்பதை இப்போது என் எண்பதுகளில் என்னால் பார்க்க முடிகிறது. பொதுமைப்படுத்தி சொல்வதானால் நான் உலகை வரலாறாக அறியும் பிரக்ஞையாகக் காண நினைத்தேன்- மானுட தேவைகள், மானுட உள்ளங்கள், உழைப்புகள், நேயங்கள் (மானுட குரூரமும் பேராசையும்தான்) இவற்றாலான வரலாறாகக் காண நினைத்தேன். நான் Cold Warன் துவக்க காலங்களில் எழுதத் துவங்கினேன். இளம் வயதில் எங்களுக்குக் கம்யூனிசம் மற்றும் அணு குண்டு குறித்த அச்சம் புகட்டப்பட்டிருந்தது- இத்தனைக்கும் அணுகுண்டை எங்கள் அரசே பயன்படுத்தியிருந்தது. எனது முதல் புத்தகத்தின் முதல் கவிதை (“Storm Warnings” in A Change of World [1951]) அந்த அச்சத்தைப் பிரதிபலிக்கிறது - எங்கள் கவலையையும் இயலாமையையும். அதிகாரம் சார்ந்த உறவுகளை நான் கணித்த வண்ணம் அவை எனது கவிதைகளிலும் உரைநடைகளிலும் காலம்தோறும் நிறைத்திருக்கிறது. இந்த உலகில் என் அனுபவங்களை, என் படிப்பினைகளை, நான் எதிர்கொண்டு உருமாற்றும் இடமாக எனக்கு கவிதை இருந்திருக்கிறது..

1950களில் பதிப்பிக்கப்பட்ட Snapshots of a Daughter-in-Law என்ற தொகுப்பில் “From Morning Glory to Petersburg” என்ற கவிதை இருக்கிறது. ஒரு கலைக்களஞ்சியத்தின் தலைப்புகளாலானது அந்தக் கவிதை. பகுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு வாழத் தகுந்த பொருளை எவ்வாறு உன்னால் கட்டமைத்துக் கொள்ள முடியும் என்ற கேள்வியை ஒரு தேர்வு செய்யப்பட்ட உத்தியாய் அந்தக் கவிதை கேட்டது. உன்னால் ஒருங்கிணைக்க முடியாத 'தகவல்களோடு' நீ எப்படி வாழ முடியும்? கவிதையால் இந்த ஒருங்கிணைப்பை நிகழ்த்துவது ஒரு வழி.
அதிகார அமைப்புகளின் அரசியலால் உணர்வுகளின் உலகில் வாழும் நாம் பாதிக்கப்படுகிறோம், இல்லையா? மொழியை அரசியல் பின்னப்படுத்துகிறது- அன்பு என்றோ மனித நேயம் என்றோ நாம் பேசும்போது, யாருக்கு என்ற கேள்வியைத் தாண்டி செல்வது அவ்வளவு எளிதாக இல்லை. இதைக் கவிதையின் வாயிலாக சாத்தியப்படுத்த முடியும் என்கிறார் அட்ரியன் ரிச் என்று நினைக்கிறேன்: கவிதை என்றில்லை, எந்த ஒரு உள்ளார்ந்த உண்மையை வெளிப்படுத்தும் படைப்பும் இதை சாத்தியமாக்கக்கூடும், மொழியின் அமைப்பைக் கொண்டு உரையாடுவதால், கவிதையில் இது எளிதாகிறது என்று தோன்றுகிறது.

இந்தப் பேட்டியில் கவிதையின் கடமைகள் எவையென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அட்ரியன் ரிச் பதில் சொல்கிறார்-
கவிதைக்கென்று தனியாகவோ அனைத்து இடங்களிலும் பொருந்தக்கூடியதாகவோ கடமைகள் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சூழல்களில் மாபெரும் மானுட செயல்பாட்டால் நேரும் ஆக்கச்செயல் இது. 'நமது' என்று நாமழைக்கும் சமகாலத்தில், பொய்த்தகவல்களும் உற்பத்தி செய்யப்பட்ட கவனச்சிதறல்களும் சுழலாய் அலைகழிக்கும் இக்காலத்தில் கவிதைக்கு என்ன கடமை இருக்கக்கூடும்? நடிக்காமல் இருப்பது, பொய்யான களங்கமின்மையைக் கைகொள்வது, அடுத்த வீட்டில் அல்லது பக்கத்து ஊரில் நடப்பதைத் திரையிட்டு மறைத்துக் கொள்ளாமல் இருப்பது. ஆழமற்ற சூத்திரங்கள், சோம்பலான விரக்தி, மூச்சு முட்டும் சுய- பிரதாபம் இவற்றைத் தவிர்ப்பது.

நம் ஒவ்வொருவருக்கும் சாத்தியமாயிருக்கக்கூடிய- நேர்மை, பெருந்தன்மை, துணிவு, தெளிவு இவற்றின் உதாரணமாக இருத்தல்- இதைத் தவிர வேறெதுவும் நம்மை கௌரவமான மனிதர்களாக இருக்கும்படி கட்டாயப்படுத்த முடியாது. இதுவே நம் சமுதாய அமைப்பை இறுகப் பிணைக்கவும் செய்யும்.