22/5/11

கதையும் நிகழ்வும்

"கதையில் உள்ளத்தைக் கவரும் நிகழ்ச்சிகளும் வர வேண்டும். அதே சமயத்தில் “இப்படி நடந்திருக்க முடியமா?” என்ற சந்தேகத்தை எழுப்பக் கூடிய நிகழ்ச்சிகளையும் விளக்க வேண்டும்.

பிரத்தியட்சமாகப் பார்த்த உண்மையான நிகழ்ச்சிகளாயிருக்கலாம். ஆனால் படிக்கும்போது “இது நம்பக் கூடியதா?” என்று தோன்றுமானால், கதை பயனற்றதாகிவிடுகிறது.

சுருங்கச் சொன்னால், கதையில் கதையும் இருக்க வேண்டும். அதே சமயத்தில் அது கதையாகவும் தோன்றக் கூடாது!

இம்மாதிரி கதைகள் புனைவது எவ்வளவு கடினமான கலை என்பதைக் கதை எழுதும் துறையில் இறங்கி வெற்றியோ தோல்வியோ அடைந்தவர்கள்தான் உணர முடியும்.

இந்த நூலின் ஆசிரியர் ஸ்ரீ கு. அழகிரிசாமி அத்தகைய கடினமான கலையில் அபூர்வமான வெற்றி அடைந்திருக்கிறார். மிக மிகச் சாதாரணமான வாழ்க்கைச் சம்பவங்களையும் குடும்ப நிகழ்ச்சிகளையும் வைத்துக் கொண்டு கதைகள் புனைந்திருக்கிறார். படிக்கும்போது இது கதை என்ற உணர்ச்சியே ஏற்படுவதில்லை. "

>>>அமரர் கல்கி அவர்கள் கு அழகிரிசாமியின் "அன்பளிப்பு" என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய அருமையான விமர்சனம் சிலிகான் ஷெல்பில் இருக்கிறது.