16/5/11

காலத்தின் தேவை - கலைஞனும் படைப்பும்

நமக்கு Proust, Joyce போன்றவர்கள் தேவையில்லை; இவர்களைப் போன்றவர்கள் ஒரு ஆடம்பரம், தனது அடிப்படை இலக்கியத் தேவைகள் முழுமை பெற்ற பின் மட்டுமே ஒரு செழுமையான பண்பாட்டுக்கு கிடைக்கக் கூடிய கூடுதல் உத்வேகம் இவர்களது எழுத்தால் கிடைக்கும். நம் சமகாலத் தேவை ஷேக்ஸ்பியர், மில்டன் அல்லது போப் போன்ற ஒருவர்; தங்கள் பண்பாட்டின் பலம் நிறைந்தவர்கள், தங்கள் காலத்தின் எல்லைகளுக்கு அப்பால் செல்லாமல், சமகாலத்தில் இயங்கி, அதில் எது தனித்துவம் கொண்டதாக இருக்கிறதோ அதற்கு ஒரு மகோன்னதத் தருணத்தைத் தருபவர்களே நமக்கு வேண்டும். தங்களுக்கு உள்ள தடைகளை ஏற்கக்கூடிய மாபெரும் கலைஞர்கள் வேண்டும், ப்ராடஸ்டண்ட் விழுமியங்களைக் கொண்டு ஒரு காவியம் இயற்றக்கூடிய படைப்பூக்கத்தைத் தங்கள் சூழல் மீதான உக்கிர நேசிப்பில் அடையக்கூடியவர்கள் வேண்டும், எனது எழுத்தின் பல தோல்விகள் எவையாக இருப்பினும், அது நான் பிறந்த காலத்தை நான் நேசித்தேன் என்பதைப் பிரகடனப்படுத்தும் அறிக்கையாக இருக்கட்டும்.

இதைத் தன் தாய்க்கு ஒரு கடிதத்தில் எழுதியபோது ஜான் அப்டைக்குக்கு வயது பத்தொன்பது!

ஏராளமாக எழுதிக் குவித்தவர். எழுத்துக்காகவே வாழ்ந்தவர். ஜான் அப்டைக்கின் தனிக் குறிப்புகள் பொதுப்பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இதைப் பற்றி ஒரு அருமையான கட்டுரை ந்யூ யார்க் டைம்ஸில் இருக்கிறது, படித்துப் பாருங்கள்.

எது சிறந்த படைப்பு, அதற்கான படைப்பூக்கம் எங்கிருந்து வருகிறது, அது எத்தகைய சமுதாயத்தில் சாத்தியமாகிறது என்பன அவ்வளவு எளிதாக விடை கண்டுவிடக் கூடிய கேள்விகளல்ல. இதைப் பற்றிய விவாதங்களைப் படிக்கும்போது, ஜான் அப்டைக் எழுதியதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்- தங்கள் காலத்தின் முரண்களைத் தங்கள் எழுத்தில் வெளிப்படுத்தக்கூடிய ஷேக்ஸ்பியர் போன்றவர்கள் ஒரு பண்பாட்டுத் தேவையாக இருக்கிறார்கள்: அதன் பின்னரே எழுத்தின் சாத்தியங்களை விரிக்ககூடிய நுட்பமான சோதனை முயற்சிகள் வருகின்றன என்கிறார் அப்டைக்.

" எனது எழுத்தின் பல தோல்விகள் எவையாக இருப்பினும், அது நான் பிறந்த காலத்தை நான் நேசித்தேன் என்பதைப் பிரகடனப்படுத்தும் அறிக்கையாக இருக்கட்டும்," என்று அப்டைக் அறைகூவல் விடுப்பது புது ரத்தம் பாய்வது போன்ற உணர்வை எழுப்புகிறது, இல்லையா?