21/5/11

ஆப்பிள் மரம் - ஒரு சிறுகதை அறிமுகம்

நம்மில் பலர் நாம் படித்த புத்தகங்கள் பற்றி பதிவு எழுதுகிறோம். ஒரு சிறுகதையின் அறிமுகம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும்படி Daphne Du Maurierன் The Apple Tree குறித்து எழுதியிருக்கிறார் பாருங்கள்-

எனக்கு அவரது பல சிறுகதைகள் விருப்பமானவையாக இருக்கின்றன. ஆனால் அவரது "The Apple Tree" என்ற சிறுகதை என் மனதை நீண்ட நாட்களுக்கு அலைக்கழித்திருக்கிறது.
அண்மையில் காலமான தன் மனைவி மிட்ஜ், அவளது நித்திய கண்டனத்தின் ஒரு பகுதியாக ஒரு ஆப்பிள் மரமாகத் திரும்பி வந்திருக்கிறாள் என்று நம்புகிறவன் ஒருவனின் கதை இது. அவன் தனது நீண்ட மணவாழ்வை நினைத்துப் பார்க்கிறான். தங்கள் புதுமண வாழ்வின் பால்ய பருவத்தில் அவன் சிவந்த கன்னங்கள் கொண்ட களத்துவேலை செய்கிற ஒரு பெண்ணை முத்தமிடும்போது மிட்ஜிடம் தான் சிக்கிக்கொண்டதையும் அதன் பின்வரும் ஆண்டுகளில் தொடர்ந்த மனத் தொய்வையும் மௌனமான கோபத்தையும் அவன் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறான். மிட்ஜ் எதுவும் சொல்வதில்லை. ஆனால் அவள் தான் வாழ்வின் கடைசி நாள் வரை தன் அடிமைத்தனமான அர்ப்பணிபால் அவனை தண்டிகிறாள். நிமோனியாவில் சாகும்போதுகூட, அவள் கவனமாக ஒரு மருத்துவமனைக்குப் போய் விடுகிறாள், அவனுக்குத் தொல்லை தரக்கூடாது என்று. அவளது ஊமை வன்முறை அவனை வாழ்நாளெல்லாம் வெட்கிக் குனிய வைக்கிறது, அவள் இறந்த பின்னும்கூட இந்த தண்டனை தொடர்கிறது.

எனக்கு இந்தக் கதையில் பிடித்த விஷயங்களில் ஒன்று இது. அவளது கணவன் கடைசியில் மரத்தை வெட்டிச் சாய்க்கிற காட்சி கொடூரமான வன்முறை நிறைந்த ஒரு கொலைபோல் என் வயிற்றைப் பிறட்டுகிறது- கதை தான் சஸ்பென்ஸால் நம் நரம்புகளை முறுக்கி இசைக்கிறது. ஆனாலும்கூட இந்தக் கதையில் துரதிருஷ்டசாலி மிட்ஜ் குறித்த குறிப்புகளில் நுட்பமான நகைச்சுவை இருக்கிறது. அவளது கணவன் அவள் சுவர்க்கத்தின் கதவுகளுக்கு வெளியே காத்திருப்பதை நினைத்துப் பார்க்கிறான், "மிகப் பின்தங்கி நிற்கிறாள், வரிசைகளில் அங்கு நிற்பதே அவள் விதியாக இருந்திருக்கிறது". அவள் சுவர்க்கத்தின் சுழற்கதவின் அருகில் அவன் மேல் கண்டனப்பார்வையுடன் நிற்கும் காட்சி அவன் கண்முன் தோன்றுகிறது, "ஒரு வாரத்துக்கு இந்தத் தோற்றம் அவனுடன் இருந்தது, நாட்பட நாட்பட வெளிறி மறைந்தபின் அவன் அவளை மறந்தான்"

அவன் அவளுக்காக இரங்கும் நாட்கள் குறைவே, அது சுவையான வன்மத்துடன் விவரிக்கப்பட்டிருக்கிறது. அவனது மனைவியின் நினைவுகள் இரக்கமில்லாத குரூரத்துடன் விவரிக்கப்படுகின்றன. மரம் எப்போதும் "கூனியிருப்பதாகவும்" 'குனிந்திருப்பதாகவும்' வர்ணிக்கப்படுகிறது. அதன் மொட்டுக்களின் விவரிப்பு அவலட்சணமான சொற்களால் செய்யப்படுகிறது: "மிகச் சிறிதாகவும் ப்ரௌனாகவும் இருந்தன. அவற்றை மொட்டுக்கள் என்றுகூட சொல்ல முடியாது. அவை சிறு கிளைகளில் திப்பிய அழுக்கு போல் இருந்தன, உலர்ந்த குப்பை போல்... அவற்றைத் தொடுகையில் அவனுள் ஒரு வகையான அசூயை எழுந்தது"- ஒரு உடலாய் இருந்தபோது அவளை அவன் எந்த அளவுக்கு வெறுத்திருக்கிறான் என்பதைப் பார்க்கிறீர்கள்.

மெல்ல மெல்ல அந்த மரம் அவன் வாழ்வை களங்ப்படுத்துகிறது. இரவில் ஒரு மரம் கீழே விழுகிறது. அவன் அதை எரிக்கும்போது அது வீட்டை ஒரு நோய்வாய்ப்பட்ட பச்சை நாற்றத்தால் நீங்காமல் நிறைக்கிறது, அவனது சமையல்காரப் பெண் அந்த மரத்தின் ஆப்பிள்களைக் கொண்டு ஒரு ஜாம் செய்து தருகிறாள். அதை சாப்பிட்டதும் அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. கதை மெல்ல மெல்ல ஒரு கொடுங்கனவாக மாறுகிறது. அவளது கணவன் அந்த மரத்தைத் தன் வாழ்விலிருந்து நீக்க முயற்சி செய்கிறான். அவன் தான் குற்ற உணர்வைத் தப்ப முயல்கிறான் என்றும் சொல்லலாம். அவனுக்குப் பெண்கள் மீதிருக்கும் வெறுப்பின் உக்கிரத்தைப் பார்க்கும்போது இதையும் உறுதியாக சொல்ல முடிவதில்லை. அவன் அனுபவங்கள் பிரமைதானா? அல்லது பழிவாங்கும் ஆவிதான் மரமாக வந்திருக்கிறதா? அந்தக் கணவனுக்கு விடுதலை கிடையாது, ஆப்பிள் மரம் தீய சக்தியாக மாறத் துவங்குகிறது, அதன் வேர்கள் அவனை இறுகப் பிணைக்கின்றன.
Polly Samson, Haunted by the Apple Tree

இந்த சிறுகதையை இந்த தொகுப்பில் படிக்கலாம்-
பிடிஎப் கோப்பு

Daphne Du Maurier குறித்த ஒரு சிறு அறிமுகம் இங்கே.


சென்ற பதிவில் வில்லியம் ட்ரெவரின் மேற்கோள் ஒன்றை கவனிக்க-
"வாழ்க்கையிலிருந்து துயரத்தை நீக்கி விட்டால், வாழ்க்கையில் இருந்து ஒரு பெரிய, நல்ல விஷயம் அப்புறப்படுத்தப்பட்டு விடும். ஏனென்றால் சோகமாக இருப்பது என்பது குற்றவுணர்வுடன் இருப்பது போன்ற ஒன்று. இவை இரண்டுக்கும் கெட்ட பெயர் இருக்கிறது. ஆனால் உண்மையைச் சொல்வதானால் குற்றவுணர்வு ஒன்றும் அவ்வளவு மோசமான மனநிலையல்ல. எல்லாரும் சில நேரம் குற்றவுணர்வை அறிந்திருக்க வேண்டும். நான் குற்றவுணர்வைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். அது நமக்கு புத்துயிரூட்டக் கூடிய ஒன்றாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்."