14/5/11

பாத்திரமும் கொள்பொருளும்

சில சமயங்களில் சில விஷயங்கள் கூடி வந்து விடுகின்றன. இயல்பாகவே அப்படி அமைந்து விடுகிறது என்று நினைக்கிறேன்- தன்னிச்சையாக அமைவதாக இல்லாமல் ஒரு வேளை இவை நம் தேர்வுகளாகவும் இருக்கலாம்.

நேற்றைய பதிவில் எஸ் ராமகிருஷ்ணனை மேற்கோள் செய்திருந்தேனல்லவா, அதில் இரு வாக்கியங்கள்-
மலையின் நிழல் ஆற்று நீரில் படரும் போது மலையை தான் வீழ்த்திவிட்டதாக ஆறு ஒரு போதும் நினைப்பதில்லை,

மாறாக மலையை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்வதாகவே கருதுகிறது, அப்படிதான் வாழ்வை தன் எழுத்தில் பிரதிபலிப்பு செய்கிறான் எழுத்தாளன்.
வாழ்வை, அதன் வேர் முதல் கனி வரை தன் எழுத்தில் பிரதிபலிக்க முடிகிறது என்பதால் எழுதுபவன் அதை வென்றுவிட்டதாக சொல்ல முடியாது, அதை ஆளும் அதிகாரம் அவனுக்குக் கிடைத்து விட்டது என்று நினைப்பதற்கில்லை- அவ்வளவு ஏன், தான் அதை விழுங்கி விட்டதாக, அதைவிட தான் உயர்ந்து நிற்பதாக, வாழ்வின் குறைநிறைகளைக் கடந்து விட்டவனாக அவன் தன்னைக் கற்பனை செய்வதற்கில்லை- இதை எஸ் ராமகிருஷ்ணனின் ஆறும் மலையும் சுட்டிக் காட்டுகின்றன என்று நினைக்கிறேன்.

ஜெயமோகன் இதையே வேறு திசையில் இருந்து அணுகுகிறார்-
"... எழுதியவை அவன் அறிந்தவை அல்ல, உள்ளுணர்வும் படைப்பூக்கமும் ஒன்றாகும் நேரத்தில் அவனிடம் கைகூடுபவை. ஆகவே அவனை விட பெரியவை. எழுதும்போது மட்டுமே அவனறிந்தவை. அவற்றை எழுதிவிட்டமையாலேயே அவன் நான் நான் என்று எண்ணிக் கொள்கிறான்."
தன் அகங்காரம் குறித்த கட்டுரையாக அது இருந்தாலும் அதில் அவர் எழுப்பும் கேள்விகள் நம்மெல்லாருக்கும் பொதுவானவை- நூற்று நாற்பது எழுத்துகளைத் தட்டிவிட்டு இன்றைக்கு எத்தனை பாலோயர்ஸ் கூடியிருக்கிறார்கள் என்று கணக்கு பார்க்கிற கடைக்குட்டி எழுத்தாளன் முதல் உலகத்தின் சிறந்த எழுத்தாளன் வரை அனைவராலும் எதிர்கொள்ளப்படுபவை-  என் எழுத்து என்னைப் பற்றி என்ன சொல்கிறது?

நியாயமாகப் பார்த்தால் இந்தக் கேள்வியே வரக்கூடாது- ஆனால் அது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இதிலிருந்து விடுபட ஒரு வழிதான் இருக்கிறது: அதையும் ஜெயமோகன் உலகெலாம் என்ற பெரியபுராணத்தின் முதல் பாடல் குறித்த தன் முந்தைய கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்-
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

இவ்வரிகளின் பொருளை கூர்ந்து பார்க்கும்போது ஆழமான வியப்பு நம்மை ஆட்கொள்கிறது. உலகத்தை முழுக்க உணர்ந்தாலும் உணரமுடியாதவன் , உலகத்தில் உள்ளவர்கள் எவராலும் உணரமுடியாதவன் என முதல் வரி அறிவுக்கு அப்பாற்பட்டவனாக ஈசனைக் கற்பிதம் செய்கிறது . அடுத்த வரி நிலவைச் சூடியவன் கங்கையை அணிந்தவன் என மிகத் திட்டவட்டமாக ஒரு சித்திரத்தை அளிக்கிறது . அடுத்த வரி எல்லையே இல்லாத பேரொளி என மிக அருவமாக இறையை உருவகித்துக் கொள்கையில் அதற்கடுத்தவரி அம்பலத்தில் ஆடுபவன் என வகுத்துரைக்கிறது . அருவமும் உருவமும் ஆனவனின் பாதங்களை பணிவோமென அறைகூவுகிறது இப்பாடல் .

உண்மையில் புராணங்களுக்கு உள்ள கடமையே இதுதான் . அறிவுக்கும் அளவைகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றை அறிவுக்கும் புலன் அனுபவங்களுக்கும் உட்பட்டதாக வகுத்து உரைக்க முயல்பவை அவை. புரணங்களின் கற்பனை வீச்சு முழுக்க இதற்குத்தான் பயன்படுத்தப் படுகிறது. தமிழ் புராணங்களில் முதன்மையானதாகிய பெரிய புராணம் முழுக்கவே கடலைச் சிமிழில் அடைத்துக்காட்டவும் ,வானை ஆடியில் பிரதிபலித்துக் காட்டவும் மாபெரும் கவிமனம் செய்யும் முயற்சியைக் காணலாம்.
இங்கே எஸ் ராமகிருஷ்ணனின் வரிகளை நினைத்துப் பாருங்கள்- "மலையின் நிழல் ஆற்று நீரில் படரும் போது மலையை தான் வீழ்த்திவிட்டதாக ஆறு ஒரு போதும் நினைப்பதில்லை, மாறாக மலையை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்வதாகவே கருதுகிறது, அப்படிதான் வாழ்வை தன் எழுத்தில் பிரதிபலிப்பு செய்கிறான் எழுத்தாளன்."

இறைவன் இருக்கும் இடத்தில் வாழ்வையும் புராணம் என்ற இடத்தில் நம் டிவிட்டையும் பொருத்திப் பார்த்தால், "என் எழுத்து என்னைப் பற்றி என்ன சொல்கிறது?" என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடுகிறது, இல்லையா?

o0o0o0o0o0o0o0o0o0o
இது வேறு.

இந்த மாதங்களில் என்ற வெளிப்படையாக எழுதப்பட்ட கட்டுரையில்  ஜெயமோகன் ஈழப் படுகொலைகளையும் அது தன்னை பாதித்த விதம் குறித்தும் எழுதுகிறார். உண்மையாக சொன்னால், மனதைத் தொடும் கட்டுரை.

ஒரு பக்கம் சகோதரர்கள் (அவ்வளவு உணர்ச்சிப்பட வேண்டாமென்றால், அந்த அளவு பாவனை பொருத்தமில்லை என்று சொன்னால்) சக மனிதர்கள் ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்யப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய துயரம், வலி. மறு பக்கம், அரசியல் நிலைப்பாடுகள், அறம் சார்ந்த சில நம்பிக்கைகள். என்ன செய்ய முடியும்?

நேற்று ஒரு ஆங்கில கட்டுரையைக் குறித்து எழுத நினைத்து அதை எப்படி அணுகுவது என்று புரியாமல் வரைவு வடிவில் வைத்திருக்கிறேன்-All the frogs croak before a storm: Dostoevsky versus Tolstoy on Humanitarian Interventions | openDemocracy என்ற அந்தக் கட்டுரை சென்ற நூற்றாண்டில் செர்பியாவில் உள்ள ஸ்லாவ்கள் துருக்கிய ஆட்டோமான் பேரரசை எதிர்த்தபோது கடும் அடக்குமுறையை சந்தித்தார்கள்- அப்போது சக ஸ்லாவ்களைக் காக்க ரஷ்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாஸ்தொவ்ஸ்கி எழுதினார்- ஆனால் டால்ஸ்டாயின் நிலைப்பாடு வேறு மாதிரி இருந்தது- அந்த சூழலில் எழுதப்பட்ட அன்னா கரனினா என்ற நாவலில் இந்த உரையாடல் வருகிறது-
"ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டிருந்த பல பிரிவுகளைச் சேர்ந்த படித்தவர்களும் இப்போது ஒற்றுமையாகி விட்டார்கள். பிரிந்து கிடந்தவர்கள் ஒன்றாகிவிட்டார்கள். பொது ஊடகங்கள் அனைத்தும் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப சொல்கின்றன, அனைவரும் தங்களைத் தாக்கி ஒரே திசையில் கொண்டு செல்லும் மாபெரும் துயரத்தை உணர்வதில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்" 
"ஆமாம், செய்தித் தாள்கள் எல்லாம் ஒன்றையே சொல்லிக் கொண்டிருக்கின்றன," என்றான் இளவரசன். "உண்மைதான். ஆனால் இதே போல்தான் புயல் மழை வருவதற்கு முன் தவளைகள் எல்லாம் கத்துகின்றன. அவைகள் போடுகிற சத்தத்தில் எதுவும் காதில் விழுவதில்லை"
டால்ஸ்டாய் போரை ஆதரிக்கவில்லை என்றால் தாஸ்தெவ்ஸ்கி அதை முழு மனதுடன் ஆதரித்தார். அன்னா கரனினா நாவலின் இறுதிப்பகுதி டால்ஸ்டாயின் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதால் அது தொடர்கதையாக வெளிவந்து கொண்டிருந்த பத்திரிக்கையின் ஆசிரியர் அதைப் பிரசுரிக்க மறுத்து விட்டாராம். பிறகு அதை நூல் வடிவில் வெளிவரும்போது சேர்த்திருக்கிறார்கள்.

அந்தக் கட்டுரையில் சில உள்ளரசியல்கள் இருக்கின்றன. ஆனால் நான் சொல்ல விஷயம் அதுவல்ல. அவகாசம் கிடைத்தால் அது பற்றி தனி பதிவுதான் போட வேண்டும்.

;