28/2/11

நான் வெறுக்க மாட்டேன்- ஒரு மருத்துவரின் மகத்தான மானுடம்

நாம் அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் நின்றுக் கொண்டிருக்கிறோம்- இங்கேதான் நான்கு இனிய இளம் பெண்கள் அமந்திருந்தனர், தங்கள் கனவுகளையும் நம்பிக்கைகளையும் உருவாக்கியபடி. நொடிகளில் அவர்களின் அத்தனை கனவுகளும் கொல்லப்பட்டன. இந்த மலர்கள் மரணமடைந்தன. என் பெண்களில் மூவரும், என் சகோதரர் பெண்ணும் ஜனவரி மாதம் பதினாறாம் தேதி மாலை ஐந்தே கால் மணியளவில் ஒரு கணப்போதில் கொலை செய்யப்பட்டனர். நான் அவர்களை விட்டுச் சென்ற சில நொடிகளில் இது நிகழ்ந்தது- அவர்கள் மட்டும் இந்த அறையில் இருந்திருந்தனர். என் இரு பெண்கள் இங்கேயும், ஒரு பெண் இங்கேயும், இன்னொரு பெண் இங்கேயும் இருந்தார்கள்- என் சகோதரர் பெண்ணும் அவர்களுடன் இருந்தாள்.

முதல் ஷெல் அங்கேயிருந்து வந்தது, நாற்காலிகளில் அமர்ந்திருந்த என் இரு பெண்களை ஷெல்லடிக்க வந்தது டாங்கி. ஷெல் விழுந்த சப்தம் கேட்டதும் நான் என்ன நடந்து என்று பார்க்க இந்த அறைக்குள் வந்தேன். என் பெண்களை என்னால் அடையாளம் காண முடியவில்லை. அவர்கள் தலைகள் உடலிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தன. யாருடைய உடல் இது என்று எனக்கே அடையாளம் தெரியவில்லை. அவர்கள் குளம் போல் தேங்கிக் கிடந்த ரத்தத்தில் மூழ்கிக் கொண்டிருந்தனர். இதுதான் அந்த ரத்தக் குளம். இங்கேயும் பாருங்கள். இது அவர்களது மூளை. இவை அவர்களது மூளையின் பகுதிகள். அயா தரையில் படுத்திருந்தாள். ஷதா காயமுற்றிருந்தாள், அவளது கண் வெளியே வந்துக் கொண்டிருந்தது. அவளது விரல்கள் கிழிந்து விட்டன, ஒரு தோல் திரியால் அவை உடலோடு இணைந்திருந்தன. நான் நிராகரிக்கப்பட்ட அன்பை உணர்ந்தேன், வெளியின்றி அலறினேன், "நான் என்ன செய்யட்டும்?"

முதல் ஷெல்லோடு அவர்கள் திருப்தியடையவில்லை- என் மூத்த பெண்ணை அவர்கள் விட்டு வைப்பதாயில்லை. சீக்கிரமே இரண்டாவது ஷெல் அயாவைக் கொல்ல வந்தது, மூன்றாவது மாடியிலிருந்து இறங்கி வந்த என் சகோதரரின் பெண்ணை சிதைக்க வந்தது, சமையலறையில் இருந்து அக்கணத்தில், "அப்பா! அப்பா! அயாவுக்கு அடி பட்டுவிட்டது," என்று அலறியபடி குதித்தோடி வந்த என் மூத்த மகள் பெஸ்ஸானைக் கொல்ல வந்தது அந்த ஷெல்.

இரண்டாவது ஷெல். அது இந்த அறையின் சுவற்றைத் துளைத்துக் கொண்டு அடுத்த அறைக்குள் சென்றது. பாருங்கள். இந்த அறையில்தான் ஆயுதங்கள் இருந்தன, ஆயுதம் நிறைந்து கிடந்த இந்த அறைக்குள்தான் ஷெல் விழுந்தது. இவைதான் இந்த அறையில் இருந்த ஆயுதங்கள். இவைதான் ஆயுதங்கள். இவையேதான் ஆயுதங்கள்: இந்தப் புத்தகங்களும் என் பெண்களின் ஆடைகளும். இதோ பாருங்கள் அறிவியல் பாடங்கள். இதோ. பாருங்கள், அவள் வகுப்புப் பாடப் புத்தகங்கள்- இப்போது ரத்தக் கறை படிந்திருக்கின்றன. என் மகளின் ரத்தத்தில் தோய்ந்திருக்கின்றன. இந்தப் புத்தகங்கள்தான். என் பெண்கள் தரித்திருந்த ஆயுதங்கள் இவைதான்- கல்வி, அறிவு, கனவுகள், நம்பிக்கைகள், நேசங்கள்.

நான் ஒரு மகப்பேறு மருத்துவன். நான் என் பொழுதுகளின் பெரும்பாலான காலத்தை இஸ்ரேலில் பணியாற்ற செலவிட்டேன். நான் பயிற்சி எடுத்துக் கொண்டது இஸ்ரேலில். நான் என் வாழ்வையும் பணியையும் மானுடத்துக்கு, அதன் நலனுக்கு அர்ப்பணித்திருந்தேன். யாரையும் நான் தேர்ந்தெடுத்து உதவவில்லை, நான் என் நோயாளிகளில் பேதம் பார்ப்பவனாக இருந்திருக்கவில்லை. நான் நோயுற்றவர்களுக்கும் மனிதர்களுக்கும் மட்டுமே சிகிச்சை தந்திருகிறேன். நாம் நோயுற்ற அனைவரையும் ஒன்றேபோல் காண வேண்டும், மரியாதையுடன், அவர்களுக்குரிய கௌரவத்தையும் நம்பிக்கையையும் காப்பாற்றித் தர வேண்டும். அரசியல்வாதிகளும் தலைவர்களும் இந்த விழுமியங்களையும் மனப்பாங்கையும் மருத்துவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தப் படையெடுப்பு, துவக்கத்திலேயே நான் சொன்னேன், இதனால் ஒரு பயனுமில்லை என்று. இது பிரயோசனமில்லாத சண்டை. யாரும் இதில் வெற்றி பெற முடியாது. அப்பாவி பொதுமக்கள். காஜாவாசிகள். படையெடுப்பின் விலையை பொதுமக்கள் கொடுத்தார்கள், வேறு யாருமில்லை.

ராணுவ முனைப்புகள் தோற்றுப் போய் விட்டன. நாம் நமக்கு உரிமைகளைக் கொடுத்துக் கொள்ள வேறு வழிகளைக் காண வேண்டும். அமைதியைப் பற்றிப் பேசி எதுவும் ஆகப் போவதில்லை- அதில் நமக்கு இஷ்டமில்லை. அமைதி- அமைதி என்ற சொல் தன் பொருளை இழந்து விட்டது. நாம் வேறொன்றைத் தேடி அடைய வேண்டும்- சமத்துவம், நீதி, கூட்டுச் செயல்பாடு. நாம் அவற்றை நோக்கிச் செல்ல வேண்டும்.

இவ்வாறு பேசிய இஸ்ஸல்டின் அபுஎளிஷ் ஒரு மருத்துவர். இஸ்ரேல் பாலஸ்தீனிய ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இணைந்து நடத்திய பள்ளியில்தான் மாண்ட அவர்களது மகள்கள் படித்திருந்தனர். எல்லாருக்கும் தெரிந்திருந்த அவர், தொலைகாட்சி முதலான ஊடகங்கள் மூலம் அனைவரும் அறிந்திருந்த அவரது இல்லம், இஸ்ரேலிய ராணுவத்தினரால் திட்டமிட்டு குறி பார்த்து ஷெல்லடித்து சேதப்படுத்தப்பட்டது.


அவர் தற்போது ஒரு புத்தகம் எழுதி வெளியாகி வந்துள்ளது- "நான் வெறுக்க மாட்டேன்- அமைதியையும் மானுட சுயமரியாதையும் நோக்கிய ஒரு காஸா மருத்துவரின் பயணம்". இது குறித்த விரிவான கட்டுரை கார்டியனில் இருக்கிறது.


தன் பெண்களின் நினைவாக இணையத்தில் ஒரு வலைத்தளம்.


யூட்யூபில் அவரது நேர்முகம்-

27/2/11

கூகுள் தேடு பொறியில் மாற்றங்கள்

கூகுளாண்டவர் கன்டன்ட் பார்ம் என்று சொல்லப்படும் எழுத்துப் பண்ணைகளுக்கு எதிராக தன் பார்வையைத் திருப்பியிருக்கிறார். நல்ல செய்திதான், ஆனால் அவரது கோபத்தில் நான் விரும்பும் வகையான தளங்கள் பொசுங்கிப் போய்விடும் போலிருக்கிறதே?
கம்ப்ளீட் ரிவியூவுக்கு வருபவர்கள் பெரும்பாலானவர்கள் தேடு பொறிகள் வழியாகவே வருகிறார்கள். அதிலும் கூகுள் செய்து வருபவர்களே அதிகம், சென்ற ஆண்டில் தொண்ணூற்று இரண்டு சதவிகிதத்தினரின் வருகைக்கு கூகுளே காரணமாக இருந்திருக்கிறது. எனவே கூகுள் எப்படி ஆடினாலும் அது நம் தளத்தில் அதிர்வு ஏற்படுத்தவே செய்கிறது...
கூகுள் செய்த மாற்றங்களின் காரணமாக கம்ப்ளீட் ரிவ்யூவின் பக்கங்கள் புழக்கடைக்குத் தள்ளப்பட்டு விட்டனவாம்- முதல் ஐம்பது நூறு கூகுள் ரிசல்ட்களில் கூட அது வருவதில்லை என்று ரிவ்யூவில் குறைபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சொந்த சரக்குக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் தரமான விஷயங்களை எழுதி தரமான விஷயங்களுக்குக் கொண்டு சேர்க்கும் கம்ப்ளீட் ரிவ்யூ போன்ற தளங்கள் இணையத்தில் இணையற்ற இலக்கிய சேவை செய்கின்றன என்பது கூகுளாண்டவருக்கு எப்படி தெரியாமல் போனது?

கூகுள் நிறுவனத்துக்கு எதிராக என் வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

26/2/11

அரசியலும் இலக்கியமும்

இயன் மக்ஈவன் ஜெருசலேம் இலக்கிய பரிசைப் பெற்றுக் கொண்டு ஆற்றிய ஏற்புரை பற்றி எழுதியிருந்தேனல்லவா, அதற்கு இங்கிலாந்தில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன:
உள்ளபடியே சொல்வதானால், தனது கண்டிக்கத்தக்க கருத்துகளின் மூலம் மக்ஈவன் மேயர் நீர் பர்கத்துக்கு பொன் மேடை அமைத்துத் தந்து விட்டார். "அனைவரும் சுதந்திரமாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள" ஜெர்சலேம் நகரில் இடம் கிடையாது. களப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். இனவாத உள்துறை சட்டங்களை நடைமுறைப்படுத்தி ஜெனீவா கன்வென்ஷனுக்கு எதிராக நகராட்சி நிர்வாகம் சட்டத்துக்குப் புறம்பான குடியமர்வுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது- பாலஸ்தீனிய அரசின் தலை நகராக கிழக்கு ஜெருசலேம் அமையக் கூடாதென்று திட்டமிட்டு இந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கார்டியனில் விரிவான செய்தி இருக்கிறது.

இங்கே அமைதியான சூழலில் நாம் எழுதவும் படிக்கவும் நேர்கிறது என்பது மிகப் பெரிய கொடை என்பதை நாம் ஒரு போதும் மறக்கக் கூடாது. எழுத்தும் அரசியல்தான் என்ற நிலை இங்கில்லை.

இந்த மாதிரி செய்திகளைப் படிக்கும்போது நெஞ்சம் கனக்கிறது என்பதை சொல்லாமல் இருக்க முடியாது- இவர்களின் ஒவ்வொரு தேர்வும் சிக்கல்கள் நிறைந்த ஒன்று- The Millions: In the Room: Against a Cultural Boycott of the Galle Literary Festival

25/2/11

மனசில் உள்ளதைப் பேசடா! - ஷேக்ஸ்பியர் எழுதாத நாடகம்

காட்சி ஒன்று: ரோமியோவை வசை பாடுதல்
(ஹாம்லெட்டும் ரோமியோவும் நுழைகிறார்கள்)

ஹாம்லெட்:


பித்தலாட்டக்காரா! மூடா! அப்பன் இல்லாதவனே! அரைக் கிறுக்கா! கோழை! நாற்றம் பிடித்த தடியா! அழகான பணக்கார வீர நாயகனுக்கும் உனக்கும் இடையில் உள்ள வேறுபாடளவுக்கு உள்ளதடா உன் மக்கு புத்தி! மனசில் உள்ளதைப் பேசடா!

தடித்த சிறுத்த பொதித்த துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பழைய அழுகிய சிக்குப் பிடித்த உன் கோவணம் மொத்தத்தின் கூட்டுத் தொகைக்கும் அழகிய இனிய அமைதியான இளவெயில் பொழுதுக்கும் இடையுள்ள வேறுபாடளவுக்கு உள்ளதடா உன் வீரம்! நறுமணம் வீசும் செக்கர் சிவந்த ரோஜாவுக்கும் என் தகப்பனுக்கும் உண்டான கூட்டுத் தொகைக்கும் உனக்கும் இடையுள்ள வேறுபாடளவுக்கு உள்ளதடா உன் ஆரோக்கியம்! மனசில் உள்ளதைப் பேசடா!

உன் மொத்தத்தின் கூட்டுத் தொகைக்கும் ஒரு மகோன்னத பெருமை கொண்ட பேரரசுக்கும் குதிரைக்கும் உண்டான கூட்டுத் தொகைக்கு இடையுள்ள வேறுபாடளவுக்கு உள்ளதடா உன் கோழைத்தனம்! மனசில் உள்ளதைப் பேசடா!

மனதில் உள்ளதைப் பேசடா!

(ரோமியோ வெளியேற்றம்)

என்ன இது என்று திகைக்கிறீர்களா நண்பர்களே?

இதுதான் செகப்பிரியர் கணிப்பொறி ஆணை மொழி!-{ The Shakespeare Programming Language (SPL) } - ஷேக்ஸ்பியர் போல் வசனம் எழுத முயற்சி செய்கிறது கணினி:

இது குறித்தெல்லாம் மேலும் படித்து இன்புற இங்கே செல்லுங்கள்.

தகவலுக்கு நன்றி- Conversational Reading

மனவெளி மாந்தர்- இயன் மக்ஈவன் ஆற்றிய ஏற்புரை

நாவலுக்கும் நகரத்துக்கும் சில பொதுப் பண்புகள் உள்ளன. நாவல் என்பது அட்டையும் பக்கங்களும் உள்ள புத்தகம் என்ற பருப்பொருள் மட்டுமல்ல. அது ஒரு வகை மனவெளி, மனித இயல்பை பகுத்து, பார்த்தறியும் இடம். அதேபோல், நகரம் என்பது கட்டிடங்களும் சாலைகளும் கொண்ட கூட்டமைப்பு மட்டுமல்ல. அதுவும் ஒரு மனவெளிதான், கனவுகளுக்கும் போட்டிகளுக்கும் களம்தான். இவ்விரண்டிலும், மக்கள், தனி மனிதர்கள், மெய்யோ புனைவோ, "தன்னை வெளிக்கொணரும் உரிமைக்காகப்" போராடுகிறார்கள். 
திரும்பவும் சொல்கிறேன்- தனி மனிதன் மீதான மரியாதை மற்றும் அவனை அறியும் ஆவலில் பிறந்த இலக்கிய வடிவமே நாவல். அதன் மரபு பன்முகத்தையும், ஒளிவு மறைவின்மையையும், மற்றவர்களின் மனங்களை ஒத்திசைந்து அறிவதற்கான ஆவலை நோக்கியும் நாவலை செலுத்துகிறது. பெண்ணாகட்டும் குழந்தையாகட்டும், இஸ்ரேலியாகட்டும் பாலஸ்தீனராகட்டும், அல்லது வேறொரு பின்புலத்தைச் சேர்ந்தவராக இருக்கட்டும்- நாவலில் நேசமுடம் சித்தரிக்கப்பட முடியாத மனமென்று ஒன்றில்லை. 
நாவலின் இயல்பு ஜனநாயகம் சார்ந்த ஒன்று. நான் இந்தப் பரிசை நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறேன், இந்த நம்பிக்கையில்: ஜெருசலேம் ஆட்சியாளர்கள்- இந்நகரம் ஒரு நாள் இரு தேசங்களுக்கும் தலைநகராக இருக்க வேண்டும் - தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும், அவர்களை விழுங்கக் கூடிய போராட்டங்களின் சாத்தியங்களைப் பார்க்க வேண்டும், குடியமர்வுகளையும் ஆக்கிரமிப்புகளையும் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும், இன்று அவர்கள் கௌரவிக்கிற திறந்த புத்தகமாயிருக்கிற, மரியாதையும் பன்முகத்தன்மையும் கொண்ட இலக்கிய வடிவமான நாவலின் இயல்பை நோக்கி ஆக்கப்பூர்வமான வகையில் அவர்கள் விழைவு கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
இயன் மக்ஈவன் பரபரப்பான விமரிசனங்களுக்கிடையே இஸ்ரேல் அரசால் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்கப்படும் ஜெருசலேம் இலக்கியப் பரிசை 20.2.2011 அன்று ஏற்றுக் கொண்டு ஆற்றிய உரையின் நிறைவுப் பகுதி இது.

அவர் ஆற்றிய ஏற்புரை இங்கே இருக்கிறது.

24/2/11

உத்தம கலைஞர்களும் அவர்களது ஆராதகர்களும்

வாழ்வின் ஜீவாதார புதிர்களுடன் போராடுகிறது மருத்துவம் என்று சொல்கிறார், ஜெரோம் க்ரூப்மேன்- பிறப்பின் அதிசய கணம், மரணத்தின் திடுக்கிடும் பிரிவு, வேதனையில் வாழ்வின் பொருள் காணப் போராட்டம்.

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஏன் நல்ல இலக்கியம் படைத்தவர்களில் நிறைய பேர் மருத்துவர்களாக இல்லை? செகாவ், கானன் டாய்ல், சாமர்செட் மாம், வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்... இந்த வரிசையில் இன்னும் நிறைய பேர் இருக்க வேண்டும் இல்லையா?

யோசித்துப் பாருங்கள்- நம் வாழ்வில் உன்னதமான, உச்ச கணங்களை நாம் எத்தனை முறை எதிர்கொள்கிறோம்? ஆனால் மருத்துவர்கள் தீவிர உணர்வுகளோடு புழங்குகிறார்கள்- அவர்களுடைய அன்றாட அனுபவங்களைக் கொண்டு அவர்கள் சொல்லக் கூடிய கதை எத்தனை இருக்கும்- வாழ்க்கை குறித்து அவர்கள் நமக்குக் காட்டக்கூடிய படம் எவ்வளவு உக்கிரமாக இருக்கும்!

ஆனால் அவர்களுக்கு இதையெல்லாம் எழுதவோ சிந்திக்கவோ நேரம் கிடைப்பதில்லை என்று நினைக்கிறேன்.

0o0o0o0

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்- செகாவை விட!

அவருக்கு டெனிஸ் லேவேர்தோவ் (சாமானிய கவிஞரல்ல) எழுதிய கடிதம்:

அன்புள்ள வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் அவர்களுக்கு,


நான் உங்களுக்கு எப்போதோ கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஆனால் உங்கள் கையெழுத்தை வேண்டியோ வேறு எதற்காகவோ என்னை நோக்கி உங்கள் கவனத்தை ஈர்க்க நினைத்து நான் உங்களுக்கு எழுதுகிறேன் என்ற எண்ணம் எழக்கூடும் என்று தோன்றியது. அதனால் இதுவரை எழுதவில்லை. இப்போது இது ஒரு முட்டாள்தனம் என்று முடிவு செய்து விட்டேன். ஒருவன் இன்னொருவனுடைய வாழ்வில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால்- நீங்கள் என் வாழ்விலும் என் கணவரின் வாழ்விலும் செய்திருக்கிற மாதிரி-. அவனது படைப்புகள் இன்னொருவனுக்கு சுவையும் ஊக்கமும் தந்து அவனுடைய உணர்வையும் அறிவையும் துளைத்து உட்புகுந்து அவனது படைப்பூக்கத்தை இயக்குவதாக இருந்தால்- அது நிச்சயம் தெரிய வர வேண்டும். நன்றி.


தங்கள் உண்மையுள்ள,
டெனிஸ் லெவெர்தோவ் குட்மான்

இந்த வாசகர் கடிதத்துக்கு வில்லியம் கார்லோஸ் வில்லியம் என்ன பதில் எழுதி இருப்பார் என்று நினைக்கிறீர்கள்? அங்கேதான் நம் டாக்டர் நிற்கிறார்!

அன்புள்ள டெனிஸ் குட்மான்,


தன்னை ஆராதிப்பவர்களிடம் பெரிய அளவில் எதிர்வினையாற்றக் கூடியவனாக மனிதனாகப்பட்டவன் இருக்க வேண்டும். அது ஆராதகர்களது உரிமை, அவர்கள் அலட்சியமாக அங்குமிங்கும் தங்களுடைய போற்றுதலை வீணாக்குவதில்லை. அதனால் நான் என் மண்டைக்குள் பார்க்கும் போதெல்லாம் மிக அற்பமாக என்னை உணர்கிறேன், என்னை நான் எவ்வளவு சின்னவனாகக் காண்கிறேன் தெரியுமா! அவர்கள் நினைக்கிற ஆள் நானல்ல. அவர்கள் நன்மைக்காக நான் யாராக இருக்க வேண்டுமோ அவன் நானில்லை. அவர்கள் என்னைவிட உயர்ந்த ஒன்றுக்குத் தகுதியானவர்கள். இன்னும் சொல்லப்போனால் மகோன்னதமானவனாகத் தோன்ற வேண்டியது ஒரு கலைஞனின் கடமையாகும். ஆனால் அது என்னால் முடியாது. என்ன ஒரு முட்டாள் நான்.


என்னுடைய அருகதை குறித்து நானறிந்த உண்மையைக்கூட என்னால் நம்ப முடியவில்லை. நான் வெளிப்படுத்துவதை வைத்து தான் "வாழ்வதாக" ஒருவர் சொல்லும்போது எனக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. ஆனால் நானும்கூட ஒரு சில செயல்களின் அடிப்படையில் வாழ்கிறேன் என்றால் மற்றவர்களும் ஏன் அப்படி செய்யக் கூடாது? ஆனால் நாம் மிக எளிவர்கள், நம் செயல்கள் அத்தனை மோசமாக விரயம் போவது போல் இருக்கிறது. நான் பாழில் விழத் தயார், ஆனால் அங்கு யாரையும் என்னோடு இழுத்துச் செல்ல எனக்கு விருப்பமில்லை. அதை நான் நினைத்தும் பார்க்க மாட்டேன்.


இதோ இங்கே நான் இருக்கிறேன், என் வளைக்குள் ஒரு தவளை போல். உங்கள் கடிதத்துக்கு நன்றி.


தங்கள் உண்மையுள்ள,
வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்.

0o0o0o0

இங்கே தமிழ் படிக்கத் தெரிந்த அனைவருக்கும் ஆங்கிலமும் தெரியும்- எனது மொழிபெயர்ப்பில் குறைகள் இருக்கின்றன. இங்கே அதை ஆங்கிலத்தில் படிக்கலாம்.

தன் ஆராதகர்களோடு ஒரு கலைஞன் எத்தகைய எதிர்வினையாற்ற வேண்டும் என்று சொல்ல நாம் யார்?

அவர்களை ஒரு ஆதர்ச உலகுக்கு அழைத்துச் செல்ல நினைப்பவன், அவர்களுக்கு வாழ்வின் உயர்ந்த, தீவிரமான கணங்களைக் காட்ட நினைப்பவன், மகோன்னதங்களாலும் பேராளுமைகளாலும் வாழ்வை முத்திரையிட நினைப்பவன் செய்யும் எதிர்வினைகள் ஒரு முனை என்றால், தன் ஆராதகர்களைத் தன் உலகில் நிறுத்த நினைப்பவன், அவர்களுக்கு வாழ்வின் இயல்பான, உண்மையான நிகழ் தளங்களை அதே தீவிரத்துடன் காட்ட நினைப்பவன், எத்தகைய உயரங்களைத் தொட்டாலும் மனிதன் அற்பத்தனமும் சிறுமையும் கொண்டவன்தான் என்ற உண்மையை முன்னிறுத்த நினைப்பவன் செய்யும் எதிர்வினைகள் மறு முனை.

இதில் யார் செய்வது சரி, யார் செய்வது தவறு என்று தீர்ப்பு சொல்வது கடினம். எனக்கு இருவருமே ஏற்புடையவர்கள்தான்- உன்னதங்களை நான் அவர்களைக் கொண்டறிகிறேன், சிறுமைகளையும் அற்பத்தனங்களையும் என்னைக் கண்டறிகிறேன்.

பிகு: வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் "மகோன்னதமானவனாகத் தோன்ற வேண்டியது ஒரு கலைஞனின் கடமையாகும்," என்று சொல்வது வள்ளுவரின் புதிரான "தோன்றில் புகழோடு தோன்றுக" என்ற வாக்கியத்துக்கு புதிய வெளிச்சம் தருவதாக இருக்கிறது, இல்லையா? 

23/2/11

போதும்! இதைப் படிக்காதே!

இங்கிலாந்திலிருந்து ஒரு சுவாரசியமான செய்தி.

லேனோரா ரஸ்தமாவா என்ற நாற்பது வயதான ஆசிரியை புனைவுகளின் எல்லையைத் தாண்டியதால் வேலையிலிருந்து பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம்?

தன் மாணவர்களுக்கு இலக்கியத்தில் ஆர்வம் உண்டாக்கும் நல்லெண்ணத்தில் மெய்யும் பொய்யும் கலந்து எழுதினாராம்!

"கொம்மி பாய்ஸ்" என்று தங்களை அழைத்துக் கொண்ட முரட்டு சுபாவமுள்ள, கெட்ட வார்த்தை பேசுகிற பாலியல் விழைவு மிகுந்த படிப்பில் ஆர்வம் இல்லாத தன் மாணாக்கர்களுக்கு பாடம் போதிக்க வேண்டி, அவர்களில் ஐவரையும் தன்னையும் வைத்து தொண்ணூற்று ஆறு பக்கங்களில் ஒரு புனைவு எழுதினாராம் இவர்- "போதும்! இதைப் படிக்காதே!" என்ற குறுநாவல். அது தன் அருமை மாணவர்களின் விருப்பத்துக்கிணங்க ஏராளமான பாலியல் விவரிப்புகளும் கெட்ட வார்த்தைகளும் சேர்த்து அவர்களில் ஐந்து மாணவர்களும் இந்த நல்லாசிரியையும் இணைந்து போதை மருந்து விற்பவர்களைப் போலீசில் பிடித்துக் கொடுக்கும் சாகசக் கதை.

ஒரு பதினைந்து வயது மாணவனின் தாய், "என் மகன் தன் வாழ்நாளிலேயே முன் அட்டை முதல் பின் அட்டை வரை படித்த முதல் புத்தகம் இது" என்று பெருமை பொங்க சொல்கிறார்.

இந்த ஆசிரியையின் புதினங்கள் வலையேற்றப்பட்டதும் பிரச்சினை பூதாகரமாகி பணி நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறார்- மெய்யையும் பொய்யையும் கலந்து இலக்கியம் படைத்து இணையத்தில் ஏற்றிய குற்றத்துக்காக.

இந்த நல்லாசிரியையின் பணி நிறுத்தத்தைக் கண்டித்து மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளி வளாகத்தில் போராட்டம் நடத்தியிருக்கின்றனர் என்பது நம் நெஞ்சைக் குளிர்விக்கும் நல்ல செய்தி.

இலக்கியம் தழைக்க யாரை வைத்தும் மெய்யும் பொய்யும் கலந்து புனைவு செய்யலாம்- என்னைத் தவிர.

செய்தி இங்கே - கார்டியன்.

22/2/11

செகாவின் மீது தமிழ் பொழிகிறது....



தமிழில் அண்மைக்காலமாக "எங்கெங்கு நோக்கினும் செகாவடா" என்று பாடத்தக்க சூழல் எழுந்திருக்கிறது- 
செகாவ் சிறுகதையின் எழுத்துக் கலையை சொல்லிக் கொடுத்தால் நமக்குப் படிக்கக் கசக்கிறதா என்ன! இதோ செகாவ்- 

எப்போதும் வெற்றிகளையும் தோல்விகளையும் தவறே இல்லாமல் சரியாக அடையாளம் காண்பவன் கடவுளாக இருக்க வேண்டும்.

இயற்கை வர்ணனைள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அதற்கு அவசியம் வரும்போது மட்டும் அதை செய்தால் போதுமானது. "அந்தி சூரியன், இருட்கடலின் அலைவாயில் விழுகையில் தன் பொற்கிரணங்களை அள்ளி வீசினான் இத்தியாதி," "நீர்பரப்பின் மேல் சிறகடித்துப் பறந்த சிட்டுக் குருவிகள் உற்சாகமாய் சீட்டியடித்தன இத்தியாதி" போன்றவை பழகிப் போன விஷயங்கள்- இந்த வகையான பொது புத்திக்குப் பழகிப் போன விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். இயற்கையை வர்ணிக்கும்போது நீ நுட்பமான குறிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்,  அவற்றை நீ தொகுத்துக் கொடுப்பதை படித்துவிட்டு கண்களை மூடிக் கொண்டால் சொல்லப்பட்ட காட்சி கண்ணுள் விரிய வேண்டும். உதாரணத்துக்கு நிலவொளியில் ஒரு இரவைக் கண்முன் கொண்டுவர வேண்டுமென்றால் அங்கே இருந்த நீரிறைக்கும் யந்திரத்தைச் சுற்றியிருந்த நீர்த்தேக்கத்தில் ஒரு உடைந்த கண்ணாடிக் குப்பி பிரகாசமான நட்சத்திரம் போல் ஒளி பளிச்சிட்டு மறைந்தது, ஒரு நாய் அல்லது ஓநாயின் கரிய நிழல் ஒரு பந்தைப் போல் உருண்டோடியது, என்றெல்லாம் எழுது.

உளவெளி உலகுக்கும் நுட்பமான விபரங்கள் தேவை. அங்கேயும் நீ பழகிப்போன விஷயங்களையே சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து ஆண்டவன் உன்னைக் காப்பாற்றட்டும். எல்லாவற்றுக்கும் மேலே, கதாபாத்திரத்தின் ஆன்மீக நிலை குறித்த வர்ணனனைகளை வெறுத்து ஒதுக்கு. அவர்களின் செயல்களைக் கொண்டு இதைத் தெளிவாக வெளிக் கொணர நீ முயற்சிக்க வேண்டும். அளவுக்கதிகமான பாத்திரங்களை முயற்சி செய்யாதே. கதையின் கனம் இரண்டே பாத்திரங்களில் மையம் கொண்டிருக்க வேண்டும்- அவனும், அவளும்.

நீ கஷ்டப்படுபவர்களையும் அதிர்ஷ்டம் கெட்டவர்களையும் விவரிக்கும்போது, அவர்களுக்காக வாசகர்கள் இரக்கப்பட வேண்டும் என்று நினைப்பாயானால், உணர்ச்சிவசப்படாமல் எழுத முயற்சி செய்- இது இன்னொருவரின் துக்கத்துக்கு ஒரு பின்புலம் தருவதாக இருப்பது போல் தெரிகிறது, இந்த இரக்கமில்லாத எழுத்தின் பின்னணியில் துயரம் தனித்து, தெளிவாய் புலனாகிறது. ஆனால் உன் கதையில் பாத்திரங்கள் அழுகிறார்கள், நீயானால் பெருமூச்சு விடுகிறாய். ஆமாம், நீ உன் உணர்ச்சிகளைத் தணித்துக் கொள்.. நீ எவ்வளவுக்கு எவ்வளவு உணர்ச்சிவசப்படாமல் துல்லியமாக விவரிக்கிறாயோ அந்த அளவுக்கு உன் எழுத்தின் தாக்கமும் இருக்கும்.

என் அனுபவத்தில் கதையை எழுதி முடித்தாகி விட்டபின் அதன் துவக்கத்தையும் முடிவையும் அடித்து விட வேண்டுமென்பதே சரியாக இருக்கிறது. அங்கேதான் நம்மைபோன்ற கதை சொல்லிகள் அதிகமாக பொய் சொல்கிறோம்.

நன்றி: The Recording

இங்கே பொலானோ, யூடோரா வெல்டி, டான் டி லிலோ மற்றும் பலர் இந்த மாதிரி இன்னும் என்னென்னவோ சொல்லியிருக்கிறார்கள்.

17/2/11

பிணம் தின்னும் சாத்திரங்கள்

சால் பெல்லோவின் கடிதங்கள் புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன. அவரளவுக்கு சென்ற நூற்றாண்டின் அரசியல் மற்றும் பண்பாட்டு விவகாரங்களை கவனித்து எழுதிய எழுத்தாளர்கள் மிகக் குறைவே. அவரது தத்துவ நோக்கு, பெல்லோவின் நாவல்களின் கருத்துருவாக்கங்களுக்குக் கணிசமான ஆழம் கொடுத்தது என்பது உண்மை.

ஏறத்தாழ ஒரு புக்மார்க்காக அவர் பிலிப் ராத்துக்கு எழுதிய கடிதத்தின் இந்தப் பகுதியை இங்கு சுட்டுகிறேன்- முக்கியமான ஒன்றாக எனக்கு இது தோன்றுகிறது -
மேற்கில் இருந்த கம்யூனிஸ்டுகளைக் குறித்தே இதை சொல்கிறேன்- அவர்கள் விஷயத்தில் நிஜமாகவே ஒரு விஷயம் புதிராக இருக்கிறது, அவர்களால் எப்படி ஸ்டாலினை ஏற்றுக் கொள்ள முடிந்தது? இதுவரை வாழ்ந்த சர்வாதிகாரிகளில் மிக அரக்கத்தனமானவர்களில் ஒருவர் அவர். ஸ்டாலினும் ஹிட்லரும் போலந்தைப் பகிர்ந்து கொண்டது, ஹிட்லர் ரஷ்யாவின் மீது படையெடுக்க வழி கோலிய பிரஞ்சு தேசத்தின் தோல்வி போன்றவையெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தங்கள் விசுவாசத்தை மறு பரிசீலனை செய்ய வைத்திருக்கும் என்றுதான் நீ நினைப்பாய். ஆனால் அப்படி எதுவும் ந்கழவில்லை. நான் 1948ல் பாரீஸ் போய் சேர்ந்தபோது அங்கே அறிவுலக முன்னோடிகளாக இருந்த Sartre, Marleau-Ponty வகையறாக்கள் ஸ்டாலினின் ரத்தக் கடல் குறித்து அறிந்திருந்தாலும் கட்சிக்கு விசுவாசமாகத்தான் இருந்தனர் என்பதை கவனித்தேன். ஒவ்வொரு தேசத்துக்கும், ஒவ்வொரு அரசுக்கும் தனக்கென்று ஒரு கடலோ குளமோ குட்டையோ இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும்கூட ஸ்டாலின் ஒரு "நம்பிக்கை"யாக இருந்தார்- அவருக்கும் ஹிட்லருக்கும் உள்ள ஒற்றுமைகள் தெளிவாகத் தெரிந்தாலும்கூட.

சுருக்கமாகவே சொல்கிறேன்- இதுதான் காரணம்: தன் தேசத்தின் மீதான வெறுப்பில்தான் காரணத்தைத் தேட வேண்டும். பிரஞ்சுக்காரர்களைப் பொருத்தவரை அது கலைஞர்களாகிய"சுதந்திர உணர்வாளர்களுக்கும்" ஆளும் பூர்ஷ்வாக்களுக்கும் இடையில் எப்போதுமிருக்கும் மோதல். அமெரிக்காவில் தேசத் துரோகத்தை விசாரிக்கும் ஹவுஸ் கமிட்டிகள் போன்ற மக்கார்த்தியின் ஆட்களுக்கு எதிரான போர், இதுதான் ஹென்றி வாலஸ் போன்றவர்களின் கட்சிக்காரர்கள் இடது சாரிகள் சொல்லும் நியாயமாக இருந்தது. முதன்மையான எதிரி உள்ளே இருக்கிறான் (லெனினின் முதலாம் உலக யுத்த கோஷம்). கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்தால் நீ ஒரு மக்கார்த்தி ஆள்- இதில் இரண்டு தரப்புகள் இருக்க வாய்ப்பேயில்லை.

என்ன சொல்வது, இது ஒரு ஆழ்ந்த, வக்கிரமான மூடத்தனம். ஸ்டாலினியம் என்றால் என்ன என்பதைப் பார்க்க பயங்கரமான அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இருந்திருக்கவில்லை. ஆனால் தீவிரவாதம் பேசுகிறவர்களும் இயக்கத்தினரும் அனைவருக்கும் தெரிந்த உண்மைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுத்தனர்.
காழ்ப்புணர்வு தார்மீக நியாயங்களைக் கைக்கொள்ளல் ஆகாது என்று நினைக்கிறேன். அது நீதியை மீட்டுத் தருகிறதோ இல்லையோ, அக்கிரமக்காரர்களுக்கும் அதிகார வெறியர்களுக்கும் நம்மை ஆளும் அதிகாரத்தை கைமாற்றித் தந்து விடுகிறது.

16/2/11

அழகின் லபிதம்

மரிலின் ராபின்சன் (Marilynne Robinson) குறித்து ஒரு நல்ல கட்டுரை-

"மனிதர்களுக்கு ஆன்மா உள்ளது என்ற உண்மையையே ராபின்சனின் மனித நேயம் தன் தளமாகக் கொண்டுள்ளது. ஆன்மா- அகத்தினுள் அகண்டத்தின் ஆக்கிரமிப்பு- ஒரு புனித மர்மமும் கருணையுமாகும். நமக்கு ஆன்மா இருக்கிறதென்ற உண்மையை மனமறிய ஏற்கும்போது அத்தோடு கூட அதிசயங்களும் கடமைகளும் நம்மைச் சேர்கின்றன. கலையிலும் இசையிலும் தத்துவத்திலும் நமது ஆன்மா தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடும்; "நன்னடத்தை"யால், கவனமான சித்த இயக்கத்தால் அவை பண்படக்கூடும்; அற்ப விஷயங்களின் அழகில் இன்பம் காணக்கூடும்; அன்பு மேலிட்டு மன்னிக்கக்கூடும். நாம் நமது இயல்பு குறித்து ஒரு சிறிய அளவிலேனும் அறிவுற வேண்டுமெனில் நாம் இவற்றை இவ்வண்ணம் செய்தாக வேண்டும்... ராபின்சனின் படைப்புகள் "நாம் இருக்கிறோம் என்ற மர்மத்தின் சிறு துகளையேனும் ஏற்றுகொள்ளக்கூடிய அளவில் அகண்ட ஒரு மானுடத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்" என்று நம்மைக் கோருகின்றன (135, Absence of Mind).

"இதை எப்படி சாதிப்பது? ராபின்சனின் எழுத்தில் நாம் விடை காண முடியுமெனில், நமது எதிர்வினை அழகியல் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவரது நாவல்கள் அழகில் நம் கவனத்தை நிலை நிறுத்தக்கூடியவையாய் இருக்கின்றன. ஒளியில், சாம்பலில், நீல உடையில், இலைகளின் தண்ணீரில், டோஸ்டில் வெண்ணையில் உள்ள தாளவொண்ணா அழகை நின்று நிதானித்து ருசிக்கிறார் அவர் தன் நாவல்களில். ராபின்சன் படைக்கப்பட்ட இந்த உலகை தீவிரமாக நேசிக்கிறார்- அந்த நேசம் ஒரு வலிபோல் உக்கிரமானதாக இருக்கிறது, அவருக்கு உலகும் நம்மைப் போலவே புனிதமானது என்ற உண்மை புலப்பட்ட ஒன்றாயிருக்கிறது.

"அண்மையில் ஒரு நேர்முகத்தில் ராபின்சன் விளக்குகிறார், "நாம் சரியான முறையில் பார்த்தால், எல்லாரும் எல்லாமும் தன்னைச் சுற்றி ஒரு தியான வெளியைக் கொண்டதாய் இருக்கும் என்று நாமறிவோமென நான் நினைக்கிறேன்... இந்த மர்மம் குறித்த அறியாமையே நாமறியாத விழுமியமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. நான் ஒரு மந்திரவாதியின் மர்மத்தைப் பற்றிப் பேசவில்லை, வாழ்வின் அடிப்படை ஆழத்தில் உள்ள மர்மத்தை சொல்கிறேன், மனிதர்களையும் மற்ற விஷயங்களையும் தீர்க்கமாக சற்று நேரம் உள்ளபடியே உற்று நோக்கினால் நாமறியக்கூடிய மர்ம உணர்வைப் பற்றிப் பேசுகிறேன்"

மரிலின் ராபின்சன் எழுதிய கிலியட் என்ற நாவலை நான் படித்திருக்கிறேன்- கதையோட்டமே இல்லாமல் தெளிந்த நீரோடை போல அசைவற்றிருக்கும் அவரது எழுத்தின் அமைதி.

உலகில் எவ்வளவு விவகாரம் இருந்தாலும், மனம் தன்னிலைக்கு வருவது அமைதியில்தானே? அழகின் லயிப்பில் அன்றி வேறெங்கு நமக்கு இந்த அமைதி எளிதில் வசப்படுகிறது? தன்னிருப்பின் அதிசயத்தை உணர அவகாசமில்லாத நமக்கு வெளி உலகம் மற்றும் அந்நிய மனிதர்களை நாட்டத்துடன் கருத காரணம் இருக்கப் போகிறதா என்ன?

கவனம் என்ற ஒன்றை சொல்கிறார்களே, அதில்தான் இருக்கிறது மர்மம் என்று நினைக்கிறேன்- அழகின் லயிப்பில் நம்மை ஆழ்த்தக்கூடிய கலைக்கு இந்த மர்ம உணர்வு தேவை- சொற்களால் சொல்வதற்கில்லாத இருப்பின் மெய்ம்மை குறித்த ஆச்சரியம், நிரதிசயம் எந்த ஒரு நல்லிலக்கியத்துக்கும் இன்றியமையாத ஒன்று என்று தோன்றுகிறது.

இதை அழகு என்றும் சொல்லலாம், கருணை என்றும் சொல்லலாம்.

15/2/11

எழுது அல்லது சாவு!

நண்பர் ஒருவர் எனக்கு இந்தத் தளத்தை அறிமுகப்படுத்தினார். யோசிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டு தாமதித்து எழுதாதொழிவதில் இருந்து விடுபட இந்தத் தளம் உதவுகிறது.

எழுதுவதை நிறுத்தினால் கொஞ்ச நேரத்தில் திரை சிவந்து, நாம் எழுதிய எழுத்துகள் அழியத் துவங்குகின்றன- எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். நிறுத்தி நிதானித்து யோசிக்க அவகாசமில்லை.

இது படைப்பூக்கத்துக்கு எதிரானதல்ல. இதனால் அவசர அவசரமாக ஏதேதோ எழுதித் தீர்க்கப்போகிறோம் என்றில்லை. இதோ, இந்தப் பதிவை நான் "எழுது அல்லது சாவு!" என்று தளத்தில்தான் எழுதுகிறேன். எழுதி முடித்ததும் வெட்டி ஒட்டி, இந்த ப்ளாகில் திருத்தப் போகிறேன்.

எழுதத் துவங்க நல்ல இடம். மண்டையில் ஒரு குரல் எழுதும்போதே விரல்களைப் பிடித்துத் தடுத்து நிறுத்துகிறது, இல்லையா? அந்தக் குரலிலிருந்து விடுதலை. நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் துவக்க வெடிப்பு போல எழுத்தின் துவக்கத்தை அமைத்துக் கொள்ளலாம். தங்கு தடையின்றி, தோன்றுவதையெல்லாம் எழுதி முடித்து விட்டு, நிதானமாக திருத்தி அமைத்துக் கொள்ளலாம்.

பிகு-

நம் விருப்பத்துக்கு எதிராக யாராவது நம்மை எழுத வைக்க முடியுமா என்ன? இதோ இப்போதேகூட கொஞ்சம் ஏமாற்றுகிறேன்- யோசிக்க நிதானிக்கும் வேளையில், எதையோ எழுதி மெல்ல அழிக்கிறேன், ஒவ்வொரு எழுத்தாக- நினைவின் தொடர்ச்சி திரும்பக் கிடைத்ததும், எழுத்தின் திரியை விட்ட இடத்திலிருந்து எடுத்துச் செல்கிறேன்.

இனி அடிக்கடி எழுத முடியும் என்று நினைக்கிறேன்- நேரம் கிடைக்கும்போது.