9/7/11

ஆன்டன் செகாவ் - சில நினைவுகள்.


ஒரு நண்பர், எல்லாரும்தான் எல்லாமும் எழுதுகிறார்கள், ஆனால் எதை எவ்வளவு நுட்பமாக எழுதுகிறார்கள் என்பதுதான் ஒரு இலக்கியவாதியை சாதாரண எழுத்தாளரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது, இல்லையா, என்று கேட்டார்.  இருக்கலாம்.

ஆனானப்பட்ட செகாவ் பற்றியே டால்ஸ்டாய்க்கு அவ்வளவு பெரிய அபிப்பிராயம் இருக்கவில்லை என்று படித்தேன், ஆச்சரியமாக இருக்கிறது.


Memories of Chekhov by Peter Sekirin | NYRblog | The New York Review of Books- இந்த கட்டுரையில் ஐவான் புனின் இப்படி எழுதுகிறார்:

1895ன் இறுதியில் நான் மாஸ்கோவில் செகாவுடன் பழக நேர்ந்தது. அவர் அப்போது அடிக்கடி பேசிய குறிப்பிட்ட சில செகாவிய பதங்கள் என் நினைவில் இருக்கிறது.

"நீ எழுதுகிறாயா? நீ நிறைய எழுதுகிறாயா?" என்று அவர் என்னிடம் ஒரு நாள் கேட்டார்.

"உண்மையைச் சொல்வதானால் நான் அவ்வளவு அதிகம் எழுதுவதில்லை"

அவருக்கு வழக்கமாக இல்லாத சோகமான, இருண்ட குரலில் அவர் என்னிடம், "அடபாவமே," என்றார், "உன் கைகள் சும்மா இருக்ககூடாது, நீ எப்போதும் வேலை செய்து கொண்டிருக்க வேண்டும். உன் வாழ்நாளெல்லாம்"

அதன் பின் வெளிப்படையாக எந்த ஒரு சம்பந்தமுமில்லாமல் அவர் சொன்னார், "ஒரு சிறுகதையை எழுதும்போது, அதன் துவக்கத்தையும் முடிவையும் வெட்டி விட வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. எழுத்தாளர்களாகிய நாம் நம் பொய்களில் பெரும்பாலானவற்றை அங்குதான் சொல்கிறோம்.

சிலசமயம் செகாவ் என்னிடம் டால்ஸ்டாய் பற்றி சொல்வதுண்டு: "நான் அவரைப் பெரிதும் மதிக்கிறேன். அவரிடம் நான் எதை மிகவும் மதிக்கிறேன் தெரியுமா? அவர் நம்மையெல்லாம் கேவலமாக நினைக்கிறார். அத்தனை எழுத்தாளர்களையும். இன்னும் சரியாக சொல்வதானால் அவர்,  பிற எழுத்தாளர்களாகிய நம்மை, முழுமையான பாழ்வெளி போல் கருதுகிறார்.  அவ்வப்போது அவர் மாப்பசான், குப்பின், செமநோவ் அல்லது என்னைப் புகழ்கிறாரே என்று நீ வாதாடலாம். ஆனால் அவர் ஏன் எங்களைப் புகழ்கிறார்? எளிதாகச் சொல்லி விடலாம்: அவர் நம்மைக் குழந்தைகள் போல் நினைப்பதால்தான் புகழ்கிறார். நமது சிறுகதைகள், ஏன், நமது நாவல்கள்கூட அவரது படைப்புகளோடு ஒப்பிட்டால் சிறுபிள்ளை விளையாட்டே. ஆனால் ஷேக்ஸ்பியர்.... அவரைப் புகழ்வதற்கு வேறு காரணம் இருக்கிறது. ஷேக்ஸ்பியர் வளர்ந்த எழுத்தாளராக இருப்பதால் அவருக்கு உறுத்தலாக இருக்கிறார், அவர் டால்ஸ்டாய் போல் எழுதுவதுமில்லை."

----

இந்தக் கட்டுரையில் இன்னொரு தகவல் இருக்கிறது. ஐவான் பெலோசொவ் சொன்னதைப் படிக்கும்போது எனக்கு நடுமுதுகு சில்லிட்டுவிட்டது.


ஆண்டன் பாவ்லோவிச் நெருப்பின் கணப்பின்முன் அமர்ந்திருந்தார், அதன் பிழம்புகளைப் பார்த்தபடி. அவர் தன் முன் இருந்த பிர்ச் மரக்கட்டையில் இருந்து ஒரு சிராயைப் பிய்த்து நெருப்பில் எறிந்தார், எதையோ தீவிரமாக யோசித்தபடி அமர்ந்திருந்தார் அவர்.

வெளியிலிருந்து அவரை அவரது பணிப்பெண் அழைத்தாள். அவர் சிறிது நேரம் எங்களை விட்டகன்றார். இறுதியில், அவர் திரும்பினார், நாங்கள் ஏன் அவர் தாமதிக்க நேர்ந்தது என்று கேட்டபோது தயக்கத்துடன் அவர் பதிலளித்தார், "எனக்காக ஒரு மருத்துவப் பிணியாளர் காத்திருந்தார்"

எனக்கு ஆச்சரியமாக இருந்தது, "இவ்வளவு தாமதமாகவா? அவர் ஒரு நண்பரா?"

செகாவ் பதிலளித்தார், "அப்படியெல்லாம் இல்லை. நான் அவளை என் வாழ்வில் முதல் முறையாகப் பார்க்கிறேன். விஷமாக இருக்கக்கூடிய ஒரு மருந்துக்காக பிரிஸ்க்ரிப்ஷன் வேண்டுமென்று கேட்டாள். பிரிஸ்க்ரிப்ஷன் இருந்தால்தான் அது மருந்துக் கடையில் கிடைக்கும்"

"நீங்கள் எழுதிக் கொடுக்கவில்லைதானே?"

ஆண்டன் பவ்லோவிச் எதுவும் பதில் சொல்லவில்லை. அவர் கணப்பருகில் அமர்ந்திருந்தார். நெருப்பில் இன்னும் கொஞ்சம் விறகைச் சேர்த்தார். அதன் பின், ஒரு நீண்ட அமைதியைத் தொடர்ந்து, அவர் அமைதியான குரலில் பதில் அளித்தார், "இதுவே அவளுக்கு நல்லதாகவும் இருக்கலாம். நான் அவளது கண்களைப் பார்த்தேன், அவள் ஒரு முடிவெடுத்து விட்டதைப் புரிந்து கொண்டேன். இங்கிருந்து சற்று தொலைவில் ஒரு பெரிய ஆறு ஓடுகிறது, அங்கே ஒரு கற்பாலமும் இருக்கிறது. அவள் அங்கிருந்து குதித்தால், சாவதற்குமுன் பெரும் துயர் அனுபவிப்பாள். விஷம் அவளுக்கு அதைவிட நல்லதாக இருக்கும்"

அவர் அமைதியாக இருந்தார். நாங்களும் அமைதியாக இருந்தோம். அதன் பின், பேச்சை மாற்றுவதற்காக, இலக்கியம் குறித்து விவாதிக்கலானோம்.