22/7/11

புத்தக விமரிசனத்தின் பொன் விதிகள்


A thing of beauty is a joy for ever:
Its loveliness increases; it will never
Pass into nothingness; but still will keep
A bower quiet for us, and a sleep
Full of sweet dreams, and health, and quiet breathing...

விமரிசகர்கள் தங்களால் விமரிசிக்கப்படும் புத்தகங்களைப் படிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது முன்வைக்கப்படுகிறது. இந்தப் புத்தகத்தின் விஷயத்தில் புத்தகாசிரியரின் குற்றச்சாட்டை நாம் முன்கூட்டியே ஏற்றுக் கொள்கிறோம், அவரது படைப்பை நாம் படிக்கவில்லை என்ற உண்மையை நேர்மையாக ஒப்புக் கொள்கிறோம். நாம் எம் கடமையை விரும்பித் தவறினோம் என்று சொல்வதற்கில்லை- உண்மை அதற்கு மாறான ஒன்று- இந்தக் கதையை முழுதாகப் படிக்க அமானுட பிரயத்தனப்பட்டோம். கதையே அமானுடமான ஒன்றுதான், ஆனால் எம்மாலானவை அவ்வளவும் முயன்றும், இந்த ரொமாண்டிக் கவிதையின் நான்கு பாகங்களில் முதலாம் ஒன்றைத் தாண்டி மேற்செல்ல முடியவில்லை. எமக்கு அந்த ஆற்றல் இல்லை என்ற குறை, ஆற்றலின்மையோ அல்லது வேறெந்த குறையோ, எதுவாக இருப்பினும் எம் குறை எமக்கு மிகுந்த துயர் தருவதாக உள்ளது, அத்துயருக்கு ஆறுதலாய் ஒரே ஒரு விஷயத்தைதான் சுட்ட முடியும்- நாம் இன்னமும் பார்த்திராத அந்த மூன்று பாகங்களில் என்ன இருக்கிறது என்பதைக் குறித்து எவ்வளவுக்கு அறியாமலிருக்கிறோமோ, அவ்வளவுக்கே படிக்க முயன்று படுதோல்வியடைந்த இந்த முதல் பாகம் என்ன சொல்ல வருகிறது என்பதைக் குறித்தும் படித்துப் பார்த்து அறிந்திருக்கிறோம்.
ஸ்லேட்டில் இந்த மேற்கோளைப் படித்தேன். நடை மிகவும் பழசாக இருக்கிறதா?-  இது 1818ல் ஜான் வில்சன் க்ரோக்கர் என்பவரால் என்டைமியான் என்ற படைப்பைக் குறித்து எழுதப்பட்டது.


என்டைமியானை எழுதியது யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் மேலே படிக்கப் படிக்கத் தெரிந்து கொள்வார்கள்.
இதை எழுதியவருக்கு மொழியாற்றலோ, கற்பனைத் தீற்றலோ, மேதமையின் விகசிப்போ, எதுவும் இல்லை என்று நாம் சொல்லவில்லை. இதை எழுதிய திரு கீட்ஸ் (அதுதான் அன்னாரது பெயராக இருப்பின்- சித்த சுவாதீனம் உள்ள எந்த ஒரு மனிதனும் இந்த ஆனந்தப் பாஷ்பத்தைத் தன் நிஜமான பெயரில் எழுதியிருக்ககூடுமோ என்று நாம் ஐயுருகிறோம்), திரு கீட்ஸுக்கு இவ்வாற்றல்கள் மூன்றும் உள்ளன- ஆனால் அவர் துரதிருஷ்டவசமாக காக்னி கவிதை என்றழைக்கப்படும் புதிதாயுருவாகியுள்ள பாணியில் கவிதைகள் எழுதுகிறார். நயமற்ற மொழியில் நம்ப முடியாத விஷயங்களைச் சொல்வதே காக்னி கவிதைகள் என்று சொல்லலாம். 
திரு ஹண்ட் அவர்களின் கவிதைகளைப் பிரதி எடுப்பவராக இருக்கிறார் திரு கீட்ஸ். ஆனால் அவரை விட திரு கீட்ஸ் புரிந்து கொள்ளக் கடினமாக எழுதுகிறார், அவரளவு முரட்டுத்தனமான மொழியைக் கையாள்கிறார், அவரைவிட இரு மடங்கு நீர்த்துப் போன எழுத்துக்குச் சொந்தக்காரர், தன் முன்னோடியினும் பத்து மடங்கு அலுப்பாகவும் அர்த்தமில்லாமலும் எழுதுகிறார் திரு கீட்ஸ்.
பைரனும் ஷெல்லியும் இந்த விமரிசனம்தான் கீட்ஸைக் கொலை செய்தது என்று குற்றம் சாட்டியுள்ளனர் என்ற தகவல் ஸ்லேட் கட்டுரையில் காணப்படுகிறது. கட்டுரையாளர் சொல்ல வந்த விஷயம் என்னவென்றால், விமரிசனம் எவ்வளவு கடுமையாக இருப்பினும் நியாயமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அதன் தாக்கம் எவ்வளவு வலிமையானதாக இருந்திருந்தாலும், காலத்துக்கும் அந்த அநியாயமான விமரிசகனின் முட்டாள்தனம் நிலைபெற்று விடும்.

இதைத் தவிர்க்க புத்தக விமரிசனம் செய்பவர்கள் மூன்று விதிகளைக் கடைபிடிக்க வேண்டுமாம்:

  • ஒரு புத்தக விமரிசனம், அந்தப் புத்தகம் எதைப் பேசுகிறது என்று சொல்லவேண்டும். 
  • ஒரு புத்தக விமரிசனம், அந்தப் புத்தகம் எதைப் பேசுகிறதோ, அதைப் பற்றி அந்த புத்தகத்தில் அதை எழுதியவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை சொல்ல வேண்டும்.
  • ஒரு புத்தக விமரிசனம், அந்தப் புத்தகம் எதைப் பேசுகிறதோ, அதைப் பற்றி அதன் ஆசிரியர் என்ன சொல்லியிருக்கிறாரோ, அது குறித்து விமரிசகர் என்ன நினைக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டும்.

ஆக, ஒரு புத்தகம் எதைப் பற்றியது, அந்த விஷயத்தைப் பற்றி ஆசிரியர் என்ன சொல்லியிருக்கிறார், அந்த ஆசிரியர் சொன்னதைப் பற்றி விமரிசகரின் கருத்து என்ன என்ற இந்த மூன்று விஷயங்களையும் பேசாத புத்தக விமரிசனம், எவ்வளவு நன்றாகவோ காட்டமாகவோ தாக்கம் கொண்டதாகவோ என்ன எழவாகவோ இருந்தாலும், அதனால் பெரிய அளவில் பயனில்லை என்று சொல்கிறார் கட்டுரையாளர். இது பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் இந்த மூன்று விஷயங்களையும் பேச வேண்டும் என்பது ஏற்கக்கூடியதாகத்தான் இருக்கிறது. குறிப்பாக நூல் அறிமுகத்தில் இந்த விஷயங்கள் தேவை.

 நான் இங்கே கட்டுரைகளை அறிமுகப்படுத்துவதால் இந்த விஷயத்தில் இனி கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன். :)