10/7/11

நாற்காலி

நான் விரும்பிப் படிக்கும் வலைதளங்களில் ஒன்று லாங்குவேஜ் லாக். அங்கு ஒரு குறிப்பிட்ட சொல் கிளைத்துக் கிளம்பி வேரில் வேறு வடிவில் திரும்பச் சேர்வதைப் பற்றி எழுதியிருந்தார்கள், படித்துப் பாருங்கள் கங்காரு!

அங்கு எழுதியிருக்கும் விஷயத்தை சுருக்கமாக சொல்கிறேன்.

ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகளிடையே பொது மொழி கிடையாதாம். ஒவ்வொருத்தர் கங்காருவை ஒவ்வொரு பெயரில் அழைத்து வந்தார்கள். வெள்ளைக்காரர்கள் முதல் முறையாக ஆஸ்திரேலியா சென்றபோது அங்கே ஒரு கங்காருவைக் கண்டுபிடித்ததும் உள்ளூரில் இருந்த ஒருவரை அழைத்து அது என்ன என்று விசாரித்திருக்கிறார்கள். கூகூ யிமிதிர் என்ற பழங்குடியைச் சேர்ந்த அந்த நபர், அதுதான் கங்காரு என்று சொல்லியிருக்கிறார். அதன்பின் வெள்ளைக்காரர்கள் ஆஸ்திரேலியாவெங்கும் பரவுகையில் கங்காரு என்ற பெயரும் மற்ற பழங்குடியினரிடையே நிலைபெற்றது, சில குழப்பங்களுடன்.

நம் ஊரில் ஹாமில்டன் பாலம் அம்பட்டன் பாலமானது போல், சில பழங்குடியினர் இந்த சொல்லைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர். உதாரணத்துக்கு க்வையேகல் என்ற பழங்குடியினர் கங்காரு என்றால் பெரிய உருவம் என்று நினைத்துக் கொண்டு வெள்ளைக்காரர்களிடம் ஆடு மாட்டையெல்லாம் கங்காரு என்று அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். அப்புறம் புரிந்து கொண்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால், கூகூ யிமிதிர்கள் பத்து வகை கங்காரு பெயர்களை வைத்திருந்தார்களாம். அந்த வெள்ளைக்காரர் ஒரு பெரிய கருப்பு நிற கங்காருவைக காட்டி இது என்ன என்று கேட்டதால் அவர் அது ஒரு கங்காரு என்று சொல்லியிருக்கிறார், அது அப்புறம் அத்தனை கங்காருக்களுக்கும் பொதுப் பெயராகிவிட்டிருக்கிறது. அதே அவர் ஒரு சிறிய சிவப்பு கங்காருவைக் காட்டி இது என்ன என்று கேட்டிருந்தால் அந்த கூகூ யிமிதியர், அதுவா, அது ஒரு நாற்காலி (nharrgali) என்று சொல்லியிருப்பாராம்!

அதன்பின் அந்த க்வையேகல் மக்கள் ஆடு மாடுகளையெல்லாம் நாற்காலிகள் என்று சரியாக சொல்லியிருப்பார்கள் என்ற சேதியை விடுங்கள், நாமெல்லாரும் ஆஸ்திரேலியர்களை கங்காருக்கள் என்று அழைக்காமல் நாற்காலிகள் என்று இன்று அழைத்துக் கொண்டிருப்போம்!

எதிர்பாராத விபத்துகள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன பார்த்தீர்களா?

(இதை ஏன் இங்கு எழுதுகிறேன் என்று பார்க்கிறீர்களா, அதுதான் ஹெட்டரில் போட்டிருக்கிறதே, "புனைவின் வேர்கள் நினைவில், நினைவின் வேர்கள் புனைவில்"!)