19/7/11

வாசிப்பின் மரணம்

எழுத்தின் மரணம் அது தவறாகப் புரிந்து கொள்ளப்படும்போது நிகழ்கிறதென்றால், வாசிப்பின் மரணம் சில துரதிருஷ்டமான கணங்களில் தன் வாசகனால் ஒரு எழுத்தாளன் புரிந்து கொள்ளப்படும்போது நிகழ்கிறது. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இன்று என் நண்பர் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரின் பெயரைச் சொல்லி தனி வாழ்வில் அவர் இன்னொரு எழுத்தாளரைவிட மோசமானவர் என்றார். "இது தெரிந்து எனக்கு என்ன ஆகப் போகிறது?"," என்று நினைத்துக் கொண்டேன். அவரை நான் என் வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்ப்பதற்கும் வாய்ப்பில்லாத நிலையில் எங்களுக்குள் எந்த கொடுக்கல் வாங்கலும் நிகழப்போவதில்லை- அவரது தனிப்பட்ட வாழ்வில் அவருக்கு இருக்கக்கூடும் குறைகளை நான் அறிந்து கொள்வது அவரது புனைவுகளிலிருந்து என்னைப் பாதுகாக்கும் என்று நண்பர் நினைத்திருக்கலாம். ஆனால் எனக்கு அத்தகைய தடுப்பரண்களில் ஆர்வமில்லை.


வாசிப்பு மரணிக்கும் வலியை, எழுத்தாளனின் மீது வாசகன் வைத்திருக்கும் நம்பிக்கை பொய்த்தலின் துயரை, நான் சொல்வனத்தில் படிக்க நேர்ந்தது. எந்த எழுத்தாளரைப் பற்றி யார் என்ன அவதூறு சொன்னாலும், அவதூறு என்று சொல்ல வேண்டாம், எதிர்மறைத் தகவலைச் சொன்னாலும், எனக்கு சேதுபதி அருணாசலம் எழுதிய "எழுத்தாளர்கள் என்னும் மனிதர்கள் - ஜோசே சாரமாகோவை முன்வைத்து" என்ற கட்டுரை நினைவுக்கு வருகிறது- அதிலும் குறிப்பாக, அவர் முத்தாய்ப்பாக எழுதிய, " ...எழுத்தாளர்களின் சொந்த வாழ்க்கையைக் குறித்துப் படித்ததை எப்படி மறப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்," என்ற வாக்கியம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நாம் மிகவும் ரசித்துப் படித்த ஒரு படைப்பு அதை எழுதியவரின் வாழ்க்கை குறித்த தகவல்களால் கசந்து போவதென்பது கொடுந்துயராகவே எந்தவொரு வாசகனுக்கும் இருக்கும்.

ஆனால் அதைத் தவிர்க்கவும் முடியாது- சேதுபதி அருணாசலம் ஜோசே சாரமாகோ குறித்து எழுப்பும் கேள்விகளைப் பாருங்கள், இப்படி ஒரு மனநிலையில் இருப்பவருக்கு சாரமாகோவின் படைப்புகளில் எவ்விதமான அக்கறை இருக்க முடியும்?
போர்ச்சுகலில் 1974-ஆம் ஆண்டு வரை, கருத்துச்சுதந்திரத்தைக் கடுமையாக மறுத்துவந்த ஃபாசிஸ அரசு நடந்து வந்தது. அரசியல் கலவாத கவிதைகளையே அக்காலகட்டங்களில் சாரமாகோ எழுதியிருக்கிறார். 1974-இல் வலதுசாரி அரசை வீழ்த்தி கம்யூனிஸக் கட்சி ராணுவ ஆட்சியை சில மாதங்கள் நடத்தியது. அப்போது சாரமாகோவுக்கு ஒரு பத்திரிகையின் ஆசிரியராக வேலை கிடைத்தது. தன்னுடைய கருத்தோடு ஒத்துப்போகாத பிற எடிட்டர்களை, எந்த உறுத்தலும் இல்லாமல் வேலையை விட்டு நீக்கியிருக்கிறார் சாரமாகோ. அப்படி வேலையை விட்டு நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24. அப்பத்திரிகையை ஆளும் கம்யூனிஸ ராணுவ அரசின் பிரச்சார பீரங்கியாகவே நடத்தினார் சாரமாகோ. 1975-இல் கம்யூனிஸ ஆட்சி வீழ்ந்து, ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அப்படி ஒரு சர்வாதிகார ஆட்சி வீழ்ந்த நாளை சாரமாகோ, “ஒரு இருண்ட நாள்” என்று அறிவித்தார்.

தன்னுடைய ‘பார்வையின்மை’ நாவலை, ‘அடக்குமுறையைப் பற்றிய என் விமர்சனம் இந்த நாவல். பல பணக்கார நாடுகள் ஏழை நாடுகளைச் சுரண்டி மேலும், மேலும் அவர்களை ஏழ்மையாக்குவதைக் குறித்த என் மன வருத்தத்தை என் நாவல் வழியே முன்வைக்கிறேன்” என்கிறார் சாரமாகோ. அப்படிப்பட்டவர் இரண்டு சர்வாதிகாரங்கள் மறைந்து ஒரு ஜனநாயகம் மலர்ந்த தினத்தை ‘இருண்ட நாளாக’ ஏன் பார்க்கிறார்? தான் அதிகாரத்தில் அமர்ந்த ஒரே ஒரு முறை (பத்திரிகையாசிரியர்), கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை ஏன் நெறித்தார்? தான் நம்பும் கொள்கைகளுக்காக எந்தவிதமான சர்வாதிகாரத்தையும் சகித்துக் கொள்ள ஏன் அவர் தயாராக இருந்தார்? தெரியவில்லை.
ஜோசே சாரமாகோவின் எழுத்து குறித்து நான் இன்றும் பல பேர் உயர்வாக எழுதுவதைப் படிக்கிறேன். ஜோசே சாரமாகோ எழுதிய எதையும் படித்ததில்லை. ஆனால் சேதுபதி அருணாசலம் எழுதியுள்ள வரலாற்று நிகழ்வுகளைக் குறித்து ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சமயம் சாரமாகோவைப் படித்தால் அவர் எழுதியது எனக்குப் பிடித்தமாக இருக்கலாம், ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு வாசகனாக இதை ஒரு இழப்பாகவே பார்க்கிறேன்.

எனக்கு இந்த விஷயத்தில் என்ன ஒரு அதிர்ஷ்டம் என்றால் நான் என் சிறு வயது முதலே ரசித்துப் படித்துவந்த ஜார்ஜ் ஆர்வெல் பற்றி நான் கேள்விப்படும் விஷயங்கள் அவருக்கு மரியாதை கூட்டுவதாகவே உள்ளன. அண்மையில் படித்தது இது:
சண்டை எவ்வளவு கடுமையானதாக இருந்தபோதும், சித்தாந்தங்களை அவர் வெறுத்த அந்த ஒரே காரணத்தால்- சித்தாந்தங்கள் கொலை செய்கின்றன- ஆர்வெல் "நாற்றம் பிடித்த குட்டி சித்தாந்தங்கள்" அனைத்தையும்விட தனி மனிதர்களுக்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை எப்போதும் ஆழமாக உணர்ந்திருந்தார். ஸ்டீபன் ஸ்பென்டருடன் அவருக்கு இருந்த நட்பும், அவர்களுக்கிடையே இருந்த கடிதப் பரிமாற்றமும் இதற்கு ஒரு அற்புத உதாரணமாக இருக்கின்றன. ஆர்வெல் ஸ்பென்டரை பார்லர் போல்ஷவிக் என்றும் பான்சி போயட் என்றும் கேலி செய்திருந்தார். அவர்கள் சந்திக்க நேர்ந்தது. அவர்களது சந்திப்பு இணக்கமான ஒன்றாகவே இருந்தது. ஸ்பென்டருக்கு அது ஒரு புதிரான அனுபவமாக அமைந்தது. அவர் தன் புதிரை ஆர்வெல்லுக்குக் கடிதமாக எழுதவும் செய்தார். பிற்காலத்தில் ஸ்பென்டருக்கு நண்பராக இருந்த ஆர்வெல் அப்போது அளித்த பதில் இது: 
உன்னை முன்பின் அறியாத நிலையில் என்னால் எப்படி உன்னைத் தாக்கி எழுத முடிந்தது என்றும் உன்னைச் சந்தித்தபின் அது எப்படி என் மனம் மாறியது என்றும் கேட்கிறாய். முன்னெல்லாம் நான் உன்னை பார்லர் போல்ஷவிக்கின் குறியீடாகப் பயன்படுத்தத் தயாராக இருந்தேன்... அ. உனது கவிதைகள் எனக்கு முக்கியமானவையாக இல்லை, ஆ. நான் உன்னை வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஃபேஷனபிலான ஒரு ஆளாகப் பார்த்தேன், நீ கம்யூனிஸ்டாகவும் கம்யூனிஸ அனுதாபியாகவும் இருந்தாய், நான் 1935ல் இருந்தே கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்ப்பவனாக இருந்திருக்கிறேன். இவை தவிர, இ. உன்னைச் சந்தித்திராததால் நான் உன்னை இன்ன வகைப்பட்டவன் என்று நினைத்துக் கொள்ள முடிந்தது, நீ எனக்கு ஒரு பொதுப்படையான கருத்துருவாகவும் இருந்தாய். நான் உன்னைச் சந்தித்து எனக்கு உன்னைப் பிடிக்காமல் போயிருந்தாலும்கூட நான் என் பார்வையை மாற்றிக் கொண்டிருந்திருப்பேன். ஏனென்றால், ஒருவரை நேருக்கு நேர் பார்க்கும்போது அவர் ஒரு மனிதர் என்பதை உடனடியாக நீ உணர்கிறாய். இனியும் அவர் ஒரு சில கருத்துகளைப் பிரதிநிதித்துவம் செய்து அவற்றுக்கு உருவகமாக செயல்படும் கோட்டோவியம் அல்ல. நான் இலக்கிய வட்டங்களில் அவ்வளவாகப் பழகாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. என் அனுபவத்திலிருந்து நான் என்னைப் பற்றி அறிந்து கொண்ட உண்மை என்னவென்றால், யாரையெல்லாம் நான் சந்தித்துப் பேசியிருக்கிறேனோ அவர்களிடம் என்னால் தயவு தாட்சண்யமின்றி அறிவுத் தளத்தில் நிட்டூரமாக அதன்பின் எப்போதும் நடந்து கொள்ள முடிந்ததில்லை. ட்யூக்'களால் முதுகில் தட்டப்பட்டு நிரந்தரமாகத் தொலைந்து போகும் லேபர் எம்பிக்களைப் போல, முரட்டுத்தனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்தாலும் என்னால் அப்படி இருக்க முடிவதில்லை.
ஆர்வெல் மிகவும் வித்தியாசமானவர். ஸ்பானிய உள்நாட்டுப் போரில் அவரது அனுபவம் ஒன்று: எதிர்தரப்பில் வெட்டப்பட்டிருந்த பதுங்கு குழிகளில் ஒன்றிலிருந்து ஒருவன் எழுந்து ஓடியதைப் பார்த்தார் ஆர்வெல். அவன் அரைகுறையாக ஆடை அணிந்திருந்தான். ஓடும்போது அவிழ்ந்து விழும் தன் ட்ரௌசர்களை இரு கைகளாலும் இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓடினான்.
ஒரு வகையில் அந்த ட்ரௌசர்கள் என் மனதைத் தொட்ட காரணத்தால் நான் அவனைச் சுடவில்லை. நான் பாஸிஸ்டுகளைச் சுட்டுக் கொல்ல வந்திருந்தேன். தன் ட்ரௌஸர்களை இழுத்துப் பிடிப்பவன் பாஸிஸ்டல்ல. அவன் நம் கண்ணுக்கு முன் சக மனிதனாக நிற்கிறான். உன்னைப் போல் ஒருவனாக. அவனைச் சுட வேண்டும் என்று நினைக்கவே முடியாது.
இந்த விஷயமெல்லாம் இங்கே இருக்கிறது: The New York Review of Books 

நம் விஷயத்துக்கு வருவோம்: இனி நாம் எப்போதும் எழுத்தாளர்களைப் பற்றி தெரிய வரக்கூடிய உண்மைகளை நினைத்து நடுங்கிக் கொண்டிருக்க வேண்டுமா? வேறு வழியில்லை போலிருக்கிறது.

Miller McCune என்ற இதழில் ஒரு உளவியல் ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்டிருக்கிறார்கள்: அந்த ஆய்வின் முடிவுகள் உண்மையாக இருப்பின், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரும்,
தன் முக்கியத்துவம் குறித்து தீர்மானமாக இருப்பார்கள், என்ன லாபம் கிடைக்கிறது என்பதை நோக்கமாக வைத்திருப்பார்கள், தன்னலத்துக்காக சட்டத்தை இஷ்டப்படி வளைக்கக்கூடியவர்களாக இருப்பார்கள், பயனிருக்கும் என்றால் மற்றவர்களை மிகையாகப் புகழ்வார்கள்.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்க்கும் எவருக்கும் இது செய்தியல்ல. ஆனால், தன் ஆதர்சத்தின் களிமண் கால்களைப் பார்க்க அஞ்சுபவர்களுக்கு இது ஒரு நற்செய்தி: அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். நாம்தான் நாம் விரும்பும் எழுத்தை ரசித்துப் படிக்க வேண்டுமென்றால் அதை எழுதியவர்களை சகித்துக் கொள்ளப் பழக வேண்டும்.