28/7/11

எழுத்தாளர்கள் விமரிசனம் செய்யலாமா?

எழுத்தாளர்கள் விமரிசகர்களாக இருக்கலாமா கூடாதா என்ற கேள்வியை விவாதிக்கும் ஒரு கட்டுரை இங்கே இருக்கிறது.

புலிட்ஸர் பரிசுக்கான தகுதிப் பட்டியலில் இடம் பெற்ற நாவலை எழுதியவரும் நியூஸ்வீக், நியூ யார்க் டைம்ஸ் போன்ற இதழ்களில் புத்தக மதிப்புரை எழுதுபவருமான டேவிட் கேட்ஸ் ஒருத்தரே இரண்டையும் செய்யலாம் என்று சொல்கிறார்-
"புனைகதை எழுபவர்- அதிலும், என்னைப் போல், புனைகதை எழுத்து பற்றி பாடம் எடுப்பவரால் இன்னொருத்தர் எழுதிய கதையில் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பதைப் பார்க்க முடியும். அவர் எடுத்த முடிவுகளைப் புரிந்து கொள்ள முடியும். எழுத்தாளர்களாக இல்லாதவர்களுக்குத் தெரியவே தெரியாத புனைகதையின் சிக்கல்களுக்கு கதையில் எவ்வளவு புத்திசாலித்தனமான தீர்வுகள் காணப்பட்டிருக்கின்றன, வானத்திலிருந்து ஆச்சரியமான விஷயம் வந்து விழுந்துவிட்டதுபோல் கதையை எழுதியவன் திகைத்த கணங்கள்- இவை இன்னொரு எழுத்தாளனுக்கே புலப்படும்,"
டைம் இதழின் தலைமை புத்தக மதிப்புரையாளராக இருந்த லெவ் க்ராஸ்மேன் வேறு விதமாக இதை அணுகுகிறார்- போலீஸ்காரன் திருடனாக மாறியபின் போலீஸ் வேலை செய்கிற மாதிரி இருக்கிறது எனக்கு நான் நாவல் எழுதிய பின் மற்றவர்கள் புனைவுகளை விமரிசனம் பண்ணுவது, என்கிறார் அவர்:
"புனைகதை எழுதுவது என்பதில் உன்னை அதை ரிவ்யூ செய்வதற்கு லாயக்கில்லாமல் செய்கிற ஏதோ ஒன்று இருக்கிறது. நீ ஒரு நாவலை எழுதும்போது புனைவு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற அந்த ஒரு தகதகக்கும் லட்சியமே கருத்தாக இருந்து கொண்டிருக்க வேண்டும். உன் ரசனையை வலியக் குறுக்கிக் கொள்கிறாய், நீ எழுதிக் கொண்டிருக்கும் அந்த ஒரு எதிர்காலப் படைப்பைத் தவிர மற்றவை அனைத்தும் காணாமல் போய் விடுகின்றன.

நாவலாசிரியனாக இருப்பதற்கு கர்வம் தேவைப்படுகிறது, ஆனால் நல்ல விமரிசகனாக இருக்க உனக்குத் தன்னடக்கம் வேண்டும்"
வாழ்க்கையில் எதுதான் கருப்பு வெள்ளையாக இருக்கிறது, சரி தப்பு என்ற நம் நம்பிக்கைகளைத் தவிர? இந்த விஷயத்திலும் சில நல்ல நாவலாசிரியர்கள் சில சமயம் நல்ல விமரிசனம் செய்கிறார்கள், சில நல்ல விமரிசகர்கள் சில சமயம் அபத்தமாக புனைவுகளைப் புரிந்து கொள்கிறார்கள் என்று சொல்லலாம்: ஆனால் தனிப்பட்ட முறையில் நான் க்ராஸ்மன் கட்சி: நீ புனைவுகளை எழுத முயன்று தோற்றுப் போய்கூட அவற்றின் வடிவ சிக்கல்களையும் மொழியாளுமையின் தேவைகளையும் புரிந்து கொள்ளலாம்: அதை உணர நீ வெற்றிகரமான எழுத்தாளனாக இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை.