31/7/11

பேச்சின் லயமும் கவிதையின் இசையும்

ராபர்ட் ஃப்ராஸ்ட் நாடறிந்த கவிஞர். எட்வார்ட் தாம்சன் என்ற விமரிசகர்-கவிஞரைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பையும், The Road not Taken என்ற கவிதையின் பின்னணியையும் குறித்த ஒரு அற்புதமான கட்டுரை இங்கே இருக்கிறது, அவசியம் படித்துப் பாருங்கள் .

எட்வார்ட் தாமஸ் ஆடன், டைலன் தாமஸ், டெட் ஹ்யூஸ் ("எங்கள் பிதாமகர்"), பிலிப் லார்கின் போன்றவர்களால் பெரிய அளவில் கவிஞராக மதிக்கப்பட்டவர். "ஆங்கில கவிதையின் சொர்க்கவாசலின் பொற்சாவிகளை வைத்திருப்பவர்" என்று டைம்ஸால் புகழப்பட்டவர். எஸ்ரா பவுண்டின் திறமையை அடையாளம் காட்டியவர் .இவர் ராபர்ட் பிராஸ்ட் பற்றி எழுதியது அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கத் துணை செய்தது.

அவர்களுடைய நட்பு மற்றும், அந்த ஒரு குறிப்பிட்ட கவிதையின் தாக்கம் பற்றி அறிய கட்டுரையைப் படியுங்கள், இங்கே நான் ஏறத்தாழ பேச்சு மொழியில் இயல்பாக எழுதப்பட்ட பிராஸ்டின் கவிதைகளைப் பற்றிய ஒரு பத்தியை அதன் அழகுக்காகவும் கூர்மையான அவதானிப்புக்காகவும் இங்கே மொழி பெயர்த்துத் தருகிறேன்-
பாஸ்டனுக்கு வடக்கே என்பது ஒரு புரட்சிகரமான படைப்பு என்பதில் சந்தேகமில்லை. தத்தம் வழியில் தனித்தனியே எது நல்ல கவிதைக்குத் தேவை என்று பிராஸ்டும் தாமசும் இனங்கண்டுகொண்ட தன்மைகளைப் பதினெட்டே கவிதைகளில் இந்தத் தொகுப்பு நிகழ்த்திக் காட்டியது. இருவருக்கும் கவிதையின் ஆற்றல் சந்தத்திலோ வடிவத்திலோ இருக்கவில்லை, அதன் லயத்தில் (ரிதம்) அதை அடையாளம் கண்டு கொண்டனர். வாசிக்கும் கண்ணல்ல செவிக்கும் காதுகளே கவிதையை அறியும் அவயமாக இருந்தது. தாமசுக்கும் பிராஸ்டுக்கும் கவிதையின் அடிகளின் மீட்டரை விட சொற்றொடர்களுக்கு உண்மையாக இருப்பதே அவசியமாக இருந்தது. கவிதையின் முன்னுதாரணங்களைவிட உரையாடலின் ரிதமே முக்கியமாக இருந்தது. பிராஸ்ட் இதை சேடன்ஸ் என்று அழைத்தார். மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் நிகழும் உரையாடல்களை நீங்கள் என்றேனும் கேட்டிருந்தால், வார்த்தைகள் சரியாக பிடிபடாவிட்டாலும் அந்த உரையாடலின் பொதுப் பொருளை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று பிராஸ்ட் நம்பினார். நாம் பேசும் வாக்கியங்களிலும் அதன் தொனியிலும் ஒலிவடிவ பொருள் பொதிந்திருக்கிறது, என்றார் அவர், அதில் ஒரு "உட்பொருளின் ஓசை" உள்ளதாக நம்பினார். பேசும் குரலின் லயத்தால் அம்பலப்படுத்தப்படும் இந்த உட்பொருளின் வழியாகவே கவிதை மிக உக்கிரமான வகையில் தன் செய்தியைச் சொல்கிறது. "தன்னை எதுவேனும் ஆழத் தொட்டிருந்தாலும் அவன் பேசுவதைக் காட்டிலும் சிறப்பாக அவ்வளவு எளிதில் எந்த மனிதனும் எழுத மாட்டான்" என்று குறிப்பிடுகிறார் தாமஸ்.