23/7/11

நம் அனைவருக்கும் விதிக்கப்பட்ட கதி

கதை கவிதைகளில் எது நல்ல படைப்பு, ஏன் அது நல்ல படைப்பாகிறது என்பன குறித்த விவாதங்களுக்கு முடிவேயில்லை. அவை பெரும்பாலான சமயங்களில் காட்டமான சண்டையாகி உறவைக் குலைக்கிறது. இலக்கிய விவாதம் செய்பவர்களுக்கு நீண்ட கால நண்பர்கள் இருந்தால் ஆச்சரியம்தான். அப்படிப்பட்டவர்களுக்கு அபார சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்.

கம்யூனிச ரஷ்யாவில் சகிப்புத்தன்மையை எதிர்பார்த்திருக்க முடியாது. இருந்தாலும் இந்த கடிதத்தின் ஒரு பத்தியைப் பாருங்களேன், ஏன் நாம் இந்த மாதிரியான விஷயங்களில் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெளிவாக சொல்கிறார்:

ரஷ்யாவை விட்டு வெளியேறுவது எனக்கு கசப்பாக இருக்கிறது. நான் இங்கேதான் பிறந்தேன், இங்கேதான் வளர்ந்தேன், இங்கேதான் வாழ்ந்தேன், எனது ஆன்மாவில் உள்ளவையனைத்துக்கும் நான் ரஷ்யாவுக்கே கடன்பட்டிருக்கிறேன். ரஷ்யாவின் குடிமகனாக இருப்பதை நிறுத்தியதும் நான் ரஷ்ய கவிஞனாக இருப்பதை நிறுத்திவிடப் போவதில்லை. நான் திரும்புவேன் என்று நம்புகிறேன்; கவிஞர்கள் எப்போதும் திரும்பி வருகிறார்கள்- உயிரோடோ காகிதத்திலோ... நம் அனைவருக்கும் விதிக்கப்பட்டிருக்கும் கதி ஒன்றே- மரணம். இந்த வாக்கியங்களை எழுதிக் கொண்டிருக்கும் நான் இறப்பேன், இவற்றைப் படிக்கும் நீங்களும் இறக்கவே செய்வீர்கள். நமது ஆக்கங்களே எஞ்சியிருக்கும், அவையும் என்றும் இருக்கப் போவதில்லை. அதனால்தான் எவரொருவர் மேற்கொண்ட காரியத்திலும் மற்றவர்கள் குறுக்கிடக் கூடாது.
ரஷ்யாவை விட்டு வெளியேறுமுன் இதை எழுதியவர் ஜோசப் ப்ராட்ஸ்கி. இந்தக் கடிதம் பிரஷ்னேவுக்கு எழுதப்பட்டது.

தகவலுக்கு நன்றி- பேக் இஷ்யூஸ்