2/7/11

பேனாக்கள் வண்ணத் தூரிகைகளா கில்லட்டின் கத்திகளா? - இந்தா பிடி சாபம்!

(10.7.2011 தேதியிட்ட பிற்குறிப்பு:

இந்தப் பதிவுக்கான அவசியமே இப்போது கேள்விக்குறியாகப் போய் விட்டது. திரு ஆர்வி தன் தளத்தில் "சுஜாதாவின் மூன்று முகங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரது இடமும்" என்ற தலைப்பில் ஒரு அருமையான கட்டுரையை எழுதி நம் பதிவின் காரணங்களைச் சாய்த்து விட்டார். எப்போதும் ஒருத்தர் நம் கணிப்பில் உயரும்போது நமக்கு நம் அறியாமை மற்றும் சிறுமை குறித்து வருத்தமே எழும். அந்த வருத்தத்துடன், ஆனால் நல்ல ஒரு விமரிசனத்தைப் படித்த மகிழ்ச்சியுடன் ஆர்வி அவர்களிடம் இந்தக் கட்டுரையில் ஆங்காங்கே காணப்படும் உரத்த, தடித்த குரலுக்கு மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் இதற்கு முந்தைய பதிவுகளில் சுஜாதாவின் புத்தகங்கள் குறித்து எழுதிய குறிப்புகள் போலல்லாமல் இந்தக் கட்டுரையில் சுஜாதாவையும் ஒரு எழுத்தாளராக மதித்து, ஒரு எழுத்தாளரின் படைப்புகளை அணுகுவதற்கான விமரிசன முறைகளைக் கையாண்டிருக்கிறார் ஆர்வி. ஒரு கட்டுரையாகவே அது தனித்து நிற்கக்கூடிய அளவில் சிறப்பானதாக இருக்கிறது. அதைப் படித்தல் நலம். காலாவதியான இந்தப் பதிவைப் பார்க்க வந்தமைக்கு நன்றி. பின் வருவன இதற்கு முன் 2.7.2011 அன்று எழுதியவை)






தனியாகப் புலம்புவதில் ஒரு வசதி என்னவென்றால், நம் புலம்பல்களில், "என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே" என்ற பாட்டைத் தவிர்த்து விடலாம். அதற்குத்தான் இங்கே வந்திருக்கிறேன். எதைப் பற்றிய புலம்பல் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பவர்கள், இந்தப் பின்னூட்டத்தையும் இந்தப் பின்னூட்டத்தையும் படித்து மகிழலாம்.

கிரி அங்கே நான் மிகவும் கோபமாக எழுதியிருப்பதாக சொல்லியிருக்கிறார், உண்மைதான். இப்போது படித்துப் பார்க்கும்போது, மரியாதையில்லாமல் எழுதியிருக்கிறேன் என்றும் தோன்றுகிறது. அதற்கு ஆர்வி அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கிரியிடமும்தான்.

௦௦௦௦௦௦௦௦௦

என் மனைவி ரமணி சந்திரனின் ஒரு குறிப்பிட்ட நாவலை பற்றிப் பேசத் துவங்கினால் குறைந்தது அரை மணி நேரமாவது பேசுவார். எப்படியும் ஏதாவது ஒரு இடத்தில் அவருக்கு அழுகை வந்து விடும்.

அவர் நான் எழுதுவது எதையும் படிக்க முடியாத புனைவுலக பிக்மியாகவே இருக்கிறார் என்பதுகூட எனக்கு உறுத்தலாக இல்லை, என் மீது இரக்கப்பட்டு இதுவரை அவர் ஒரு சொட்டு கண்ணீர் சிந்தியதில்லை. ஏன், நான் சொல்லும் உண்மைகளைக்கூட நம்ப மறுக்கிறார்.

என் தாம்பத்தியத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு எல்லாம் ரமணி சந்திரனைத் திட்டுவது எனக்கு வசதியாக இருக்கிறது- "நீ ரமணி சந்திரனையும் டிவி சீரியலையும் பாத்துப் பாத்து குடும்ப வாழ்க்கைன்னா என்னன்னே உனக்குத் தெரியாம போயிடுச்சு" என்று வாரம் இரண்டு தடவையாவது திட்டுகிறேன்.

அதைவிட அதிகமாகவும் திட்டுவேன்- எங்கே அவளது கோபத்தில் எவனிடமாவது தன் வளையல்களைக் கழட்டிக் கொடுத்து என்னைக் கொன்று விடுவாளோ என்று பயமாக இருக்கிறது.

ooooooooooooo

அவளென்னவோ தெளிவாகத்தான் இருக்கிறாள், என்னை ஒட்டு மொத்தமாக, ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்று நிராகரித்து விடுகிறாள். "நான் பார்க்கும் சீரியலும் ரமணி சந்திரனும் என்னை அழ வைத்தாலும், எனக்கு அதெல்லாம் பொழுதுபோக்கு. நீங்கள்தான் படிக்கிற கதைகளை எல்லாம் உண்மை, அது வாழ்க்கையை பாதிக்கும், என்று நினைத்துக் கொள்கிற முட்டாளாக இருக்கிறீர்கள்," என்று சொல்கிறாள்.

இந்த விஷயத்தில் எனக்கே குழப்பமாக இருக்கிறது- படிக்கிற கதைகளை வைத்து நாம் மனிதர்களின் உணர்வுகளையும் நுண்ணறிவையும் எடைபோட முடியுமா என்ன? அவள் புனைவுலக பிக்மியாக இருக்கலாம், ஆனால் நான் அவளை அறிந்த வரையில் மனிதர்களுக்கு உரிய அத்தனை உணர்ச்சிகளும் அவளுக்கும் இருக்கிறது. சில சமயம் தியாகம்கூட செய்கிறாள், அவளது அற உணர்ச்சி ரமணி சந்திரனைப் படித்ததால் பாழாய்ப் போய் விடவில்லை: என்றைக்காவது நான் கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் தூங்கப் போனால், அடித்து உதைத்தாவது என்னை இழுத்துக் கொண்டு வந்து சாப்பாட்டுத் தட்டின்முன் உட்கார்த்தி வைத்து சோறு போடுகிறாள்.

போர்ஹேவை ரசிக்கும் மனைவிகள் எப்படியிருப்பார்கள் என்று தெரியவில்லை- வாசக அன்பர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

o0o0o0o0o0

சொல்வனம் பதிப்பித்த தி ஜானகிராமன் சிறப்பிதழ் பலவகைகளில் எனக்கு முக்கியமான ஒன்றாகத் தெரிகிறது- காலச்சக்கரத்தின் ஒரு சிறு சுழற்சி போலிருக்கும் அந்த இதழில், வெங்கட் சாமிநாதன் தனது தி ஜானகிராமன் அஞ்சலி கட்டுரையில், 1983ல் யாத்ரா இதழில் இப்படி எழுதுகிறார், தி ஜானகிராமனைப் பற்றி:
தமிழ் இலக்கிய உலகம் இவ்வகையில் அவரை உணர்ந்ததில்லை. இனங்கண்டு கொண்டதில்லை. தமிழ் இலக்கிய உலகுக்கு அவர் ஒரு காலத்திய (அறுபதுக்கும் முந்திய) ஸ்வாரஸ்யமாக காதல் கதைகள் எழுதும் தொடர்கதை எழுத்தாளர்.
திஜா மறையும்போது அவரைப் பற்றி இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்களா என்று அதிர்ச்சியாக இருந்தது, அதைப் படித்தபோது. வெங்கட் சாமிநாதன் எழுதியதை நினைவில் வைத்துப் பார்க்கும்போது, அதே இதழில் அசோகமித்திரன் சொல்லியதாக சொல்வனம் பதிப்பித்திருப்பது நியாயமாகத் தெரிகிறது-
அ.மி: ...ஜானகிராமன் மறைந்து எத்தனை ஆண்டுகள் ஆகி இருக்கும்?
சொ.வ.: 30 வருடங்கள்.
அ.மி.: இது ரொம்ப சீக்கிரம் இல்லையா? அவர் பற்றிய உணர்ச்சிப் பூர்வமான கணிப்புகள் அடங்கிய பிறகுதான் சொல்ல முடியும்.
முப்பது வருடங்களில் தி ஜானகிராமனின் மதிப்பு கூடியிருக்கிறது. அடுத்த முப்பது வருடங்களில் அவர் ஸ்வாரஸ்யமான காதல் கதைகள் எழுதிய தொடர்கதை எழுத்தாளர்களாக அறியப்படுவாரோ என்னவோ தெரியாது.

ஆனால் தி ஜானகிராமன் காலத்து காதல் கதைகளைப் பேசுபவர்கள் தி ஜானகிராமனைப் பேசாமல் இருக்க முடியாது, இல்லையா? அப்படிப் பேசினால் அவர்கள் மிக முக்கியமான ஒருவரை அறியாமலிருக்கிறார்கள் என்று நாம் பரிதாபப்பட வேண்டியிருக்கும்.

o0o0o0o0o0

ஒரு புத்தகத்தையோ ஒரு எழுத்தாளரையோ விமரிசனம் செய்பவர்களை, நீ இப்படித்தான் விமரிசனம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அணுகுமுறை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றையும் படிக்கும்போது நமக்கு ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவாரசியமாக இருக்கிறது, ஒவ்வொன்றும் ஒரு புதிய திறப்பை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நல்லது.

ஆனால் இதில் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை ஒரே சரியான வழிமுறையாக நிர்ணயிக்கும்போது மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. அன்மைக்காலமாக இது அத்துமீறிப் போய்விட்டது. யாரும் சரியான பதில் பேசக்கூட முடியாதபடிக்கு இந்த அணுகுமுறை கான்க்ரீட் பாதங்களில் உயர்ந்து நிற்கிறது. அது வெறும் களிமண்தான் என்று நான் சொல்ல முயற்சிக்கப் போவதில்லை- ஆனால் யாராவது ஏதாவது சொல்ல வேண்டுமல்லவா?

புத்தகம் படிப்பவர்கள் இப்போதெல்லாம் சந்தோஷத்துக்காகப் படிப்பதாகத் தெரியவில்லை- வீடு நிறைய குப்பைகள் நிறைந்து எப்படியாவது அதைக் கழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் பழைய புத்தகங்களை எடைக்குப் போடுபவர்கள் மாதிரி இருக்கிறார்கள் அவற்றைப் பற்றி எழுதுபவர்கள். எடுத்து வைத்துக் கொள்கிற புத்தகங்களில் இருக்கிற ஆர்வத்தைவிட, அவர்கள் புத்தகங்களைத் தூக்கி வீசுவதில் காட்டுகிற உற்சாகம் பயங்கரமாக இருக்கிறது.

நாம் இன்னும் கவிச்சக்கரவர்த்தி கம்பன், கவியரசு கண்ணதாசன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் என்று பட்டம் சூட்டுகிற மனநிலையில்தான் இருக்கிறோம். நாவல் என்றால் அதில் ஒருத்தர்தான் ராஜா, கவிதைக்கு ஒரே ஒருத்தர், சிறுகதைக்கு ஒருத்தர், விமரிசனத்துக்கு ஒருத்தர் என்று ஏதோ ஒரு பேராளுமையை நிலைநிறுத்தி அவரது நிழலில் மற்றவர்களின் வெளிச்சத்தை இருட்டடிப்பு செய்வது நமக்கு மிகவும் உவப்பான பொழுதுபோக்காக இருக்கிறது.

இதில் இன்னார்தான் என்று யாரையும் சொல்ல முடியாது, ஏறத்தாழ எல்லாருமே இந்த மாதிரி ஒருத்தர், அல்லது ஒரு சிலரை ஒரு பட்டியலில் வைத்துக் கொண்டு மற்றவர்களை ஏறக்கட்டி விடுகிறார்கள். இது ஒரு தமிழ் மனக்கூறு என்று நினைக்கிறேன். இவர்கள் சண்டை போடுவதுகூட எந்தப் பட்டியலில் தனக்கடுத்தபடி யார் இருக்க வேண்டும் என்பது குறித்துதானே தவிர, இந்தப் பட்டியல்களின் எல்லைகள் எதுவரை என்பதைப் பற்றியெல்லாம் இல்லை. உதாரணத்துக்கு நான் ஜே எம் சாலியையும் ஜோதிர்லதா கிரிஜாவையும் ஜெயகாந்தன் மற்றும் தி ஜானகிராமனுடன் சேர்த்து வைத்துப் படிக்க வேண்டும் என்று சொன்னால் என்னைக் கல்லால் அடிக்க வருவீர்கள்.

ஆனால் பைத்தியக்காரன் நானாகதான் இருக்க வேண்டுமென்பதில்லை.

o0o0o0o0o0o0

"ஒரு ஆஸ்த்ரிய நாவலாசிரியர். மிகப் பெரிய வியக்தி, Robert Musil. அவருடைய ஒரே நாவல் Man without Qualities (குணங்களற்ற மனிதன்) என்று அதற்குப் பெயர்... எனக்கு அதில் வரும் ஒரு சிறு சம்பவத்தை இப்போது சொல்லத் தோன்றுகிறது. எப்பவோ படித்தது. முப்பது வருஷங்களுக்கும் மேலாக இருக்கும். " என்று ஒரு விஷயத்தை எழுதுகிறார் வெங்கட் சாமிநாதன், திண்ணையில். அவர் எழுத வந்த விஷயத்தை விட்டு விடுவோம், இப்போது ஊரில் ஒவ்வொருத்தர் எழுதுவதைப் பார்க்கும்போது நினைவு ஸ்தூபி எழுப்புவதையே மரியாதையாய் வைத்திருக்கும் நாம் எந்த காலத்தில் இருக்கிறோம் என்றே புரியவில்லை. அவர் முப்பது நாற்பது ஆண்டுகள் முன் படித்த மூசில் இன்றைக்கும் பெரிதாகப் பேசப்படும் ஒருத்தர் என்று நினைக்கிறேன். மூசில் முடிக்காமல் விட்ட அந்த அரைகுறை நாவலில் வரும் நூலகர் ஒருவர் ஆங்கில இலக்கிய விமரிசனத்தில் இன்றும் பேசப்படுபவராக இருக்கிறார்.

அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தில் இருக்கும் சில பகுதிகள் இங்கே இருக்கின்றன- Book Browse

இந்தச் சுட்டியை நீங்கள் கட்டாயம் படித்துப் பார்க்க வேண்டும். இந்த நூலகர் தன் நூல் நிலையத்தில் உள்ள எந்த ஒரு புத்தகத்தையும் படிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறார். எந்தெந்த புத்தகம் எங்கே இருக்கிறது, அது எதைப் பற்றிப் பேசுகிறது என்பது ஒவ்வொன்றையும் மிகச் சுருக்கமாகக் குறிக்கும் காட்டலாகின் இன்டெக்ஸ் கார்டை மட்டும்தான் அவர் படிக்கிறார். அதுதான் சரியென்றும் சொல்கிறார்.

இதை நீங்கள் படித்தால்தான் நன்றாக இருக்கும், ஆனால் சுட்டியைத் தட்ட மனம் இல்லாதவர்களுக்காக ஒரு சின்ன சுருக்கம் தருகிறேன்.

o0o0o0o0o0

நாவலில் ஒரு தளபதி இருக்கிறார். அவர் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார்- அவள் ஒரு புரட்சியாளி. எனவே உலகத்தை உய்விக்கவல்ல அனைத்தினும் உயர்ந்த அந்த ஒரு தனிப்பெரும் சிந்தனையைக் கண்டுபிடித்து அவளது காலடியில் சமர்ப்பித்து அவளைக் கைப்பிடிக்கப் போகிறாராம் அவர். தளபதி போட்ட கணக்கு சரிதானே? இப்படி ஒரு பரிசைக் கொண்டுவரும் வீரனை மறுக்க எந்த ஒரு தோழிக்காவது மனம் வருமா?

எனவே அந்த தளபதி அவர் தேசத்தில் உள்ள நூலகத்துக்குப் போகிறார். ஆமாம், உலகத்தை உய்விக்கும் சிந்தனைகளை நூலகத்தில் உள்ள புத்தகங்களில் தேடாமல் சந்தைக் கடைகளிலா தேட முடியும்? ஆனால் பாருங்கள், அங்கே இருக்கும் புத்தகங்களைப் பார்த்ததும் அவருக்கு படிக்கும் ஆசையே போய் விடுகிறது- இத்தனையையும் படிப்பதானால் எத்தனை ஜென்மம் தேவைப்படுமோ!

அவருக்கு அங்கிருக்கும் நூலகர் வாசிப்பின் ரகசியத்தைச் சொல்லிக் கொடுத்து அவரது காதலின் வேர்களுக்கு நீரூற்றுகிறார்- "எந்த ஒரு புத்தகத்தின் பெயரையும் முகப்பில் உள்ள உள்ளடக்கப் பட்டியலையும் தாண்டி அதனுள் எதையும் படிக்கக் கூடாது- அப்படிப் படித்தால் நம் பார்வை கோணல்மாணலாகப் போய் விடும்"

ஆமாம், நண்பர்களே, நீங்கள் ரொம்ப புத்திசாலித்தனமாக ஒரு பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு தேர்ந்தெடுத்த புத்தகங்களைப் படித்தால், ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம், முப்பது நாவல்களை ஆழ்ந்து படிப்பதற்குள், உலகின் தலைசிறந்த அந்த ஒரு நாவலை அடையாளம் கண்டுவிடுவீர்கள்.

அந்த ராஜாவின் முன் மற்றவர்கள் சும்மாதான். ஒரு வாசகனாக இது எப்படிப்பட்ட அவல நிலை!- ஆனால் இதுதான் இன்று வாசிப்பு முறையாக முன்னிறுத்தப்படுகிறது. நம் ஊரின் இலக்கியப் பேராளுமைகள் அனைவரும் தம் வாசகர்களுக்காக ஒரு பட்டியல் போட்டுத் தந்துவிட்டார்கள். இதை ஒரு துவக்கம் என்று நினைத்து அவர்கள் செய்திருப்பார்கள், ஆனால் அவர்களது வாசகர்களுக்கு அது ஒரு முடிவாகி விட்டது. சில பேர் அந்தப் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு புத்தகச் சந்தையில் டிக் அடிக்கிறார்கள் என்றால், இவர்களைவிட முதிர்ந்த வாசகர்கள், தங்கள் பங்குக்குப் பட்டியல் போட்டு முதலாம் சோழன், மூன்றாம் சோழன் என்று வரிசைப்படுத்துகிறார்கள். அதற்கு வெளியே இருப்பவர்கள் எல்லாரும் ஒன்றுமே இல்லையாம்.

0o0o0o0o0o0

எதற்கும் ஒரு நடை போய் நான் கொடுத்த சுட்டியைப் படித்துவிட்டு வந்து விடுங்கள். இந்தப் பதிவில் உள்ளதிலேயே உருப்படியான ஒரே விஷயம் அங்குதான் இருக்கிறது.

இன்னொரு வகை விமரிசனமும் செய்யலாம். ஜே எம் சாலியும் ஜோதிர்லதா கிரிஜாவும் ஏன் தங்கள் வாசகர்களைக் கவர்ந்தார்கள் என்று யோசிக்கலாம். அவர்களுடைய வாசகர்களுக்கு மூளை இல்லை என்பது சரியான காரணம் இல்லை. அவர்களும் கணவன் மனைவியாக வாழ்ந்திருப்பார்கள். யாரோ இரண்டு பேரைப் பெற்றோர்களாக மதித்திருப்பர்கள், பல பேர் பிள்ளைப் பாசம் என்றால் என்ன என்றும் கூட தெரிந்து வைத்திருப்பார்கள். நம்பினால் நம்புங்கள், சங்கப் பாடல்கள் முதல் நம் நவீன புனைவுகள் வரை பேசப்படும் காதலை அவர்களில் சிலர் உணர்ந்திருக்கவும் கூடும். என் மனைவி கதைகளைப் படிக்கும் விஷயத்தில் ரசனை இல்லாத முட்டாளாக இருக்கலாம், ஆனால் அவளை உணர்ச்சிகள் இல்லாத ஜடம் என்று சொல்ல முடியாது. அவளுக்கு வாழ்க்கையின் நுட்பமான உணர்வுகள் தெரியாது என்று நான் சொன்னால் எனக்குதான் மற்றவர்களுடைய மனம் தெரியாது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஜே எம் சாலி பேசிய விஷயங்களை ஜெயகாந்தன் பேசியிருந்தால், அவர் எவ்வளவு நுட்பமாக, இன்னும் ஆழமாக பேசியிருக்கிறார் என்பதை சொல்லலாம், இல்லையா? ஜோதிர்லதா கிரிஜாவின் பெண்ணியத்தை தி ஜானகிராமன் எவ்வளவு நுட்பமாக, உணர்வுப் பூர்வமாக, சிறப்பான அழகியல் பார்வையுடன் அணுகினார் என்பதைச் சொல்லலாம் இல்லையா?

ஜே எம் சாலியும் ஜோதிர்லதா கிரிஜாவும் அவ்வளவு முக்கியமான எழுத்தாளர்களா? சாக்கடை தள்ளும் கோலால் கூட அவர்களுடைய புத்தகங்களைத் தொட மாட்டேன் என்று சொன்னால், நண்பர்களே, நீங்கள் ஒரு தலைமுறையை அவமதிக்கிறீர்கள். பெருவாரியான வாசகர்களின் உணர்வுகளை இருட்டடிப்பு செய்கிறீர்கள். இல்லாத ஒரு இலக்கிய வரலாறு எழுதுகிறீர்கள்- ஒரு சீட்டுக்கட்டு மாளிகையைப் போல் வலுவற்றது உங்கள் பட்டியல். வானுயர்ந்த மரங்கள்தான் காடென்று ஐம்பது அடிகளுக்குக் குறைந்த புல் பூண்டு புதர் செடி மரங்களை வெட்டி வீசும் வனக்காவலன் ஆகி விட்டீர்கள் நீங்கள். உங்களைத் தப்பிப் பிழைக்காது காடு.

வாசிப்பு என்பது சந்தோஷமான விஷயம். யாரையும் ஏளனம் செய்யாமல், அனைவருக்கும் அவர்களுக்கு உரிய இடம் கொடுத்து நம் வாசிப்பை முன்னெடுத்துச் செல்வதே நம்மை அடுத்து வருபவர்களுக்கு மீள்வாசிப்பு செய்யும் நெகிழ்வருளும் நம் பெரும் கொடையாக இருக்கும்- அவரவர்களுக்குரிய இடம் என்றால் மேலே கீழே என்ற அரசவைப் படிகளில் அல்ல, யாருக்கு பக்கத்தில் யாரை எப்போது உட்கார்த்தி வைத்துப் பார்த்தால் அழகாக இருக்கும் என்ற கொலு வரிசையில். அங்கேயும் ஏற்றத் தாழ்வுகள் உண்டு, ஆனால் உச்ச அடுக்கில் ஒய்யாரமாக நின்றுக் கொண்டிருக்கும் மரப்பாச்சி பொம்மைகள், தாழ்ந்த அடுக்கில் இருக்கும் பிள்ளையாரைவிட எந்த விதத்திலும் உயர்ந்ததாக கொலுவில் நாம் கருதுவதில்லை, இல்லையா?

தி ஜானகிராமன் இருப்பார் ஆனால் கரிச்சான்குஞ்சு இருக்க மாட்டார் என்றால் அந்த இலக்கியம் எப்போதும் இருந்திருக்காத தமிழ் இலக்கியம். உங்கள் கறாரான வடிசல்லடையில் மிஞ்சிய கசடு மட்டுமே அவர்கள்- ஒருவன் தவறான காரணங்களுக்காக சரியான வேலையை செய்து முடிப்பதைப் போன்றது இது- புத்தகம் சுமந்த கழுதைக்கு கிடைக்கும் புண்ணியம்தான் உங்களுக்குக் கிடைக்கும்.

o0o0o0o0

புத்தக விமரிசனம் என்பது வாசிப்பின் சுவையை முன்னிருத்துவதாக இருக்க வேண்டும்- அதுதானே இலக்கியத்தின் அடிப்படை? அந்த சந்தோஷத்தைப் பேசாத விமரிசனம் புத்தகங்களுக்கு எதிரான போல் போட் அராஜகம். அந்தப் பாவத்தை செய்தால் உங்கள் நூலகத்தில் இருக்கும் புத்தகங்களில் அவற்றின் ஜீவன் இருக்காது, அவை அச்சுறுத்தும் மண்டையோடுகளாக மட்டுமே குவிந்திருக்கும். அப்புறம் ஒரு நாள் போவின் கதைகளில் வருகிற மாதிரி உங்கள் புத்தகங்களை நீங்கள் கொளுத்தி விடுவீர்கள்- அதன்பின் அவற்றின் ஆவிகள் உங்கள் தூக்கத்தை நிரந்தரமாகக் கெடுக்கும்- இங்கே ஸ்மைலி கிடையாது.

ஜாக்கிரதை.