22/7/11

மொழியாக்கம் செய்வது எப்படி?

அருணவ சின்கா வங்காளத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பவர். இவரது மொழியாக்கங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அரங்கிலும் கவனம் பெற்றுள்ளன. மொழி பெயர்ப்பு கலை குறித்து அவரது பத்து குறிப்புகள் இங்கே:

மூல நூலைப் படிப்பது மட்டும் போதாது, உன் தலைக்குள் கேட்கும் குரலை கவனிக்க வேண்டும்.
முதல் வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப திருத்தி எழுது- நீ அந்த குரலைப் பிடித்து விட்டாய் என்ற திருப்தி கிடைக்கும் வரை.
எழுத்தாளரின் குரல் பிடிபட்டதும் முதல் வரைவு வடிவத்தை விரைவாக முடித்து விடு- அந்தக் குரல் வெகு நேரம் தங்காது.
ஃப்ளோவில் இருக்கும்போது மூல நூலில் உள்ள கடினமாக பகுதிகளுக்கு விடை காண மொழியாக்கத்தை நிறுத்தி யோசிக்காதே; மூல மொழியில் உள்ளபடியே வைத்து விட்டு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று காரியத்தை கவனி.
முதல் வரைவு வடிவத்தில் மூல நூலில் உள்ளதை அப்படியே மொழிபெயர்க்க வேண்டும். மேற்பரப்பில் உள்ளதை அப்படியே பிரதி எடுக்க வேண்டும். எடிட்டராக இருக்காதே.
தேவைப்பட்டால் முதல் மொழிபெயர்ப்பின் சொலவடைகளை அப்படியே உன் மொழிக்கு மாற்றிக் கொள், எதையும் விட்டு விடக் கூடாது.
முதலில் செய்த மொழி பெயர்ப்பைத் திருத்தும்போது மூல நூலில் உள்ளதைப் பார்க்காதே, இப்போது நீ மொழிபெயர்க்கும் மொழியில் முதல் முறை எழுதுவதைப் போல் திருத்தி எழுது.
மூல நூலில் விளக்கப்படாமலும் குழப்பமாகவும் உள்ள பகுதிகளைக் காப்பாற்று. அவற்றுக்கு விளக்கம் கொடுக்காதே.
திருத்திய மொழிபெயர்ப்பை சில மாதங்கள் ஆறப் போடு. சற்று இடைவெளி தந்துவிட்டு அதைத் திரும்ப எடு.
இறுதி வடிவம் வரும்வரை உன்னிப்பாய் கவனிக்கும் காதலனாக இரு. அனைத்தையும் விசாரி. போற்றி மகிழவும், கோபப்படவும், வருத்தப்படவும், மொழிபெயர்ப்பின் வழியாக மூல நூலைத் திரும்பக் காதலிக்கவும் தேவையான அவகாசம் எடுத்துக் கொள்.