12/12/10

எப்படி கதை எழுதுவது?- எல்மோர் லேனார்டின் பத்து கட்டளைகள்

Elmore Leonardஐ நாம் வணிக எழுத்தாளர் என்று உதாசீனப்படுத்துவோம் என்று நினைக்கிறேன். ஆனால் வணிக எழுத்தில் வெற்றி பெற வேண்டுமானால் வசீகரமாக எழுதும் கலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இல்லையா? அந்த வகையில் அவர்து எழுத்து குறித்த பத்து கட்டளைகள் கவனிக்கத்தக்கன.

ஒரு நிமிடம். இவர் யார் என்பதை விக்கிபீடியாவில் பாருங்கள்- 3:10 to Yuma என்ற புகழ் பெற்ற உலக சினிமா இவர் எழுதிய ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒன்று, பெரிய ஆள்தான், இல்லையா?



விஷயத்துக்கு வருவோம். லேனார்டின் பத்து கட்டளைகள்-

௧. வானிலை பற்றிய வர்ணனையோடு கதையை ஆரம்பிக்காதீர்கள். வாசகனுக்கு கதையில் வருகிற பாத்திரங்கள்தான் முக்கியம். அவன் வானிலை அறிக்கைகளைத் தாண்டிப் போகவே விரும்புவான்.

௨. கதையை பீடிகை போட்டு ஆரம்பிக்காதீர்கள். கதையின் களத்தை அறிமுகப்படுத்தும் இடம் துவக்கமல்ல- உங்கள் கதையின் பின்புலம் கதையின் போக்கோடு ஒட்டி விரியவேண்டும்.

௩. வசனங்களை, "சொன்னான்", "சொன்னாள்" என்று பூர்த்தி செய்யுங்கள்- புகன்றான், பகன்றான், கூறினான் போன்ற சொற்கள் புனைவுக்குரியவையல்ல.

௪. அதே போல் மிரட்டலாக சொன்னான், கேலியாக சொன்னாள் என்பன போன்ற பதப்பிரயோகங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. நீங்கள் கதையை ஒழுங்காக எழுதியிருந்தால் வசனம் மற்றும் கதையின் கட்டம் இவற்றைக் கொண்டே தொனி ஊகிக்கப்படக்கூடியதாக இருந்திருக்கும். இந்த மாதிரி போர்டு போடுவது கதையின் போக்கை பாதிக்கும்.

௫. ஆச்சரியக்குறிகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்- விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

௬. திடீரென்று, உடனே என்பன போன்ற சொற்களைத் தவிருங்கள். என்ன நடக்கிறது என்பது கதையின் வழியாகவே தெரிய வேண்டும். ஒருத்தன் திடீரென்று சிரித்தால், கதையைப் படிக்கிறவனுக்கு அது தெரியாதா என்ன!

௭. வட்டார வழக்குகளைத் தவிர்க்கவும். இதை சொன்னால் தமிழ் இலக்கியவாதிகள் அடிக்க வருவார்கள். லேனார்ட் வணிக எழுத்தாளர்களுக்கு சொன்ன அறிவுரை இது என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் இவர் சொல்வதில் உள்ள நியாயம் புரியும்.

௮. கதாபாத்திரங்களை உச்சி முதல் உள்ளங்கால் வரை வர்ணித்துக் கொண்டிருக்காதீர்கள். அது பழைய காலத்து வழக்கம். இப்போதெல்லாம் ஓரிரு வரிகளிலேயே தேவையான தகவல்களைத் தந்து விட்டுப் போய் விடுகிறார்கள். உங்கள் கதையை படிப்பவனுக்கு உங்கள் ஹீரோ பச்சை சட்டை போட்டுக் கொண்டிருந்தாலென்ன சிவப்பு சட்டை போட்டுக் கொண்டிருந்தால்தானென்ன? கதைக்குத் தேவையில்லாத தகவல்களை வாசகன் தாண்டிச் செல்லவே முனைவான்.

௯. அதே போல் இடம், பொருள் இதை எல்லாம் விவரித்து கதையை நிறுத்தி வைத்து விடாதீர்கள்- வாசகனின் கண்கள் சொற்குவிப்பாய் அமைந்த பத்திகளைத் தாண்டி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தேடிக் கொண்டிருக்கும்.

௰. வாசகனுக்கு எது தேவையில்லையோ அதைக் கதையிலிருந்து எடுத்து விடுங்கள்- தட்பவெப்பம், இடம் பொருள் குறித்த வர்ணனைகள், பாத்திரங்களின் மனவோட்டம் இதெல்லாம் தெரிந்து என்ன ஆகப் போகிறது? என்ன நடக்கிறது என்பதுதானே முக்கியம்- யாராவது உரையாடல்களைப் படிக்காமல் தாண்டிப் போகிறார்களா?

சுருக்கமாக சொன்னால் கதாசிரியன் கதைக்குள் நுழையக் கூடாது. அவனது குரல் அடங்கி, பாத்திரங்களின் பேச்சு வாயிலாகக் கதை கொண்டு செல்லப்பட வேண்டும். இதற்கு இடையூறாக என்னவெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் ஒழித்துக் கட்டுங்கள்.

- Elmore Leonard's Ten Rules of Writing, NYT via http://www.kabedford.com/archives/000013.html