11/12/10

எழுத்தின் மாயம்

நாம் ஏன் கதைகள் வாசிக்கிறோம்? மற்றவர்களைப் பற்றி கதை கேட்பதில் நமக்கு இருக்கிற ஆர்வம்தான்  புத்தகங்களில் கதைகளை வாசிப்பதற்கும் ஆதார காரணமாக இருக்கிறது என்று தோன்றுகிறது. அடுத்தவர்களைப் பற்றி நமக்குத் தெரியாதா என்ன? தெரியும்தான், ஆனால் நமக்குக் கிடைக்கிற தகவல்களுக்குக் கொஞ்சம் வெளியே, நம் நினைவு தொடும் ஆழத்தில் ஒரு அரை இன்ச் கீழே, சில விஷயங்கள் தெரிந்தும் தெரியாமலும் இருக்கின்றன. கதைகள் கேட்பதன் மூலம் நாம் இவ்விஷயங்களை நினைவின் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து உறுதி செய்து கொள்கிறோம்.

கதையாகட்டும் கட்டுரையாகட்டும், அது தான் சொல்ல வந்த விஷயத்தை அப்படியே போட்டு உடைத்து விட்டதென்றால் சுவாரசியம் போய் விடுகிறது- படித்து முடித்த பின்னும், விஷயங்கள் புரிந்தும் புரியாத மாதிரி தேட வைக்க வேண்டும். இதற்காக சிக்கலான புதிர்க் கதைகள், கவிதைகள் எழுத வேண்டுமென்பதில்லை. மிகத் தெளிவாகவே எழுதியும் இதை செய்யலாம், அ முத்துலிங்கம் செய்கிற மாதிரி. நாம் பத்தி பத்தியாக எழுதுவதை ஒரு வரியில், ஒரு பக்கவாட்டுப் பார்வையின் வீச்சில் தொட்டுச் சென்று விடுகிறார் அவர்.

பம்பரம் விட்டிருக்கிறோம் இல்லையா? நமக்கு சுவாரசியம் அந்த பம்பரம் சுற்றுவதைப் பார்ப்பதில் இல்லை. சாட்டையைக் கொண்டு அதை சுற்றி, சொடுக்குகிறோம் பாருங்கள், பம்பரம் கட்டவிழ்ந்து தரையில் விழுந்து ஒரு துள்ளு துள்ளி ஆடுகிறது, அந்த கட்டவிழ்தலில்தான் இருக்கிறது நமக்கு சந்தோஷம். ஒரு நல்ல எழுத்து ஏறத்தாழ அந்த மாதிரிதான். அதைப் படிக்கிற போதெல்லாம் கட்டவிழ்க்கிற சுகம் நமக்குக் கிடைக்கிறது. நம் கண் முன் கதை உருப்பெற்று அரங்கேறுகிறது- ஆனால் இவ்வளவுதான் இது என்று சொல்லி விட முடியாதபடி அது மீண்டும் தன் சாத்தியங்களைத் தனதாக்கிக் கொண்டு விடுகிறது. மறுபடியும் வாசிக்க வைக்கிறது.

இதன் ரகசியம் என்ன என்று யோசித்துப் பார்த்தேன். சொல்ல வந்ததை முழுதும் சொல்லாமல் விடுவது என்பது ஒன்று. இது மிக எளிமையான உபாயம். இதைவிட அழகான அனுபவம், நம் பிரக்ஞைனைக்குக் கீழே, நம் பேர் எங்கிருந்தோ நம் காதில் அரைகுறையாக விழுகிற மாதிரி, இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் நாமும் இந்த மாதிரி விஷயங்களைப் பிடித்து விட்டிருக்கலாம் என்று நினைக்க வைக்கிற எழுத்தைப் படிப்பது. ஒவ்வொரு தடவை படிக்கும்போதும் அது நமக்கு நம்மைப் பற்றி ஏதேனும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

அ முத்துலிங்கம் அவர்கள் டேவிட் செடாரிஸ் என்பவரை நல்ல எழுத்தாளர் என்று சொல்கிறார்- அவரது எழுத்தில் இதைப் பார்க்கலாம். செடாரிஸ் தனது புத்தகத்தை விற்பதற்கு வேண்டி அமெரிக்காவில் பயணித்த அனுபவத்தை சொல்கிறார்.

புத்தகக் கடைகளில் விற்பனையாகும் தன் புத்தகங்களில் கையெழுத்து போட்டுக் கொடுக்கும்போது ஒரு காரியம் செய்தாராம் செடாரிஸ். ஒரு உண்டியலை மேஜையில் வைத்தாராம். நான்காயிரம் டாலர்கள் இவ்வகையில் சம்பாதித்தேன் என்கிறார் அவர், எல்லாம் இலவசமாக யாரும் எதுவும் கேட்காமலேயே கொடுக்கப்பட்ட டிப்ஸ்.

நாமானால் இதை இத்தோடு விட்டு விடுவோம், ஆனால் செடாரிஸ், உண்டியலில் காசு போடாதவர்கள் குறித்து- ஏ தே பையா! உனக்காக நான் நாலு புத்தகங்களில் கையெழுத்து போட்டுத் தந்திருக்கிறேன், நீ எனக்காக ஒரு டாலர் கூட தர மாட்டாயா, என்ற அறச்சீற்றம் கொண்டதால் இந்தப் பழக்கத்தைக் கை விட்டாராம்.

இது சாதாரணமாக நடப்பதுதான், இதில் எந்த விசேஷமுமில்லை. ஆனால், அடுத்த பத்தியைப் பாருங்கள், அதில் எழுதுகிறார், மிட்டாய் வாங்குவதற்காகதான் இந்த பணத்தை சேர்க்கிறேன் என்று நான் சொல்லியிருந்தேன், தேவைப் படாதவர்களுக்கு மக்கள் தாராளமாகவே தானம் செய்வார்கள். டல்லாசில் எனக்கு ஒரு தடவை 535 டாலர்கள் டிப்சாகக் கிடைத்ததது, அதுவே புத்தகக் கடைக்கு வெளியே தட்டை நீட்டிக் கொண்டிருந்த பிச்சைக்காரனானால் அவனுக்கு ௭௫ சென்ட் கூட தந்திருக்க மாட்டார்கள் இவர்கள் என்று.

இந்த இரண்டு பத்திகளுக்கும் இடையில் இருக்கிற முரண்பாடு, காசு கொடுக்காதவனைக் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு, அதே மூச்சில் தனக்குக் கிடைக்கிற காசு குறித்து கேள்வியும் கேட்கிறார், அடுத்த பத்தியில். இந்த இரண்டு விஷயங்களையும் படிக்கிறபோது, இவை சொல்ல வருகிற மூன்றாவது விஷயமும் பாதி பிடிபடுகிறது. ஆனால் அதை உறுதி செய்ய வழியில்லை, இருந்தாலும் படிக்கும்போது ஒரு புன்சிரிப்பை வரவழைக்கிறது, நாம் பிரிந்து செல்லும்போதும், நம் நண்பர்கள் நம்மைப் பார்த்து சிரித்த சிரிப்பு புண் சிரிப்பாய் நம் முதுகைப் பார்த்து நகைத்துக் கொண்டிருக்கும் என்ற உணர்வு இருக்கிற மாதிரி.

David Sedaris எழுதியது இங்கே இருக்கிறது.