14/12/10

கவிதை கிவிதையின் ரகசியம்

இதைப் பதிவு செய்து வைக்காவிட்டால் அது ஒரு பெரிய அநீதியாகி விடும்- தமிழ் பேப்பரில் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பெயரில் கவிதை கிவிதை எழுதுபவர் தப்பாட்டம் ஆடுகிறாரோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

முதலில் அவர், சாதாரணமான கருத்துகளை புரிந்து கொள்ள முடியாத வகையில் கடினமான சொற்கோவையாக மாற்றி சிலம்பாட்டம் ஆடுகிறவர்கள் எழுதுகிற நவீன கவிதைகளின் அங்கதமாக தன் கிவிதைகளை எழுதுகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்- ஒரு வகையில் கிவிதையைத் தோலுரித்து அதில் இருக்கிற 'கவிதை'யைக் காட்டுகிறார் என்று. மேதாவித்தனமாக அவரது ஒவ்வொரு கிவிதையையும் படித்து விட்டு திருப்தியாக சிரித்தேன் என்று வையுங்கள், இந்தக் கிவிதையைப் படிக்கும் வரை.

நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்கிற மாதிரி, இவர் சில சமயம் நல்ல கவிதையையும் கிவிதை என்ற தலைப்பில் போட்டு விட்டு மொக்கையான கவிதையாக அதை மொழிபெயர்த்து, யாராவது கவனிக்கிறார்களா என்று விளையாடிப் பார்க்கிறார் என்று சந்தேகிக்கிறேன்.

அவர் எழுதியுள்ள குழவி நினைவின் நீட்சி என்ற கவிதைகிவிதையைப் பாருங்கள், அதில் வருகிற -
தொலைந்த குழந்தையை
தேடுகிறது மனம்
என்ற நான்கு சொற்களின் சாத்தியக்கூறுகள் மிகக் குறைவாகவே இருப்பதாக நமக்குத்
தோன்றும். இதன் பொருளைத் தாண்டி என்ன சொல்லி விட முடியும்? ஆனால் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் என்ன எழுதி இருக்கிறார் பாருங்கள்-
குழவி துழாவும் பேரவல பெருங்குரல்.....
கசிந்துருகும் குழவி நினைவின் நீட்சியென
பூக்களைப் புறந்தள்ளுகிறது பெருஞ்சோக ஊற்றுக்கண்
குழவி துழாவும்பேரவலப் பெருங்குரல், பெருஞ்சோக ஊற்றுக்கண்: இங்கு நெடிலோசை இழப்பின் வலியை, இல்லாமையின் ஓலத்தை எவ்வளவு அழகாக சுட்டுகிறது பாருங்கள்-

அது தவிர மேற்கண்ட வரிகளில், "ஐயோ", "பாப்பா", "காணோம்",  "போச்சே", என்பன போன்ற ஈரசைச் சொற்களில் வரக்கூடிய நேர் நேர் தேமா என்று சொல்லப்படும், இரு நெடில்கள் ஒன்றை ஒன்று ஒட்டி வரும் பதங்களை கவனமாகத் தவிர்த்திருக்கிறார், தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனார்.

இதை அவர் திட்டமிட்டுத்தான் செய்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. அழகான கவிதையை மொக்கையான கிவிதையாக்கினால் அங்கதம் என்று எடுத்துக் கொள்ளலாம், ஆனால் அவ்வப்போது இப்படி அழகான கிவிதை எழுதிவிட்டு அதை மொக்கையான கவிதையாக்கினால், படித்துப் பார்த்து ஏமாற நாங்கள் எல்லாம் கேனையர்களா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இனிமேல் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் எழுதும் கிவிதைகளை கவனமாகப் படித்து, தலைப்பைப் பார்த்து ஏமாறாமல், எது கவிதை எது கிவிதை என்று சுயமாக முடிவு செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

ஆனால் எதற்காக இப்படி மெனக்கிட வைக்கிறார் இவர் என்று கிவிஞர் மேல் கோபம் வரத்தான் செய்கிறது.

(தமிழர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனோ, அல்லது பிற்காலத்தில் இந்த விபரம் தெரிந்தப்பின் நம்மைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரிக்கக்கூடிய நம் சந்ததியினரோ, யாரும் நினைத்துவிடக் கூடாதென்ற ஒரே உயரிய நோக்குடன் இதை இங்குப் பதிவு செய்கிறேன்)