14/3/11

காத்திருக்கிறது காலம்- நினைவின் பாதை

நினைவை ஒரு சுரங்கம் என்று சொல்லலாம்- நாம் நம் வாழ்க்கையில் திரட்டிய மொத்த சொத்தும் அங்கேதான் இருக்கிறது, இல்லையா? கவலைப்படும் நேரத்தில் ஆறுதலும், மனமொடிந்த நேரத்தில் நம்பிக்கையும், அஞ்சும் பொழுதில் துணிச்சலும் நாம் பெருவதானால் அதை நினைவிலிருந்தே பெற வேண்டும்.

ஆனால் நினைவு ஜடபொருளல்ல- ஊருக்கு வெளியே வாங்கி வைத்த நிலம் போலவோ நிரந்தர காப்பீட்டுத் தொகை போலவோ இல்லை அது: நினைவின் தன்மை நிலையற்றது. வங்கி லாக்கரில் வைர நகையை பதுக்கி வைத்தவன் அந்தந்த நாளின் அவசங்களுக்கேற்ப அங்கு கல்லையும் பொன்னையும் காண்பது போன்ற நிலை.

எனவே நினைவை சுரங்கம் என்று சொன்னால் அது பொன்வயலாகவே இருக்க வேண்டுமென்பதில்லை- பெரிய பெரிய மலைக்கோட்டைகளில் இருப்பதாக சொல்லப்படும் அரசர்களின் அவசர காலத்துக்கு உதவும் சுரங்கப் பாதையாகவும் இருக்கலாம்- ஒவ்வொரு நினைவும் சமகால அனுபவங்களைத் தப்ப மாற்றுப் பாதை கொண்டதாக இருக்கிறது. இந்தப் பாதையைக் கொண்டு வெளிச்சம் அடைவதும், இருட்டடிப்பு செய்வதும் அவரவர் தேர்வு.

ஏன் இதையெல்லாம் எழுதுகிறேன் என்றால் இப்போது தனி மனித வாழ்வில் தன் பிரத்யேக துக்கத்தை விவரிக்கும் சுயசரிதைகள் அதிக அளவில் வெளியாகி பரபரப்பாக விற்பனையாகின்றன என்று ஒரு கட்டுரை சொல்கிறது. இவ்வகை புத்தகங்களின் வெற்றியும் தோல்வியும் எவ்வளவுக்கு ஒளிவு மறைவு இருக்கிறது என்பதை ஒட்டிய ஒன்று என்கிறார் ஆசிரியர். அது குறித்து சில மாற்று கருத்துகள் இருக்கலாம்.

ஆனால் நிரந்தரமின்மையைக் கருத்தில் கொண்டால் வாழ்வே ஒரு பெரும் துக்கம்தான், இல்லையா? எதை நாம் இழக்காமலிருக்கப் போகிறோம்? இந்த நினைவு எழுந்ததென்றால் எவ்வளவு அழகிய அனுபவமும் இதயத்தைத் துளைக்கும் வலியைக் கொடுப்பதாகவே இருக்கும். இருக்கிறது- தன்னை மறந்து ஒரு அழகிய அனுபவத்தில் லயித்தவன் அதில் கொஞ்சம் துக்கத்தை உணராமல் இருக்க முடியாது.

"அடையும்வரை அறிய முடியாத இடமாக இருக்கிறது துக்கம். நம்மால் நிகழும் முன்னே துக்கத்தை உணர முடியாது- இங்கேதான் இருக்கிறது நாம் நினைத்துப் பார்க்கும் துக்கத்துக்கும் உள்ளபடியே துக்கத்தின் இயல்புக்கும் இடையான வேற்றுமை: தொடரும் இல்லாமையின் முடிவின்மையை, வெறுமையை, பொருளின் மறுமையை, அயராது தொடரும் பொருளற்ற கணங்களின் அனுபவத்தை நாம் எதிர்கொள்ளும் துக்கத்தை அறிவதற்கில்லை" என்கிறார் ஜோவான் டிடியன்.

இருக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரையைப் படித்தவுடன் போர்ஹே எழுதிய இந்தக் கவிதை நினைவுக்கு வந்தது- இதுவும் துக்கம்தான். ஆனால் இதில் நம்பிக்கையின் ஒளி இருக்கிறது: நினைவு இருளில் புதைந்திருக்கும் சுரங்கம் என்ற உணர்வையும் தாண்டி அது பாதையுமாகும் என்ற உணர்வே இந்தக் கவிதைக்கு வெளிச்சம் தருகிறது என்று நினைக்கிறேன்.

பலமுறை நான் என்னைக் கேட்டுக்கொண்டிருக்கின்றேன், எக்காரணங்கள்
தொட்டு நான் என் அந்திப்பொழுது சாயும்போது கற்கத் துவங்கினேன்,
நிறைவுறுமென்று குறிப்பாய் எந்தவொரு நம்பிக்கையுமில்லாமல்,
கூர்மழுங்கிய நாவுடைய ஆங்கிலோ-சாக்ஸன்களின் மொழியை.
ஆண்டுகள் ஆண்டழித்த காரணத்தால் என் நினைவின்
பிடிநழுவிப் போகின்றன நான் வீணே திரும்பத் திரும்பப்
படித்துப் பழகிய சொற்கள். அவ்வாறே என் வாழ்வும்
புனைந்து கலைக்கிறது தன களைத்த சரித்திரத்தை.
அப்போது நானே சொல்லிக் கொள்கின்றேன்: தக்கவொரு
ரகசிய வழி இருக்கக்கூடும்- ஆன்மாவுக்குத் தன்
இறவாமையை உணர, அதன் அகண்ட பராக்கிரம வட்டம்
அனைத்தையும் உட்கொள்ளும், அத்துணையும் சாதிக்கும்.
என் கவலைகளுக்கப்பால், இந்த எழுத்துக்கப்பால்
காத்திருக்கிறது காலம், வரையற்று, வரவேற்று.


(Jorge Luis Borges தன வசமிருந்த Beowulf என்ற புத்தகத்தில், “At various times I have asked myself what reasons ” என்று துவங்கும் இந்தக் கவிதையை எழுதி வைத்திருந்தாராம். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை செய்திருப்பவர் Alastair Reid.
Borges Old Englishஐ 1955ல், தனது ஐம்பதுகளின் மத்திம பருவத்தில், கற்கத் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.)