25/3/11

வைதலே வாழ்த்தாய்....

ரெபேக்கா வெஸ்ட் எழுதிய எந்தப் புத்தகத்தையும் நான் இதுவரை படித்ததில்லை என்று ஒப்புக் கொள்ள வெட்கப்படுகிறேன். அவர் ஒரு முக்கியமான சிந்தனையாளராம். "ரெபேக்கா வெஸ்ட் பேராளுமைகளில் ஒருவர், ஆங்கில இலக்கியத்தில் அவருக்கு நீங்கா இடம் உண்டு. அவரை விட அட்டகாசமான நடையில் யாரும் எழுதியதில்லை, அவரளவுக்கு புத்திசாலித்தனமாகவும் எழுதியதில்லை, மனித இயல்பின் சிக்கல்களையும் இவ்வுலகத்தின் போக்கையும் அவரளவுக்கு நுட்பமாக கவனித்தவர்களும் கிடையாது," என்று அவரது சமகாலத்தில் வாழ்ந்தவரான த ந்யூ யார்க்கரின் பதிப்பாசிரியர் வில்லியம் ஷான் சொல்லியிருக்கிறாராம், விக்கிபீடியாவில் போட்டிருக்கிறார்கள்.


இன்று யதேச்சையாக அவரைப் பற்றிய ஒரு குறிப்பைப் படித்தேன். அதற்கு முன்னுரையாக என்ன எழுதலாமென்று தேடியபோது விக்கிபீடியாவில் இந்தத் தகவல் கிடைத்தது: ரெபக்கா வெஸ்ட் ஹெச் ஜி வெல்ஸ் எழுதிய "திருமணம்" என்ற நாவலைக் கடுமையாக விமரிசித்தாராம். அதைப் படித்துவிட்டு ஹெச் ஜி வெல்ஸ் அவரை லஞ்ச்சுக்கு அழைத்திருக்கிறார். இருவரும் அதையடுத்த பத்தாண்டுகள் தொடர்பில் இருந்தனராம். கண்டனங்கள் காழ்ப்பாக இருக்க வேண்டுமென்பதில்லை- எதிர்ப்பு எதிரிகளை உருவாக்க வேண்டியதில்லை. ஒரு கடும் விமரிசனம் புரிதலில் பிறந்திருக்காவிட்டாலும் புரிதலில் முடியக் கூடும்.


நம்மை வன்மையாகக் கண்டிப்பவர்கள் நம் அன்புக்குரியவர்களாக இல்லாதிருக்கலாம், ஆனால் அவர்களும் நம் நன்றிக்குரியவர்களே- அவர்கள் சொல்வதில் நியாயம் இருந்தால்.


-----


"சிறிது நேரம் நிதானமாக யோசித்தாலே போதும், வசவே விமரிசனம் என்ற ஒரு புதிய பாணியை நிறுவுவதே  நம் கடமை என்பது நமக்குத் தெரிய வரும்," என்று சொல்கிறார் ரெபேக்கா வெஸ்ட், தன் கட்டுரையில்


அவர் ஏன் வசவே விமரிசனமாக வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் சொல்கிறார், நீங்கள் அந்தக் கட்டுரையைப் படித்துப் பார்க்க வேண்டும்- இந்தப் பத்தியை மட்டும் மொழி பெயர்க்கிறேன்:
"... ஆனால் நம்முன் நிற்கும் அனைத்தையும்விட ஒரு சீரியசான கடமை நமக்கு இருக்கிறது. நாம் நம் ஜீனியஸ்கள் சொல்வதை அவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் அணுக வேண்டும் என்பதே அது. முன்னெப்போதையும் விட இப்போது விமரிசனம் முக்கியமானதாக உள்ளது, மிகுந்த அகம்பாவம் கொண்டவர்களாக  இப்போதுள்ள நம் மாபெரும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கை முழுமையையும் தங்கள் களமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். முன்பெல்லாம் அவர்கள் தம் வாசிப்பறைகளில் உட்கார்ந்திருப்பார்கள். மானுடத்தின் உணர்வு சார்ந்த உலகை மட்டுமே அவதானித்திருந்தார்கள்- வாழ்வின் வடிவை விட வண்ணத்தை மற்றவர்களை விட சௌகரியமான இடத்திலிருந்து சிந்திந்தார்கள். சாவதற்குள் இருபதோ முப்பதோ கதைகள் இட்டுக் கட்டினார்கள். இப்போது காலம் மட்டும் அசையாது நின்றால் வாழ்வனைத்தையும் விளக்கி விடலாம் என்ற மமதை மிகுந்தவர்களாகி விட்டார்கள்- உலகைச் சுற்றி தலைதெறிக்க ஓடத் துவங்கி இருக்கிறார்கள் இவர்கள். எந்த நிகழ்வுக்கும் நிதானிப்பதில்லை, போகிற போக்கில் அவற்றைப் பார்த்ததும் தங்கள் மனதுக்குத் தோன்றியபடி சத்தம் போட்டுக் கொண்டு நாலு கால் பாய்ச்சலில் தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள். அவர்களுக்கு இருக்கிற அவசரத்தில் சில சமயம் குழப்பமான ஒரு காட்சியை அவர்கள் காண நேர்கிறது. எந்த துல்லியமும் இல்லாத ஒரு முரட்டு தோற்றத்தைத் தங்கள் வாசகர்களுக்குத் தருகிறார்கள். கணித மேதை கெல்வின் செய்த பிழைகளைத் திருத்துவதை அவரது மாணவர்கள் கடமையாக வைத்திருந்ததைப் போலவே நம் மாபெரும் எழுத்தாளர்களின் இந்த அவசரத்தைக் கண்டனம் செய்வதும் விமரிசகர்களின் கடமையாகிறது. இல்லாவிட்டால் தன்னைச் சுற்றியுள்ள அறிவுச் சூழலின் வலிமையை இவர்களது குழப்பக் காட்சிகள் குன்றச் செய்து விடும். இவர்களது முழுமையடையாத ஆக்கங்கள் இந்த பூமியில் ஜீனியசுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேறாமல் தடுத்து விடும்."
கர்வம் பிடித்தவர்களைக் கடுமையாக விமரிசனம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் சரிதான், ஆனால் அதற்காக ஏன் அவர் வசவே விமரிசனமாக வேண்டும் என்று சொல்கிறார், தெரியவில்லை. அவருக்கென்ன, பெண்ணாய்ப் பிறந்த அதிர்ஷ்டசாலி. ஒரு அளவுக்கு மேல அவரை யாரும் கடுமையாக வைய மாட்டார்கள். ஆண் எழுத்தாளர்கள் படும் பாடு அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது, இல்லையா? :)


எது எப்படியோ, ரெபேக்கா வெஸ்ட் சொல்லியிருப்பன சிந்திக்கத் தூண்டும் விஷயங்கள். இதை எல்லாம் இவர் 1914ல் சொல்லியிருக்கிறார் என்பது ஒரு பெரிய ஆச்சரியம்- ஏதோ நேற்று சொன்ன மாதிரி இருக்கிறது இது.

நம்மை வன்மையாகக் கண்டிப்பவர்கள் நம் அன்புக்குரியவர்களாக இல்லாதிருப்பினும் நம் நன்றிக்குரியவர்களே.