23/3/11

சாகப் போகிறவனுக்கான கதைகள் - புனைவும் வாழ்வும்

இந்த ப்ளாகில் நான் ஏன் எழுதிக் கொண்டிருக்கிறேன்? திடீரென்று இலக்கியப் பைத்தியம் பீரிட்டு எழுந்து விட்டதா? அப்படிதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது இந்தப் பழைய பதிவுகளைப் படித்துப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது என்றால், ஏதோ ஒரு கட்டத்தில் எனக்கு இலக்கியம் என்பது அல்ஜீப்ரா இல்லை- வெறும் கலை இல்லை, அது வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது என்று தோன்றியிருக்கிறது. அதற்குக் காரணம் ஜெயமோகன் எழுதிய அறம் கதைகள் என்பதை இப்போதே சொல்லி விடுகிறேன்.

அவை நல்ல கதைகளா குப்பை கதைகளா என்ற விவாதத்தை எல்லாம் விட்டு விடுவோம்- காலம்தான் பதில் சொல்ல முடியும். எனக்கு இது குறித்து ஒரு அபிப்பிராயம் இருக்கிறது- அதற்கென்று ஒரு தளமும் இருக்கிறது, அதனால் அது இங்கே வேண்டாம்.

என்ன சொல்ல வந்தேனென்றால் இங்கு தேர்ந்தெடுத்து செய்திருக்கிற பதிவுகளில் பெரும்பாலானவை ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையையும் இலக்கியத்தையும் இணைத்துப் பேசுகின்றன. எனக்கு இந்த இணைப்பை உறுதி செய்து கொள்ள வேண்டியது இப்போதையத் தேவையாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இதை எப்படி சொல்லலாம்?

நீங்கள் கலை என்றால் இன்னது என்று ஒரு சட்டகம் வடிவமைத்து வைத்திருக்கிறீர்கள். படிப்பது எல்லாவற்றையும் அந்த சட்டகத்தில் பொருத்தி பார்த்து எல்லாம் சரியாக இருக்கிறதா, நல்ல கதை, இல்லையா- கதை நன்றாக வரவில்லை, என்று எழுத்தை ஒரு கலையாகவே அணுகி வருகிறீர்கள்.

இப்போது ஓரிரு கதைகள் அந்த சட்டகத்தில் பொருந்த மாட்டேனென்கிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்வீர்கள்? கதைகளை நிராகரிப்பீர்களா இல்லை சட்டகத்தின் வடிவத்தை மாற்றிக் கொள்வீர்களா?

ஒரு கதை வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது என்று உங்களுக்குத் தோன்றினால், கதையின் சாரம் உங்களுக்குப் பிடிபட்டுவிட்டது என்று பொருள். அனைத்து கதைகளின் சாரமும் வாழ்க்கைதானே? ஒரு பொய்யான உலகை முன்னிறுத்துகிறதா, இல்லை மெய்யான ஒன்றை முன்னிறுத்துகிறதா, எதை ஏற்க வேண்டும், எதை மறுக்க வேண்டும் என்பதெல்லாம் சட்டகப் பார்வை.

என் வாழ்க்கை பொய்கள் நிறைந்ததாக இருக்கலாம். அகங்காரம் மிகுந்ததாக இருக்கலாம். கழிவிரக்கத்தால் அல்லது போரடிப்பதால் எனக்கு இந்த உலகம் தாள முடியாததாக இருக்கலாம். எத்தனையோ காரணங்கள். இப்படிப்பட்ட என் வாழ்வில் நான் அறிந்த உண்மைகளை, அவை கருத்து மயக்கங்களாகவே இருந்தாலும், நினைவுறுத்தி ஒரு கதை எப்போது என் அனுபவமாக, வாழ்க்கைக்குரிய அத்தனை உணர்ச்சிகளோடும் என் வாழ்வை வெளிச்சமிட்டுக் காட்டும் மெய்ம்மை கொண்டதாக வெளிப்படுகிறதோ, அந்தக் கதை ஒரு அனுபவமாகி விட்டதால், என் உணர்வுகளோடு ஒன்றி விட்டதால், என் வாழ்வில் நிகழ்ந்த ஒன்றாகி விடுகிறது.

முதலில் வேறு என்னவாகவோ இருந்த ஹெட்டரை "புனைவின் வேர்கள் நினைவில், நினைவின் வேர்கள் புனைவில்," என்று மாற்றியதும் இதை நினைத்துதான். புனைவு ஏதோ ஒரு இடத்தில் வாழ்வைத் தொடுகிறது, நம் நிஜ வாழ்வு எவ்வளவு நிஜமாக இருந்தாலும் அதில் எவ்வளவோ புனைவுகள் இருக்கின்றன: நினைவே ஒரு புனைவுதானே- அதில் எவ்வளவு பொய்யாக இருந்தாலென்ன எவ்வளவு மெய்யாக இருந்தாலென்ன!

பொய்கள் ஒரு போதும் உண்மையைச் சுட்ட முடியாது என்று சொன்னால் ஒன்றும் செய்வதற்கில்லை- கதை எழுதுவதையும் படிப்பதையும் தடை செய்துவிட்டு அகராதியை மனப்பாடம் செய்ய வேண்டியதே சரி. அதிலும் ஒரு ஆபத்து இருக்கிறது: சொற்கள் தனித்திருக்கும் வரையில் அவற்றை நம்பலாம், அவை ஒன்று சேர்ந்து ஒரு வாக்கியமாகி விட்டாலோ, அப்போது அவை எவ்வளவுக்குப் பேசுகிறதோ, அவ்வளவுக்கும் மௌனமாக இருக்கிறது. எவ்வளவுக்கு வெளிப்படுத்துகிறதோ, அவ்வளவுக்கு மறைத்து வைக்கிறது: நினைவின் வேர்களே புனைவில். ஒன்றும் பண்ண முடியாது.

இந்த 'உண்மை' என்னைத் தொல்லை செய்வதால்தான் புனைவின் ஆக்கத்திலும் அமைப்பிலும் உண்மையின் வெளிச்சத்தைப் பார்க்க விரும்புகிறேன் என்று நினைக்கிறேன். புனைவுகளை வாழ்க்கையோடு பிணைக்கும் விஷயங்களைப் பதிவிடத் தேர்ந்தெடுக்கிறேன் என்று தொன்றுகிறது. புனைவுக்கும் நினைவுக்கும் பெரிய வேறுபாடு இல்லை- நம் அனுபவ வெளிச்சத்தில்தான் இவை மெய்யெனப் பிரகாசிக்கின்றன.

-------------------------------

இந்தப் பதிவின் விஷயத்துக்கு வருவோம். ராபர்டோ பாலானோ என்றொரு பெரிய எழுத்தாளர். இவரைப் பற்றிய விவரமெல்லாம் விக்கிப்பீடியாவில் இருக்கிறது, பார்த்துக் கொள்ளுங்கள்,

இவர் எழுதிய ஒரு புத்தகம் வரப போகிறதாம்- அதிலிருந்து சில பகுதிகளை த ந்யூ யார்க் ரிவ்யூ ஆப் புக்ஸ் என்ற தளத்தில் போட்டிருக்கிறார்கள், நான் சில பத்திகளை மட்டும் பெயர்த்தெடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

துணிந்தவர் உண்டோ- 
                     -ராபர்டோ பொலானோ.

நான் அங்கு சென்ற புத்தகக் கடைகளில் எனக்கு நன்றாக நினைவிருப்பது புத்தகம் விற்பவர்களின் கண்கள்தான். அவை சில சமயம் தூக்கில் போடப்பட்டவனது கண்களைப் போலிருந்தன. சில சமயம் உறக்கம் போன்ற ஒரு திரையால் மூடப்பட்டிருந்தன. அதற்கான காரணம் வேறொன்று என்பது இப்போது எனக்குத் தெரியும். அங்கிருந்ததைவிடத் தனிமை கூடிய புத்தகக் கடைகளை நான் எங்கும் பார்த்ததாக நினைவில்லை. சான்டியாகோவில் நான் புத்தகமெதுவும் திருடவில்லை. அவை மலிவாகவே கிடைத்தன, நான் அவற்றை காசு கொடுத்தே வாங்கினேன். அங்கு கடைசியாகச் சென்ற புத்தகக் கடையில், பழைய பிரஞ்சு நாவல்களை அடுக்கி வைத்திருந்த வரிசையை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, நாற்பது வயது மதிக்கத்தக்க உயரமான ஒல்லியான அந்த புத்தகக் கடைக்காரர்,  மரண தண்டனை விதிக்கப்பட்டவனுக்குத் தன் புத்தகங்களையே பரிந்துரைக்கிற வேலையை ஒரு எழுத்தாளன் செய்வதை சரியென்று நான் நினைக்கிறேனா என்று திடீரென்று என்னிடம் கேட்டார்.

அந்தக் கடைக்காரர் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார், முழங்கை வரை மடித்து விடப்பட்டிருந்த வெண்ணிற சட்டையை அணிந்திருந்தார். அவரது தொண்டைக்குழியில் இருந்த எலும்பு அவர் பேசும்போது நடுங்கியது. அது சரியான செயலாகத் தோன்றவில்லை என்று நான் சொன்னேன். நாம்  மரண தண்டனை விதிக்கப்பட்ட யாரைப் பற்றிப் பேசுகிறோம்?, என்று நான் கேட்டேன். புத்தகக் கடைக்காரர் என்னைப் பார்த்து, சாகக் கிடக்கிறவனிடம் நிச்சயம் தன் புத்தகங்களையே பரிந்துரைக்ககூடிய ஒன்றுக்கும் மேற்பட்ட நாவலாசிரியர்களைத் தனக்குத் தெரியும் என்று சொன்னார். அப்புறம் சொன்னார், தான் பேசிக்கொண்டிருப்பது வாழ்க்கையின் விளிம்புக்கே போய் விட்ட வாசகர்களைப் பற்றியென்று. எனக்கு இது பற்றியெல்லாம் தீர்மானிக்கிற தகுதி கிடையாது, என்றார் அவர், ஆனால் நான் அதை செய்யாவிட்டால் வேறு யாரும் செய்யப்போவதில்லை.

மரண தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு எந்த புத்தகம் கொடுப்பாய் என்று அவர் என்னிடம் கேட்டார். எனக்குத் தெரியவில்லை என்று நான் சொன்னேன். எனக்கும் தெரியவில்லை என்றார் அந்தப் புத்தகக் கடைக்காரர், இது வருத்தப்பட வேண்டிய விஷயம். எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள் எந்தப் புத்தகத்தைப் படிப்பார்கள்? அவர்களுக்கு எந்தப் புத்தகங்கள் பிடிக்கும்? சாகப் போகிறவனின் வாசிப்பறையை உன்னால் எப்படி நினைத்துப் பார்க்க முடியும்?, என்றெல்லாம் அவர் கேட்டார். ஒன்றுமே தோன்றவில்லை, என்று நான் சொன்னேன். நீ இள வயதுக்காரன், எனக்கு நீ இப்படி சொல்வது ஆச்சரியமாக இல்லை என்றார் அவர். பிறகு சொன்னார்: அது அன்டார்டிகாவைப் போல. வட துருவம் போலல்ல, அன்டார்டிகா. எனக்கு (எட்கர் ஆலன் போவின்) ஆர்தர் கார்டன் பிம்முடைய கடைசி நாட்கள் நினைவுக்கு வந்தன, ஆனால் எதுவும் பேசக் கூடாதென்று நான் முடிவு செய்தேன். பார்ப்போம், என்றார் அந்தப் புத்தகக் கடைக்காரர், மரண தண்டனை விதிக்கப்பட்டவனின் மடியில் இந்த நாவலைப் போடும் துணிச்சல் எவனுக்கு இருக்கிறது? நன்றாக விற்பனையாகிக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து ஒரு குவியலில் வீசினார் அவர். நான் அவருக்குக் காசு தந்துவிட்டு வெளியேறினேன். நான் போகத் திரும்பும்போது அந்தப் புத்தகக் கடைக்காரர் சிரிக்கவோ அழவோ செய்திருக்கலாம். ஆனால் நான் வெளியே இறங்குகையில் அவர் சொல்லியது மட்டும் என் காதில் விழுந்தது: இப்படியொரு காரியத்தைச் செய்யும் துணிச்சல் திமிர் பிடித்த, தப்பாய்ப் பிறந்தவன் எவனுக்கு இருக்கும்? அதன்பின் அவர் வேறேதோ சொன்னார், அது என்ன என்பதை என்னால் கேட்க முடியவில்லை.