28/3/11

எட்டில் ஒரு பங்கு!

எர்னெஸ்ட் ஹெமிங்வே எவ்வளவு பெரிய எழுத்தாளர்! இப்போது அவரைத் திட்டும் குரல்கள் கொஞ்சம் அதிகரிக்கத் துவங்கி விட்டாலும், சிக்கனமான எழுத்துக்கு ஹெமிங்வே ஒரு நல்ல முன்மாதிரி.

ஒரு இடத்தில் சிறுகதை குறித்து அதன் ஆசிரியர்கள் என்ற ஒரு பதிவைப் பார்த்தேன். மூன்று பாகங்கள்- பாகம் ஒன்று, பாகம் இரண்டு, பாகம் மூன்று. இவை பாரிஸ் ரிவ்யூ என்ற தளத்தில் உள்ள பேட்டிகளில் இருந்து பொறுக்கி எடுத்தவை.

படித்துப் பாருங்கள், சிறு சிறு மேற்கோள்களாக நிறைய விஷயம் இருக்கிறது.

தற்போதைக்கு ஹெமிங்வேயின் மேற்கோள் மட்டும்-
"ஒருத்தனுக்கு அவன் எதைப் பற்றி எழுதுகிறானோ அதில் ஓரளவுக்குப் போதுமான விஷய ஞானம் இருந்தால், தனக்கும் தன் வாசகனுக்கும் தெரிந்த விஷயங்களை அவன் சொல்லாமல் விட்டு விடலாம். எழுதுகிறவன் மட்டும் தேவைப்பட்ட அளவுக்கு உண்மையாக எழுதினால் அவன் சொல்லாமல் விட்டிருந்தாலும், சொல்லப்பட்டது போலவே அவற்றை வாசகன் வலுவாக உணர்வான். கடலின் மேலிருக்கும் பனிக்கட்டி கம்பீரமாக நகரக் காரணம் அதில் எட்டில் ஒரு பங்கு மட்டுமே தண்ணீருக்கு மேல் இருக்கிறது என்ற உண்மைதான்.
எட்டில் ஒரு பங்கு மட்டுமே வெளிப்பட வேண்டுமாம்- மற்றதெல்லாம் மறைந்திருந்து நம்மோடு பேச வேண்டும். ஹெமிங்வே சாமானிய எழுத்தாளர் இல்லை, சரியா? அவர் எழுத்துக் கலை பற்றி நிறைய பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது- ஒரு விஷயத்தை நேர்மையாகப் பேசுவதற்கு எவ்வளவு பழக்கம் வேண்டியிருக்கிறது! உள்ளத்தில் உண்மை இருந்தால் வாயைத் திறந்தால் அது வெளியே வந்து விழுந்து விடும் என்றெல்லாம் இல்லை, சரிதானே? நானே எத்தனையோ நிஜ அனுபவங்களைக் கதையாகப் படித்திருக்கிறேன், அவை அவ்வளவு எளிதாக நம்பும்படியாக இருப்பதில்லை.

புனைவு என்பது முதலிலும் முடிவிலும் ஒரு ஜோடனை, பாவனை. அதில் நேர்மை என்பது இன்னதென்று அடையாளம் கண்டு சொல்லி விட முடியாது. இந்த நேர்மை எழுத்தாளனின் நேர்மை இல்லை- எது நேர்மை என்று எழுத்தாளனும் வாசகனும் ஒப்புக்கொண்ட விதிகளை மீறாமல் கடைபிடிப்பது. அவ்வளவுதான் விஷயம்.

எழுதுபவனுக்கும் வாசகனுக்கும் தெரிந்த விஷயங்கள் என்று ஹெமிங்வே எழுதுகிறார் பாருங்கள், அங்கே இருக்கிறது புனைவின் மையப் புள்ளி. வாசகர்களுக்குத் தெரிந்த விஷயங்களை, தெரிந்த மொழியில் எழுதுவதில்தான் ஒரு புனைவின் நேர்மை இருக்கிறது.

நாலு பேர் ஒன்றாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எதைப் பற்றியெல்லாமோ அவர்கள் பேசுகிறார்கள்- அப்போது ஒருவன் எதையோ சொல்கிறான். அதைக் கேட்டதும் இன்னொருவன் அங்கிருக்கும் பெண் ஒருத்தியைப் பார்த்து கண்ணடிக்கிறான். அவள் அதைப் பார்த்து ஒரு குறுஞ்சிரிப்பு செய்கிறாள். இது காதலர்களின் பொதுமொழியில் பேசப்பட்டது, இல்லையா?

காதலின் உள்வட்டத்தில் இல்லாதவர்கள் இந்த கள்ளத்தனத்தை கபடம் என்று சொல்லலாம், ஆனால் காதலின் மொழியில் இது ஒரு நேர்மையான உரையாடல் என்பதில் சந்தேகம் இருக்கிறதா என்ன?

எழுத்தாளனும் வாசகனும் இப்படிப்பட்ட ஒரு நேய வட்டத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கிடையே பல விஷயங்கள் பொதுவில் இருக்கும்போது அவை சொல்லப்படாமலேயே தன் வாசகர்களுக்கு விளங்கும் என்ற நம்பிக்கையில் எழுத்தாளன் எழுதும்போதுதான் ஒரு புனைவு உயர் கலையாக உருவாகிறது.

அப்போது எட்டில் ஒரு பங்கை சொல்லும்போதே எல்லாம் புரிந்து விடுகிறது- சொல்லப்படாத விஷயங்கள் சொல்லப்படாமல் இருப்பதால் அவை இன்னும் தெளிவாகப் பேசுகின்றன, கூடுதல் மதிப்பு மிகுந்தனவாக இருக்கின்றன- கள்ளச் சிரிப்புக்கான காரணங்களைப் போல, எழுத்தாளனையும் வாசகனையும் இன்னமும் நெருங்கி வரச் செய்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு கதைதான் நான் அண்மையில் படித்த வெறுமை என்ற சிறுகதை. இரு வேறு காலகட்டங்களைப் பேசுகிறது, இந்தக் கதை. இதில் சொல்லப்படாத விஷயங்கள் எவ்வளவு தீவிரமான உணர்வுகளை நம் உள்ளத்தில் எழுப்புகிறது பாருங்கள்.